2012-04-15
N.019 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2012
--------------
1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
திருநீற்றைப் புனையடியார் தூரத்தே தென்படினும்
ஒருதீட்டென் றலப்பமணர் உளம்கலங்க அவரடைத்த
பெருநீற் றறையினுள்ளும் பிறைசூடி கழல்பாடி
உருமாற்றம் இன்றியுய்ந்தார் உரைதமிழ்கள் உறுதுணையே.
திருநீற்றைப் புனை அடியார் தூரத்தே தென்படினும் ஒரு தீட்டு என்று அலப்பு-அமணர் உளம் கலங்க - திருநீறு பூசிய அடியார்களைத் தூரத்தே கண்டாலும் தீட்டு என்று பிதற்றிய சமணர்கள் மனம் கலங்கும்படி; (புனைதல் - அணிதல்); (அலப்புதல் - பிதற்றுதல்); (பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 692 - வெண்பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரையெல்லாம் கண்டுமுட்டு அடிகள்மார்கள் கேட்டுமுட்டு யானும்" -- முட்டு = தீட்டு);
அவர் அடைத்த பெரு-நீற்றறையினுள்ளும் பிறைசூடி கழல் பாடி - அந்தச் சமணர்கள் அடைத்த பெரிய சுண்ணாம்புக் காளவாயிலும் தியானிக்கும் சந்திரனைச் சூடிய சிவனது திருவடியைப் பாடி; (நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய்); (நீற்றறையினுள்ளும் - 1. நீற்றறையிலும்; 2. நீற்றறையில் தியானிக்கும்); (உள் - உள்ளே; ஏழாம்வேற்றுமை உருபு); (உள்ளுதல் - நினைதல்);
உரு மாற்றம் இன்றி உய்ந்தார் உரை-தமிழ்கள் உறு-துணையே - (ஏழுநாள்கள் முன்பு நீற்றறையில் இட்டபொழுது இருந்தபடியே) உடலில் எவ்வித மாறுபாடும் (ஊனமும்) இன்றி உய்ந்தவரான திருநாவுக்கரசர் பாடியருளிய தேவாரமே நமக்குச் சிறந்த துணை;
2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பதிதோறும் தொழுதங்குப் பைஞ்ஞீலி செல்லுங்கால்
மதியாறு புனைகின்ற மணிகண்டன் வழிநின்று
பொதிசோறு தந்தருளப் பெற்றவர்சொல் புகழ்மாலை
நிதிநாடித் தினம்பாடில் வினையோடி நிறைவாமே.
தலங்கள் தோறும் ஈசனைப் போற்றி, (வெயிலில் பசியோடு) திருநாவுக்கரசர் அங்குத் திருப்பைஞ்ஞீலிக்குத் போகும்பொழுது, சந்திரனையும் கங்கையையும் சூடும் நீலகண்டன் அவ்வழியில் (சோலையும் குளமும் அமைத்துக்கொண்டு) காத்திருந்து அவர்க்குப் பொதிசோறு தந்து பசித்தீர்த்தருளினான். அந்நாயனார் அருளிய தேவாரம் என்ற நிதியை விரும்பித் தினமும் பாடினால், நம் வினைகளெல்லாம் நீங்கி, நாம் நிறைவை அடையலாம். ((பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 305 - "பொதிசோறுங் கொண்டு நாவின் தனிமன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார்");
3) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
தங்கள் சமயம் தனைநீங்கிச் .. சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப்
பொங்கு வஞ்ச நெஞ்சமணர் .. புகட்டு நச்சுச் சோறதனைப்
பங்கம் இல்லா அமுதாக்கிப் .. பாலித் தானைப் பதியெங்கும்
துங்கத் தமிழால் துதியப்பர் .. துணைம லர்த்தாள் துணைநமக்கே.
தங்கள் சமயம்தனை நீங்கிச், சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப் - தங்களது சமயத்தை நீங்கிச் சைவம் வளரச் சார்ந்த திருநாவுக்கரசருக்கு;
பொங்கு வஞ்ச நெஞ்சு-அமணர் புகட்டு நச்சுச்சோறதனைப் பங்கம் இல்லா அமுது ஆக்கிப் பாலித்தானைப் - வஞ்சம் பொங்கும் மனமுடைய சமணர்கள் உண்பித்த விஷம் கலந்த உணவைக் குற்றமற்ற அமுதம் ஆக்கி அருளிய பெருமானை; (பங்கம் - குற்றம்); (பாலித்தல் - காத்தல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.70.5 - "வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே");
பதியெங்கும் துங்கத்-தமிழால் துதி-அப்பர் துணைமலர்த்தாள் துணை நமக்கே - பல தலங்களிலும் சிறந்த தமிழால் போற்றிப் பாடிய அப்பரது இருமலர்ப்பாதங்கள் நமக்குத் துணை; (பதி - தலம்); (துங்கம் - உயர்ச்சி; பெருமை; வெற்றி; மேன்மை); (துணை - இரண்டு; காப்பு);
4) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பாவியராய் உழல்வஞ்சப் பரசமய மிண்டரவர்
ஏவியவெங் கரியதனுக் கெள்ளளவும் அஞ்சாமல்
சேவினையே றெம்பெருமான் சேவடியே சிந்தித்த
நாவினுக்கு மன்னவர்சொல் நற்றமிழ்கள் நம்துணையே.
பாவியராய் உழல்-வஞ்சப் பரசமய மிண்டரவர் ஏவிய வெங்கரியதனுக்கு எள்ளளவும் அஞ்சாமல் - குற்றமுடையவர்களாகி உழலும் வஞ்சச்-சமணர்கள் ஏவிய கொடிய யானையைக் கண்டு கொஞ்சமும் பயப்படாமல்; (மிண்டர் - கல்நெஞ்சர்); (வெங்கரி - கொடிய வலிய யானை); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "அண்ணல் அரண்முரண் ஏறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் .. அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை");
சேவினை ஏறு எம்பெருமான் சேவடியே சிந்தித்த - இடபவாகனம் உடைய எம்பெருமானது சிவந்த திருவடியையே தியானித்த; (சே - எருது);
நாவினுக்கு மன்னவர்-சொல் நற்றமிழ்கள் நம் துணையே - திருநாவுக்கரசர் பாடியருளிய தேவாரம் நம் துணை; (நற்றமிழ்கள் - தேவாரப் பதிகங்கள்);
5) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பொல்லாத அமணர்கள் போதனையால் அன்றுபெருங்
கல்லோடு கட்டிநடுக் கடலாழ்த்தும் போதுந்தம்
சொல்லாலெம் பெருமான்பேர் துணையென்று கரையேற
வல்லார்நம் வாகீசர் வாழியவர் மலர்த்தாளே.
பொல்லாத அமணர்கள் போதனையால் அன்று பெருங்கல்லோடு கட்டி நடுக்கடல் ஆழ்த்தும்போதும் - தீய சமணர்களது போதனையால் அரசன் இட்ட ஆணையால் முன்பு ஒரு பெரிய கல்லோடு தம்மைக் கட்டி நடுக்கடலில் ஆழ்த்தியபொழுதும்;
தம் சொல்லால் எம்பெருமான்-பேர் துணை என்று கரையேற வல்லார் நம் வாகீசர் - தம் வாக்கால் எம்பெருமான் திருநாமமே துணை என்று கரையேறியவர் நம் வாகீசர்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.72.7 - "கல்லினோடு எனைப் பூட்டி அமண்-கையர் ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே");
வாழி அவர் மலர்த்தாளே - அவர் மலர்ப்பாதம் வாழ்க; (வாழி - வாழ்க);
6) --- (கலிவிருத்தம் - கூவிளம் தேமா கூவிளம் தேமா - என்ற வாய்பாடு) ---
தாண்டவம் ஆடும் ஆண்டவன் தீயாய்
மூண்டள வின்றி நீண்டவன் தன்னைத்
தாண்டகம் பாடி வேண்டிய அன்பர்
மாண்துணைத் தாளைப் பூண்டதென் நெஞ்சே.
தாண்டவம் ஆடும் ஆண்டவன் - நடராஜன்;
தீயாய் மூண்டு அளவு இன்றி நீண்டவன்-தன்னை - திருமாலும் பிரமனும் தேடுமாறு அளவில்லாச் சோதியாக உயர்ந்த பிரானை;
தாண்டகம் பாடி வேண்டிய அன்பர் - தாண்டகங்கள் பாடி இறைஞ்சிய தொண்டரான திருநாவுக்கரசர்; (தாண்டகம் - தேவாரத்தில் பயிலும் யாப்புவகைகளில் ஒன்று; தாண்டகச்சதுரர் - திருநாவுக்கரசு நாயனார்);
மாண்-துணைத்தாளைப் பூண்டது என் நெஞ்சே - மாட்சிமை உடைய இருதிருவடிகளை என் மனம் அணிந்தது; (மாண்டுணை = மாண் + துணை); (மாண்தல் - மாட்சிமைப்படுதல்); (பூண்தல் - தரித்தல்; அணிதல்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment