2016-12-20
P.373 - ஆரூர் (திருவாரூர்)
---------------------------------
(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
1)
நிழலார் மழுவேந் தியமைந்தா
மழையார் நிறம்ஏ றியகண்டா
அழகார் மதில்ஆர் திருவாரூர்
குழகா வெனவாழ்த் திடுநாவே.
நிழல் ஆர் மழு ஏந்திய மைந்தா - ஒளிவீசும் மழுவாயுதத்தை ஏந்திய வீரனே; (நிழல் - ஒளி); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; மிகுதல்); (மைந்தன் - வீரன்);
மழை ஆர் நிறம் ஏறிய கண்டா - மேகம் போல் நிறம் உடைய கண்டத்தை உடையவனே; (மழை - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்);
அழகு ஆர் மதில் ஆர் திரு-ஆரூர் - அழகிய மதில்கள் பொருந்திய திருவாரூரில் உறைகின்ற;
குழகா என வாழ்த்திடு நாவே - இளைஞனே (/அழகனே) என்று நாவே நீ வாழ்த்துவாயாக; (குழகன் - இளைஞன்; அழகன்);
2)
மலையான் மகள்தன் மணவாளா
கலைஆ ரழல்ஏந் தியகையாய்
அலையா அடியார் திரள்ஆரூர்த்
தலைவா எனவாழ்த் திடுநாவே.
மலையான்-மகள்தன் மணவாளா - மலைமகளுக்குக் கணவனே; (மகள்+தன் - மகடன் என்று புணரும்; அப்பர் தேவாரம் - 4.88.1 - "மலைமக டன்னுடைய பாலனைப்")
கலை ஆரழல் ஏந்திய கையாய் - மானையும் அரிய தீயையும் கையில் ஏந்தியவனே; (கலை - மான்);
அலையா அடியார் திரள் ஆரூர்த் - அலைபோல அடியவர்கள் திரள்கின்ற திருவாரூரில் உறைகின்ற; (அலையா - 1. அலையாக; 2. அலைதல் (வருந்துதல்) என்ற வினைச்சொல்லின் அடிப்படையில் "அலையாத" என்றும் பொருள்கொள்ளலாம்; ஈசனை வணங்குவதால் அடியவர்களுக்கு வருத்தம் இல்லை);
தலைவா என வாழ்த்திடு நாவே - தலைவனே என்று நாவே நீ வாழ்த்துவாயாக;
3)
அரவந் தனைநாண் எனஆர்த்தான்
வெருவும் சுரர்ஏத் தஇரங்கி
அருநஞ் சினைஆர்ந் தவன்ஆரூர்
ஒருவன் புகழ்ஓ திடுநாவே.
அரவம்தனை நாண் என ஆர்த்தான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
வெருவும் சுரர் ஏத்த இரங்கி அரு-நஞ்சினை ஆர்ந்தவன் - அஞ்சிய தேவர்கள் துதிக்க அவர்களுக்கு இரங்கிக் கொடிய விஷத்தை உண்டவன்; (வெருவுதல் - அஞ்சுதல்); (சுரர் - தேவர்கள்); (ஆர்தல் - உண்ணுதல்);
ஆரூர் ஒருவன் புகழ் ஓதிடு நாவே - திருவாரூரில் உறைகின்ற ஒப்பற்றவனது புகழை, நாவே நீ சொல்வாயாக; (ஒருவன் - ஒப்பற்றவன்); (ஓதுதல் - பாடுதல்; சொல்லுதல்);
4)
விடையார் கொடிகாட் டியவேந்தன்
சடைமேல் பிறைதாங் கியதந்தை
அடையார் புரம்எய் தவன்ஆரூர்
உடையான் புகழ்ஓ திடுநாவே.
விடை ஆர் கொடி காட்டிய வேந்தன் - இடபக்கொடியை உடைய மன்னன்;
சடைமேல் பிறை தாங்கிய தந்தை - சடையின்மேல் சந்திரனைத் தரித்தவன், நம் தந்தை;
அடையார் புரம் எய்தவன் - பகைவர்களது முப்புரத்தைக் கணை எய்து அழித்தவன்;
ஆரூர் உடையான் புகழ் ஓதிடு நாவே - திருவாரூரில் உறைகின்ற சுவாமியின் புகழை, நாவே நீ சொல்வாயாக; (உடையான் - சுவாமி);
5)
மயலா னவைதீர்ந் திடவேண்டில்
குயிலார் மொழிமா தொருகூறன்
அயனார் தலைகொய் தவன்ஆரூர்க்
கயமார் சடையான் கழல்ஏத்தே.
மயல் ஆனவை தீர்ந்திட வேண்டில் - மயக்கங்கள் எல்லாம் தீரவேண்டும் என்றால்;
குயில் ஆர் மொழி மாது ஒரு கூறன் - குயில்போல் இனிய மொழியுடைய உமையம்மையை ஒரு கூறாக உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);
அயனார் தலை கொய்தவன் - பிரமனது தலைகளில் ஒன்றைக் கிள்ளியவன்; (அயன் - பிரமன்);
ஆரூர்க் கயம் ஆர் சடையான் கழல் ஏத்தே - திருவாரூரில் உறைகின்ற, கங்கைச்-சடையானது கழல் அணிந்த திருவடியைத் துதிப்பாயாக; (கயம் - நீர்நிலை; இங்கே கங்கை); (ஏத்துதல் - துதித்தல்);
6)
இரவும் தொழில்ஆ கியஏந்தல்
குரவம் பிறைசூ டியகூத்தன்
அரவம் புனைமார் பினன்ஆரூர்ப்
பரமன் புகழ்பா டிடுநாவே.
இரவும் தொழில் ஆகிய ஏந்தல் - யாசித்தலையும் ஒரு தொழிலாக ஏற்ற பெருமான்; (இரவு - இரத்தல்; பிச்சையெடுத்தல்);
குரவம் பிறை சூடிய கூத்தன் - குராமலரையும் பிறையையும் அணிந்தவன், திருநடம் செய்பவன்;
அரவம் புனை மார்பினன் - பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவன்;
ஆரூர்ப் பரமன் புகழ் பாடிடு நாவே - திருவாரூரில் உறைகின்ற பரமன் புகழை, நாவே நீ பாடுவாயாக;
7)
அரனென் றொருநா மமும்உள்ளான்
சரணம் தொழுவா னவர்உய்ய
அரணம் சுடநக் கவன்ஆரூர்ப்
பரனென் றுரைசெய் திடுநாவே.
அரன் என்று ஒரு நாமமும் உள்ளான் - ஹரன் என்ற ஒப்பற்ற (/ஒரு) திருப்பெயரும் உடையவன்; (ஒரு - ஒப்பற்ற); (உம் - அசை என்றும் கொள்ளல் ஆம்);
சரணம் தொழு வானவர் உய்ய - திருவடியை வணங்கிய தேவர்கள் இடர் தீரும்படி; (சரணம் - பாதம்);
அரணம் சுட நக்கவன் - முப்புரங்களை எரிக்கச் சிரித்தவன்; (அரணம் - கோட்டை); (நகுதல் - சிரித்தல்);
ஆரூர்ப் பரன் என்று உரை செய்திடு நாவே - திருவாரூரில் உறைகின்ற பரமன் என்று, நாவே நீ சொல்வாயாக; (பரன் - மேலானவன்);
8)
முடிபத் துடைமூர்க் கனைவாதைப்
படவைத் திசைகேட் டவன்ஆற்றைச்
சடைவைத் தவன்ஏர் மலிஆரூர்
இடபத் தனைஏத் திடுநாவே.
முடி பத்துடை மூர்க்கனை வாதைப் படவைத்து இசை கேட்டவன் - பத்துத் தலைகளை உடையவனும் மூடனுமான இராவணனை நசுக்கித் துன்பப்படவைத்துப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டவன்; (மூர்க்கன் - மூடன்; பிடிவாதக்குணம் உடையவன்); (வாதை - துன்பம்);
ஆற்றைச் சடை வைத்தவன் - கங்காதரன்;
ஏர் மலி ஆரூர் இடபத்தனை ஏத்திடு நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்ற, ஏற்றை வாகனமாக உடைய ஈசனை, நாவே நீ துதிப்பாயாக; (ஏர் - அழகு; நன்மை); (மலிதல் - மிகுதல்; நிறைதல்); (இடபம் - எருது); (அப்பர் தேவாரம் - 6.17.6 - "கொடியார் இடபத்தர்");
9)
கரியீ ருரிபோர்த் தவன்நீறு
புரிநூ லணிமார் பினன்எம்மான்
அரியான் அயன்மாற் கணிஆரூர்ப்
பிரியான் றனைவாழ்த் திடுநாவே.
கரி ஈருரி போர்த்தவன் - ஆனையின் உரித்த தோலைப் போர்த்தவன்; (ஈர் உரி - உரித்த தோல்); (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);
நீறு புரிநூல் அணி மார்பினன் எம்-மான் - திருநீற்றையும் முப்புரி-நூலையும் மார்பில் அணிந்தவன்; எம் பெருமான்;
அரியான் அயன் மாற்கு - விஷ்ணுவுக்கும் பிரமனுக்கும் அறிதற்கு அரியவன்; (மாற்கு - மால்+கு - திருமாலுக்கு);
அணி-ஆரூர்ப் பிரியான்தனை வாழ்த்திடு நாவே - அழகிய திருவாரூரிலிருந்து நீங்காதவனை (ஆரூரில் என்றும் உறைகின்றவனை), நாவே நீ வாழ்த்துவாயாக;
10)
பலபொய் யுரைசெய்ம் மதியீனர்
சொலைமெய் யெனநீர் மதியேன்மின்
அலையைச் சடைவைத் தவன்ஆரூர்
நிலையத் தனைவாழ்த் திடஇன்பே.
பல பொய்யுரை செய்ம் மதியீனர் - பல பொய்களைப் பேசும் அறிவிலிகளின்; (மதியீனம் - அறிவின்மை);
சொலை மெய் என நீர் மதியேன்மின் - சொல்லை உண்மை என்று நீங்கள் எண்ணவேண்டா; (சொலை - சொல்லை - இடைக்குறை விகாரம்); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவற் பன்மை விகுதி);
அலையைச் சடை வைத்தவன் - கங்கையைச் சடையில் தாங்கியவன்;
ஆரூர் நிலை அத்தனை வாழ்த்திட இன்பே - திருவாரூரில் நிலையாக உறைகின்ற தந்தையை ( / திருவாரூர்க் கோயிலானை) வாழ்த்தினால் என்றும் இன்பமே; (நிலையத்தனை - 1. நிலை + அத்தனை - நீங்காமல் தங்கிய தந்தையை; 2. கோயிலானை); (நிலையம் - நிலயம் - தங்குமிடம்; கோயில்); (இன்பு - இன்பம்);
11)
பணியும் சுரருக் கமுதீந்தான்
பிணியொன் றிலன்நீள் மதிசூடி
அணியென் றரவம் புனைஆரூர்
மணிகண் டனைவாழ்த் திடஇன்பே.
பணியும் சுரருக்கு அமுது ஈந்தான் - தொழுத தேவர்களுக்கு அமுதத்தை அளித்தவன்; (சுரர் - தேவர்);
பிணி ஒன்று இலன் - பந்தமும் நோயும் இல்லாதவன்;
நீள்-மதி சூடி - வளரும் சந்திரனை அணிந்தவன்;
அணி என்று அரவம் புனை - ஆபரணமாகப் பாம்பை அணிகின்றவனும்;
ஆரூர் மணிகண்டனை வாழ்த்திட இன்பே - திருவாரூரில் உறைகின்றவனுமான நீலகண்டனை வாழ்த்தினால் என்றும் இன்பமே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment