Thursday, April 3, 2025

T.197 - காழி - மாலதாகி ஓயாமல்

2017-03-16

T.197 - காழி - மாலதாகி ஓயாமல்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான)

(காதி மோதி - திருப்புகழ் - பொது)


மால தாகி ஓயாமல் ஈனத் .. துழலாமல்

.. வார மாகி நாடோறும் ஓதற் .. கருளாயே

ஏல(ம்) நாறு காரோதி மாதைப் .. பிரியாதாய்

.. ஏற தேறும் ஓர்நாத நீரைப் .. புனைவோனே

கோல மாக நீறேறு மார்பிற் .. புரிநூலா

.. கோதி லாத பேர்ஓரு(ம்) மாணிக் .. கரணான

கால கால காமாரி காதிற் .. குழையானே

.. காத லாளர் சீர்பாடு காழிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

மாலது ஆகி, ஓயாமல் ஈனத்து .. உழலாமல்,

.. வாரம் ஆகி நாள்தோறும் ஓதற்கு .. அருளாயே;

ஏல(ம்) நாறு கார்-ஓதி மாதைப் .. பிரியாதாய்;

.. ஏறது ஏறும் ஓர் நாத; நீரைப் .. புனைவோனே;

கோலமாக நீறு ஏறு மார்பிற் .. புரிநூலா;

.. கோது இலாத பேர் ஓரு(ம்) மாணிக்கு .. அரண் ஆன

காலகால; காமாரி; காதிற் .. குழையானே;

.. காதலாளர் சீர் பாடு காழிப் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

மால்அது ஆகி ஓயாமல் ஈனத்து உழலாமல் - மயக்கத்தால் (அறியாமையால்) நான் எப்போதும் இழிவிலேயே உழலாமல்; (மால் - மயக்கம்; அறியாமை; அது - பகுதிப்பொருள் விகுதி); (ஈனம் - இழிவு);

வாரம் ஆகி நாள்தோறும் ஓதற்கு அருளாயே - அன்போடு தினமும் உன்னை ஓதி வழிபட அருள்வாயாக; (வாரம் - அன்பு);

ஏலம் நாறு கார்-ஓதி மாதைப் பிரியாதாய் - மயிர்ச்சாந்தின் மணம் கமழும் கரிய கூந்தலை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே; (ஏலம் - மயிர்ச்சாந்து); (கார் - கரிய); (ஓதி - கூந்தல்);

ஏறது ஏறும் ஓர் நாத – இடபத்தை வாகனமாக உடைய, ஒப்பற்ற தலைவனே;

நீரைப் புனைவோனே - கங்கையைச் சடையில் அணிந்தவனே;

கோலமாக நீறு ஏறு மார்பில் புரிநூலா - அழகாகத் திருநீறு திகழும் மார்பில் முப்புரிநூல் அணிந்தவனே; (கோலம் - அழகு; அலங்காரம்);

கோது இலாத பேர் ஓரும் மாணிக்கு அரண் ஆன காலகால - குற்றமற்ற திருநாமத்தைத் தியானித்த மார்க்கண்டேயருக்குக் காப்பு ஆகிக் காலனுக்குக் காலன் ஆனவனே; (கோது - குற்றம்); (ஓர்தல் - தியானித்தல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); ("கோது இலாத" என்ற சொற்றொடரைத் திருநாமம், மார்க்கண்டேயர் என்ற இரண்டிற்கும் அடையாகக் கொண்டு பொருள்கொள்ளலாம்); (சம்பந்தர் தேவாரம் - 1.90.11 - "நேர்-இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே");

காமாரி - மன்மதனை எரித்தவனே; (காமாரி - இங்கே, அண்மைவிளியாக வந்தது);

காதில் குழையானே - காதில் குழை அணிந்தவனே;

காதலாளர் சீர் பாடு காழிப் பெருமானே - பக்தர்கள் உன் புகழைப் பாடுகின்ற சீகாழியில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment