Wednesday, April 2, 2025

P.379 - சிராப்பள்ளி - திரைச்சடைப் பரனார்

2017-02-17

P.379 - சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

---------------------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.85.1 - "மட்டு வார்குழ லாளொடு")


1)

திரைச்ச டைப்பர னார்புரம் தீப்புக

வரைச்சி லைக்கணை கோத்தவர் மாமலர்

அருச்ச னைக்கு மகிழ்ந்தருள் அண்ணலார்

திருச்சி ராப்பள்ளி மேவிய செல்வரே.


திரைச்-சடைப் பரனார் - கங்கையைச் சடையில் உடைய பரமர்; (திரை - அலை; நதி);

புரம் தீப் புக வரைச்-சிலைக் கணை கோத்தவர் - முப்புரங்கள் எரியும்படி மேருமலை-வில்லில் ஓர் அம்பைப் பூட்டியவர்; (வரை- மலை); (சிலை - வில்);

மாமலர் அருச்சனைக்கு மகிழ்ந்து அருள் அண்ணலார் - சிறந்த பூக்களைத் தூவி வழிபட்டால் மகிழ்ந்து அருளும் தலைவர்;

திருச்சிராப்பள்ளி மேவிய செல்வரே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


2)

மங்க லத்தின் வடிவினர் மாதொரு

பங்கர் பாய்புலித் தோலர் அலைபுனல்

தங்கு செஞ்சடை மேற்பிறை தாங்கினார்

செங்கண் ஏற்றர் சிராப்பள்ளிச் செல்வரே.


மங்கலத்தின் வடிவினர் - சிவன் என்ற திருநாமத்தின் பொருள்; (சிவம் - மங்கலம்);

மாது ஒரு பங்கர் - உமையம்மையை ஒரு பாகமாக உடையவர்;

பாய்-புலித்-தோலர் - பாயும் புலியின் தோலை அணிந்தவர்;

அலை-புனல் தங்கு செஞ்சடைமேல் பிறை தாங்கினார் - அலைகின்ற (/ அலைக்கின்ற) கங்கையாறு தங்கிய சடையின்மேல் சந்திரனை அணிந்தவர்;

செங்கண் ஏற்றர் - சினக்கின்ற இடபத்தை ஊர்தியாக உடையவர்;

சிராப்பள்ளிச் செல்வரே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


3)

நாவி னால்திரு நாமம் நவிற்றிநற்

பூவி னாலடி போற்றிடும் அன்பர்தம்

பாவம் மாயப் பரிந்தின் னருள்புரி

தேவ தேவர் சிராப்பள்ளிச் செல்வரே.


நாவினால் திருநாமம் நவிற்றி - நாக்கினால் திருப்பெயரைச் சொல்லி; (நவிற்றுதல் - சொல்லுதல்);

நற்-பூவினால் அடி போற்றிடும் அன்பர்தம் பாவம் மாயப் - நல்ல பூக்களால் திருவடியை வழிபடும் பக்தர்களது தீவினை அழியும்படி;

பரிந்து இன்னருள் புரி தேவதேவர் - இரங்கி இனிது அருள்கின்றவர், தேவர்களுக்கெல்லாம் தேவர் ஆனவர்;

சிராப்பள்ளிச் செல்வரே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


4)

ஒருகண் காட்டும் நுதலர் அறுமுக

முருகன் தாதையார் முன்சுரர் உய்ந்திடக்

கருவன் னஞ்சினை உண்டருள் கண்டனார்

திருவெண் ணீற்றர் சிராப்பள்ளிச் செல்வரே.


ஒரு கண் காட்டும் நுதலர் - ஒப்பற்ற நெற்றிக்கண் உடையவர்; (ஒரு - ஒப்பற்ற; ஒன்று); (நுதல் - நெற்றி);

அறுமுக முருகன் தாதையார் - ஆறு முகங்களை உடைய முருகனுக்குத் தந்தையார்;

முன் சுரர் உய்ந்திடக் கரு-வன்-நஞ்சினை உண்டு அருள் கண்டனார் - முன்பு தேவர்கள் உய்யும்படி கரிய கொடிய விடத்தை உண்டு அருளிய நீலகண்டர்;

திரு-வெண்ணீற்றர் - திருவெண்ணீற்றைப் பூசிய மேனியர்;

சிராப்பள்ளிச் செல்வரே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


5)

நாவண் ணிக்க நலமலி செந்தமிழ்ப்

பாவண் ணத்தால் பணிபவர்க் கன்பினர்

மூவண் ணத்துப் புரங்களைச் சுட்டருள்

தீவண் ணத்தர் சிராப்பள்ளிச் செல்வரே.


நா அண்ணிக்க நலம் மலி செந்தமிழ்ப் பா வண்ணத்தால் பணிபவர்க்கு அன்பினர் - நாக்கு இனிக்க நலம் மிக்க செந்தமிழான தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி வழிபடும் அன்பருக்கு அன்பு உடையவர்; (அண்ணித்தல் - இனித்தல்); (பா வண்ணம் - வண்ணப்பாட்டு - சந்தப்பாட்டு);

மூவண்ணத்துப் புரங்களைச் சுட்டு அருள் தீ வண்ணத்தர் - மூன்று நிறங்களையுடைய முப்புரங்களை எரித்தவர், தீப்போன்ற செம்மேனியர்; (முப்புரங்கள் - பொன், வெள்ளி, இரும்பு இவற்றால் ஆனவை);

சிராப்பள்ளிச் செல்வரே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


6)

நெற்றிக் கண்ணரை நெஞ்சினில் நாட்டிய

நற்ற வத்துமார்க் கண்டர் நடுக்குற

உற்ற காலன் உயிர்கெடக் காலினாற்

செற்ற மைந்தர் சிராப்பள்ளிச் செல்வரே.


நெற்றிக் கண்ணரை நெஞ்சினில் நாட்டிய - முக்கண்ணரான சிவபெருமானாரை மனத்தில் நிலையாக இருத்தி வழிபாடு செய்த; (நாட்டுதல் - ஸ்தாபித்தல்);

நற்றவத்து மார்க்கண்டர் நடுக்குற உற்ற - நல்ல தவம் உடையவரான மார்க்கண்டேயர் அஞ்சி நடுங்கும்படி அவரை நெருங்கி வந்த; (நடுக்கு - நடுக்கம்); (உறுதல் - சம்பவித்தல்; ஓரிடம் அடைதல்);

காலன் உயிர் கெடக் காலினால் செற்ற மைந்தர் - காலனது உயிர் அழியும்படி காலனைக் காலால் உதைத்த வீரர்; (செறுதல் - அழித்தல்); (மைந்தன் - வீரன்);

சிராப்பள்ளிச் செல்வரே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


7)

எரித்த சாம்பலைப் பூசிய ஈசனார்

அருத்தி யாலடி வாழ்த்திடும் அன்பர்தம்

வருத்தம் தீர்ப்பவர் முப்புரம் மாய்த்திடச்

சிரித்த வீரர் சிராப்பள்ளிச் செல்வரே.


எரித்த சாம்பலைப் பூசிய ஈசனார் - வெந்த வெண்ணீற்றைப் பூசிய ஈசர்;

அருத்தியால் அடி வாழ்த்திடும் அன்பர்தம் வருத்தம் தீர்ப்பவர் - விரும்பித் திருவடியை வணங்கும் பக்தர்களது குறைகளைத் தீர்ப்பவர்; (அருத்தி - ஆசை; மிக்க விருப்பம்);

முப்புரம் மாய்த்திடச் சிரித்த வீரர் - முப்புரங்களும் அழியும்படி சிரித்த வீரர்; (மாய்த்தல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 5.1.9 - "மதில் மூன்றுடன் மாய்த்தவன்");

சிராப்பள்ளிச் செல்வரே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


8)

வம்பு நாண்மலர் தூவி வழிபடும்

அன்பி லாமல் அருவரை பேர்த்தவன்

எம்பி ரானென ஓர்விரல் இட்டவர்

செம்பொன் மேனிச் சிராப்பள்ளிச் செல்வரே.


வம்பு நாண்மலர் தூவி வழிபடும் அன்பு இலாமல் - வாசனை மிக்க புதிய பூக்களைத் தூவி வழிபடும் அன்பு இல்லாதவனும்; (வம்பு - வாசனை); (நாண்மலர் - நாள் மலர் - அன்று பூத்த பூ);

அரு-வரை பேர்த்தவன் "எம் பிரான்" என ஓர் விரல் இட்டவர் - அரிய மலையான கயிலையைப் பெயர்த்தவனும் ஆன இராவணன், "எம் தலைவனே" என்று ஓலமிடும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவர்; (வரை - மலை);

செம்பொன் மேனிச் சிராப்பள்ளிச் செல்வரே - செம்பொன் போன்ற நிறம் உடைய திருமேனியை உடையவரும், திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வருமான சிவபெருமானார்;


9)

மாலும் மாமல ரானும் மயலினால்

மேலும் கீழும் முயல விளங்கெரிக்

கோலம் கொண்டவர் கூவிள மாலையர்

சீலர் போற்றும் சிராப்பள்ளிச் செல்வரே.


மாலும் மாமலரானும் மயலினால் மேலும் கீழும் முயல - திருமாலும் பிரமனும் ஆணவத்தோடு அடிமுடி தேடும்படி; (மயல் - மயக்கம்; அறியாமை);

விளங்கு-எரிக் கோலம் கொண்டவர் - பிரகாசிக்கின்ற ஜோதி-வடிவில் நின்றவர்; (விளங்குதல் - ஒளிவீசுதல்); (எரி - தீ); (கோலம் - உருவம்);

கூவிள மாலையர் - வில்வமாலை அணிந்தவர்; (கூவிளம் - வில்வம்);

சீலர் போற்றும் சிராப்பள்ளிச் செல்வரே - சீலர்களால் வழிபடப்படுபவரும், திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வருமான சிவபெருமானார்;


10)

கரவை நெஞ்சினில் வைத்த கயவர்கள்

உரைசெய் பொய்கள் ஒழிமின் புகழ்பாடிக்

கரையும் அன்பர் துணைவர் கமழ்சடைத்

திரையை ஏற்ற சிராப்பள்ளிச் செல்வரே.


கரவை நெஞ்சினில் வைத்த கயவர்கள் உரைசெய் பொய்கள் ஒழிமின் - வஞ்சனையை மனத்தில் வைத்திருக்கும் கீழோர்கள் சொல்கின்ற பொய்களை நீங்குங்கள்; (கரவு - வஞ்சனை); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

புகழ் பாடிக் கரையும் அன்பர் துணைவர் - திருப்புகழைப் பாடி (மனம்) உருகுகின்ற பக்தர்களுக்குத் துணைவர்; (கரைதல் - உருகுதல்; அழைத்தல்);

கமழ்-சடைத் திரையை ஏற்ற சிராப்பள்ளிச் செல்வரே - மணம் கமழும் சடையில் கங்கையை ஏற்றவரும், திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வருமான சிவபெருமானார்; (திரை - அலை; நதி);


11)

தகவில் தக்கன்செய் வேள்வி தகர்த்தவர்

புகழும் அன்பர்க்குப் பொன்னுல கீபவர்

உகளும் மான்மறிக் கையினர் ஒண்பிறை

திகழும் சென்னிச் சிராப்பள்ளிச் செல்வரே.


தகவு இல் தக்கன் செய் வேள்வி தகர்த்தவர் - ஆணவம் மிக்க தக்கன் ஈசனை இகழ்ந்து செய்த அவவேள்வியை அழித்தவர்; (தகவு - நற்குணம்; நடுநிலை; அறிவு); (தகர்த்தல் - அழித்தல்);

புகழும் அன்பர்க்குப் பொன்னுலகு ஈபவர் - போற்றி வணங்கும் பக்தர்களுக்குப் பொன்னுலக வாழ்வு தருபவர்; (அப்பர் தேவாரம் - 4.92.11 – "பொன்னுலகம் அளிக்கும் அலையார் புனற்பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே");

உகளும் மான்மறிக் கையினர் - தாவும் மான்கன்றைக் கையில் தாங்கியவர்; (உகளுதல் - தாவுதல்);

ஒண்-பிறை திகழும் சென்னிச் சிராப்பள்ளிச் செல்வரே - ஒளியுடைய பிறை விளங்கும் திருமுடியை உடையவரும், திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற செல்வருமான சிவபெருமானார்; (ஒண்மை - பிரகாசம்; ஒளி; அழகு);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment