2017-04-30
T.199 - மயிலாப்பூர் - இட்டமும் வினைகளும்
---------------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன .. தனதான)
(கைத்தல நிறைகனி - திருப்புகழ் - விநாயகர் துதி)
இட்டமும் வினைகளும் உய்த்திட நிலமிசை
.. .. எய்ப்புறு நிலைதனை .. விலகேனும்
.. எட்டனை அனுதின(ம்) நற்றமிழ் மலர்களை
.. .. இட்டடி தொழுதுய .. அருளாயே
திட்டிய தசமுகன் அச்சுற மிகுபுகழ்
.. .. செப்பிட முடிபுய(ம்) .. நெரிபாதா
.. செத்தவர் பொடியணி நித்திய நிலையின
.. .. திக்குகள் உடையென .. உடையானே
மட்டவிழ் கணைதொடு விற்கரன் உடலினை
.. .. மத்திய விழிகொடு .. சுடுவோனே
.. மத்தள முழவொலி மிக்கெழ இருளினில்
.. .. வட்டணை யிடுமதிர் .. கழலானே
கட்டட(ம்) மதிதனை எட்டிட உயர்பதி
.. .. கத்தலை மயிலையில் .. அழகாரும்
.. கற்பகம் அவளுடன் உற்றடி தொழுமவர்
.. .. கட்டுகள் அறவருள் .. பெருமானே.
பதம் பிரித்து:
இட்டமும் வினைகளும் உய்த்திட நிலமிசை
.. .. எய்ப்புறு நிலைதனை .. விலகேனும்,
.. எள்-தனை அனுதின(ம்) நற்றமிழ் மலர்களை
.. .. இட்டு அடி தொழுது உய .. அருளாயே;
திட்டிய தசமுகன் அச்சுற மிகு-புகழ்
.. .. செப்பிட முடி புய(ம்) .. நெரி-பாதா;
.. செத்தவர் பொடி அணி நித்திய நிலையின;
.. .. திக்குகள் உடை என .. உடையானே;
மட்டு அவிழ் கணை தொடு விற்கரன் உடலினை
.. .. மத்திய விழிகொடு .. சுடுவோனே;
.. மத்தள முழவு ஒலி மிக்கு எழ இருளினில்
.. .. வட்டணை இடும் அதிர் .. கழலானே;
கட்டட(ம்) மதிதனை எட்டிட உயர்-பதி,
.. .. கத்து-அலை மயிலையில் .. அழகு ஆரும்
.. கற்பகம் அவளுடன் உற்று அடி தொழுமவர்
.. .. கட்டுகள் அற அருள் .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
இட்டமும் வினைகளும் உய்த்திட, நிலமிசை எய்ப்புறு நிலைதனை விலகேனும் - ஆசைகளும் பழவினைகளும் என்னை ஏவிடப், பூமியின்மேல் எப்போதும் வருந்துகின்ற நானும்; (உய்த்தல் - செலுத்துதல்; நடத்துதல்; ஆணைசெலுத்துதல்); (எய்ப்பு - வருத்தம்); (விலகேனும் - விலகாத நானும்);
எள்-தனை அனுதினம் நற்றமிழ் மலர்களை இட்டு அடிதொழுது உய அருளாயே - தினமும் எள்ளளவாவது (சிறிதளவேனும்) தேவாரம் திருவாசகம் முதலியன பாடி, உன் திருவடியை வழிபட்டு உய்வதற்கு அருள்புரிவாயாக; (எட்டனை - எள் தனை); (தனை - அளவு குறிக்கப் பிறசொல்லின் பின் வரும் ஒரு சொல்); (நல் தமிழ் மலர்கள் - சிறந்த தமிழ்ப்பாமாலைகள்); (உய - உய்ய - இடைக்குறையாக வந்தது); (அப்பர் தேவாரம் - 5.2.3 - "கூத்தனை எட்டனைப் பொழுதும் மறந்துய்வனோ");
திட்டிய தசமுகன் அச்சுற, மிகு-புகழ் செப்பிட, முடி புயம் நெரி-பாதா - இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அஞ்சும்படியும், அவன் உன் பெரும்புகழைப் பாடும்படியும், அவனது தலைகளையும் புஜங்களையும் (ஒரு விரலை ஊன்றி) நசுக்கிய திருப்பாதனே;
செத்தவர் பொடி அணி நித்திய நிலையின - இறந்தவர்களை எரித்த சாம்பலை அணிகின்ற, அழிவற்ற தன்மை உடையவனே; (நித்தியம் - சாசுவதம்); (நிலை - தன்மை);
திக்குகள் உடை என உடையானே - திசைகளையே ஆடையாக உடையவனே (திகம்பரனே); (திகம்பரன் - சிவன் திருநாமம்; அம்பரம் - ஆடை);
மட்டு அவிழ் கணை தொடு வில்-கரன் உடலினை மத்திய விழிகொடு சுடுவோனே - வாசம் கமழும் மலரை அம்பாக ஏவும் வில்லைக் கையில் ஏந்திய மன்மதனது உடம்பை (நெற்றி) நடுவில் உள்ள கண்ணால் எரித்தவனே; (மட்டு - வாசனை; தேன்); (மத்தியம் - நடு); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு);
மத்தள முழவு ஒலி மிக்கு எழ இருளினில் வட்டணை இடும் அதிர் கழலானே - மத்தளங்களின் ஒலியும், முழவுகளின் ஒலியும் மிகுந்து எழ, நள்ளிருளில் திருக்கூத்து ஆடுகின்ற, ஒலிக்கின்ற கழலை அணிந்தவனே; (வட்டணை - வட்டணை என்னும் நாட்டிய வகை); (காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.7 - "கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக் காலுயர் வட்டணை யிட்டு நட்டம்");
கட்டடம் மதிதனை எட்டிட உயர் பதி, கத்து-அலை மயிலையில் - கட்டடங்கள் சந்திரனைத் தொடுமாறு உயரும் இடமானதும், முழங்குகின்ற கடலின் அருகு உள்ளதுமான மயிலாப்பூரில்; (கத்தலை = கத்துகடல்; "அலை கத்து" என்று இயைத்தும் பொருள்கொள்ளலாம்); (அலை - கடல்; கடலின் அலை); (காளமேகப் புலவர் - "கத்துகடல் சூழ்நாகை");
அழகு ஆரும் கற்பகம் அவளுடன் உற்று அடி தொழும்அவர் கட்டுகள் அற அருள் பெருமானே - அழகிய கற்பகாம்பாளுடன் எழுந்தருளி, வந்து திருவடியை வழிபடும் அடியவர்களின் பந்தங்கள் எல்லாம் நீங்க அருளும் பெருமானே; (உறுதல் - இருத்தல்; அடைதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment