2017-04-09
P.387 - நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
---------------------------------
(கலித்துறை - "தான தானா - தனனா தனனா - தனதானன" - சந்தம்;
மா தேமா மா மா மாங்கனி - வாய்பாடு)
(கலிவிருத்தம் - விளங்காய் மா மா மாங்கனி - என்றும் நோக்கலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.117.1 - "மண்டுகங்கை சடையில்")
1)
விடையதேறி நீறு பூசி விமலன்திகழ்
சடையிலாறு திங்கள் நாகம் தாங்கும்பரன்
முடையுலாவும் தலையிற் பலிகொள் முதல்வன்னிடம்
கடலினோசை மல்கு நாகைக் காரோணமே.
விடைஅது ஏறி - இடபவாகனன்;
நீறு பூசி - திருநீற்றைப் பூசியவன்;
விமலன் - மலமற்றவன்; தூயன்;
திகழ் சடையில் ஆறு திங்கள் நாகம் தாங்கும் பரன் - திகழ்கின்ற சடையில் கங்கை, சந்திரன், பாம்பு இவற்றையெல்லாம் தரித்த பரமன்;
முடை உலாவும் தலையில் பலிகொள் முதல்வன் இடம் - புலால் நாறும் மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் தலைவனான சிவபெருமான் உறையும் தலம்; (முடை - புலால்நாற்றம்); (இலக்கணக் குறிப்பு : முதல்வன்னிடம் - ஓசைக்காக னகர ஒற்று விரித்தல் விகாரம்; இது போலவே இப்பதிகத்தின் மற்றப் பல பாடல்களிலும்);
கடலின் ஓசை மல்கு நாகைக் காரோணமே - கடலின் ஓசை மிகுந்த நாகைக்காரோணம் ஆகும்;
2)
விரைமலிந்த கொன்றை குரவம் மிளிர்வேணியில்
திரைமலிந்த கங்கை தன்னைச் சிறையிட்டவன்
அரையில்நாகம் கச்ச தாகும் அழகன்னிடம்
கரையிலோதம் மோது நாகைக் காரோணமே.
விரை மலிந்த கொன்றை குரவம் மிளிர்-வேணியில் - வாசம் மிக்க கொன்றைமலர், குராமலர் இவை விளங்கும் சடையில்; (விரை - வாசனை); (வேணி - சடை);
திரை மலிந்த கங்கைதன்னைச் சிறை இட்டவன் - அலை மிக்க கங்கையாற்றை அடைத்தவன்;
அரையில் நாகம் கச்சுஅது ஆகும் அழகன் இடம் - அரையில் பாம்பைக் கச்சாக அணிந்த அழகனான சிவபெருமான் உறையும் தலம்; (அரையினாகம் - அரையில் நாகம்);
கரையில் ஓதம் மோது நாகைக் காரோணமே - கரையில் கடலின் அலைகள் மோதுகின்ற நாகைக்காரோணம் ஆகும்;
3)
மலைபயந்த மகளுக் கினியன் மறைநாவினன்
அலைமலிந்த ஆறு தன்னை அணிசென்னிமேல்
தலைமலிந்த மாலை சூடு தலைவன்னிடம்
கல(ம்)மலிந்த கடல்சூழ் நாகைக் காரோணமே.
மலை பயந்த மகளுக்கு இனியன் - மலையான் பெற்ற மகளான உமைக்கு நேயம் மிக்கவன்;
மறை-நாவினன் - வேதம் ஓதுபவன்;
அலை மலிந்த ஆறுதன்னை அணி சென்னிமேல் - அலை மிக்க கங்கையை அணிந்த திருமுடிமேல்;
தலை மலிந்த மாலை சூடு தலைவன் இடம் - தலைமாலை (மண்டையோட்டுமாலை) அணிந்த தலைவனான சிவபெருமான் உறையும் தலம்;
கலம் மலிந்த கடல்சூழ் நாகைக் காரோணமே - படகுகள் (/ கப்பல்கள்) மிகுந்த கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும்;
4)
வாரிலங்கு முலையாள் பங்கன் மணமார்மலர்த்
தாரிலங்கு மார்பன் எண்ணில் வடிவேற்றவன்
பாரிலெங்கும் பலிக்குத் திரியும் படிறன்னிடம்
காரிலங்கு கடல்சூழ் நாகைக் காரோணமே.
வார் இலங்கு முலையாள் பங்கன் - கச்சு அணிந்த முலையினளான உமையை ஒரு பங்கில் உடையவன்; (வார் - முலைக்கச்சு);
மணம் ஆர் மலர்த்-தார் இலங்கு மார்பன் - வாசனை மிக்க மலர்மாலையை மார்பில் அணிந்தவன்; (தார் - மாலை);
எண் இல் வடிவு ஏற்றவன் - எண்ணற்ற வடிவங்கள் உடையவன்;
பாரில் எங்கும் பலிக்குத் திரியும் படிறன் இடம் - உலகில் எவ்விடமும் பிச்சைக்குத் திரியும் வஞ்சகனான சிவபெருமான் உறையும் தலம்; (படிறு - பொய்; வஞ்சகம்; குறும்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.121.1 - "கோவணங்கொண்டு கூத்தாடும் படிறனார்");
கார் இலங்கு கடல்சூழ் நாகைக் காரோணமே - கருமை திகழும் கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும்; (கார் - கருமை);
5)
செவியிலங்கு குழையன் பிரமன் சிரமொன்றினில்
புவியிலெங்கும் பலியேற் றுழலும் புனிதன்பெயர்
சிவனிலங்கு நாவர் வினையைத் தீர்த்தானிடம்
கவினிலங்கு கடல்சூழ் நாகைக் காரோணமே.
செவி இலங்கு குழையன் - காதில் குழையை அணிந்தவன்;
பிரமன் சிரம் ஒன்றினில் புவியில் எங்கும் பலியேற்று உழலும் புனிதன் - பிரமன் மண்டையோட்டில் உலகில் எங்கும் பிச்சையேற்றுத் திரியும் தூயன்;
பெயர் சிவன் இலங்கு நாவர் வினையைத் தீர்த்தான் இடம் - சிவன் என்ற அவனது திருநாமத்தைச் சொல்பவர்களுடைய வினையைத் தீர்க்கும் பெருமான் உறையும் தலம்;
கவின் இலங்கு கடல்சூழ் நாகைக் காரோணமே - அழகிய கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும்; (கவின் - அழகு);
6)
பொலிவிழந்த திங்க ளுக்குப் புகலானவன்
ஒலிசிறந்த தமிழ்கள் பாடி உளம்நைந்தவர்
கலிகளைந்து காக்கும் முக்கட் கடவுள்ளிடம்
கலிமலிந்த கடல்சூழ் நாகைக் காரோணமே.
பொலிவு இழந்த திங்களுக்குப் புகல் ஆனவன் - சாபத்தால் தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரனுக்கு அடைக்கலம் அளித்தவன்; (புகல் - அடைக்கலம்);
ஒலி சிறந்த தமிழ்கள் பாடி உளம் நைந்தவர் கலி களைந்து காக்கும் முக்கட் கடவுள் இடம் - இசைநயம் மிக்க தேவாரப் பாடல்களைப் பாடி உள்ளம் உருகும் அடியவர்களது துன்பத்தை நீக்கி அவர்களைக் காக்கின்ற முக்கண்ணுடைய கடவுளான சிவபெருமான் உறையும் தலம்; (கலி - துன்பம்; வறுமை);
கலி மலிந்த கடல்சூழ் நாகைக் காரோணமே - ஒலி மிக்க கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும்; (கலி - ஒலி;)
7)
துப்பனென்றும் தூயன் என்றும் துணையாகிய
அப்பனென்றும் வாழ்த்து கின்ற அடியாரவர்
வெப்ப(ம்)மிக்க வினைகள் தீர்க்கும் விமலன்னிடம்
கப்பலோடும் கடல்சூழ் நாகைக் காரோணமே.
துப்பன் என்றும் தூயன் என்றும் - பவளம்போல் செம்மேனியன் என்றும், தூயவன் என்றும்; (துப்பு - பவளம்; "துப்பு - பற்றுக்கோடு" என்றும் பொருள் உண்டு. இப்பாடலில் தொடர்ந்து "துணையாகிய அப்பன்" என்று வருவதால், இங்கே, பவளம்); (திருவாசகம் - அருட்பத்து - 8.29.6 - "துப்பனே தூயாய்");
துணை ஆகிய அப்பன் என்றும் வாழ்த்துகின்ற அடியார் அவர் - காக்கும் தந்தை என்றும் போற்றும் பக்தர்கள் அவர்களுடைய;
வெப்பம் மிக்க வினைகள் தீர்க்கும் விமலன் இடம் - சுடுகின்ற தீவினையையெல்லாம் தீர்த்து அருளும் நின்மலனான சிவபெருமான் உறையும் தலம்;
கப்பல் ஓடும் கடல்சூழ் நாகைக் காரோணமே - கப்பல்கள் இயங்கும் கடல் சூழ்ந்த நாகைக்காரோணம் ஆகும்;
8)
மத்த(ம்)மிக்கு மலையி டந்தான் மயல்தீர்ந்தடி
பத்திசெய்ய விரலை ஊன்று பரமாபரன்
அத்தியொன்றின் உரிவை போர்த்த அத்தன்னிடம்
கத்துகின்ற கடல்சூழ் நாகைக் காரோணமே.
மத்தம் மிக்கு மலை இடந்தான் மயல் தீர்ந்து அடி - செருக்கு மிகுந்து கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அவனது அறியாமை தீர்ந்து திருவடியை; (மத்தம் - மயக்கம்; செருக்கு); (மயல் - அறியாமை);
பத்தி செய்ய விரலை ஊன்று பரமாபரன் - அன்போடு போற்றுமாறு ஒரு விரலை ஊன்றிய (= ஊன்றி அவனை நசுக்கிய) பரம்பரன்; (பரமாபரன் - மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.61.1 - "பாதியொர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்");
அத்தி ஒன்றின் உரிவை போர்த்த அத்தன் இடம் - யானைத்தோலைப் போர்த்தவனும் எம் தந்தையும் ஆன சிவபெருமான் உறையும் தலம்; (அத்தி - ஹஸ்தி - யானை); (அத்தன் - தந்தை);
கத்துகின்ற கடல்சூழ் நாகைக் காரோணமே - அலை ஒலிக்கின்ற கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும்;
9)
அரியவேதம் ஓது நாவன் அதளாடையன்
பெரியதேவன் பிரமன் மாயன் பேணும்படி
எரியதாகி எழுந்த முக்கண் இறைவன்னிடம்
கரியவேலை சூழ்ந்த நாகைக் காரோணமே.
அரிய வேதம் ஓது நாவன் - அருமறைகளைப் பாடி அருளியவன்;
அதள்-ஆடையன் - தோலை ஆடையாக அணிந்தவன்; (அதள் - தோல்);
பெரிய தேவன் - மஹாதேவன்;
பிரமன் மாயன் பேணும்படி எரிஅது ஆகி எழுந்த முக்கண் இறைவன் இடம் - நான்முகனும் விஷ்ணுவும் வணங்கும்படி ஜோதியாகி உயர்ந்தவன், மூன்று கண்களையுடைய கடவுள் உறையும் தலம்; (மாயன் - திருமால்);
கரிய வேலை சூழ்ந்த நாகைக் காரோணமே - கரிய கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும்; (வேலை - கடல்);
10)
ஒருமையற்ற வீணர் சொல்லை ஒழிமின்கள்நீர்
எருமைஏறும் நமனைச் செற்ற இறைவன்கழற்
பெருமைபேசும் அடியார்க் கருளும் பெருமானிடம்
கருமைபெற்ற கடல்சூழ் நாகைக் காரோணமே.
ஒருமை அற்ற வீணர் சொல்லை ஒழிமின்கள் நீர் - உண்மையைப் பேசாத, பயனிலிகள் சொல்லும் மார்க்கங்களை நீங்கள் மதியாது நீங்குங்கள்; (ஒருமை - மெய்ம்மை; இறையுணர்வு); (ஒழிமின்கணீர் - ஒழிமின்கள் + நீர்);
எருமை ஏறும் நமனைச் செற்ற இறைவன் கழற்-பெருமை பேசும் அடியார்க்கு அருளும் பெருமான் இடம் - எருமைவாகனத்தின்மேல் வரும் காலனை உதைத்து அழித்த இறைவனது திருவடியின் புகழைப் பேசும் அடியவர்களுக்கு அருள்புரியும் சிவபெருமான் உறையும் தலம்;
கருமை பெற்ற கடல்சூழ் நாகைக் காரோணமே - கரிய கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 1.1.5 - "கருமைபெற்ற கடல் கொள்ள மிதந்ததொர் காலம்மிதுவென்னப் பெருமைபெற்ற பிரமாபுரம்");
11)
நரியுலாவு காட்டில் இருளில் நடமாடுவான்
கரியினீரத் தோலைப் போர்த்த கயிலைக்கிறை
வரியராவை நாணென் றார்க்க வலவன்னிடம்
கரியவேலை சூழ்ந்த நாகைக் காரோணமே.
நரி உலாவு காட்டில் இருளில் நடம் ஆடுவான் - நரிகள் திரியும் சுடுகாட்டில் நள்ளிருளில் திருநடம் செய்பவன்;
கரியின் ஈரத்-தோலைப் போர்த்த கயிலைக்கு இறை - யானையை உரித்து அதன் ஈரத்-தோலைப் போர்த்தவன், கயிலைமலை நாதன்; (கரி - ஆண்யானை)
வரி-அராவை நாண் என்று ஆர்க்க வலவன் இடம் - வரியுடைய பாம்பை அரைநாணாகவும், முப்புரம் எரித்த போது மேருவில்லில் நாணாகவும், கட்ட வல்லவன் உறையும் தலம்; (அரா - பாம்பு); (வலவன் - வல்லவன் - இடைக்குறை விகாரம்);
கரிய வேலை சூழ்ந்த நாகைக் காரோணமே - கரிய கடலால் சூழப்பெற்ற நாகைக்காரோணம் ஆகும்; (வேலை - கடல்);
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:
கலித்துறை - "தான தானா - தனனா தனனா - தனதானன" - சந்தம்;
மா தேமா மா மா மாங்கனி - வாய்பாடு;
தான - என்ற முதற்சீர் - தனன என்றும் வரலாம்;
தானா - என்ற இரண்டாம்சீர் - தான என்றும் வரலாம்;
தனனா - என்ற சீர்கள் தான, தனன, என்றெல்லாம் வரலாம்;
தனதானன – என்ற சீர் தானாதன என்றும் வரலாம்;
கலிவிருத்தம் - விளங்காய் மா மா மாங்கனி - என்றும் நோக்கலாம்;
முதற்சீர் "தான தான" என்ற சந்தம் அமையுமாறு - அதாவது மா-தேமாச் சீர்களாகப் பிரிக்குமாறு அமையும்;
பெரும்பாலும் அடியீற்றுச் சீரில் மோனை;
இது - சம்பந்தர் தேவாரம் - 2.117.1 - "மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்" - பதிக அமைப்பைப் பெரும்பாலும் ஒத்த அமைப்பு.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment