2012-03-18
S.133 - சிவன் - கைகாட்டி விளக்கு (signal) - சிலேடை
----------------
முக்கண் திகழ்வதால் மோதலைநி றுத்துவதால்
எக்கண்ணும் காண்பதால் செக்கர்வான் - ஒக்கவொளி
வீசி யொருகால் விளங்குவதால் வெண்ணீறு
பூசிநெறி காட்டுசுடர் போல்.
சொற்பொருள்:
மோதலை - 1. மோதுவதை; / 2. மோது அலை;
எக்கண்ணும் - எவ்விடத்தும்;
செக்கர்வான் - செவ்வானம்;
ஒளிவீசி - 1. ஒளியை வீசி; / 2. ஒளி வீசுபவன்;
ஒருகால் - 1. ஒரு சமயம்; ஒரு கம்பம்; / 2. ஒரு திருவடி;
கைகாட்டி விளக்கு (signal):
முக்கண் திகழ்வதால் - (கண்கள் போல) சிவப்பு, மஞ்சள், பச்சை என்று மூன்று விளக்குகள் இருப்பதால்;
மோதலை நிறுத்துவதால் - வாகனங்கள் மோதுவதைத் தடுப்பதால்;
எக்கண்ணும் காண்பதால் - (ஊர்வீதிகளில், இருப்புப்பாதைகளில்) பல இடங்களிலும் இருப்பதால்;
செக்கர்வான் ஒக்க ஒளி வீசி ஒருகால் விளங்குவதால் - செவ்வானம் போல் செந்நிற ஒளிவீசிச் சிலசமயம் திகழ்வதால்; (ஒருகால் விளங்குவதால் - "ஒரு கம்பத்தில் இருப்பதால்" என்றும் பொருள்கொள்ள அமைந்தது);
நெறி காட்டு-சுடர் - வழிகாட்டும் விளக்கு - கைகாட்டி (signal);
சிவன்:
முக்கண் திகழ்வதால் - நெற்றிக்கண் இருப்பதால்;
மோது-அலை நிறுத்துவதால் - விரைந்துவந்த அலைமோதும் கங்கையைச் சடையுள் தடுத்ததால்; (அலை - ஆகுபெயராக, அலையுடைய ஆற்றைக் குறித்தது);
எக்கண்ணும் காண்பதால் - எவ்விடமும் காண்பதால்; (எல்லாம் அறிந்தவன்); ("எங்கும் இருப்பவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);
செக்கர்வான் ஒக்க ஒளி வீசி, ஒரு கால் விளங்குவதால் - 1. செம்மேனியனாக, ஏகபாதமூர்த்தியாகத் திகழ்வதால்; 2. அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் வலக்கால் செவ்வான நிறத்திலும் இடக்கால் கருமுகில் நிறத்திலும் திகழ்வதால்;
வெண்ணீறு பூசி - வெண்திருநீற்றைப் பூசும் சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment