2016-12-16
P.371 - நெல்லிக்கா (திருநெல்லிக்காவல்)
(திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ள தலம்)
---------------------------------
(கலித்துறை - மா மா மா மா மாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 2.64.1 - "தேவா சிறியோம்");
1)
ஏறார் கொடியாய் மின்னல் அன்ன இடைமாதைக்
கூறா மகிழ்ந்தாய் புலியின் தோலாய் குறைவில்லாய்
நீறார் மேனிப் பெருமான் நெல்லி வனநாதா
ஆறார் சடையாய் மாறா இன்பம் அருளாயே.
ஏறு ஆர் கொடியாய் - இடபக்கொடியை உடையவனே; (ஆர்தல் - பொருந்துதல்);
மின்னல் அன்ன இடை மாதைக் கூறா மகிழ்ந்தாய் - மின்னல் போன்ற மெல்லிய இடையை உடைய உமையை ஒரு கூறாக விரும்பியவனே; (கூறா - கூறாக - கடைக்குறை விகாரம்);
புலியின் தோலாய் - புலித்தோலை ஆடையாக அணிந்தவனே;
குறைவு இல்லாய் - எக்குறையும் எக்குற்றமும் இல்லாதவனே; (பூரணன்);
நீறு ஆர் மேனிப் பெருமான் - திருநீற்றை மேனியில் பூசிய பெருமானே;
நெல்லிவன நாதா - திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
ஆறு ஆர் சடையாய் - கங்கைச்சடையானே;
மாறா இன்பம் அருளாயே - எனக்கு அழியாத இன்பம் அருள்வாயாக;
2)
நற்ற வத்து மாணி வாழ நமன்மாளச்
செற்ற பாதா கயிலை மலைமேல் திகழ்தேவா
நெற்றிக் கண்ணா நிமலா நெல்லி வனநாதா
ஒற்றை விடையாய் அடியேன் கவலை ஒழியாயே
நல்-தவத்து மாணி வாழ, நமன் மாளச் செற்ற பாதா - சிறந்த தவம் உடைய மார்க்கண்டேயர் வாழ்வதற்காகக் காலனைக் காலால் உதைத்து அழித்தவனே;
கயிலைமலைமேல் திகழ் தேவா - கயிலைமலைமேல் உறையும் தேவனே;
நெற்றிக்கண்ணா நிமலா - நெற்றிக்கண்ணனே, தூயனே;
நெல்லிவன நாதா - திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
ஒற்றை விடையாய் - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாக உடையவனே;
அடியேன் கவலை ஒழியாயே - என் கவலைகளை ஒழித்து அருள்வாயாக;
3)
அலறித் தேவர் ஐயா அருளென் றடிபோற்ற
அலைகள் ஆரும் ஆழி நஞ்சை அமுதுண்டாய்
நிலவு திகழும் முடியாய் நெல்லி வனநாதா
தலையால் வணங்கும் தமியேற் கின்பம் தருவாயே.
ஆழி - கடல்;
தமியேற்கு - தமியேனுக்கு - எனக்கு;
4)
விரையார் கணைவேள் வேவ அன்று விழிசெய்தாய்
திரையார் சடைமேல் சீறு நாகம் திகழ்திங்கள்
நிரையார் கொன்றை அணிந்தாய் நெல்லி வனநாதா
அரையா அடியேன் குறைதீர்த் தின்பம் அருளாயே.
விரை ஆர் கணை வேள் வேவ அன்று விழிசெய்தாய் - வாசக்கணைகளைத் தொடுக்கும் மன்மதன் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று");
திரை ஆர் சடைமேல் சீறு நாகம், திகழ் திங்கள், நிரை ஆர் கொன்றை அணிந்தாய் - கங்கை பொருந்திய சடையின்மேல் நாகத்தையும், ஒளிவீசும் சந்திரனையும், வரிசையாகத் தொடுத்த கொன்றை-மாலையையும் அணிந்தவனே;
நெல்லிவன நாதா - திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
அரையா - அரசனே;
அடியேன் குறைதீர்த்து இன்பம் அருளாயே - என் குறைகளைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;
5)
வில்லா மலையை ஏந்திப் புரங்கள் விழவெய்தாய்
வல்லான் என்று நல்லார் வாழ்த்தும் மணிகண்டா
நெல்லார் வயல்சூழ் அழகார் நெல்லி வனநாதா
சொல்லார் தமிழால் துதித்தேன் துயரம் துடையாயே.
வில்லா மலையை ஏந்திப் புரங்கள் விழ எய்தாய் - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களும் அழியும்படி எய்தவனே;
வல்லான் என்று நல்லார் வாழ்த்தும் மணிகண்டா - நல்லவர்களால், "வல்லவன்" என்று போறேறப்படும் நீலகண்டனே;
நெல் ஆர் வயல் சூழ் அழகு ஆர் நெல்லிவன நாதா - நெற்பயிர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த, அழகிய திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
சொல் ஆர் தமிழால் துதித்தேன் துயரம் துடையாயே - இனிய சொற்கள் நிறைந்த தமிழ்ப்பாமாலைகள் பாடி உன்னைத் துதிக்கும் என் துயரத்தைத் தீர்த்து அருள்வாயாக; (துடைத்தல் - நீக்குதல்);
6)
வாரார் கொங்கை மங்கை பங்கா மணிமார்பில்
தாரா நாகம் அணிந்தாய் கங்கைச் சடையானே
நீரார் வயல்சூழ் அழகார் நெல்லி வனநாதா
காரார் கண்டா அடியேன் கவலை களையாயே.
வார் ஆர் கொங்கை மங்கை பங்கா - கச்சு அணிந்த முலையுடைய உமையை ஒரு பங்காக உடையவனே;
மணி-மார்பில் தாரா நாகம் அணிந்தாய் - அழகிய பவளம் போன்ற மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே; (மணி - அழகு; பவளம்); (தார் - மாலை; தாரா - தாராக);
கங்கைச் சடையானே - கங்காதரனே;
நீர் ஆர் வயல் சூழ் அழகு ஆர் நெல்லிவன நாதா - நீர் நிறைந்த வயல் சூழ்ந்த அழகிய திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
கார் ஆர் கண்டா - நீலகண்டனே;
அடியேன் கவலை களையாயே - என் கவலையைத் தீர்த்து அருள்வாயாக; (களைதல் - நீக்குதல்);
7)
தழலார் மேனித் தலைவா கையில் தலையேந்தி
உழல்வாய் மறைகள் ஓது நாவா உமைகேள்வா
நிழலார் மழுவொன் றுடையாய் நெல்லி வனநாதா
கழல்வாழ்த் தடியேற் கிரங்கிக் கவலை களையாயே.
தழல் ஆர் மேனித் தலைவா - தீப்போன்ற செம்மேனி உடைய தலைவனே; (ஆர்தல் - ஒத்தல்);
கையில் தலை ஏந்தி உழல்வாய் - கையில் பிரமன் மண்டையோட்டை ஏந்தித் திரிபவனே;
மறைகள் ஓது நாவா - வேதங்களைப் பாடியவனே;
உமை-கேள்வா - பார்வதி நாயகனே;
நிழல் ஆர் மழு ஒன்று உடையாய் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவனே;
நெல்லிவன நாதா - திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
கழல் வாழ்த்து அடியேற்கு இரங்கிக் கவலை களையாயே - உன் திருவடியை வாழ்த்தும் எனக்கு இரங்கி என் கவலைகளைத் தீர்த்து அருள்வாயாக;
8)
மால தாகி மலையை இடந்தான் வலிசெற்ற
கோல விரலாய் அன்பர் நெஞ்சில் குடிகொண்டாய்
நீல வண்டு பண்செய் நெல்லி வனநாதா
ஆலம் உண்ட கண்ட அடியேற் கருளாயே.
மால்அது ஆகி மலையை இடந்தான் வலி செற்ற கோல விரலாய் - ஆணவத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்த அழகிய விரலை உடையவனே; (மால் - மயக்கம்); (இடத்தல் - பெயர்த்தல்); (வலி - வலிமை); (கோலம் - அழகு);
அன்பர் நெஞ்சில் குடிகொண்டாய் - பக்தர்களது நெஞ்சில் உறைகின்றவனே;
நீல-வண்டு பண்-செய் நெல்லிவன நாதா - கருவண்டுகள் இசைபாடும் (ரீங்காரம் செய்யும்) (சோலைகள் சூழ்ந்த) திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
ஆலம் உண்ட கண்ட - நீலகண்டனே;
அடியேற்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக;
9)
சேடர் போற்றும் சிவனே இருளில் திருநட்டம்
ஆடக் கானை நாடும் அரனே அயன்மாலார்
நேடிக் காணா நெருப்பே நெல்லி வனநாதா
பாடிப் பரவும் அடியேன் பாவம் பறையாயே.
சேடர் போற்றும் சிவனே - உயர்ந்தோர்கள் போற்றும் சிவனே; (சேடன் - பெரியோன்);
இருளில் திருநட்டம் ஆடக் கானை நாடும் அரனே - நள்ளிருளில் சுடுகாட்டில் கூத்து ஆடும் ஹரனே; (நட்டம் - கூத்து); (கான் - சுடுகாடு);
அயன் மாலார் நேடிக் காணா நெருப்பே - பிரமனும் திருமாலும் தேடிக் காண ஒண்ணாத சோதியே; (நேடுதல் - தேடுதல்);
நெல்லிவன நாதா - திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
பாடிப் பரவும் அடியேன் பாவம் பறையாயே - உன்னைப் பாடிப் போற்றும் என் வினையை அழித்து அருள்வாயாக; (பறைத்தல் - அழித்தல்; நீக்குதல்);
10)
மாயம் பேசும் வஞ்சர்க் கருளாய் மழவேற்றாய்
தேயும் மதியைத் திகழ வைத்த திருவாளா
நேயர் வந்து போற்றும் நெல்லி வனநாதா
தூய நீற்றாய் தொழுதேன் துயரம் துடையாயே.
மாயம் பேசும் வஞ்சர்க்கு அருளாய் - வஞ்சனை நிறைந்த பொய்களைப் பேசும் வஞ்சகர்களுக்கு அருளாதவனே;
மழ-ஏற்றாய் - இள-எருதை வாகனமாக உடையவனே;
தேயும் மதியைத் திகழ வைத்த திருவாளா - சாபத்தால் தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரனைத் திருமுடிமேல் வைத்து அழியாமல் காத்தவனே;
நேயர் வந்து போற்றும் நெல்லிவன நாதா - அன்பர்கள் வந்து வழிபடும் திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
தூய நீற்றாய் - தூய திருநீற்றை அணிந்தவனே;
தொழுதேன் துயரம் துடையாயே - உன்னைத் தொழும் என் துயரத்தைத் தீர்த்து அருள்வாயாக; (துடைத்தல் - நீக்குதல்);
11)
வையம் ஈன்றாய் மண்டை யோட்டில் மடவார்பால்
ஐயம் ஏற்றாய் ஆல்கீழ் நால்வர்க் கருள்செய்தாய்
நெய்யும் பாலும் ஆடும் நெல்லி வனநாதா
கையில் மழுவா அடியேன் கவலை களையாயே.
வையம் ஈன்றாய் - உலங்கத்தைப் படைத்தவனே;
மண்டையோட்டில் மடவார்பால் ஐயம் ஏற்றாய் - பிரமனது மண்டையோட்டில் பெண்கள் இடும் பிச்சையை ஏற்பவனே;
ஆல்கீழ் நால்வர்க்கு அருள்செய்தாய் - கல்லால-மரத்தின்கீழே சனகாதியர் நால்வருக்கு வேதப்பொருளை உபதேசித்தவனே;
நெய்யும் பாலும் ஆடும் நெல்லிவன நாதா - நெய், பால் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுகின்றவனே, திருநெல்லிக்காவில் உறையும் நெல்லிவனநாதனே;
கையில் மழுவா - கையில் மழுவை ஏந்தியவனே;
அடியேன் கவலை களையாயே - என் கவலைகளைத் தீர்த்து அருள்வாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment