2011-09-01
T.154 - நெய்த்தானம் - ஆறுனைச் சேரற்கு
(தில்லைஸ்தானம்; திருவையாறு அருகே உள்ள தலம்)
--------------
(வண்ணவிருத்தம்;
தானனத் தானத் .. தனதான)
ஆறுனைச் சேரற் .. கறியாத
.. ஆதரைக் கூடித் .. திரியாமல்
நூறுபத் தா(ம்)நற் .. பெயர்கூறி
.. நோயறுப் பாயைப் .. பணிவேனே
நீறுமெய்ப் பூசித் .. திகழ்வோனே
.. நேயரைப் பாலித் .. தருள்வோனே
ஏறுகைத் தூரிற் .. பலிதேர்வாய்
.. ஏர்கொள்நெய்த் தானப் .. பெருமானே.
பதம் பிரித்து:
ஆறு உனைச் சேரற்கு அறியாத
.. ஆதரைக் கூடித் திரியாமல்,
நூறு-பத்து ஆ(ம்) நற்பெயர் கூறி,
.. நோய் அறுப்பாயைப் பணிவேனே;
நீறு மெய்ப் பூசித் திகழ்வோனே;
.. நேயரைப் பாலித்து அருள்வோனே;
ஏறு உகைத்து ஊரிற் பலி தேர்வாய்;
.. ஏர்கொள் நெய்த்தானப் பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
ஆறு உனைச் சேரற்கு அறியாத ஆதரைக் கூடித் திரியாமல் - செல்லவேண்டிய மார்க்கமாகிய உன்னை அடைய அறியாத அறிவற்றவர்களோடு சேர்ந்து உழலாமல்; (ஆறு - வழி); (ஆதன் - குருடன்; அறிவில்லான்);
நூறு-பத்து ஆ(ம்) நற்பெயர் கூறி, நோய் அறுப்பாயைப் பணிவேனே - ஆயிரம் நல்ல திருநாமங்களைச் சொல்லி, உடல்நோய்களையும் பிறவிநோயையும் தீர்க்கும் உன்னைத் தொழுவேன்; (நூறு-பத்து - ஆயிரம்); (நோய் - உடல்நோய், பிறவிநோய்); (அறுத்தல் - தீர்த்தல்);
நீறு மெய்ப் பூசித் திகழ்வோனே - திருநீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவனே; (மெய்ப்பூசி - மெய்யில் பூசி; ஏழாம்வேற்றுமைத்தொகையில் வல்லொற்று மிகாது எனின், ஓசை கருதி ப் ஒற்று விரித்தல் விகாரம் என்று கொள்க); (அப்பர் தேவாரம் - 5.6.6 - "சுண்ண நீறுமெய்ப் பூசி");
நேயரைப் பாலித்து அருள்வோனே - அன்பர்களைக் காத்து அருள்பவனே; (பாலித்தல் - காத்தல்);
ஏறு உகைத்து ஊரிற் பலி தேர்வாய் - இடபவாகனத்தில் ஏறிச் சென்று, ஊர்களில் பிச்சையை ஏற்பவனே; (உகைத்தல் - ஏறுதல்; ஏறிச் செலுத்துதல்); (ஊரிற்பலி - 1. ஊரில்+பலி; 2. ஊர்+இல்+பலி); (இல் - வீடு); (சம்பந்தர் தேவாரம் - 3.76.1 - "மடவார் இற்பலி கொளப்புகுதும் எந்தை");
ஏர்கொள் நெய்த்தானப் பெருமானே - அழகிய திருநெய்த்தானத்தில் உறையும் பெருமானே; (ஏர் - அழகு); (ஏர்கொள் + நெய்த்தானம் = ஏர்கொணெய்த்தானம்" என்று ஆவதால் இப்பாடலின் சந்தம் கெடாது); (சம்பந்தர் தேவாரம் - 2.104.4 - "நீர்கொ ணீள்சடை முடியனை = "நீர்கொள் நீள்சடை முடியனை"); (சம்பந்தர் தேவாரம் - 3.72.11 - "கடைகொணெடு மாடமிக வோங்கு" = கடைகொள் நெடுமாடம் மிக ஓங்கு);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment