Tuesday, April 1, 2025

P.376 - மறைக்காடு - திங்களோடு சீறும்

2016-12-29

P.376 - மறைக்காடு (வேதாரண்யம்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர்கொண் டடியார்")

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")


1)

திங்க ளோடு சீறும் பாம்பைச் சேர்த்த முடியானே

அங்கை கூப்பி அமரர் போற்ற அருநஞ் சணிகண்டா

வங்கக் கடல்வந் தறையும் ஓசை மல்கும் மறைக்காட்டில்

மங்கை பங்கா உன்னை மறவா மனத்தை நல்காயே.


திங்களோடு சீறும் பாம்பைச் சேர்த்த முடியானே - சந்திரனையும் சீறுகின்ற நாகத்தையும் திருமுடிமேல் ஒன்றாக வைத்தவனே; அழிவற்றவனே; (முடி - உச்சி); (முடிதல் - அழிதல்; சாதல்);

அங்கை கூப்பி அமரர் போற்ற அரு நஞ்சு அணி கண்டா - கைகளைக் கூப்பித் தேவர்கள் வணங்க, அவர்களுக்கு இரங்கிக் கொடிய விடத்தை உண்டு கண்டத்தில் அணிந்தவனே;

வங்கக்-கடல் வந்து அறையும் ஓசை மல்கும் மறைக்காட்டில் - அலையுடைய கடல் வந்து மோதுகின்ற (/ஒலிக்கின்ற) ஓசை மிகுந்த திருமறைக்காட்டில் உறைகின்ற; (வங்கம் - அலை; மரக்கலம்); (அறைதல் - ஒலித்தல்; மோதுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.37.2 - "வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா");

மங்கை பங்கா உன்னை மறவா மனத்தை நல்காயே - மாதொரு பாகனே, உன்னை என்றும் மறவாமல் வழிபடும் மனத்தை எனக்கு அருள்வாயாக;


2)

மெலியும் பிறையை விளங்க வைத்தாய் விளக்கின் திரிதன்னை

எலியொன் றன்று தூண்ட இரங்கி எழில்வான் அருள்செய்தாய்

வலிய திரைகள் மோதும் ஓசை மல்கும் மறைக்காட்டில்

புலியின் தோலாய் உன்னைப் போற்றும் போதம் அருளாயே


மெலியும் பிறையை விளங்க வைத்தாய் - தேய்ந்து வாடிய சந்திரனைக் காத்து முடிமேல் திகழ வைத்தவனே;

விளக்கின் திரிதன்னை எலி ஒன்று அன்று தூண்ட, இரங்கி எழில்-வான் அருள்செய்தாய் - முன்னர் ஓர் எலி நெய்யை உண்ணவேண்டித் தற்செயலாகக் கோயில்-விளக்கின் திரியைத் தூண்டவும், (அதனால் அத்தீபம் நன்கு எரியக்கண்டு, அப்புண்ணியத்தின் பயனாக), அந்த எலியை மஹாபலியாகப் பிறப்பித்து மூவுலகும் ஆளுமாறு அருள்செய்தவனே; (அப்பர் தேவாரம் - 4.49.8 - "நிறை-மறைக்காடு தன்னில் நீண்டெரி தீபம் தன்னை" - என்று தொடங்கும் பாடலில் இவ்வரலாறு சுட்டப்பெறுவதைக் காண்க);

வலிய திரைகள் மோதும் ஓசை மல்கும் மறைக்காட்டில் - வலிமையுடய அலைகள் கரையில் மோதும் ஓசை மிகுந்த திருமறைக்காட்டில் உறைகின்ற; (திரை - அலை);

புலியின் தோலாய் உன்னைப் போற்றும் போதம் அருளாயே - புலித்தோலை அணிந்த பெருமானே, உன்னை வழிபடும் அறிவை எனக்கு அருள்வாயாக; (போதம் - ஞானம்; அறிவு);


3)

அண்டர் எந்தாய் அருளென் றிறைஞ்ச அழலும் கணையொன்று

கொண்டு மதில்கள் மூன்றை எய்த குன்றச் சிலையானே

வண்ட ரங்கம் ஆர்க்கும் அரவம் மல்கும் மறைக்காட்டில்

பண்ட ரங்கா உன்னைப் பரவும் பண்பை அருளாயே.


அண்டர் "ந்தாய் அருள்" என்று இறைஞ்ச, - தேவர்கள், "எந்தையே! அருளாய்" என்று வேண்டவும், அவர்களுக்கு இரங்கி; (அண்டர் - தேவர்);

அழலும் கணை ஒன்று கொண்டு மதில்கள் மூன்றை எய்த குன்றச் சிலையானே - மேருமலையை வில்லாக ஏந்தித் தீக்கணை ஒன்றால் முப்புரங்களை எய்து எரித்தவனே; (அழல்தல் - எரிதல்); (மதில் - கோட்டை); (குன்றம் - மலை); (சிலை - வில்); (குன்றச் சிலையான் - குன்றவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்);

வண்-தரங்கம் ஆர்க்கும் அரவம் மல்கும் மறைக்காட்டில் - வளமுடைய அலைகள் ஒலிக்கும் ஓசை மிகுந்த திருமறைக்காட்டில் உறைகின்ற; (வண்மை - வளமை; ஈகை); (தரங்கம் - அலை; கடல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (அரவம் - சத்தம்);

பண்டரங்கா, உன்னைப் பரவும் பண்பை அருளாயே - பண்டரங்கக் கூத்து ஆடும் பெருமானே, உன்னைத் துதிக்கும் குணத்தை எனக்கு அருள்வாயாக; (பண்டரங்கம் - பாண்டரங்கம் - திரிபுரத்தை அழித்த போது சிவபிரான் ஆடியது);


4)

கூனார் மதியம் கொன்றை குரவம் குலவும் சடையானே

மானேர் நோக்கி மலையான் மகளை வாமம் உடையானே

தேனார் தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில்

வானோர் தலைவா உன்னை வாழ்த்தும் மதியைத் தாராயே.


கூன் ஆர் மதியம், கொன்றை, குரவம் குலவும் சடையானே - சடையில் சந்திரன், கொன்றைமலர், குராமலர் இவற்றையெல்லாம் அணிந்தவனே; (கூன் - வளைவு); (ஆர்தல் - பொருந்துதல்); (குலவுதல் - விளங்குதல்; தங்குதல்);

மான் நேர் நோக்கி மலையான் மகளை வாமம் உடையானே - மான் போன்ற பார்வை உடையவளும் மலைக்கு மகளுமான உமையை இடப்பக்கம் பாகமாக உடையவனே; (நேர் - ஒப்பு); (வாமம் - இடப்பக்கம்);

தேன் ஆர் தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில் - தேன் போன்ற தேவாரத்தைக் கேட்டுக் கோயில் திருக்கதவைத் திறந்தருளிய, திருமறைக்காட்டில் உறைகின்ற; (ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்); (கதவம் - கதவு); (அப்பர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின் நேர் மொழியாள்" பதிகத்தையும் பெரியபுராணத்தில் அதன் வரலாற்றையும் காண்க);

வானோர் தலைவா உன்னை வாழ்த்தும் மதியைத் தாராயே - தேவர்கள் தலைவனே, உன்னைப் போற்றும் அறிவை எனக்கு அருள்வாயாக; (மதி - அறிவு);


5)

அருவாய் உருவும் ஆய பெருமான் ஆல நிழல்தன்னில்

குருவாய் இருந்து மறையை விரித்தாய் குறைவில் வாகீசர்

திருவார் தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில்

அருளார் கையாய் உன்னை அடையும் அன்பை அருளாயே.


அருவாய் உருவும் ஆய பெருமான் - அருவமும் உருவமும் ஆகிய பெருமானே;

ஆலநிழல்-தன்னில் குருவாய் இருந்து மறையை விரித்தாய் - கல்லால-மரத்தின்கீழ் அமர்ந்து நால்வேதங்களின் பொருளை உபதேசித்த குருவே; (இருத்தல் - உட்கார்தல்); (விரித்தல் - விளக்கிச் சொல்லுதல்);

குறைவு இல் வாகீசர் திரு ஆர் தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில் - குற்றமற்ற திருநாவுக்கரசர் பாடிய திரு மிக்க தேவாரத்தைக் கேட்டுக் கோயில் திருக்கதவைத் திறந்தருளிய, திருமறைக்காட்டில் உறைகின்ற; (குறைவு - குற்றம்); (வாகீசர் - வாக்கின் மன்னர் - திருநாவுக்கரசர்);

அருள் ஆர் கையாய் உன்னை அடையும் அன்பை அருளாயே - அருள்கின்ற கையை உடையவனே, உன்னை அடைகின்ற பக்தியை எனக்கு அருள்வாயாக;


6)

தாரா நாகம் புனைந்த மார்பில் தவள நீற்றானே

ஏரார் கொடிமேல் ஏற்றை உடைய எங்கள் பெருமானே

சீரார் தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில்

நீரார் சடையாய் நின்னை மறவா நெஞ்சம் அருளாயே.


தாரா நாகம் புனைந்த மார்பில் தவள நீற்றானே - மாலையாகப் பாம்பை அணிந்த திருமார்பில் வெண்ணீற்றைப் பூசியவனே; (தாரா - தாராக – கடைக்குறை விகாரம்; தார் - மாலை); (தவளம் - வெண்மை);

ஏர் ஆர் கொடிமேல் ஏற்றை உடைய எங்கள் பெருமானே - இடபச்-சின்னம் பொறித்த அழகிய கொடியை உடைய எம்பெருமானே; (ஏர் - அழகு);

சீர் ஆர் தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில் - நன்மை மிக்க, திருப்புகழைப் பாடும் தேவாரத்தைக் கேட்டுக் கோயில் திருக்கதவைத் திறந்தருளிய, திருமறைக்காட்டில் உறைகின்ற; (சீர் - நன்மை; புகழ்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

நீர் ஆர் சடையாய் நின்னை மறவா நெஞ்சம் அருளாயே - கங்கைச் சடையானே, உன்னை என்றும் மறவாத மனத்தை எனக்கு அருள்வாயாக;


7)

வெஞ்சொற் றக்கன் வேள்வி தகர்த்த வீரக் கழலானே

அஞ்சொற் பாவை பங்கில் உடையாய் அப்பர் உரைசெய்த

செஞ்சொற் றமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில்

நஞ்சைத் தரித்த கண்டா மறவா நெஞ்சை நல்காயே


வெஞ்சொல்-தக்கன் வேள்வி தகர்த்த வீரக் கழலானே - இகழ்ந்து கடுஞ்சொற்களைப் பேசிய தக்கன் செய்த அவவேள்வியை அழித்த வீரனே; (வெஞ்சொல் - கடுஞ்சொல்); (வீரக்கழல் - வீரத்தின் அடையாளமாகக் காலில் அணியும் கழல்);

அஞ்சொல்-பாவை பங்கில் உடையாய் - இனிய மொழி பேசும் உமையை ஒரு பாகமாக உடையவனே; (அம் - அழகு);

அப்பர் உரைசெய்த செஞ்சொல்-தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில் - திருநாவுக்கரசர் பாடிய செம்மை மிக்க சொற்கள் பொருந்திய தமிழான தேவாரத்தைக் கேட்டுக் கோயில் திருக்கதவைத் திறந்தருளிய, திருமறைக்காட்டில் உறைகின்ற;

நஞ்சைத் தரித்த கண்டா மறவா நெஞ்சை நல்காயே - நீலகண்டனே, உன்னை என்றும் மறவாத மனத்தை எனக்குத் தந்து அருள்வாயாக;


8)

தெளியா மனத்துத் திண்டோள் அரக்கன் சினந்து மலைபேர்க்க

ஒளியார் பாதத் தொற்றை விரலை ஊன்றி நெரிசெய்தாய்

வளமார் கடலின் அலையின் ஓசை மல்கும் மறைக்காட்டில்

உளனே உன்னை என்றும் மறவா உள்ளம் நல்காயே.


தெளியா மனத்துத் திண்-தோள் அரக்கன் சினந்து மலை பேர்க்க - தெளிவில்லாத மனம் உடையவனும், வலிய புஜங்களை உடைய அரக்கனுமான, இராவணன் கோபத்தோடு கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டபோது;

ஒளி ஆர் பாதத்து ஒற்றை விரலை ஊன்றி நெரிசெய்தாய் - ஒளியுடைய திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனே; (நெரி - நெரிவு - நசுக்குதல்);

வளம் ஆர் கடலின் அலையின் ஓசை மல்கும் மறைக்காட்டில் உளனே - வளம் மிக்க கடலின் அலைகளின் ஓசை மிகுந்த திருமறைக்காட்டில் உறைகின்ற பெருமானே; (உளன் - உள்ளான் - இருக்கின்றவன்);

உன்னை என்றும் மறவா உள்ளம் நல்காயே - உன்னை என்றும் மறவாத மனத்தை எனக்குத் தந்து அருள்வாயாக; (உள்ளம் - மனம்; எண்ணம்);


9)

வெந்த நீற்றாய் மேலும் கீழும் வேதன் அரிகாணா

அந்தம் ஆதி அற்ற சோதீ அன்பர்க் கெளியானே

வந்து மோதும் ஓதத் தோசை மல்கும் மறைக்காட்டில்

கந்தச் சடையாய் வந்திக் கின்ற சிந்தை நல்காயே.


வெந்த நீற்றாய் - சுட்ட திருநீற்றைப் பூசியவனே;

மேலும் கீழும் வேதன் அரி காணா அந்தம் ஆதி அற்ற சோதீ - பிரமனும் திருமாலும் அடிமுடி காண ஒண்ணாத முதலும் முடிவும் இல்லாத எல்லையற்ற ஜோதியே; (வேதன் - பிரமன்); (அரி - ஹரி - திருமால்); (அந்தம் - முடிவு); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.1 - "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை");

அன்பர்க்கு எளியானே - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவனே;

வந்து மோதும் ஓதத்து ஓசை மல்கும் மறைக்காட்டில் - தொடர்ந்து வந்து மோதுகின்ற அலையின் ஓசை மிகுந்த திருமறைக்காட்டில் உறைகின்ற பெருமானே; (ஓதம் - கடல்; அலை);

கந்தச்-சடையாய் வந்திக்கின்ற சிந்தை நல்காயே - மணம் கமழும் சடையை உடையவனே, உன்னை வழிபடுகின்ற எண்ணத்தை எனக்கு அருள்வாயாக; (கந்தம் - வாசனை); (சம்பந்தர் தேவாரம் - 1.10.6 - "கருகும் மிடறுடையார் கமழ் சடையார்"); (வந்தித்தல் - வணங்குதல்); (சிந்தை - மனம்; எண்ணம்);


10)

நேரி லாத நீசர் சொல்லும் நெறிகள் அறியானே

காரி லங்கு கண்ட நுதலிற் கண்ணொன் றுடையானே

வாரி ஓதம் மோதும் ஓசை மல்கும் மறைக்காட்டில்

நாரி பங்க நாமம் மறவா நாவை நல்காயே.


நேர் இலாத நீசர் சொல்லும் நெறிகள் அறியானே - வஞ்சக மனம் உடைய கீழோர்கள் சொல்லும் மார்க்கங்களால் அறியப்படாதவனே; (நேர் - நேர்மை); (சம்பந்தர் தேவாரம் - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");

கார் இலங்கு கண்ட - நீலகண்டனே; (கார் - கருமை); (இலங்குதல் - பிரகாசித்தல்);

நுதலில் கண் ஒன்று உடையானே - நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);

வாரி ஓதம் மோதும் ஓசை மல்கும் மறைக்காட்டில் - கடலின் அலைகள் கரையில் மோதுகின்ற ஓசை மிகுந்த திருமறைக்காட்டில் உறைகின்ற; (வாரி - கடல்); (ஓதம் - அலை);

நாரி பங்க நாமம் மறவா நாவை நல்காயே - உமைபங்கனே, உன் திருநாமத்தை மறவாது சொல்லும் நாக்கை எனக்கு அருள்வாயாக; (நாரி - பெண்);


11)

இறந்தார் என்பைப் பூண்டு கந்த ஈசா இடர்செய்து

பறந்த எயில்கள் எரிய ஒற்றைப் பகழி தொடுவீரா

சிறந்த தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில்

உறைந்த பெருமான் உன்னை ஓதும் உணர்வை நல்காயே.


இறந்தார் என்பைப் பூண்டு உகந்த ஈசா - சர்வசம்ஹார காலத்தில் அழிந்த பிரமவிஷ்ணுக்களின் எலும்பை அணிந்த ஈசனே; கங்காளனே; (என்பு - எலும்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.15.6 - "வீந்தார் வெளை எலும்பும் உடையார்");

இடர்செய்து பறந்த எயில்கள் எரிய ஒற்றைப் பகழி தொடுவீரா - எல்லாரையும் துன்புறுத்தி எங்கும் பறந்து திரிந்த முப்புரங்களும் எரிந்து அழியுமாறு ஒரு கணையைச் செலுத்திய வீரனே; (எயில் - கோட்டை); (பகழி - அம்பு); (தொடுதல் - கணையை ஏவுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.54.7 – "வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்");

சிறந்த தமிழைக் கேட்டுக் கதவம் திறந்த மறைக்காட்டில் உறைந்த பெருமான் - திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தைக் கேட்டுக் கோயில் திருக்கதவைத் திறந்தருளிய, திருமறைக்காட்டில் உறையும் பெருமானே;

உன்னை ஓதும் உணர்வை நல்காயே - உன்னைப் பாடிப் போற்றும் அறிவை எனக்கு அருள்வாயாக; (ஓதுதல் - சொல்லுதல்; பாடுதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment