2012-04-22
T.166 - நெய்த்தானம் - கலரைக் கூடி
(தில்லைஸ்தானம்; திருவையாறு அருகே உள்ள தலம்)
--------------
(வண்ணவிருத்தம்;
தனனத் தான தனனத் தான
தனனத் தான .. தனதான)
கலரைக் கூடி மதிகெட் டாறு
.. .. கசடுற் றீன(ம்) .. மிகவாகிக்
.. கலியுற் றாயுள் முடிவுற் றாவி
.. .. கழலத் தீயுள் .. விழுவேனோ
மலமற் றாயுன் இருபொற் றாளில்
.. .. மலரிட் டோதி .. அடியேனும்
.. வரையற் றேறு வினையைத் தூள்செய்
.. .. வழியைச் சேர.. அருளாயே
நிலவைப் பாயு(ம்) நதியைப் பூவின்
.. .. நிரையைச் சூடு(ம்) .. முடியானே
.. நினைநச் சானை இசையைப் பாட
.. .. நெரிவித் தாயுள் .. தருவோனே
அலைதெற் றாறு பணியச் சேரும்
.. .. அணிநெய்த் தானம் .. உறைவோனே
.. அலறிப் பாலன் அடையக் காலன்
.. .. அவனைக் காது .. பெருமானே.
பதம் பிரித்து:
கலரைக் கூடி, மதி கெட்டு, ஆறு
.. .. கசடு உற்று, ஈன(ம்) மிக ஆகிக்,
.. கலி உற்று, ஆயுள் முடிவுற்று, ஆவி
.. .. கழலத், தீயுள் விழுவேனோ;
மலமற்றாய், உன் இரு பொற்றாளில்
.. .. மலர் இட்டு, ஓதி அடியேனும்,
.. வரை அற்று ஏறு வினையைத் தூள் செய்
.. .. வழியைச் சேர அருளாயே;
நிலவைப், பாயு(ம்) நதியைப், பூவின்
.. .. நிரையைச், சூடு(ம்) முடியானே;
.. நினை நச்சானை இசையைப் பாட
.. .. நெரிவித்து ஆயுள் .. தருவோனே;
அலை தெற்று ஆறு பணியச் சேரும்
.. .. அணி நெய்த்தானம் உறைவோனே;
.. அலறிப் பாலன் அடையக், காலன்-
.. .. அவனைக் காது பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
கலரைக் கூடி மதி கெட்டு ஆறு கசடு உற்று ஈன(ம்) மிக ஆகிக், கலி உற்று, ஆயுள் முடிவு உற்று, ஆவி கழலத் தீயுள் விழுவேன்; ஓ - தீயவரைச் சேர்ந்து, அறிவிழந்து, காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் என்ற ஆறு குற்றங்களும் மனத்தில் சேர்ந்துகொள்ள, அதனால் இழிவடைந்து, துன்புற்று, வாழ்நாள் ஆகி, உயிர் பிரிந்து தீயில் விழுந்துவிடுவேன். ஓலம்! (கலர் - கீழோர்; தீயவர்); (ஆறு கசடு - ஆறு குற்றங்கள் - அறுபகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்); (ஈனம் - இழிவு); (கலி - துன்பம்); (கழலுதல் - நீங்குதல்); (ஓ - ஓலம் - அபயக் குறிப்பு);
மலமற்றாய்; உன் இரு-பொற்றாளில் மலர் இட்டு ஓதி அடியேனும், வரை அற்று ஏறு வினையைத் தூள்செய் வழியைச் சேர அருளாயே - நின்மலனே! உன் இருபொன்னடிகளில் பூக்கள் தூவிப் பாடி வழிபட்டு அடியேனும், அளவின்றி மிகுந்த வினைகளைத் தூளாக்கும் வழியைச் சேர்வதற்கு அருள்புரிவாயாக! (மலம் அற்றாய் - நின்மலனே); (பொற்றாள் - பொன்னடி); (ஓதுதல் - பாடுதல்); (வரை - அளவு); (ஏறுதல் - மிகுதல்);
நிலவைப், பாயு(ம்) நதியைப், பூவின் நிரையைச் சூடு(ம்) முடியானே - சந்திரனையும், பாயும் கங்கையையும், பூங்கொத்துகளையும் திருமுடியில் சூடுபவனே! (நிரை - வரிசை; அடுக்கு);
நினை நச்சானை இசையைப் பாட நெரிவித்து ஆயுள் தருவோனே - உன்னை விரும்பிப் போற்றாத இராவணனை அவன் உன்னைப் போற்றி இசையைப் பாடும்படி (அவன் பெயர்த்த கயிலைமலைக்கீழ்) நசுக்கி, அவனுக்கு நீண்ட ஆயுளை அளித்தவனே; (நினை - நின்னை - உன்னை); (நச்சுதல் - விரும்புதல்); (நெரிதல் - நசுங்குதல்; நெரிவித்தல் - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.2.8 - "தென்னிலங்கை அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண்தோள் தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்றருள்செய்த");
அலை தெற்று ஆறு பணியச் சேரும் அணி நெய்த்தானம் உறைவோனே - அலைமோதும் காவிரி திருவடியை வணங்க அடைகின்ற அழகிய திருநெய்த்தானத்தில் எழுந்தருளியவனே; (தெற்றுதல் - மோதுதல்); (அணி - அழகு);
அலறிப் பாலன் அடையக் காலன்அவனைக் காது பெருமானே - மார்க்கண்டேயர் அலறிச் சரணடைந்தபொழுது, காலனை உதைத்துக் கொன்ற பெருமானே; (பாலன் - இங்கே, மார்க்கண்டேயன்); (காலனவன் - காலன்ல்; அவன் - பகுதிப்பொருள்விகுதி); (காதுதல் - கொல்லுதல்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment