Monday, July 28, 2025

P.426 - நாவலூர் - மல்லாரெண் தோளனை

2018-03-05

P.426 - நாவலூர்

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்காய் கூவிளம் கூவிளம் கூவிளம் - வாய்பாடு;

கட்டளை அடிகள். திருக்குறுந்தொகை போல் 2-3-4 சீர்களிடையே வெண்டளை அமையும். விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 2.16.1 - "அயிலாரும் அம்பதனால்")

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;


1)

மல்லாரெண் தோளனை மேரு மலையென்னும்

வில்லானைத் தாள்தொழு பத்தர் வினைதீர்க்கும்

நல்லானை நான்மறை நாவனை நாவலூர்

வல்லானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே.


மல் ஆர் எண்-தோளனை - வலிமை மிக்க எட்டுப் புஜங்கள் உடையவனை; (மல் - வலிமை); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்);

மேருமலை என்னும் வில்லானைத் - மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

தாள் தொழு பத்தர் வினை தீர்க்கும் நல்லானை - தன் திருவடியை வழிபடும் பக்தர்களது வினைகளைத் தீர்க்கும் நல்லவனை;

நான்மறை நாவனை - நான்கு வேதங்களையும் பாடியருளியவனை;

நாவலூர் வல்லானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே - திருநாவலூரில் உறைகின்ற வல்லவனை, என் பேதைமனமே, தினமும் வாழ்த்துவாயாக;


2)

மறையாரும் நாவனை நஞ்சை மகிழ்ந்துண்டு

கறையாரும் கண்டனைக் கண்ணிற் கனலானை

நறையாரும் கொன்றையந் தாரனை நாவலூர்

உறைவானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே.


மறை ஆரும் நாவனை - வேதங்களைப் பாடியருளியவனை;

நஞ்சை மகிழ்ந்து உண்டு கறை ஆரும் கண்டனைக் - ஆலகாலத்தை விரும்பி உண்டு கறை அணிந்த நீலகண்டனை;

கண்ணில் கனலானை - தீயை உமிழும் நெற்றிக்கண் உடையவனை;

நறை ஆரும் கொன்றையந் தாரனை - மணம் கமழும் கொன்றைமாலையை அணிந்தவனை;

நாவலூர் உறைவானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே - திருநாவலூரில் உறைகின்ற பெருமானை, என் பேதைமனமே, தினமும் வாழ்த்துவாயாக;


3)

இட(ம்)மாது பங்கெனக் காட்டும் எழிலானைப்

படமாடு பாம்பணி கோனைப் படுகாட்டில்

நடமாடு செம்பொற் கழலனை நாவலூர்

இடமாக நின்றானை எண்ணு மடநெஞ்சே.


இடம் மாது பங்கு எனக் காட்டும் எழிலானைப் - இடப்பக்கம் உமையை ஒரு பங்காகக் காட்டும் அழகனை;

படம் ஆடு பாம்பு அணி கோனைப் - நாகப்பாம்பை அணிகின்ற அரசனை; (படம் - பாம்பின் படம்);

படுகாட்டில் நடம் ஆடு செம்பொற்-கழலனை - சுடுகாட்டில் கூத்தாடும் அழகிய சிவந்த கழல் அணிந்த திருவடி உடையவனை; (படுகாடு - சுடுகாடு);

நாவலூர் இடமாக நின்றானை எண்ணு மடநெஞ்சே - திருநாவலூரில் நீங்காமல் உறைகின்ற பெருமானை, என் பேதைமனமே, எண்ணுவாயாக;


4)

எரியோர்கை ஏந்தியைப் பிச்சை இடுமென்று

திரிவானை முப்புரம் செற்ற சிலையானை

நரியாரும் காட்டினிற் கூத்தனை நாவலூர்

பிரியாத ஈசனைப் பேணு மடநெஞ்சே.


எரி ஓர் கை ஏந்தியைப் - ஒரு கையில் நெருப்பை ஏந்தியவனை;

"பிச்சை இடும்" என்று திரிவானை - "பிச்சை இடுங்கள்" என்று திரிபவனை;

முப்புரம் செற்ற சிலையானை - முப்புரங்களை அழித்த வில்லை ஏந்தியவனை; ( செறுதல் - அழித்தல்); (சிலை - வில்);

நரி ஆரும் காட்டினில் கூத்தனை - நரிகள் உலவும் சுடுகாட்டில் கூத்து ஆடுபவனை;

நாவலூர் பிரியாத ஈசனைப் பேணு மடநெஞ்சே - திருநாவலூரில் நீங்காமல் உறைகின்ற பெருமானை, என் பேதைமனமே, போற்றுவாயாக;


5)

ஆரூரர் தம்மையொர் ஆவணத் தாலாண்டு

பேரூர்முன் பித்தன் எனச்சொல் பெருமானை

நாரூறும் நெஞ்சினர்க் கன்பனை நாவலூர்க்

காரூரும் கண்டனைக் காதல்செய் நன்னெஞ்சே.


ஆரூரர்தம்மை ஒர் ஆவணத்தால் ஆண்டு - சுந்தரமூர்த்தி நாயனாரை ஓர் அடிமைப்பத்திரத்தைக் காட்டி ஆட்கொண்டு; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்); (ஆவணம் - உரிமைப்பத்திரம்);

பேர் ஊர்முன் பித்தன் எனச் சொல் பெருமானை - ஊரார்கள்முன் தன் பெயரைப் பித்தன் என்று சொன்ன பெருமானை;

நார் ஊறும் நெஞ்சினர்க்கு அன்பனை - அன்பு ஊறும் மனம் உடையவர்களுக்கு அன்பு உடையவனை; (நார் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.41.11 - "நார் மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்");

நாவலூர்க் கார் ஊரும் கண்டனைக் காதல்செய் நன்னெஞ்சே - திருநாவலூரில் உறைகின்ற நீலகண்டனை, என் நல்ல மனமே, அன்புசெய்வாயாக; (கார் - கருமை);


6)

மேகத்தின் வண்ணம் மிடற்றில் உடையானை

ஆகத்தில் நீறணி ஆரழல் அன்னானை

நாகத்தார் மார்பனை நாவலூர் நாதனைப்

பாகத்தோர் மாதுடை யானைப் பணிநெஞ்சே.


மேகத்தின் வண்ணம் மிடற்றில் உடையானை - மேகத்தின் நிறத்தைக் கண்டத்தில் உடையவனை; (மிடறு - கண்டம்);

ஆகத்தில் நீறு அணி ஆர் அழல் அன்னானை - திருமேனியில் திருநீற்றை அணிந்த அரிய தீப் போன்றவனை; (ஆகம் - உடல்); (அழல் - நெருப்பு);

நாகத்தார் மார்பனை - பாம்பை மார்பில் மாலையாகப் பூண்டவனை; (தார் - மாலை);

நாவலூர் நாதனைப் - திருநாவலூரில் உறைகின்ற தலைவனை;

பாகத்து ஓர் மாது உடையானைப் பணி நெஞ்சே - உமையை ஒரு பாகத்தில் உடையவனை, மனமே, வழிபடுவாயாக;


7)

வஞ்சஞ்செய் ஐம்புலன் வென்றவர் மார்க்கண்டர்

அஞ்சும்போ தாருயிர் காத்தருள் அண்ணலை

நஞ்சுண்ட கண்டனை நாவலூர் நாதனைத்

தஞ்சென்று சார்ந்து தமியறு நன்னெஞ்சே.


வஞ்சம் செய் ஐம்புலன் வென்றவர் - வஞ்சனை செய்யும் ஐந்து புலன்களையும் வென்றவரான;

மார்க்கண்டர் அஞ்சும்போது ஆர்-உயிர் காத்து அருள் அண்ணலை - மார்க்கண்டேயர் (காலன் வரவால்) அஞ்சியபொழுது, (காலனை உதைத்து) மார்க்கண்டேயரது அரிய உயிரைக் காத்து அருளிய பெருமானை;

நஞ்சு உண்ட கண்டனை - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை;

நாவலூர் நாதனைத் - திருநாவலூரில் உறைகின்ற தலைவனை;

தஞ்சு என்று சார்ந்து தமி அறு நன்னெஞ்சே - தஞ்சம் அடைந்து, நல்ல மனமே, உன் கதியின்மை தீர்வாயாக; (தமி - தனிமை; கதியின்மை); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்; நீக்குதல்);


8)

வரைவீச வந்தவன் வாய்கள் அழவூன்று

விரலானை ஆனை உரித்த விறலானை

நரையாரும் ஏற்றனை நாவலூர் நாதனைத்

திரையாரும் ஆற்றனைச் சிந்தி மடநெஞ்சே.


வரை வீச வந்தவன் வாய்கள் அழ ஊன்று விரலானை - கயிலைமலையை எறிய வந்த இராவணனது பத்து-வாய்களும் அழும்படி ஒரு விரலை ஊன்றியவனை;

ஆனை உரித்த விறலானை - எதிர்த்துப் போர்செய்த யானையின் தோலை உரித்த வீரனை; (விறல் - வலிமை; ஆற்றல்; வீரம்);

நரை ஆரும் ஏற்றனை - வெண்ணிறம் உடைய இடபத்தை வாகனமாக உடையவனை; (நரை - வெண்மை);

நாவலூர் நாதனைத் - திருநாவலூரில் உறைகின்ற தலைவனை;

திரை ஆரும் ஆற்றனைச் சிந்தி மடநெஞ்சே - அலை மிக்க கங்கையைச் சடையில் உடைய பெருமானைப், பேதைமனமே, சிந்திப்பாயாக; (திரை - அலை);


9)

அக்கால(ம்) மாலயன் நேட அழலாகி

மிக்கானை மேவலர் முப்புரம் வெந்திட

நக்கானை ஆவணத் தோடணி நாவலூர்ப்

புக்கானை நாள்தொறும் போற்றிப் புகழ்நெஞ்சே.


அக்காலம் மால் அயன் நேட அழல் ஆகி மிக்கானை - முற்காலத்தில் திருமாலும் பிரமனும் தேடும்படி எல்லையற்ற ஜோதியாகி நீண்டவனை; (நேடுதல் - தேடுதல்); (அழல் - தீ);

மேவலர் முப்புரம் வெந்திட நக்கானை - பகைத்த அசுரர்களது முப்புரங்களும் எரிந்து அழியும்படி சிரித்தவனை; (மேவலர் - பகைவர்); (நகுதல் - சிரித்தல்);

ஆவணத்தோடு அணி நாவலூர்ப் புக்கானை - (சுந்தரரை அடிமை என்று ஆட்கொள்ள) ஓர் உரிமைப்பத்திரத்தோடு அழகிய திருநாவலூரின்கண் வந்தடைந்தவனை; (ஆவணம் - உரிமைப்பத்திரம்);

நாள்தொறும் போற்றிப் புகழ் நெஞ்சே - தினமும் போற்றித் துதி மனமே;


10)

அஞ்சாது பொய்யுரை அற்பர்க் கருளானைப்

பஞ்சாரும் மெல்லடிப் பாவையோர் பங்கனை

நஞ்சாரும் கண்டனை நாவலூர் நாதனைத்

துஞ்சாத சோதியை நித்தல் துதிநெஞ்சே.


அஞ்சாது பொய் உரை அற்பர்க்கு அருளானைப் - கூசாமல் பொய்களையே பேசும் ஈனர்களுக்கு அருள் இல்லாதவனை;

பஞ்சு ஆரும் மெல்லடிப் பாவை ஓர் பங்கனை - பஞ்சு போன்ற மென்மையான பாதத்தை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனை; (ஆர்தல் - ஒத்தல்);

நஞ்சு ஆரும் கண்டனை - ஆலகாலத்தை உண்ட (/அணிந்த) நீலகண்டனை; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);

நாவலூர் நாதனைத் - திருநாவலூரில் உறைகின்ற தலைவனை;

துஞ்சாத சோதியை நித்தல் துதி நெஞ்சே - இறப்பு இல்லாதவனும் ஒளிவடிவினனுமான சிவபெருமானைத் தினமும், மனமே, துதிப்பாயாக; (துஞ்சுதல் - இறத்தல்); (நித்தல் - தினமும்);


11)

கண்ணாரும் நெற்றிக் கடவுளைக் கார்க்குழற்

பெண்ணாரும் பாகனைப் பேணிற் பெருந்துன்பம்

நண்ணாமை தந்தருள் நாவலூர் நாதனைப்

பண்ணாரும் நற்றமிழ் பாடிப் பணிநெஞ்சே.


கண் ஆரும் நெற்றிக் கடவுளைக் - நெற்றிக்கண்ணனை;

கார்க்குழல் பெண் ஆரும் பாகனைப் - மேகம் போன்ற கரிய கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனை; (கார் - மேகம்; கார்க்குழல் – உவமைத்தொகை - மேகம் போன்ற கரிய கூந்தல்);

பேணில் பெரும்-துன்பம் நண்ணாமை தந்து-அருள் நாவலூர் நாதனைப் - போற்றிடும் அன்பர்களுக்குப் பிறவிப்பிணியாகிய பெரிய துன்பத்தைத் தீர்த்தருளும் திருநாவலூர்ப் பெருமானை; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்);

பண் ஆரும் நற்றமிழ் பாடிப் பணி நெஞ்சே - பண் பொருந்திய நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடி, மனமே, வழிபடுவாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment