Sunday, August 14, 2022

V.022 - கண் சிவந்த கண்ணுதலான்

2012-03-04

V.022 - கண் சிவந்த கண்ணுதலான்

----------------

முற்குறிப்புகள்:

1) "கொடுக்கப்பட்ட படத்திற்குப் பாடல்" என்ற அடிப்படையில் நிகழ்ந்த ஒரு கவியரங்கத்தில் கீழே உள்ள படத்தை ஒட்டி நான் எழுதிய பாடல்:


(My interpretation of the scene depicted in the picture: "A snail is on a railway track and a train is coming out of a tunnel on that track towards it".

The following songs are in that context - in that snail's words. However, all songs are also meaningful in a general standalone manner as well - without any reference to this picture.)


2) நத்தையின் உயிரைக் காக்க ஈசன் அங்கே விளக்கில் சிவப்பு நிறத்தைக்காட்டி இரயிலைத் தடுத்து நிறுத்தி அருள்புரிந்ததை ஒட்டி அந்த நத்தையின் பாடல்கள் இவை! பல பாடல்களில் ஈசனின் செந்நிறம் போற்றப்படுகின்றது!


கொடுக்கப்பட்ட படத்தில் கைகாட்டியோ சிவப்பு விளக்கோ இல்லை. படத்தின் கோணத்திற்கு வெளியே அஃது இருந்ததாகக் கொள்ளப்பட்டது. "தோன்றாத் துணை"!


நாம் நத்தை-வேகத்தில் அவனை நோக்கிச் சென்றாலும் அவன் ஒளி-வேகத்தில் வந்து நம்மைக் காப்பான்!


கண் சிவந்த கண்ணுதலான்

----------------

0-a) -- காப்பு -- (கலித்துறை - மா மா மா மா விளங்காய் - வாய்பாடு)

பத்தி யின்றிப் பாழ்க்கு ழன்று பாரிதிலே

நித்தல் துன்பம் நேர்ந்தும் நினையேன் நெஞ்சிலுனை;

சத்தி கூறு தாங்கும் உன்றன் தாளிணையே

புத்தி ஒன்றிப் போற்ற அருள்செய் புண்ணியனே.


பக்தியின்றி வீணே உலகில் உழன்று தினமும் துன்பம் அடைந்தும் உன்னை நெஞ்சில் நினையமாட்டேன்; உமாதேவியை ஒரு பங்கில் தாங்கும் உன் இருதிருவடிகளையே மனம் ஒன்றி வணங்கப், புண்ணியனே, அருள்க. (நித்தல் - எந்நாளும்); (பத்தி - பக்தி); (சத்தி - சக்தி);


1) -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) --

பயிர்காட்டும் மழையானே; பாலோடு நெய்யோடு

தயிர்ஆட்டல் மகிழ்வோனே; தயையின்றிக் கையிலொரு

கயிறாட்டி வருநமனைக் கழலடியால் உதைத்தவனார்

உயிர்வீட்டி உன்னடியார் உயிர்காத்தாய் சரண்நீயே.


பயிர் காட்டும் மழையானே - (எல்லா ஜீவராசிகளும் தழைக்க, அனைத்திற்கும் ஆதாரமான) பயிர்கள் தழைக்க, மழை வடிவில் வருபவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "பயிர்காட்டும் புயலானும்");

பாலோடு நெய்யோடு தயிர் ஆட்டல் மகிழ்வோனே - பால் நெய் தயிர் முதலியவற்றால் அபிஷேகம் விரும்பியவனே; (ஆட்டல் - ஆட்டுதல் - அபிஷேகம் செய்தல்);

தயையின்றிக் கையில் ஒரு கயிறு ஆட்டி வரு-நமனைக் கழலடியால் உதைத்து அவன் ஆருயிர் வீட்டி உன் அடியார் உயிர்காத்தாய் - இரக்கமின்றிக் கையில் பாசத்தைச் சுழற்றிக்கொண்டு வந்த காலனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்து அவனது அரிய உயிரை அழித்து உன் பக்தரின் (= மார்க்கண்டேயரது) உயிரைக் காத்தவனே; (வீட்டுதல் - அழித்தல்; கொல்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.9.9 - "காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்");

சரண் நீயே - நீயே அடைக்கலம்; நீயே எனக்குப் புகலிடம்;


2)

பொய்கூட்டிப் பழிக்கின்ற புல்லறிவார்க் கரியானே;

பைகாட்டும் அரவத்தைப் படர்சடைமேல் அணிவோனே;

மெய்காட்டும் தத்துவனே; விடையவனே; செவ்வண்ணக்

கைகாட்டி இங்கென்னைக் காத்தருளும் கண்ணுதலே.


பொய் கூட்டிப் பழிக்கின்ற புல்லறிவார்க்கு அரியானே - பல பொய்கள் பேசி இகழும் அறிவீனர்களால் அறியவொண்ணாதவனே; (புல்லறிவார் - அறிவீனர்);

பை காட்டும் அரவத்தைப் படர்சடைமேல் அணிவோனே - படமுடைய பாம்பைப் படரும் சடைமேல் அணிந்தவனே; (பை - பாம்பின் படம்);

மெய் காட்டும் தத்துவனே - சத்தியத்தைக் காட்டும் தத்துவப்பொருளே;

விடையவனே - இடபவாகனனே;

செவ்வண்ணக் கைகாட்டி இங்கு என்னைக் காத்தருளும் கண்ணுதலே - செந்நிறம் திகழும் அபயஹஸ்தத்தைக் காட்டி இங்கே என்னைக் காக்கும் நெற்றிக்கண்ணனே;

(* செவ்வண்ணக் கைகாட்டி - சிவப்பு நிறத்தைக் காட்டி, "நில்" என்று காட்டும் கைகாட்டி - red signal - என்றும் கொள்ளலாம்); (கைகாட்டி - போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம்; (signal));


3)

பாடிவந்தார் பசிதீர்க்கப் படிக்காசு பரிந்தளித்தாய்;

ஓடிவந்த கங்கைதனை உன்சடையுள் நிறுத்திவைத்தாய்;

தேடியந்த மாலயனும் திகைத்துநிற்கச் செந்தழலாய்

நீடியன்று வந்தவனே; நின்கழலே தொழுவேனே.


பாடிவந்தார் பசிதீர்க்கப் படிக்காசு பரிந்தளித்தாய் - பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் திருவீழிமிழலையில் பஞ்சகாலத்தில் அடியார்களுக்கு உணவிடப் படிக்காசு அருளியவனே; (படிக்காசு - daily allowance);

ஓடிவந்த கங்கைதனை உன் சடையுள் நிறுத்திவைத்தாய் - ஓடிவந்த கங்கையை உன் சடையில் தடுத்து நிறுத்திவைத்தவனே;

தேடி அந்த மாலயனும் திகைத்துநிற்கச் செந்தழலாய் நீடி அன்று வந்தவனே - அந்தத் திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிக் கானாராய் அஞ்சிநிற்குமாறு முன்பு ஜோதியாகி நீண்டவனே;

நின் கழலே தொழுவேனே - உன் திருவடியையே வணங்குவேன்;

(* கங்கையைத் தடுத்து நிறுத்தினாய், திருமாலையும் பிரமனையும் திகைத்துநிற்கவைத்தாய்; இன்று செஞ்சுடராக வந்து இந்த இரயிலையும் நிறுத்தினாய் என்ற குறிப்பும் பெறலாம்);


4)

அம்புவிடும் காமனுடல் அன்றெரித்தாய்; பொற்சடைமேல்

அம்புலியாய்; அரக்கனையன் றருவரைக்கீழ் அடர்த்தவனே;

அம்புயமாய்க் கண்ணிட்ட அரிக்காழி அளித்தவனே;

செம்பவள வண்ணத்தாய்; சேவடியே தொழுவேனே.


அம்புவிடும் காமனுடல் அன்று எரித்தாய் - கணைதொடுத்த காமனது உடலை அன்று எரித்தவனே;

பொற்சடைமேல் அம்புலியாய் - பொற்டைமேல் சந்திரனைச் சூடியவனே; (அம்புலி - சந்திரன்);

அரக்கனை அன்று அருவரைக்கீழ் அடர்த்தவனே - இராவணனைக் கயிலைமலைகீழ் நசுக்கியவனே; (அடர்த்தல் - நசுக்குதல்);

அம்புயமாய்க் கண் இட்ட அரிக்கு ஆழி அளித்தவனே - தாமரைமலர் போலக் கண்ணைத் தோண்டித் தூவி அர்ச்சனை செய்த திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளியவனே; (அம்புயம் - அம்புஜம் - தாமரை); (ஆழி - சக்கரம்);

செம்பவள வண்ணத்தாய் - பவளம் போல் செந்நிறம் உடையவனே;

சேவடியே தொழுவேனே - உன் சிவந்த திருவடியையே வணங்குவேன்;


5) -- வேறு -- (அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு)

கானில் தம்கண் இடக்கும் வேடர் கையைப் பிடித்தவனே;

தேனிற் சுவையாய்ப் பூவில் மணமாய்த் திகழும் பெருமானே;

வானில் ஓடும் இரதம் ஓடா மலைமேல் உறைவோனே;

நானின் நலஞ்செய் கழலை நயந்து நாளும் தொழுவேனே.


கானில் தம்கண் இடக்கும் வேடர் கையைப் பிடித்தவனே - காட்டில் தமது இரண்டாம் கண்ணைத் தோண்டவிருந்த கண்ணப்பரது கையைப் பற்றித் தடுத்து நிறுத்தியவனே; (இடத்தல் - தோண்டுதல்);

தேனிற் சுவையாய்ப் பூவில் மணமாய்த் திகழும் பெருமானே - தேனில் இன்சுவையாகியும் பூவில் வாசனையாகியும் திகழும் பெருமானே;

வானில் ஓடும் இரதம் ஓடா மலைமேல் உறைவோனே - கயிலைமலையானே; (இராவணனின் தேர் கயிலைமலைமேல் செல்லாது நின்றதைச் சுட்டியது);

நான் நின் நலஞ்செய் கழலை நயந்து நாளும் தொழுவேனே - நான் உனது நன்மைதரும் திருவடியைத் தினமும் விரும்பித் தொழுவேன்; (நயத்தல் - விரும்புதல்); (நின் - உன்);


6) -- வேறு -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

தவம்பெருகு வாகீசர் தாள்பணிஅப் பூதிமகன்

சவந்தனிலே தமிழ்க்கிரங்கி உயிரூட்டும் சங்கரனே;

பவந்தவிர்க்கும் பழம்பொருளே; பறக்குமெயில் செற்றவனே;

சிவந்ததிரு மேனியனே; சேவடியே தொழுவேனே.


தவம் பெருகு வாகீசர் தாள்பணி அப்பூதி-மகன் சவந்தனிலே தமிழ்க்கு இரங்கி உயிரூட்டும் சங்கரனே - பெருந்தவம் உடைய திருநாவுக்கரசரது பாதத்தைப் பணிந்த அப்பூதி அடிகளின் மகனது உயிரற்ற உடலில் தமிழ்ப்பாமாலை கேட்டு இரங்கி உயிரை மீண்டும் தந்த சங்கரனே;

பவம் தவிர்க்கும் பழம்பொருளே - பிறவிகளைத் தீர்க்கும் பழையவனே; (பவம் - பிறப்பு);

பறக்கும் எயில் செற்றவனே - பறக்கும் முப்புரங்களை அழித்தவனே; (எயில் - மதில்); (செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; அழித்தல்); (* பறக்கும் மெயில் செற்றவனே - "விரைந்து செல்லும் எக்ஸ்பிரெஸ் / மெயில் இரயில்வண்டியைத் தடுத்தவனே" என்றும் பொருள்கொள்ளக்கூடும்);

சிவந்த திருமேனியனே - செம்மேனியனே;

சேவடியே தொழுவேனே - உன் சிவந்த திருவடியையே வணங்குவேன்;


7)

அஞ்செழுத்தை நாள்தோறும் அன்போடு சொல்லடியார்க்(கு)

அஞ்சலளித்(து) அருள்கின்ற அங்கணனே; அன்றெழுந்த

நஞ்சையொளித்(து) இருள்கண்ட; நடுக்கத்தைத் தீர்க்கின்ற

செஞ்சுடரே; சீராரும் சேவடியே தொழுவேனே.


அஞ்செழுத்தை நாள்தோறும் அன்போடு சொல்-அடியார்க்(கு) அஞ்சல் அளித்(து) ருள்கின்ற அங்கணனே - திருவைந்தெழுத்தைத் தினமும் அன்போடு ஜபம் செய்யும் அடியார்களுக்கு அபயம் அளித்து அருளும் அருட்கண்ணனே; (அங்கணன் - அருட்கண் உடையவன்);

அன்று எழுந்த நஞ்சை ஒளித்(து) இருள்-கண்ட - முன்பு பொங்கிய ஆலகாலத்தை உண்டு ஒளித்து இருண்ட கண்டம் உடையவனே;

நடுக்கத்தைத் தீர்க்கின்ற செஞ்சுடரே - அச்சத்தைத் தீர்க்கும் செஞ்சோதியே; (நடுக்கம் - அச்சம்); (* செஞ்சுடர் - செவ்விளக்கு என்றும் கொள்ளலாம்);

சீர் ஆரும் சேவடியே தொழுவேனே - நன்மை பொருந்திய, அழகிய சிவந்த திருவடியையே வணங்குவேன்;


8)

எவ்வணமாய் நின்னடியார் இணையடியை ஏத்திடினும்

அவ்வணமே அங்கவர்கட்(கு) அருள்கின்ற பெருமானே;

வவ்வவரும் வலியவினைத் தொடர்அடையா வணம்நிற்கும்

செவ்வணனே; சீராரும் சேவடியே தொழுவேனே.


எவ்வணமாய் நின்டியார் இணையடியை ஏத்திடினும் அவ்வணமே அங்கு அவர்கட்கு அருள்கின்ற பெருமானே - எவ்விதம் உன் அடியார் இருதிருவடிகளைத் துதித்தாலும் அவ்விதமே அவர்களுக்கு அருளும் பெருமானே; (வணம் - வண்ணம் - விதம்; நிறம்; வடிவம்); (அப்பர் தேவாரம் - 5.28.7 - "விரும்பும் வண்ணமும் .... ஆவர் ஐயாறரே" - விரும்பும் வண்ணம் - மெய்யன்பர் விரும்பும் வடிவங்கள்);

வவ்வ வரும் வலிய வினைத்தொடர் அடையாவணம் நிற்கும் செவ்வணனே - பற்ற வரும் வலிய வினைகள் நெருங்காதபடி காத்துநிற்கும் செவ்வண்ணனே; (வவ்வுதல் - கவர்தல் - To snatch, take hold of); (செவ்வணன் - செவ்வண்ணன் - செந்நிறத்தன்); (* இரயில்வண்டித்தொடர் உருவத்தில் வந்தடைந்த வினைத்தொடர் என்றும் கொள்ளலாம்);

சீர் ஆரும் சேவடியே தொழுவேனே - நன்மை பொருந்திய, அழகிய சிவந்த திருவடியையே வணங்குவேன்;


9)

அழுஞ்சுரர்க்கா ஆலமுண்ட அருட்கடலே; அயனொடுமால்

தொழுஞ்சுடரே; நல்லவழித் துணையாகிக் காப்பவனே;

எழுஞ்சுடர்போல் மேனியனே; ஏத்தடியார் இடர்தீர்க்கும்

செழுஞ்சுடரே; சீராரும் சேவடியே தொழுவேனே.


அழும் சுரர்க்கா ஆலம் உண்ட அருட்கடலே - அழுத தேவர்களுக்காக ஆலகாலத்தை உண்ட கருணைக்கடலே;

அயனொடு மால் தொழும் சுடரே - பிரமனும் திருமாலும் வணங்கும் ஜோதியே;

நல்ல வழித்துணையாகிக் காப்பவனே - சிறந்த வழித்துணையாகிக் காத்தருள்பவனே; (* நல்ல வழி - கரிய நிறத்தில் உள்ள இருப்புப்பாதையைச் சுட்டியது என்றும் கொள்ளலாம். நல்லம் - கறுப்பு); (நல்லம் - கருமையை உணர்த்தப் பழந்தமிழில் வழங்கியதோர் சொல் (சூடாமணி). அஃது இப்போது தமிழில் வழக்காறொழிந்தது. தெலுங்கு மொழியில் இப்பொருளில் வழக்கில் உள்ளது.)

எழும் சுடர்போல் மேனியனே - காலையில் எழுகின்ற இளஞ்சூரியன் போன்ற செம்மேனியனே;

ஏத்து-அடியார் இடர்தீர்க்கும் செழுஞ்சுடரே - துதிக்கும் அடியார்களது துன்பத்தைத் தீர்க்கும் செழுமையான ஜோதியே; (சுடர் - ஒளி; ஜோதி; நெருப்பு; விளக்கு);

சீர் ஆரும் சேவடியே தொழுவேனே - நன்மை பொருந்திய, அழகிய சிவந்த திருவடியையே வணங்குவேன்;


10) -- வேறு -- (கலிவிருத்தம் - தேமா புளிமா தேமா புளிமா - வாய்பாடு)

எண்ணில் வினைகள் நண்ணி இடர்கள்

பண்ணும் நிலைதீர் அண்ணல் பவள

வண்ணன் நுதலிற் கண்ணன் அடியை

எண்ணில் எழிலார் விண்ணும் எளிதே.


எண்-ல் வினைகள் நண்ணி இடர்கள் பண்ணும் நிலை தீர் அண்ணல் - அளவற்ற வினைகள் நெருங்கி வந்தடைந்து துன்பம் செய்யும் நிலையைத் தீர்க்கும் பெருமான்; (எண்ணில் - எண் இல் - எண்ணற்ற); (நண்ணுதல் - அடைதல்; நெருங்குதல்);

பவள வண்ணன் - செம்பவளம் போன்ற செம்மேனியன்;

நுதலிற் கண்ணன் - நெற்றியில் கண்ணுடையவன்; (நுதல் - நெற்றி);

அடியை எண்ணில் எழில் ஆர் விண்ணும் எளிதே - அப்பெருமானது திருவடியைத் தியானித்தால் அழகு மிகுந்த சிவலோகமும் எளிதில் கிட்டும்; (எண்ணில் - எண்ணினால்; நினைந்தால்);


பிற்குறிப்பு:

அப்பர் தேவாரம் - 6.95.2

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்

.. வெய்ய வினைப்பகையும் பைய நையும்

எம்பரிவும் தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;

.. எங்கெழில்என் ஞாயி(று) எளியோம் அல்லோம்;

அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி,

.. அனலாடி, ஆன்அஞ்சும் ஆட்டு கந்த

செம்பவள வண்ணர்,செங் குன்ற வண்ணர்,

.. செவ்வான வண்ணர்என் சிந்தை யாரே.


அழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரும், பஞ்சகவ்வியத்தில் அபிஷேகம் உகந்தவரும், செம்பவள நிறத்தினரும், செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையில் உள்ளார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோர் இடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை? எவருக்கும் நாம் எளியோம் அல்லோம்.


அப்பர் தேவாரம் - 4.94.8

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி உன்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.


வி. சுப்பிரமணியன்

----------- -----------


3 comments:

  1. நத்தாகத் திரியும் நாமும் இந்த நத்தையும் ஒன்றே... தந்தையாம் சிவனைப் போற்றி, நலமிகப் பெறுவோமே.

    ReplyDelete
  2. நத்தை சீவனாகவும் ரயில் சிவனாகவும் கொண்டால் அறியாமையினால் சிவனை விட்டு விலகிச்செல்லும் சீவனை விரைந்து வந்தாட்கொள்ளும் சிவனை ஒக்கிறது ரயில்.
    பாடல்கள் அனைத்தும் சிந்தைக்கு விருந்து.

    ReplyDelete