2012-05-04
T.168 - பைஞ்ஞீலி - சேலை நிகர்விழி
--------------
(வண்ணவிருத்தம்;
தான தனதன தான தனதன
தான தனதன .. தனதான)
(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)
சேலை நிகர்விழி மாது மனையொடு
..... தேடு பொருளெனு(ம்) .. நினைவாலே
.. சேரும் அருவினை யாவும் அடியொடு
..... தீர வழிநினை .. அடியார்கள்
பாலை நிகர்பொடி பூசும் உனதிரு
..... பாத மலர்தொழ .. அருள்வோனே
.. பாவ மலைகெட நானு(ம்) நறைமலி
..... பாடல் அவைகொடு .. பணிவேனே
கோல மணியென வேலை விடமது
..... கூடும் அணிமிட .. றுடையானே
.. கோயில் எனவுளம் ஆக உனபெயர்
..... கூறி வழிபட .. மறவாத
பாலன் உயிரொடு வாழ நமனுயிர்
..... பாற உதைதரு .. கழலானே
.. நீல முகிலடை சோலை மருவிய
..... ஞீலி வனமுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
சேலை நிகர் விழி மாது, மனையொடு,
..... தேடு பொருள் எனு(ம்) நினைவாலே
.. சேரும் அருவினை யாவும் அடியொடு
..... தீர வழி நினை அடியார்கள்
பாலை நிகர் பொடி பூசும் உனது இரு-
..... பாதமலர் தொழ அருள்வோனே;
.. பாவமலை கெட நானு(ம்) நறை மலி
..... பாடல் அவைகொடு பணிவேனே;
கோல மணி என வேலை-விடமது
..... கூடும் அணி மிடறு உடையானே;
.. கோயில் என உளம் ஆக உன பெயர்
..... கூறி வழிபட மறவாத
பாலன் உயிரொடு வாழ, நமன் உயிர்
..... பாற உதைதரு கழலானே;
.. நீல-முகில் அடை சோலை மருவிய
..... ஞீலிவனம் உறை பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
சேலை நிகர் விழி மாது மனையொடு தேடு பொருள் எனு(ம்) நினைவாலே சேரும் அருவினை யாவும் அடியொடு தீர வழி வழி நினை அடியார்கள் - சேல்மீன் போன்ற கண்ணுடைய மனைவி, வீடு, குடும்பம், ஈட்டும் செல்வம் என்ற எண்ணங்களால் வந்தடையும் அரிய தீவினைகள் எல்லாம் அடியோடு தீரும் உபாயத்தை எண்ணும் அடியார்கள்; (சேல் - ஒருவகை மீன்); (நிகர்த்தல் - ஒத்தல்); (மனை - வீடு; குடும்பம்); (தேடுதல் - சம்பாதித்தல்); (அடியொடு - அடியோடு - முழுவதும்); (வழி - மார்க்கம்; உபாயம்);
பாலை நிகர் பொடி பூசும் உனது இரு-பாதமலர் தொழ அருள்வோனே - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசிய உனது இருதிருவடித்தாமரைகளை வணங்க, அருள்பவனே; (நிகர்த்தல் - ஒத்தல்); (பொடி - திருநீறு);
பாவமலை கெட நானு(ம்) நறை மலி பாடல் அவைகொடு பணிவேனே - எனது மலை போன்ற பாவமெல்லாம் தீருமாறு (அவர்களைப் போல) நானும் மணம் கமழும் பாமாலைகளால் உன் இருதிருவடிகளை வணங்குவேன்;
கோல மணி என வேலை-விடமது கூடும் அணி மிடறு உடையானே - அழகிய கரிய மணியைப் போலக் கடல்விஷம் சேர்கின்ற அழகிய கண்டத்தை உடையவனே; (கோலம் - அழகு); (வேலை - கடல்); (அணி - அழகு); (மிடறு - கண்டம்);
கோயில் என உளம் ஆக உன பெயர் கூறி வழிபட மறவாத பாலன் உயிரொடு வாழ, நமன் உயிர் பாற உதைதரு கழலானே - தன் மனமே உன் கோயில் ஆகுமாறு எப்போதும் உனது திருநாமத்தைச் சொல்லித் தொழுதுவந்த மார்க்கண்டேயர் உயிரோடு நிலைத்து வாழ அருள்செய்து, வீரக்கழல் அணிந்த திருவடியால் காலன் உயிர் அழிய அவனை உதைத்தவனே; (உன - உனது; அ - ஆறாம்வேற்றுமை உருபு); (பாறுதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.75.6 - "காலனுயிர் பாறவுதை செய்த பரமன்"); (உதைதரு - உதைத்த; தருதல் - ஒரு துணைவினை);
நீலமுகில் அடை சோலை மருவிய ஞீலிவனம் உறை பெருமானே - கார்மேகம் அடைகின்ற (வானோங்கு) சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளிய பெருமானே; (நீலமுகில் - நீலமேகம் - கார்மேகம்); (ஞீலிவனம் - திருப்பைஞ்ஞீலி);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment