Tuesday, April 1, 2025

P.375 - கோளிலி - கோல மலர்ப்பொழில்

2016-12-23

P.375 - கோளிலி (திருக்குவளை)

---------------------------------

(திருமுக்கால் அமைப்பில்)

(தானன தானன தானன தானன

தானன தானன தானா)

(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி")


1)

கோலம லர்ப்பொழில் சூழ்தரு கோளிலிச்

சூலம ழுப்படை யீரே

சூலம ழுப்படை யீருமைத் தொழுபவர்

மேலைவி னைத்தொடர் விடுமே.


கோல மலர்ப்பொழில் சூழ்தரு கோளிலிச் - அழகிய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருக்கோளிலியில் உறைகின்ற; (தருதல் - ஒரு துணைவினைச்சொல்)

சூல மழுப்படையீரே - சூலமும் மழுவும் ஏந்தியவரே; (படை - ஆயுதம்)

சூல மழுப்படையீர் உமைத் தொழுபவர் - சூலமும் மழுவும் ஏந்திய உம்மை வழிபடுபவர்களது;

மேலை வினைத்தொடர் விடுமே - பழவினைகள் நீங்கும்; (அப்பர் தேவாரம் - 6.56.3 - "மேலை வினைகள் அறுப்பாய் போற்றி");


2)

குளிர்புனல் நிறைதரு குளமணி கோளிலி

ஒளிர்மதி புனைமுடி யீரே

ஒளிர்மதி புனைமுடி யீருமை உள்கிடு

தெளிவினர் இருவினை சிதைவே.


குளிர்-புனல் நிறைதரு குளம் அணி கோளிலி - குளிர்ந்த நீர் நிறைந்த குளம் திகழும் திருக்கோளிலியில் உறைகின்ற;

ஒளிர்-மதி புனை முடியீரே - பிரகாசிக்கின்ற சந்திரனைத் திருமுடிமேல் அணிந்தவரே;

ஒளிர்-மதி புனைமுடியீர் உமை உள்கிடு தெளிவினர் இருவினை சிதைவே - பிரகாசிக்கின்ற சந்திரனைத் திருமுடிமேல் அணிந்த உம்மைத் தியானிக்கும் தெளிவு உடைய அடியவர்களுடைய வல்வினைகள் அழியும்; (உள்குதல் - நினைதல்; தியானித்தல்); (சிதைவு - கேடு; அழிவு);


3)

கூவிடு குயிலமர் பொழிலணி கோளிலி

மூவிலை வேலுடை யீரே

மூவிலை வேலுடை யீருமை மேவிய

நாவினர் அடைவது நலமே.


கூவிடு குயில் அமர் பொழில் அணி கோளிலி - கூவுகின்ற குயில்கள் விரும்பும் (/ இருக்கின்ற) சோலை திகழும் திருக்கோளிலியில் உறைகின்ற;

மூவிலை வேல் உடையீரே - திரிசூலம் ஏந்தியவரே;

மூவிலை வேலுடையீர் உமை மேவிய நாவினர் அடைவது நலமே - திரிசூலம் ஏந்திய உம்மை விரும்பிய (போற்றுகின்ற) நாவினை உடையவர்கள் நன்மையே அடைவார்கள்; (மேவுதல் - விரும்புதல்);

குறிப்பு : 3-ஆம் அடியில் 4-ஆம் சீரில் மோனை வரும் இடத்தில் எதுகை வந்தது;


4)

கொத்தலர் ஆர்பொழில் சூழ்தரு கோளிலி

மத்தநன் மலரணி வீரே

மத்தநன் மலரணி வீருமை வழிபடு

பத்தரின் இருவினை படுமே.


கொத்து-அலர் ஆர் பொழில் சூழ்தரு கோளிலி - கொத்தாகப் பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கோளிலியில் உறைகின்ற; (அலர் - பூ); (ஆர்தல் - நிறைதல்);

மத்த-நன்-மலர் அணிவீரே - நல்ல ஊமத்தமலரை அணிந்தவரே; (மத்தம் - ஊமத்தை)

மத்த-நன்-மலர் அணிவீர் உமை வழிபடு - நல்ல ஊமத்தமலரை அணிந்த உம்மை வழிபடுகின்ற;

பத்தரின் இருவினை படுமே - அடியவர்களது வல்வினைகள் அழியும்; (படுதல் - அழிதல்; சாதல்);


5)

கொந்தலர் ஆர்பொழில் சூழ்தரு கோளிலி

அந்தனை உதைகழ லீரே

அந்தனை உதைகழ லீருமை அன்பொடு

வந்தனை செயமிகு(ம்) மகிழ்வே.


கொந்து-லர் ஆர் பொழில் சூழ்தரு கோளிலி - கொத்தாகப் பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கோளிலியில் உறைகின்ற; (கொந்து - கொத்து); (அலர் - பூ); (ஆர்தல் - நிறைதல்);

அந்தனை உதை கழலீரே - காலனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்தவரே; (அந்தன் - அந்தகன் - இயமன்);

அந்தனை உதை கழலீர் உமை அன்பொடு வந்தனை செய மிகு(ம்) மகிழ்வே - காலனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்த உம்மைப் பக்தியோடு எண்ணி வணங்கினால் மகிழ்ச்சி மிகும்; (வந்தனை - வணக்கம்); (மகிழ்வு - மகிழ்ச்சி);


6)

கொண்டலின் வளமலி வயலணி கோளிலி

வெண்டலை மாலையி னீரே

வெண்டலை மாலையி னீருமை மேவிய

தொண்டர்கள் ஒருதுயர் இலரே.


கொண்டலின் வளம் மலி வயல் அணி கோளிலி - மேகத்தின் வளம் (நீர்வளம்) நிறைந்த வயல்கள் திகழும் திருக்கோளிலியில் உறைகின்ற; (கொண்டல் - மேகம்);

வெண்-தலை மாலையினீரே - வெண்மையான மண்டையோட்டு மாலையை அணிந்தவரே.

வெண்-தலை மாலையினீர் உமை மேவிய தொண்டர்கள் ஒரு துயர் இலரே - வெண்மையான மண்டையோட்டு மாலையை அணிந்த உம்மை விரும்பிய அடியவர்களுக்குத் துயரமே இல்லை; (மேவுதல் - விரும்புதல்; பொருந்துதல்);


7)

கோதையர் ஆடிடும் குளமணி கோளிலிப்

போதணி புன்சடை யீரே

போதணி புன்சடை யீருமைப் போற்றிடத்

தீதறும் சேர்வது திருவே.


கோதையர் ஆடிடும் குளம் அணி கோளிலிப் - பெண்கள் குளிக்கின்ற குளம் திகழ்கின்ற திருக்கோளிலியில் உறைகின்ற; (கோதை - பெண்);

போது அணி புன்சடையீரே - பூக்களைச் செஞ்சடையில் அணிந்தவரே; (போது - பூ); (புன்சடை - செஞ்சடை);

போது அணி புன்சடையீர் உமைப் போற்றிடத் தீது அறும், சேர்வது திருவே - பூக்களைச் செஞ்சடையில் அணிந்த உம்மை வழிபட்டால், தீமைகள் ஒழியும்; செல்வம் வந்தடையும்; (தீது - தீமை; குற்றம்; பாவம்); (அறுதல் - இல்லாமற்போதல்);


8)

இன்னறை மகிழளி இசைமலி கோளிலி

முன்னரக் கனைநெரித் தீரே

முன்னரக் கனைநெரித் தீருமை முப்பொழு

துன்னிட நன்னிலை உறுமே.


இன்-நறை மகிழ்-அளி இசை மலி கோளிலி - இனிய தேனை விரும்பிய வண்டுகள் செய்யும் இசை மிகுந்த (= சோலை சூழ்ந்த) திருக்கோளிலியில் உறைகின்ற; (நறை - தேன்); (அளி - வண்டு)

முன் அரக்கனை நெரித்தீரே - முன்பு இராவணனை நசுக்கியவரே;

முன் அரக்கனை நெரித்தீர் உமை முப்பொழுது உன்னிட நன்னிலை உறுமே - முன்பு இராவணனை நசுக்கிய உம்மை முப்பொழுதும் தியானம் செய்தால் நற்கதி விளையும்; (உன்னுதல் - நினைத்தல்);


9)

சேலினம் உகள்வயல் திகழ்திருக் கோளிலி

மாலய னார்க்கரி யீரே

மாலய னார்க்கரி யீருமை வாழ்த்துதல்

சாலவும் இனிமையைத் தருமே.


சேல்-இனம் உகள் வயல் திகழ் திருக்கோளிலி - சேல்மீன்கள் பாயும் வயல் திகழும் திருக்கோளிலியில் உறைகின்ற; (உகளுதல் - பாய்தல்);

மால் அயனார்க்கு அரியீரே - விஷ்ணுவுக்கும் பிரமனுக்கும் காண அரியவரே;

மால் அயனார்க்கு அரியீர் உமை வாழ்த்துதல் சாலவும் இனிமையைத் தருமே - விஷ்ணுவுக்கும் பிரமனுக்கும் காண அரிய உம்மைத் துதித்தல் மிகவும் இனிமையைக் கொடுக்கும்;


10)

வாசம லர்ப்பொழில் வயலணி கோளிலி

நீசருக் கருள்தலி லீரே

நீசருக் கருள்தலி லீருமை நினைபவர்

மாசறும் வாழ்வினில் வளமே.


வாச மலர்ப்பொழில் வயல் அணி கோளிலி - மணம் மிக்க பூஞ்சோலைகளும் வயல்களும் திகழும் திருக்கோளிலியில் உறைகின்ற;

நீசருக்கு அருள்தல் இலீரே - (உம்மை இகழும்) கீழோர்களுக்கு அருள் இல்லாதவரே; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

நீசருக்கு அருள்தல் இலீர் உமை நினைபவர் மாசு அறும், வாழ்வினில் வளமே - கீழோர்களுக்கு அருள் இல்லாத உம்மை நினைந்து வழிபடும் அன்பர்களது பாவங்கள் தீரும், அவர்களது வாழ்வில் தீமைகள் நீங்கிச் செல்வம் செழிக்கும்; (மாசு - குற்றம்; பாவம்; தீமை); (வளம் - செல்வம்; நன்மை);


11)

மைதவழ் பொழிலிடை வண்டறை கோளிலிப்

பைதிகழ் அரவுடை யீரே

பைதிகழ் அரவுடை யீருமைப் பரவுதல்

செய்தவர் அடைவது திருவே.


மை தவழ் பொழிலிடை வண்டு அறை கோளிலிப் - கருமேகம் தவழும் சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற திருக்கோளிலியில் உறைகின்ற; (மை - கருமேகம்); (அறைதல் - ஒலித்தல்);

பை திகழ் அரவு உடையீரே - படம் உடைய நாகத்தை அணிந்தவரே; (பை - பாம்பின் படம்);

பை திகழ் அரவு உடையீர் உமைப் பரவுதல் செய்தவர் அடைவது திருவே - படம் உடைய நாகத்தை அணிந்த உம்மைத் துதித்தவர்கள் திரு அடைவார்கள்; (பரவுதல் - துதித்தல்); (திரு - செல்வம்; சிறப்பு; பாக்கியம்);


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு:

தானன தானன தானன தானன

தானன தானன தானா

இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை" என்று கருதலாம். முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி. தானன என்ற சீர்கள் தனதன என்றும் வரலாம்; தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்; தானா என்ற சீர்கள் தனனா என்றும் வரலாம்; 2-ஆம் அடி 3-ஆம் அடியில் மடங்கி (= திரும்பவும்) வரும்;

உதாரணம் - சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி";


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment