Wednesday, August 10, 2022

T.159 - பராய்த்துறை - படைதிரண்டெனை

2011-11-20

T.159 - பராய்த்துறை - படைதிரண்டெனை

--------------

(வண்ணவிருத்தம்;

தனன தந்தன தாத்தன தந்தன

தனன தந்தன தாத்தன தந்தன

தனன தந்தன தாத்தன தந்தன .. தனதான)

(முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது - திருப்புகழ் - பொது)


முற்குறிப்பு: அரையடிகளின் ஆரம்பத்தில் மோனை வரும் இடத்தில் எதுகை வருமாறு அமைந்த பாடல். அதனால் எட்டு அடிகள் உடைய பாடல் போலவும் தோற்றம் தரும்.

இதுபோல அரையடியில் எதுகை அமைந்த ஒரு திருப்புகழ் - கொடாதவனையே புகழ்ந்து - என்று தொடங்கும் விராலிமலைத் திருப்புகழ்.


படைதி ரண்டெனை வாட்டிடும் ஐம்பொறி

.. .. பலசு கங்களை வேட்புறு நெஞ்சொடு

.. .. பழைய பந்தமும் ஆட்டிட வந்தடை .. வதனாலே

.. இடர்தொ டர்ந்துற வேர்த்துவ ருந்திடும்

.. .. எனது வெம்பவ ஆர்த்திய ழிந்திட

.. .. இருப தங்களை ஏத்திவ ணங்கிட .. நினைவேனோ

அடல்வி லங்குறை காட்டினில் அன்றுயர்

.. .. தவ(ம்)மு யன்றிடு பார்த்தன்வி ரும்பிய

.. .. அமரில் வென்றிடு சீர்ப்படை தந்திட .. வருவேடா

.. உடல்கள் வெந்திடு காட்டில திர்ந்திடு

.. .. முரசி னம்பல ஆர்க்கந டம்புரி

.. .. ஒருவ ஐங்கணை கோத்தம தன்றனை .. முனியோகீ

தடவ ரண்பொடி ஆக்கிட அன்றொரு

.. .. மலையை வெஞ்சிலை ஆக்கிவ லந்திகழ்

.. .. தழலும் அம்பது பூட்டியி ருஞ்சமர் .. புரிவோனே

.. முடைமி குந்தலை ஓட்டினில் உண்பலி

.. .. இடுமின் என்றுழல் வாழ்க்கைம கிழ்ந்திடு(ம்)

.. .. முதல்வ அங்கமும் ஓத்து(ம்)மொ ழிந்தருள் .. திருநாவா

கடலின் நஞ்சது போய்ச்சுட உம்பர்கள்

.. .. கதறி வந்தடி போற்றவும் உண்டொரு

.. .. கறைபு னைந்தலை ஆற்றினை யுஞ்சடை .. அணிவோனே

.. புடையில் நங்கையை ஏற்றனை அஞ்சிறை

.. .. பொலிசு ரும்பினம் ஆர்த்தடை யுஞ்செறி

.. .. பொழிலி லங்குப ராய்த்துறை அங்குறை .. பெருமானே.


பதம் பிரித்து:

படை திரண்டு எனை வாட்டிடும் ஐம்பொறி,

.. .. பல சுகங்களை வேட்புறு நெஞ்சொடு,

.. .. பழைய பந்தமும் ஆட்டிட வந்து அடைவதனாலே,

.. இடர் தொடர்ந்து-உற, வேர்த்து வருந்திடும்

.. .. எனது வெம்பவ ஆர்த்தி அழிந்திட,

.. .. இருபதங்களை ஏத்தி வணங்கிட .. நினைவேனோ?

அடல்-விலங்கு உறை காட்டினில் அன்று உயர்

.. .. தவ(ம்) முயன்றிடு பார்த்தன் விரும்பிய

.. .. அமரில் வென்றிடு சீர்ப்-படை தந்திட .. வரு-வேடா;

.. உடல்கள் வெந்திடு காட்டில் அதிர்ந்திடு

.. .. முரசினம் பல ஆர்க்க நடம்-புரி

.. .. ஒருவ; ஐங்கணை கோத்த மதன்றனை .. முனி-யோகீ;

தடவரண் பொடி ஆக்கிட அன்று ஒரு

.. .. மலையை வெஞ்சிலை ஆக்கி வலந்-திகழ்

.. .. தழலும் அம்பது பூட்டி இருஞ்சமர் .. புரிவோனே;

.. முடை மிகுந் தலைஓட்டினில் உண்பலி

.. .. இடுமின் என்று உழல் வாழ்க்கை மகிழ்ந்திடு(ம்)

.. .. முதல்வ; அங்கமும் ஓத்து(ம்) மொழிந்தருள் .. திருநாவா;

கடலின் நஞ்சது போய்ச் சுட, உம்பர்கள்

.. .. கதறி வந்து அடி போற்றவும், உண்டு ஒரு

.. .. கறை புனைந்து, அலை-ஆற்றினையுஞ் சடை .. அணிவோனே;

.. புடையில் நங்கையை ஏற்றனை; அஞ்சிறை

.. .. பொலி-சுரும்பினம் ஆர்த்து அடையுஞ் செறி

.. .. பொழில் இலங்கு பராய்த்துறை அங்கு உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

படை திரண்டு எனை வாட்டிடும் ஐம்பொறி, பல சுகங்களை வேட்புறு நெஞ்சொடு, பழைய பந்தமும் ஆட்டிட வந்து அடைவதனாலே - படையாகத் திரண்டு என்னைத் துன்புறுத்தும் (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) ஐம்பொறிகளோடு, பல சுகங்களை விரும்புகின்ற மனத்தோடு, பழைய வினைக்கட்டும் என்னை ஹிம்சிக்க வந்து சேர்வதால்; (ஐம்பொறி - பஞ்சேந்திரியங்கள் - ஐம்புலன்கள்); (வேட்பு - விருப்பம்); (பந்தம் - வினைக்கட்டு); (ஆட்டுதல் - அலைத்தல்);

இடர் தொடர்ந்து-, வேர்த்து ருந்திடும் எனது வெம்பவ ஆர்த்திழிந்திட, இருபதங்களை ஏத்தி வணங்கிட நினைவேனோ - பல கஷ்டங்கள் தொடர்ந்து வர, அஞ்சி வருந்தும் என் கொடிய பிறவித்துன்பம் அழியுமாறு, உன் இருதிருவடிகளைப் போற்றி வணங்கும் அறிவை அருள்வாயாக; (இடர் - துன்பம்); (வேர்த்தல் - அஞ்சுதல்); (பவம் - பிறவி); (ஆர்த்தி - துன்பம்);

அடல்-விலங்குறை காட்டினில் அன்றுயர்-தவ(ம்) முயன்றிடு பார்த்தன் விரும்பிய அமரில் வென்றிடு சீர்ப்-படை தந்திட வரு-வேடா - கொடிய விலங்குகள் வாழும் காட்டில் முன்பு பெருந்தவம் செய்த அர்ஜுனன் விரும்பிய போரில் வெல்லும் பெருமையுடைய பாசுபதாஸ்திரத்தை வரமருள வந்த வேடனே; (அடல் - கொலை; வலிமை); (அமர் - போர்); (படை - ஆயுதம்);

உடல்கள் வெந்திடு காட்டில் அதிர்ந்திடு முரசினம் பல ஆர்க்க நடம்-புரி ஒருவ - பிணங்கள் எரியும் சுடுகாட்டில் அதிரும் முரசுகள் பல ஒலிக்கக் கூத்தாடும் ஒப்பற்றவனே; (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஒருவன் - ஒப்பற்றவன்);

ஐங்கணை கோத்த மதன்றனை முனி-யோகீ - ஐந்து (மலர்)அம்புகளைத் தொடுத்த காமனைக் கோபித்து எரித்த யோகியே; (மதன் - காமன்); (முனிதல் - கோபித்தல்);

தடவரண் பொடி ஆக்கிட அன்று ஒரு மலையை வெஞ்சிலை ஆக்கி வலந்-திகழ் தழலும் அம்பது பூட்டி இருஞ்சமர் புரிவோனே - பெரிய முப்புரங்களைச் சாம்பலாக்க முன்பு மேருமலையைக் கொடிய வில் ஆக்கி வலிய எரியும் அம்பைக் கோத்துப் பெரும்போர் செய்தவனே; (தடம் - பெருமை); (அரண் - மதில்); (சிலை - வில்); (வலம் - வலிமை; வெற்றி); (தழல்தல் - எரிதல்); (இருமை - பெருமை); (சமர் - போர்);

முடை மிகும் தலைஓட்டினில் உண்பலி இடுமின் என்றுழல் வாழ்க்கை மகிழ்ந்திடு(ம்) முதல்வ - புலால் (/புலால்நாற்றம்) மிகுந்த மண்டையோட்டில் பிச்சை இடுங்கள் என்று உழல்கின்ற வாழ்க்கையை விரும்பும் முதல்வனே; (முடை - புலால்; புலால்நாற்றம்); (2.24.7 - "முடை ஆர்தரு வெண்டலை கொண்டுலகில் கடையார் பலி கொண்டுழல் காரணனே"); (உண்பலி - பிச்சை);

அங்கமும் ஓத்து(ம்) மொழிந்தருள் திருநாவா - ஆறங்கமும் நால்வேதமும் பாடியருளியவனே; (ஓத்து - வேதம்);

கடலின் நஞ்சுஅது போய்ச் சுட, உம்பர்கள் கதறி வந்து அடி போற்றவும், உண்டு ஒரு கறை புனைந்து - பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகாலம் எங்கும் பரவித் தகிக்கவும், தேவர்கள் அலறி வந்து உன் திருவடியை வணங்கியபோது, அவர்களுக்கு இரங்கி அவ்விஷத்தை உண்டு கண்டத்தில் ஒரு கறையை அணிந்து;

அலை-ஆற்றினையும் சடை அணிவோனே - (பிறை, பாம்பு இவற்றோடு) அலைமோதும் கங்கைநதியையும் சடையில் அணிந்தவனே; (ஆற்றினையும் - உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளலாம்);

புடையில் நங்கையை ஏற்றனை - இடப்பக்கத்தில் பார்வதியை ஏற்றவனே; (புடை - பக்கம்; பகுதி);

ஞ்சிறை பொலி சுரும்பினம் ஆர்த்து அடையும் செறி பொழில் இலங்கு பராய்த்துறை அங்கு உறை பெருமானே - அழகிய சிறகுகள் திகழ்கின்ற வண்டினங்கள் ரீங்காரம் செய்து அடையும் அடர்ந்த சோலைகள் திகழும் திருப்பராய்த்துறையில் வீற்றிருக்கும் பெருமானே; (அம் - அழகு); (சிறை - சிறகு); (சுரும்பு - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (செறிதல் - அடர்தல்); (அங்கு - அசைச்சொல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment