2012-05-04
T.167 - பைஞ்ஞீலி - எந்நாளும் மயலுறு
--------------
(வண்ணவிருத்தம்;
தன்னான தனதன .. தனதான)
எந்நாளு(ம்) மயலுறு .. மதியாலே
.. இஞ்ஞால மிசையுழல் .. அடியேனும்
அந்நாலு மறைமொழி .. அயன்மாலும்
.. அண்ணாத அடிதொழ .. அருளாயே
அந்நாரி தனையிடம் .. உடையானே
.. அஞ்ஞான இருளறு .. சுடரானே
பைந்நாக(ம்) முடிமிசை .. அணிவோனே
.. பைஞ்ஞீலி தனிலுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
எந்நாளு(ம்) மயலுறு .. மதியாலே
.. இஞ்-ஞாலமிசை உழல் .. அடியேனும்
அந்-நாலுமறை மொழி .. அயன் மாலும்
.. அண்ணாத அடி தொழ .. அருளாயே;
அந்-நாரிதனை இடம் .. உடையானே;
.. அஞ்ஞான இருள்-அறு .. சுடரானே;
பைந்நாக(ம்) முடிமிசை .. அணிவோனே;
.. பைஞ்ஞீலிதனில் உறை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
எந்நாளு(ம்) மயல் உறு மதியாலே இஞ்-ஞாலமிசை உழல் அடியேனும் - எப்பொழுதும் மயங்குகின்ற சிந்தையாலே இந்தப் பூமியில் வருந்தும் அடியேனும்; (மயல் - மயக்கம்); (ஞாலம் - பூமி); (உழல்தல் - சுழல்தல்; அலைதல்);
அந்-நாலுமறை மொழி அயன், மாலும் அண்ணாத அடி தொழ அருளாயே - அந்த நால்வேதங்களை ஓதும் பிரமனாலும் திருமாலாலும் நெருங்க இயலாத நின் திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக; (அ - பண்டறிசுட்டு); (அண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்);
அந்-நாரிதனை இடம் உடையானே - அழகிய உமையை இடப்பாகம் உடையவனே; (அந்நாரி = அம் + நாரி; அம் - அழகிய; நாரி - பெண்);
அஞ்ஞான இருள் அறு சுடரானே - அஞ்ஞான இருளைப் போக்கும் ஜோதியே; (அறுத்தல் - தீர்த்தல்):
பைந்நாகம் முடிமிசை அணிவோனே - படம் உடைய பாம்பைத் தலைமேல் அணிபவனே; (பை - பாம்பின் படம்);
பைஞ்ஞீலிதனில் உறை பெருமானே - திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளிய பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment