Tuesday, August 2, 2022

M.056 - பாடு - தருகாலன் - மடக்கு

2011-08-13

M.056 - பாடு - தருகாலன் - மடக்கு

--------------

பாடு மிகுந்து பரிதவிக்கும் நெஞ்சமே

பாடு மறையவன் பாலடைந்த - பாடு

தருகாலன் தானங்குச் சாவவுதைத் தாயுள்

தருகாலன் சம்புவைநீ சார்.


பதம் பிரித்து:

பாடு மிகுந்து பரிதவிக்கும் நெஞ்சமே;

பாடு மறையவன்பால் அடைந்த - பாடு

தரு காலன்தான் அங்குச் சாவ உதைத்து, ஆயுள்

தரு காலன்; சம்புவை நீ சார்.


பாடு - 1. துன்பம்; 2. பாடுதல்; 3. சாவு; (படுதல் - துன்பமடைதல்; சாதல்);

காலன் - 1. எமன்; 2. காலை உடையவன்;

மறையவன் - மார்க்கண்டேயர்;

பால் - பக்கம்; அருகு;

சாவ - சாமாறு; இறக்க;

சம்பு - சுகத்தைத் தருபவன்;

சார் - சரண்புகு; சென்றடை;


துன்பம் மிகுந்து, வருந்தும் மனமே; துதிகள் பாடிய மார்க்கண்டேயர் பக்கத்தில் வந்த, சாவைத் தரும் கூற்றுவனே அங்கு இறக்கும்படி அவனை உதைத்து, மார்க்கண்டேயருக்கு இறவாமையைத் தந்த திருப்பாதனான சம்புவை நீ சரணடைந்து உய்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment