2016-12-19
P.372 - கோயில் (சிதம்பரம்)
---------------------------------
(எழுசீர் விருத்தம் - விளம் விளம் விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு);
(சம்பந்தர் தேவாரம் - 1.41.1 - "சீரணி திகழ்திரு மார்பில்வெண் ணூலர்")
1)
தேய்ந்தடை திங்களைத் திருமுடி மீது
.. திகழ்ந்திட வைத்தவன் தேவர்
பாந்தளைக் கயிறெனக் கொண்டுமுன் கடைந்த
.. பாற்கடல் தனிலெழு நஞ்சை
ஆர்ந்தவன் சக்கரத் தாற்சலந் தரனை
.. அழித்தவன் அங்கமும் மறையும்
தேர்ந்தவர் போற்றிடத் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
தேய்ந்து அடை திங்களைத் திருமுடி மீது திகழ்ந்திட வைத்தவன் - சாபத்தால் தேய்ந்து திருவடியைச் சரணடைந்த சந்திரனைத் திருமுடிமேல் தாங்கிக் காத்தவன்;
தேவர் பாந்தளைக் கயிறு எனக் கொண்டு முன் கடைந்த பாற்கடல்தனில் எழு நஞ்சை ஆர்ந்தவன் - தேவர்கள் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு முன்பு பாற்கடலைக் கடைந்தபொழுது தோன்றிய விஷத்தை உண்டவன்; (பாந்தள் - பாம்பு); (ஆர்தல் - உண்ணுதல்);
சக்கரத்தால் சலந்தரனை அழித்தவன் - தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து அதனைக்கொண்டு ஜலந்தராசுரனை அழித்தவன்;
அங்கமும் மறையும் தேர்ந்தவர் போற்றிடத் - நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள் வழிபாடுகள் செய்ய; (தேர்தல் - ஆராய்தல் அறிதல்; பயிற்சியடைதல்);
தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
2)
மையணி மிடறினன் வார்சடை மீது
.. மணமலர் கூவிளம் சூடி
கையினில் மூவிலை வேலினை ஏந்தி
.. கண்ணுதல் காட்டிய கடவுள்
மெய்யினில் நீற்றினைப் பூசி மகிழ்ந்து
.. மெய்ம்மொழி மறைவலர் போற்றி
செய்ய நிலம்புகழ் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
மை அணி மிடறினன் - கரிய கண்டன்; (மிடறு - கண்டம்);
வார்சடை மீது மணமலர் கூவிளம் சூடி - நீள்சடைமேல் மணம் கமழும் பூக்களையும் வில்வத்தையும் சூடியவன்; (கூவிளம் - வில்வம்);
கையினில் மூவிலை வேலினை ஏந்தி - திரிசூலத்தை ஏந்தியவன்;
கண்ணுதல் காட்டிய கடவுள் - நெற்றிக்கண் உடைய கடவுள்;
மெய்யினில் நீற்றினைப் பூசி மகிழ்ந்து, மெய்ம்மொழி மறைவலர் போற்றிசெய்ய - மேனியில் திருநீற்றை விரும்பி அணிந்து, மெய்ப்பொருளைச் சொல்லும் நால்வேதங்களில் வல்லவர்களான அந்தணர்கள் வழிபாடு செய்ய; (போற்றிசெய்தல் - துதித்தல்; வழிபாடு செய்தல்);
நிலம் புகழ் தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - உலகம் புகழ்கின்ற தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
3)
நீரடை சடையினன் நெற்றியிற் கண்ணன்
.. நீறணி மார்பினில் நூலன்
ஏரடி ஏத்திய இமையவர்க் கிரங்கி
.. இருவரை வில்லுடன் தேரில்
ஓரடி வைக்கவும் அச்சது முரிய
.. ஒருநகை செய்தெயில் அட்டான்
சீரடி யார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
நீர் அடை சடையினன் - கங்கையைச் சடையில் அடைத்தவன்;
நெற்றியில் கண்ணன் - முக்கண்ணன்;
நீறு அணி மார்பினில் நூலன் - திருநீற்றைப் பூசிய மார்பில் பூணூல் அணிந்தவன்;
ஏர்-அடி ஏத்திய இமையவர்க்கு இரங்கி - அழகிய திருவடியை வணங்கிய தேவர்களுக்கு இரங்கி; (ஏர் - அழகு);
இரு-வரை வில்லுடன் தேரில் ஓர் அடி வைக்கவும் அச்சுஅது முரிய - பெரிய மேருமலையை வில்லாக ஏந்தித் தேரின்மேல் ஓர் அடியை வைத்து ஏறியவுடன் அதன் அச்சு முரியக் கண்டு; (இருமை - பெருமை); (வரை - மலை); (இருமை + வரை = இருவரை); (முரிதல் - ஒடிதல்; கெடுதல்);
ஒரு நகைசெய்து எயில் அட்டான் - சிரித்து முப்புரங்களையும் எரித்தவன்; (எயில் - கோட்டை);
சீர்-அடியார் திரள் தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - சிறந்த அடியவர்கள் திரள்கின்ற தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
4)
அனமன நடையுடை அரிவையோர் பங்கன்
.. ஆரழல் ஏந்திய அண்ணல்
வனமலர் கொண்டடி மலர்தனை வாழ்த்து
.. மாணியைக் கொன்றிட வந்த
சின(ம்)மலி காலன தாருயிர் மாளச்
.. சேவடி வீசிய துணைவன்
தினமடி யார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
அனம் அன நடையுடை அரிவை ஓர் பங்கன் - அன்னம் போன்ற நடையை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்; (அனம் - அன்னம் - இடைக்குறை விகாரம்); (அன - அன்ன - இடைக்குறை விகாரம்); (அரிவை - பெண்);
ஆர் அழல் ஏந்திய அண்ணல் - கையில் தீயை ஏந்திய தலைவன்;
வன-மலர் கொண்டு அடிமலர்தனை வாழ்த்து மாணியைக் கொன்றிட வந்த - அழகிய பூக்களால் திருவடித்-தாமரையை வழிபட்ட மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய; (வனம் - அழகு; சோலை);
சினம் மலி காலனது ஆர்-உயிர் மாளச் சேவடி வீசிய துணைவன் - மிகுந்த சினம் உடைய கூற்றுவனது அரிய உயிர் நீங்குமாறு சிவந்த திருவடியால் உதைத்தவன்; அடியார் துணைவன்;
தினம் அடியார் திரள் தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தினந்தோறும் அடியவர்கள் திரள்கின்ற தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
5)
அந்தரர் ஒருபெரு மலையெனு(ம்) மத்தால்
.. ஆழியைக் கடைந்திட ஆலம்
வந்தெழக் கண்டுளம் வாடி வணங்க
.. வல்விடம் உண்மணி கண்டன்
சுந்தர நீறணி மேனிய ராகித்
.. துணையெழுத் தஞ்சினை நாளும்
சிந்தைசெய் வார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
அந்தரர் ஒரு பெரு-மலை எனும் மத்தால் ஆழியைக் கடைந்திட - தேவர்கள் ஒரு பெரிய மலையை மத்தாக நட்டுப் பாற்கடலை கடைந்தபொழுது; (அந்தரர் - தேவர்); (ஆழி - கடல்);
ஆலம் வந்து எழக் கண்டு உளம் வாடி வணங்க - ஆலகால விஷம் எழவும், அதனைக் கண்டு மனம் கலங்கி அவர்கள் இறைஞ்சவும்;
வல்-விடம் உண் மணிகண்டன் - அக்கொடிய நஞ்சை உண்ட நீலகண்டன்;
சுந்தர நீறு அணி மேனியர் ஆகித் - அழகு தரும் திருநீற்றை மேனியில் பூசி; (சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "சுந்தரம் ஆவது நீறு");
துணை எழுத்து-அஞ்சினை நாளும் சிந்தைசெய்வார் திரள் - நம்மைக் காக்கும் மந்திரமான திருவைந்தெழுத்தைத் தினந்தோறும் தியானிக்கின்ற அடியவர்கள் திரள்கின்ற;
தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
6)
கருமலை ஒன்றென வந்தெதிர் கரியைக்
.. கயலன கண்ணுடை மங்கை
வெருவுற உரிசெய்து போர்த்திடு வீரன்
.. வெள்விடை ஏறிய விமலன்
உருவமும் அருவமும் ஆகிய ஒருவன்
.. ஒண்கழல் தனைமற வாத
திருவுடை யார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
கரு-மலை ஒன்று என வந்து எதிர் கரியைக் - ஒரு கரிய மலைபோல வந்து எதிர்த்த யானையை; (எதிர்த்தல் - எதிர்த்துப் போர்செய்தல்);
கயல் அன கண்ணுடை மங்கை வெருவுற உரிசெய்து போர்த்திடு வீரன் - கயல் போன்ற கண்ணை உடைய உமாதேவி அஞ்சும்படி உரித்து, அந்த யானையின் தோல் தன் மார்பை மூடும்படி போர்த்த வீரன்; (வெரு / வெருவு - அச்சம்); (சம்பந்தர் தேவாரம் - 2.10.3 - "கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்");
வெள்-விடை ஏறிய விமலன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய தூயவன்;
உருவமும் அருவமும் ஆகிய ஒருவன் - வடிவம் உடையவனும் வடிவம் இல்லாதவனும் ஆனவன், ஒப்பற்றவன்;
ஒண்-கழல்தனை மறவாத திரு உடையார் திரள் - அப்பெருமானுடைய ஒளி பொருந்திய திருவடியை எப்பொழுதும் மறத்தல் இன்றித் தியானிக்கும் திரு உடைய அடியவர்கள் திரள்கின்ற;
தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
7)
இகழ்தரு தக்கனின் வேள்வியிற் சென்ற
.. இந்திரன் தோள்தனை வெட்டிப்
பகலவன் பல்லை உகுத்தவன் உமையோர்
.. பாகம தாகிய பரமன்
புகழ்மலி தமிழ்மண மார்தொடை சூட்டிப்
.. பொன்னடி இணைதனைப் போற்றித்
திகழடி யார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
இகழ்தரு தக்கனின் வேள்வியிற் சென்ற - அவமதித்த தக்கன் செய்த வேள்வியில் பங்கேற்கச் சென்ற; (இகழ்தரு - இகழ்ந்த; தருதல் - ஒரு துணைவினைச்சொல்);
இந்திரன் தோள்தனை வெட்டிப், பகலவன் பல்லை உகுத்தவன் - இந்திரனுடைய புஜத்தை வெட்டியும், சூரியர்களில் ஒருவனது பல்லை உடைத்தும் அவர்களைத் தண்டித்தவன்; (உகுத்தல் - உதிர்த்தல்); (திருவாசகம் - திருவம்மானை - 8.8.15 - "சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந் தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்"); (அப்பர் தேவாரம் - 6.31.2 - "புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா");
உமை ஓர் பாகம்அது ஆகிய பரமன் - உமாதேவியை ஒரு பாகமாக உடைய மேலானவன்;
புகழ் மலி தமிழ் மணம் ஆர் தொடை சூட்டிப் - இறைவனது திருப்புகழ் மிகுந்த மணம் நிறைந்த தமிழ்ப்பாமாலைகளைச் சூட்டிப்;
பொன்னடி இணைதனைப் போற்றித் திகழ் அடியார் திரள் - பொன் போன்ற இரு-திருவடிகளை வழிபட்டு விளங்குகின்ற அடியவர்கள் திரள்கின்ற;
தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
8)
குன்றெறி தசமுகன் அழுதிசை பாடிக்
.. கும்பிட மலரடி விரலில்
ஒன்றினைச் சிறிதள வூன்றிய இறைவன்
.. உருவினில் உமையொரு கூறன்
பன்றியை எய்தரும் படைதனை அன்று
.. பார்த்தனுக் கருளிய வேடன்
சென்றடி யார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
குன்று எறி தசமுகன் அழுது இசை பாடிக் கும்பிட – கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணன் அழுது பாடி இறைஞ்சும்படி;
மலரடி விரலில் ஒன்றினைச் சிறிதளவு ஊன்றிய இறைவன் - மலர்ப்பாதத்தின் ஒரு விரலைச் சற்றே ஊன்றி அவனை நசுக்கிய இறைவன்;
உருவினில் உமை ஒரு கூறன் - திருமேனியில் உமாதேவியை ஒரு கூறாக உடையவன்;
பன்றியை எய்து, அரும்-படைதனை அன்று பார்த்தனுக்கு அருளிய வேடன் - வேடன் வடிவில் போய், ஒரு பன்றியை அம்பால் எய்து, அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருள்புரிந்தவன்; (படை - ஆயுதம்);
சென்று அடியார் திரள் - பக்தர்கள் சென்று திரள்கின்ற;
தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
9)
அளிமகிழ் தாமரை மீதுறை பிரமன்
.. அரியிவர் அறிவொணாச் சோதி
ஒளிவிலி ஐங்கணை மன்மதன் தன்னை
.. ஒருநொடி யிற்பொடி செய்தான்
அளிமனத் தோடரன் அடியிணை தன்னை
.. அனுதினம் தொழுதெழு கின்ற
தெளிவுடை யார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
அளி மகிழ் தாமரைமீது உறை பிரமன் அரி இவர் அறிவொணாச் சோதி - வண்டுகள் விரும்பும் தாமரைமலர்மேல் வீற்றிருக்கும் பிரமன், திருமால் இவ்விருவராலும் அறிய ஒண்ணாத ஜோதி; (அளி - வண்டு); (அப்பர் தேவாரம் - 5.79.5 - "செங்கண்மால் பிரமற்கும் அறிவொணா அங்கியின் உரு ஆகி");
ஒளிவிலி ஐங்கணை மன்மதன் தன்னை ஒரு நொடியில் பொடி செய்தான் - மறைவிடம் இல்லாதவனும், ஐந்து மலரம்புகளை உடையவனும் ஆன மன்மதனைக் க்ஷண-நேரத்தில் சாம்பல் ஆக்கியவன்; (ஒளிவு - மறைவிடம்); (ஒளித்தல் - மறைத்தல்); (இலி - இல்லாதவன்); (விலி - வில்லி - வில்லை ஏந்தியவன்; விற்போரில் வல்லவன்); (ஒளிவிலி - 1. ஒளிவு இலி; / 2. ஒளி விலி = "தன்னை ஒளித்த (மறைத்துக்கொண்ட) வில்லை ஏந்தியவன்" என்றும், ஒளியுடைய வில்லை ஏந்தியவன் என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
அளி-மனத்தோடு அரன் அடியிணை தன்னை அனுதினம் தொழுதெழுகின்ற தெளிவு உடையார் திரள் - நெகிழும் மனத்தோடு ஹரனது இரு-திருவடிகளைத் தினமும் வணங்கியெழுகின்ற தெளிவினை உடைய பக்தர்கள் திரள்கின்ற; (அளிதல் - குழைதல்); (அளி - அன்பு); ("அளித்தல் = கொடுத்தல்" என்று பொருள்கொண்டு, "அளி-மனத்தோடு = தானதர்மம் செய்யும் சிந்தையினராகி" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.38.10 - "இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்");
தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
10)
வெம்மன வஞ்சகர் வெற்றுரை வீணர்
.. மெய்ந்நெறி தனையறி யாதார்
பொய்ம்மொழி விட்டரன் பொன்னடி தன்னைப்
.. போற்றுமின் இன்பம் அளிப்பான்
மும்மலம் அற்றவன் மூவரின் முதல்வன்
.. முக்கணன் அடிநிதம் ஏத்தும்
செம்மனத் தார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
வெம்-மன வஞ்சகர், வெற்றுரை வீணர், மெய்ந்நெறிதனை அறியாதார் - கொடிய மனம் உடைய வஞ்சகர்கள், பொருளற்ற வார்த்தைகளைப் பேசும் பயனற்றவர்கள், உண்மைநெறியை அறியாதவர்கள்; (வெம்மை - கொடுமை);
பொய்ம்மொழி விட்டு அரன் பொன்னடி தன்னைப் போற்றுமின் இன்பம் அளிப்பான் - அவர்கள் சொல்லும் பொய்களை நீங்கிச், சிவபெருமானது பொன்னடியை வழிபடுங்கள்; அப்பெருமான் துன்பத்தை நீக்கி இன்பம் கொடுப்பான்; (இலக்கணக்குறிப்பு: "பொய்ம்மொழி" - ஐகார ஓரெழுத்துச் சொற்கள், தனிக்குறிலை அடுத்து யகர மெய்யில் முடியும் சொற்கள் - அவற்றைத் தொடர்ந்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தால், புணர்ச்சியில் அந்த மெல்லினம் மிகும்);
மும்மலம் அற்றவன் - அவன் மும்மலங்களும் அற்றவன்;
மூவரின் முதல்வன் - அவன் மும்மூர்த்திகளினும் மேலானவன்;
முக்கணன் அடி நிதம் ஏத்தும் செம்மனத்தார் திரள் - அந்த நெற்றிக்கண்ணனின் திருவடியைத் தினமும் துதிக்கும் செம்மையான மனம் உடைய பக்தர்கள் திரள்கின்ற;
தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
11)
முப்புரம் தீப்புக நக்கருள் நாளில்
.. மூவரின் உயிரழி யாமல்
தப்பிட அருளிய சங்கரன் ஆற்றைச்
.. சடையிடைத் தாங்கிய சதுரன்
எப்படி ஏத்தினும் இனிதருள் செய்யும்
.. இறையவன் பெயர்தனை நாளும்
செப்பிடு வார்திரள் தில்லையம் பலத்தில்
.. திருநடம் செய்பெரு மானே.
முப்புரம் தீப்-புக நக்கு-அருள் நாளில் - முப்புரங்களும் தீப்பற்றி எரியச் சிரித்த சமயத்தில்; (நக்கு - சிரித்து);
மூவரின் உயிர் அழியாமல் தப்பிட அருளிய சங்கரன் - அந்த மூன்று கோட்டைகளில் வாழ்ந்த சிவபக்தி மிக்க மூவரின் உயிரைக் காத்து அருளியவன், நன்மை செய்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார்"); (சுந்தரர் தேவாரம் - 7.55.8 - "மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்");
ஆற்றைச் சடையிடைத் தாங்கிய சதுரன் - கங்கையைச் சடையுள் தாங்கிய வல்லவன்;
எப்படி ஏத்தினும் இனிது அருள் செய்யும் இறையவன் பெயர்தனை நாளும் செப்பிடுவார் திரள் - எவ்வாறு வழிபட்டாலும் வழிபடுவோருக்கு இன்னருள் செய்யும் இறைவனான சிவபெருமானது திருநாமத்தைத் தினமும் சொல்லும் பக்தர்கள் திரள்கின்ற;
தில்லை அம்பலத்தில் திருநடம்செய் பெருமானே - தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமான்;
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு: இப்பதிகத்தில் சில பாடல்களில் விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாச்சீர் வரக் காணலாம். அவ்விடங்களில் அடுத்த சீரொடு சேர்த்து வகையுளி அமையப் பிரித்து நோக்கினால் வாய்பாடு பொருந்துவதைக் காணலாம்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment