2017-03-10
P.381 - சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
---------------------------------
(எண்சீர் விருத்தம் - "தான தானன தனதன தனன" - அரையடிச் சந்தம்)
(சுந்தரர் தேவாரம் - 7.64.1 - "நீறு தாங்கிய திருநுத லானை")
1)
இட்ட மாயுன திணையடி தன்னை
.. ஏத்தும் நெஞ்சினை இங்கெனக் கருளாய்
சுட்ட வெண்பொடி சாந்தெனப் பூசிச்
.. சுடலை யில்திரு நடஞ்செயும் பரனே
மட்டு வார்குழல் மாதொரு பங்கா
.. வார ணத்துரி மூடிய மார்பா
சிட்டர் சிந்தையில் திகழு(ம்)நின் மலனே
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
இட்டமாய் உனது இணையடி-தன்னை ஏத்தும் நெஞ்சினை இங்கு எனக்கு அருளாய் - அன்போடு உன் இரு-திருவடிகளைப் போற்றும் மனத்தை எனக்கு அருள்வாயாக;
சுட்ட வெண்பொடி சாந்து எனப் பூசிச், சுடலையில் திருநடம் செயும் பரனே - வெந்த சாம்பலைச் சந்தனம் போல் திருமேனியில் பூசிச், சுடுகாட்டில் திருக்கூத்து ஆடும் பரமனே; (செயும் - செய்யும்);
மட்டு வார்-குழல் மாது ஒரு பங்கா - தேன் நிறைந்த பூக்கள் சூடிய நீண்ட கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே; (மட்டு - தேன்; வாசனை); (வார்தல் - நீள்தல்); (* மட்டுவார் குழலம்மை - திருச்சிராப்பள்ளியில் இறைவி திருநாமம்);
வாரணத்து உரி மூடிய மார்பா - யானைத்தோலைப் போர்த்தவனே; (வாரணம் - யானை); (உரி - தோல்);
சிட்டர் சிந்தையில் திகழும் நின்மலனே - சான்றோர் மனத்தில் திகழ்கின்ற தூயனே; (சிட்டர் - ஞானியர்; சான்றோர்);
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
2)
சினமும் ஆசையும் மலிமனத் தேனும்
.. திருவ டிப்புகழ் பாடிட அருளாய்
முன(ம்)ம லர்க்கணை எய்தமன் மதனை
.. முனிந்து நோக்கிய கண்ணுதல் அண்ணா
மன(ம்)ம கிழ்ந்துனை வாழ்த்திய மாணி
.. வாழ வன்னமன் மார்பிலு தைத்தாய்
தினமும் அன்பர்கள் திரண்டடி பணியும்
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
சினமும் ஆசையும் மலி மனத்தேனும் திருவடிப்-புகழ் பாடிட அருளாய் - கோபம் ஆசை முதலியவை மிகுகின்ற மனத்தை உடைய நானும் உன் திருவடிப்-புகழைப் பாடி வழிபட அருள்வாயாக;
முனம் மலர்க்கணை எய்த மன்மதனை முனிந்து நோக்கிய கண்ணுதல் அண்ணா - முன்பு மலரம்பை எய்த காமனைச் சினந்து நெற்றிக்கண்ணால் நோக்கி எரித்த அண்ணலே; (அண்ணா - அண்ணால் - அண்ணலே);
மனம் மகிழ்ந்து உனை வாழ்த்திய மாணி வாழ வன்-நமன் மார்பில் உதைத்தாய் - உள்ளம் மகிழ்ந்து உன்னை வழிபட்ட மார்க்கண்டேயர் வாழும்படி கொடிய கூற்றுவனை மார்பில் உதைத்தவனே;
தினமும் அன்பர்கள் திரண்டு அடி பணியும் - நாள்தோறும் பக்தர்கள் கூடி வழிபாடு செய்யும்;
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
3)
பொங்கும் ஐம்புலன் ஆசைக ளாலுன்
.. பொற்ப தந்தொழ மறந்துழல் வேனும்
சங்க ராதனி வெள்விடைப் பாகா
.. தாணு வேயென்று போற்றிட அருளாய்
கங்கு லில்திரு நட்டம தாடும்
.. கழல னேகனல் ஏந்திய கையாய்
திங்கள் ஏறிய செஞ்சடைத் தேவா
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
பொங்கும் ஐம்புலன் ஆசைகளால் உன் பொற்பதம் தொழ மறந்து உழல்வேனும் - பொங்கியெழும் புலனாசைகளால் உன்னை வழிபட நினையாது உழல்கின்ற நானும்;
"சங்கரா; தனி வெள்விடைப் பாகா; தாணுவே" என்று போற்றிட அருளாய் - "சங்கரனே; ஒப்பற்ற வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவனே; ஸ்தாணுவே" என்று உன் திருநாமங்களைக் கூறி வழிபட அருள்வாயாக; (தனி - ஒப்பற்ற);
கங்குலில் திரு நட்டம்அது ஆடும் கழலனே - இருளில் திருக்கூத்து ஆடும், கழல் அணிந்த திருவடியினனே; (கங்குல் - இருள்);
கனல் ஏந்திய கையாய் - கையில் நெருப்பை ஏந்தியவனே;
திங்கள் ஏறிய செஞ்சடைத் தேவா - சந்திரனைச் செஞ்சடையில் அணிந்த தேவனே;
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
4)
அலைகள் போல்தொடர் அல்லல்க ளாலே
.. அடியை வாழ்த்த மறந்துழல் வேனும்
இலைகள் போதுகள் அன்பொடு தூவி
.. ஏத்தி வாழ்ந்திட இன்னருள் புரியாய்
தலைவ காத்தருள் என்றிமை யோர்கள்
.. தாள்வ ணங்கவும் புரம்பட மேருச்
சிலையைக் கையினில் ஏந்திய வீரா
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
அலைகள் போல் தொடர் அல்லல்களாலே அடியை வாழ்த்த மறந்து உழல்வேனும் - அலைகள் போலத் தொடர்ந்து அடைகின்ற அல்லல்களால் உன் திருவடியை வழிபட நினையாமல் உழல்கின்ற நானும்;
இலைகள் போதுகள் அன்பொடு தூவி ஏத்தி வாழ்ந்திட இன்னருள் புரியாய் - வில்வம் வன்னி முதலிய இலைகளையும், மலர்களையும் பக்தியோடு தூவி உன்னைத் துதித்து வாழும்படி இனிய அருளைப் புரிவாயாக; (போது - மலர்);
"தலைவ; காத்து அருள்" என்று இமையோர்கள் தாள் வணங்கவும் - "தலைவனே; எம்மைக் காவாய்" என்று தேவர்கள் திருவடியைப் பணிந்தபோது (அவர்களுக்கு இரங்கி);
புரம் பட மேருச் சிலையைக் கையினில் ஏந்திய வீரா - முப்புரங்களும் அழியுமாறு மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திய வீரனே; (படுதல் - அழிதல்); (சிலை - வில்);
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
5)
பூச்சொ ரிந்துனைப் போற்றம றந்து
.. பூமி யிற்பிறந் திறந்துழல் வேனும்
பாச்ச ரங்கொடுன் பதமலர் பரவும்
.. பரிசி னைப்பெற இன்னருள் புரியாய்
வாச்சி யம்பல பாரிடம் ஆர்க்க
.. மாந டம்புரி யும்பெரு மானே
தீச்ச ரங்கொடு முப்புரம் எய்தாய்
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
பூச் சொரிந்து உனைப் போற்ற மறந்து, பூமியில் பிறந்து இறந்து உழல்வேனும் - பூக்கள் தூவி உன்னை வழிபட நினையாமல், உலகில் ஓயாமல் பிறந்து இறந்து உழல்கின்ற நானும்;
பாச்-சரம் கொடு உன் பதமலர் பரவும் பரிசினைப் பெற இன்னருள் புரியாய் - பாமாலைகளால் உன் தாமரைத்-திருவடியைத் துதிக்கும் குணத்தை அடைய இனிது அருள்வாயாக; (சரம் - மாலை); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு);
வாச்சியம் பல பாரிடம் ஆர்க்க மா-நடம் புரியும் பெருமானே - பல பூதங்கள் வாத்தியங்களை ஒலிக்கப் பெருங்கூத்து ஆடும் பெருமானே; (வாச்சியம் - வாத்தியம்); (பாரிடம் - பூதம்); (ஆர்த்தல் - ஒலித்தல்);
தீச்-சரம் கொடு முப்புரம் எய்தாய் - எரிக்கும் கணையால் முப்புரங்களை எய்தவனே; (சரம் - அம்பு);
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
6)
காவல் ஆவது கழலிணை என்று
.. கருதி டாமட நெஞ்சுடை யேனும்
நாவ தால்திருப் பெயர்தனை நாளும்
.. நவிற்றி உய்ந்திட இன்னருள் புரியாய்
சேவ லார்கொடிச் சேந்தனுக் கத்தா
.. தேவர் வாழநஞ் சுண்டமி டற்றாய்
தீவ ணம்திகழ் மேனியில் நீற்றாய்
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
காவல் ஆவது கழலிணை என்று கருதிடா மடநெஞ்சு உடையேனும் - சிறந்த காவல் உன் இரு-திருவடிகள் என்று எண்ணாத பேதைமனத்தை உடைய நானும்;
நாவதால் திருப்பெயர்தனை நாளும் நவிற்றி உய்ந்திட இன்னருள் புரியாய் - என் நாவால் உன் திருநாமத்தைத் தினமும் சொல்லி உய்யும்படி இனிது அருள்வாயாக;
சேவல் ஆர் கொடிச் சேந்தனுக்கு அத்தா - சேவற்கொடி உடைய முருகனுக்குத் தந்தையே;
தேவர் வாழ நஞ்சு உண்ட மிடற்றாய் - தேவர்கள் உய்யும்பொருட்டு ஆலகாலத்தை உண்ட கண்டனே; (மிடறு - கண்டம்);
தீ-வணம் திகழ் மேனியில் நீற்றாய் - நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய திருமேனியில் திருநீற்றைப் பூசியவனே;
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
7)
வரையி லாஅரு வினையுடை யேனும்
.. வாயி னால்தினம் திருப்புகழ் தன்னை
உரைசெய் துய்ந்திட இன்னருள் புரியாய்
.. உயர்ம றைப்பொருள் நால்வருக் குரைத்தாய்
தரையில் அன்றொரு சக்கரம் இட்டுச்
.. சலந்த ரன்றனைச் செற்றருள் சதுரா
திரையை வேணியில் வைத்தவித் தகனே
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
வரை இலா அருவினை உடையேனும் - அளவில்லாத தீவினையை உடைய நானும்; (வரை - எல்லை; அளவு);
வாயினால் தினம் திருப்புகழ்-தன்னை உரைசெய்து உய்ந்திட இன்னருள் புரியாய் - என் வாயால் தினமும் உன் திருப்புகழை ஓதி உய்யும்படி இனிது அருள்வாயாக;
உயர்-மறைப்பொருள் நால்வருக்கு உரைத்தாய் - உயர்ந்த வேதப்பொருளைச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவனே;
தரையில் அன்று ஒரு சக்கரம் இட்டுச் சலந்தரன்தனைச் செற்று-அருள் சதுரா - முன்னம் ஒரு சக்கரத்தைத் தரையில் வரைந்து, அதனைக்கொண்டு ஜலந்தராசுரனை அழித்த சதுரனே; (சதுரன் - சமர்த்தன்);
திரையை வேணியில் வைத்த வித்தகனே - கங்கையைச் சடையுள் அடைத்த சாமர்த்தியம் உடையவனே; (திரை - நதி); (வேணி - சடை); (வித்தகன் - வல்லவன்);
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
8)
உன்னை நாள்தொறும் நற்றமிழ் மாலை
.. ஓதி ஏத்திடும் உணர்வினை நல்காய்
முன்னி லங்கைமன் எடுத்தம லைக்கீழ்
.. முடிகள் பத்தையும் நெரித்திசை கேட்டாய்
கன்னல் ஆர்மொழிக் காரிகை பங்கா
.. கங்கை கூவிளம் கொன்றையி லங்கு
சென்னி மேலிள நாகமும் பூண்டாய்
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
உன்னை நாள்தொறும் நற்றமிழ் மாலை ஓதி ஏத்திடும் உணர்வினை நல்காய் - உன்னைத் தினமும் தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளை ஓதி வழிபடும் அறிவை அருள்வாயாக;
முன் இலங்கை-மன் எடுத்த மலைக்கீழ் முடிகள் பத்தையும் நெரித்து இசை கேட்டாய் - முன்பு இராவணன் பெயர்த்த கயிலைமலைக்கீழ் அவன் தலைகள் பத்தையும் நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டவனே; (மன் - அரசன்);
கன்னல் ஆர் மொழிக் காரிகை பங்கா - கரும்பு போல் இனிய மொழியுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே; (கன்னல் - கரும்பு); (ஆர்தல் - ஒத்தல்);
கங்கை கூவிளம் கொன்றை இலங்கு சென்னிமேல் இள-நாகமும் பூண்டாய் - கங்கை, வில்வம், கொன்றைமலர் இவை திகழும் திருமுடிமேல் இளம்பாம்பையும் அணிந்தவனே;
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
9)
பிறந்தி றந்துழல் தொழிலுடை யேனும்
.. பிஞ்ஞ காவுனைப் போற்றிட அருளாய்
அறந்த னைச்சொல ஆலதன் நீழல்
.. அமர்ந்த ஆரிய அடிமுடி நேடிப்
பறந்த வேதனும் மண்ணகழ் மாலும்
.. பாதம் ஏத்திய ஒள்ளெரித் தூணே
சிறந்த தாயெனச் சென்றருள் செய்த
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
பிறந்து இறந்து உழல் தொழில் உடையேனும், பிஞ்ஞகா, உனைப் போற்றிட அருளாய் - தீரா வினையால் முடிவின்றிப் பிறந்தும் இறந்தும் உழல்வதே தொழிலாக உடைய நானும், பிஞ்ஞகனே, உன்னை வழிபடும்படி அருள்வாயாக; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);
அறம்-தனைச் சொல ஆல்-அதன் நீழல் அமர்ந்த ஆரிய - சனகாதியர்களுக்கு அறம் உரைக்கக் கல்லால-மரத்தடியை விரும்பிய குருவே; (ஆரியன் - ஆசாரியன்);
அடிமுடி நேடிப் பறந்த வேதனும் மண் அகழ் மாலும் பாதம் ஏத்திய ஒள்ளெரித் தூணே - அடியையும் முடியையும் தேடி அன்னப்பறவை வடிவில் பறந்த பிரமனும் பன்றி உருவில் நிலத்தை அகழ்ந்த திருமாலும் திருவடியைத் தொழுமாறு ஒளியுடைய நெருப்புத் தூணாகி உயர்ந்தவனே; (நேடுதல் - தேடுதல்);
சிறந்த தாயெனச் சென்று அருள் செய்த திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - அடியவளுக்கு இரங்கித் தாய்-வடிவில் சென்று உதவியவனே; திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே; (* தாயுமானவன் - இத்தலத்து ஈசன் திருநாமம்; தாயாகச் சென்றதைத் திருச்சிராப்பள்ளித் தலவரலாற்றில் காண்க);
10)
பொய்யை மெய்யென விளம்பரம் செய்யும்
.. புன்மை யாளர்சொல் பொருளென மதியேல்
ஐய னேஅருள் என்றடி போற்றும்
.. அன்பர் வேண்டிய வரமருள் ஒருவன்
தையல் பங்கினன் மான்மழு சூலம்
.. தரித்த கையினன் மையணி கண்டன்
செய்ய மேனியில் வெண்திரு நீற்றன்
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
பொய்யை மெய் என விளம்பரம் செய்யும் புன்மையாளர் சொல் பொருள் என மதியேல் - பொய்யை உண்மை என்று விளம்பரம் செய்யும் அற்பர்களின் சொற்களைப் பொருள் என்று மதிக்கவேண்டா;
"ஐயனே அருள்" என்று அடி போற்றும் அன்பர் வேண்டிய வரம் அருள் ஒருவன் - "தலைவனே, அருள்வாயாக" என்று திருவடியை வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அருளும் ஒப்பற்றவன்; (ஒருவன் - ஒப்பற்றவன்);
தையல் பங்கினன் - உமையை ஒரு கூறாக உடையவன்; (தையல் - பெண்);
மான் மழு சூலம் தரித்த கையினன் - கையில் மான், மழுவாயுதம், திரிசூலம் இவற்றை ஏந்தியவன்;
மை அணி கண்டன் - நீலகண்டன்;
செய்ய-மேனியில் வெண்-திருநீற்றன் - செம்மேனியில் வெண்-திருநீற்றைப் பூசியவன்;
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானே;
11)
கரவின் றிக்கழல் இணைதனைப் போற்றிக்
.. கசியும் நெஞ்சுடை அடியவர் வேண்டு
வரமென் றும்தரு வள்ளலெம் பெருமான்
.. வலிய நஞ்சினை அமுதுசெய் அடிகள்
சுரமொன் றின்தமிழ் பாடிடக் கேட்டுத்
.. தூய காசினை மிழலையில் ஈந்தான்
சிரமொன் றிற்பலி தேர்ந்துழல் செல்வன்
.. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே.
கரவு இன்றிக் கழல் இணைதனைப் போற்றிக் கசியும் நெஞ்சுடை அடியவர் வேண்டு - வஞ்சமின்றி இரு-திருவடிகளை வழிபட்டு உருகுகின்ற மனம் உடைய பக்தர்கள் வேண்டுகின்ற; (கரவு - வஞ்சனை; பொய்); (சம்பந்தர் தேவாரம் - 1.38.1 – "கரவின்றி நன்மா மலர்கொண்டு இரவும் பகலுந் தொழுவார்கள்");
வரம் என்றும் தரு வள்ளல் எம் பெருமான் - வரங்களையெல்லாம் எந்நாளும் தருகின்ற வள்ளல் எம்பெருமான்;
வலிய நஞ்சினை அமுதுசெய் அடிகள் - கொடிய விடத்தை உண்ட கடவுள்;
சுரம் ஒன்று இன்-தமிழ் பாடிடக் கேட்டுத் தூய காசினை மிழலையில் ஈந்தான் - ஏழு ஸ்வரங்கள் பொருந்துகின்ற (பண் பொருந்திய) இனிய தமிழான தேவாரப் பதிகத்தைத் திருஞான சம்பந்தர் பாடக் கேட்டு மகிழ்ந்து, அவருக்கு வாசி இல்லாத செம்பொற்காசு தந்தவன்; (இவ்வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க. சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்");
சிரம் ஒன்றில் பலி தேர்ந்து உழல் செல்வன் - பிரமன் மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் செல்வன்;
திருச்சிராப்பள்ளி மேவிய சிவனே - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமான்;
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:
எண்சீர் விருத்தம் - "தான தானன தனதன தனன" என்ற அரையடி அமைப்பு;
தான – தனன என்றும் வரும்; தனதன – தானன என்றும் வரும்; தனன – தனனா, தான, தானா என்றும் வரும்;
அரையடிகள்தோறும்:
முதற்சீர் மாச்சீர்; இச்சீரின் ஈற்றில் குறில் (/ குறில் + ஒற்று).
இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும் - கூவிளச்சீர்.
மூன்றாம் சீர் விளச்சீர்.
நாலாம் சீர் மாச்சீர்.
விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment