Thursday, August 11, 2022

T.161 - பொது - நான் ஓதற்கு

2012-01-16

T.161 - பொது - நான் ஓதற்கு

--------------

(வண்ணவிருத்தம்;

தானானத் .. தனதான)

(நீதானெத் தனையாலும் - திருப்புகழ் - திருவாரூர்)


நானோதற் .. கறியாமல்

.. நாளாகிக் .. கழியாமல்

தேனார்நற் .. றமிழால்நின்

.. சீர்பாடற் .. கருளாயே

கானாகத் .. துரிமூடீ

.. காதோர்பொற் .. குழையானே

வானோருக் .. கமுதீவாய்

.. மானார்கைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

நான் ஓதற்கு அறியாமல், .. நாள் ஆகிக் கழியாமல்,

தேன் ஆர் நற்றமிழால் நின் .. சீர் பாடற்கு அருளாயே;

கான்-நாகத்து உரி மூடீ; .. காது ஓர் பொற்குழையானே;

வானோருக்கு அமுது ஈவாய்; .. மான் ஆர் கைப் பெருமானே.


நான் ஓதற்கு அறியாமல், நாள் ஆகிக் கழியாமல் - நான் உன்னை ஓத அறியாமல் வீணே நாள்கள் சென்று இறந்து அழிந்துவிடாமல்; (கழிதல் - சாதல்; அழிதல்);

தேன் ஆர் நற்றமிழால் நின் சீர் பாடற்கு அருளாயே - மணம் கமழும் இனிய நல்ல தமிழ்ப்பாமாலைகளால் உன் புகழைப் பாடுவதற்கு அருள்புரிவாயாக; (தேன் - இனிமை; வாசனை); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; ஒத்தல்); (சீர் - புகழ்);

கான்-நாகத்து உரி மூடீ - காட்டுயானைத்தோலைப் போர்வையாக அணிந்தவனே; (கான் - காடு); (நாகம் - யானை); (உரி - தோல்); (மூடீ - மூடியவனே); (சம்பந்தர் தேவாரம் - 2.17.3 - "ஆகம் அழகாயவள்தான் வெருவ நாகம் உரிபோர்த்தவன்");

காது ஓர் பொற்குழையானே - ஒரு காதில் பொற்குழை அணிந்தவனே (அர்த்தநாரீஸ்வரன்); (சம்பந்தர் தேவாரம் - 1.30.5 - "காதார் கனபொற்குழை தோடதிலங்கத்");

வானோருக்கு அமுது ஈவாய் - (விஷத்தை உண்டு) தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்தவனே;

மான் ஆர் கைப் பெருமானே - மானைக் கையில் ஏந்திய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment