Thursday, April 3, 2025

P.382 - பூவனூர் - நரியுலாவு கானகத்தில்

2017-03-17

P.382 - பூவனூர்

---------------------------------

(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா - அரையடிச் சந்தம்);

(சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்")

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடங்கள்;


1)

நரியு லாவு கான கத்தில் .. நட்டம் ஆடி மகிழு(ம்) நம்பர்

எரிவி டத்தைக் கண்டி ரிந்த .. இமைய வர்க்குப் பரிந்த பண்பர்

கரிய வெற்புப் போல வந்த .. கரியின் ஈர உரிவை போர்த்தார்

புரிவெண் ணூலர் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


நரி உலாவு கானகத்தில் நட்டம் ஆடி மகிழும் நம்பர் - நரிகள் திரியும் சுடுகாட்டில் திருநடம் செய்து மகிழும் கடவுள்; (நம்பர் - விரும்பத்தக்கவர் - சிவன் திருநாமம்);

எரி-விடத்தைக் கண்டு இரிந்த இமையவர்க்குப் பரிந்த பண்பர் - அனைத்தையும் சுட்டெரித்த ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களுக்கு இரங்கிய குணமுடையவர்; (இரிதல் - அஞ்சி ஓடுதல்);

கரிய வெற்புப் போல வந்த கரியின் ஈர-உரிவை போர்த்தார் - பெரிய கரிய மலை போல வந்த யானையின் ஈரத்தோலைப் போர்வையாகப் போர்த்தவர்;

புரி-வெண்ணூலர் உறையும் ஊர் ஆம் - வெண்மையான முப்புரிநூல் அணிந்த பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


2)

பனித யங்கு கயிலை வெற்பில் .. பயிலு(ம்) நாதர் கமல பாதர்

மனிதர் தேவர் மலர்கள் தூவி .. வாழ்த்து கின்ற மணிமி டற்றர்

வனிதை பங்கர் கொன்றை கங்கை .. மதிபு னைந்தார் மறைகள் ஓதும்

புனிதர் மேவி உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


பனி தயங்கு கயிலை வெற்பில் பயிலும் நாதர் - பனி விளங்கும் கயிலைமலையின்மேல் வீற்றிருக்கும் தலைவர்; (தயங்குதல் - ஒளிவிடுதல்; தெளிவாயிருத்தல்);

கமல-பாதர் - தாமரைமலர் போன்ற திருவடியை உடையவர்;

மனிதர் தேவர் மலர்கள் தூவி வாழ்த்துகின்ற மணி-மிடற்றர் - மனிதர்களும் தேவர்களும் பூக்கள் தூவி வணங்குகின்ற நீலகண்டர்; (மிடறு - கண்டம்);

வனிதை பங்கர் - பெண்ணொரு பாகர்;

கொன்றை கங்கை மதி புனைந்தார் - கொன்றைமலர், கங்கைநதி, திங்கள் இவற்றை அணிந்தவர்;

மறைகள் ஓதும் புனிதர் மேவி உறையும் ஊர் ஆம் - வேதங்கள் ஓதுகின்ற தூயர் விரும்பி உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


3)

பாதம் ஏத்து சுரர்க்கி ரங்கிப் .. படுவி டத்தை அமுது செய்தார்

சீத கங்கை சடையில் ஏற்றார் .. திருவெண் ணீறு பூசு மார்பர்

வேத கீதர் விடைய தேறி .. வீதி தன்னில் பலிதி ரிந்த

பூத நாதர் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


பாதம் ஏத்து சுரர்க்கு இரங்கிப் படு-விடத்தை அமுது செய்தார் - திருவடியை வணங்கிய தேவர்களுக்கு இரங்கிக் கொடிய நஞ்சை உண்டவர்;

சீத-கங்கை சடையில் ஏற்றார் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவர்; (சீதம் - குளிர்ச்சி);

திருவெண்ணீறு பூசு மார்பர் - வெண்ணீற்றை மார்பில் பூசியவர்;

வேத-கீதர் - வேதம் ஓதுபவர்;

விடையது ஏறி வீதி-தன்னில் பலி திரிந்த - இடபத்தின்மேல் ஏறிச்சென்று தெருவில் பிச்சைக்கு உழலும்; (பலி - பிச்சை); (சம்பந்தர் தேவாரம் - 1.48.3 – "வெண்டலையினோடு பலிதிரிந்து");

பூத-நாதர் உறையும் ஊர் ஆம் - பூத-நாயகரான பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


4)

அடியில் அங்குப் பூவி டாமல் .. அம்பு விட்ட காம வேளை

நொடியில் அங்கம் இல்லி யாக .. நோக்கு கண்ணர் தீயின் வண்ணர்

வடியி லங்கு மழுவை மானை .. வன்னி தன்னை ஏந்து கையர்

பொடியி லங்கு மார்பர் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


அடியில் அங்குப் பூ இடாமல், அம்பு விட்ட காமவேளை - திருவடியில் பூவைத் தூவாமல், கணையை எய்த மன்மதனை; (அங்கு - அசைச்சொல்)

நொடியில் அங்கம் இல்லியாக நோக்கு கண்ணர் - ஒரு நொடியளவில் உடலற்றவனாகப் பார்த்த நெற்றிக்கண்ணர்; (அங்கம் - உடம்பு);

தீயின் வண்ணர் - நெருப்புப் போன்ற செம்மேனியர்;

வடி இலங்கு மழுவை, மானை, வன்னி-தன்னை ஏந்து கையர் - கூர்மை பொருந்திய மழுவையும் மானையும் தீயையும் கையில் ஏந்தியவர்; (வடி கூர்மை); (வன்னி - தீ);

பொடி இலங்கு மார்பர் ஊர் ஆம் - மார்பில் திருநீற்றைப் பூசிய பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


5)

அறிவின் வண்ணர் நால்வர் கேட்க .. ஆல நீழல் அறமு ரைத்தார்

மறியை ஏந்து கையர் செய்யர் .. மாமி டற்றில் மையர் ஐயர்

வெறிகொள் கொன்றை விளங்கு கின்ற .. வேணி மீது மதியும் வைத்தார்

பொறிகொள் நாக நாணர் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


அறிவின் வண்ணர் - ஞானமே உரு ஆனவர்;

நால்வர் கேட்க ஆலநீழல் அறம் உரைத்தார் - சனகாதியர்கள் கேட்கக் கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.48.1 - "நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழல் மேவி அருமறை சொன்னதென்னே");

மறியை ஏந்து கையர் - மான்கன்றைக் கையில் ஏந்தியவர்; (மறி - கன்று);

செய்யர் - செம்மேனியர்; (செய் - செம்மை; சிவப்பு);

மா-மிடற்றில் மையர் - அழகிய கண்டத்தில் கருமையை ஏற்றவர்; (மிடறு - கண்டம்); (மை - கருமை);

ஐயர் - தலைவர்;

வெறிகொள் கொன்றை விளங்குகின்ற வேணிமீது மதியும் வைத்தார் - மணம் கமழும் கொன்றைமலர் திகழும் சடையின்மேல் சந்திரனையும் அணிந்தவர்; (வெறி - வாசனை); (வேணி - சடை);

பொறிகொள் நாக-நாணர் ஊர் ஆம் - புள்ளிகளை உடைய நாகத்தை அரைநாணாகக் கட்டிய பெருமானார் உறையும் பதி ஆவது; (பொறி - புள்ளி);

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


6)

நாத நாத அருள்க என்று .. நம்பி வந்த உம்பர் வாழ

ஓத நஞ்சை உண்ட கண்டர் .. ஓம்பு கின்ற தொண்டர் நெஞ்சர்

மாத ணைந்த வாம பாகர் .. மணங்க மழ்ந்த கொன்றை மௌவற்

போத ணிந்த சடையர் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


"நாத! நாத! அருள்க" என்று நம்பி வந்த உம்பர் வாழ ஓத நஞ்சை உண்ட கண்டர் - "நாதா! நாதா! காத்தருளாய்" என்று சரணடைந்த தேவர்கள் வாழும்படி கடல்விஷத்தை உண்ட நீலகண்டர்; (நம்புதல் நம்பிக்கை வைத்தல்); (உம்பர் - தேவர்);

ஓம்புகின்ற தொண்டர் நெஞ்சர் - விரும்பி வழிபடும் தொண்டர்களின் நெஞ்சில் உறைபவர்;

மாது அணைந்த வாம-பாகர் - உமையைத் தம் திருமேனியின் இடப்பக்கம் உடையவர்; (வாமம் - இடப்பக்கம்);

மணம் கமழ்ந்த கொன்றை மௌவல்-போது அணிந்த சடையர் ஊர் ஆம் - மணம் வீசும் கொன்றைமலரையும் முல்லை/மல்லிகை மலரையும் சடையில் அணிந்த பெருமானார் உறையும் பதி ஆவது; (மௌவல் - முல்லை; மல்லிகை);

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


7)

மலைம கட்கு நேயர் தூயர் .. மார்பில் நூலர் சடையி னுள்ளே

அலைம லிந்த ஆறு தாங்கி .. அரணம் மூன்றை நக்கெ ரித்தார்

தலைம லிந்த மாலை பூண்டார் .. தமிழ்வ ளர்த்த மதுரை தன்னில்

புலவ ரானார் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


மலைமகட்கு நேயர் - பார்வதிக்கு அன்புடையவர்; (மலைமகள் + கு = மலைமகட்கு);

தூயர் - புனிதர்;

மார்பில் நூலர் - மார்பில் பூணூல் தாங்கியவர்;

சடையினுள்ளே அலை மலிந்த ஆறு தாங்கி - சடையினுள் அலை மிகுந்த கங்கையைத் தாங்கியவர்; (தாங்கி - தாங்கியவர்; வினையெச்சமாகக் கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்);

அரணம் மூன்றை நக்கு எரித்தார் - முப்புரங்களைச் சிரித்து எரித்தவர்; (அரணம் - கோட்டை); (நகுதல் - சிரித்தல்)

தலை மலிந்த மாலை பூண்டார் - மண்டையோடுகளால் ஆன மாலையை அணிந்தவர்; (சுந்தரர் தேவாரம் - 7.4.1 - "தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே");

தமிழ் வளர்த்த மதுரை-தன்னில் புலவர் ஆனார் உறையும் ஊர் ஆம் - தமிழை வளர்த்த மதுரையில் தமிழ்ச்சங்கப் புலவர் ஆன பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


8)

உரமி லங்கு தோள்க ளாலே .. உயர்பொ ருப்பைப் பேர்த்த மூடன்

சிர(ம்)நெ ரித்த கயிலை நாதர் .. திருந்தி ஏத்தும் அரக்க னுக்கு

வரம ளித்த பரம வள்ளல் .. வரைவ ளைத்துக் கணைதொ டுத்துப்

புரமெ ரித்த ஒருவர் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


உரம் இலங்கு தோள்களாலே உயர்-பொருப்பைப் பேர்த்த மூடன் சிரம் நெரித்த கயிலை நாதர் - வலிமை மிக்க புஜங்களால் உயர்ந்த கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த அறிவிலியான தசமுகனின் சிரங்களை நசுக்கிய கயிலை-இறைவர்; (உரம் - வலிமை; பலம்); (பொருப்பு - மலை); (மூடன் - அறிவிலி);

திருந்தி ஏத்தும் அரக்கனுக்கு வரம் அளித்த பரம வள்ளல் - பின் மனம் திருந்திப் போற்றிய அந்த அரக்கனுக்கு மிகுந்த வரங்கள் (நீண்ட ஆயுள், சந்திரஹாஸம் என்ற வாள், இராவணன் என்ற பெயர் இவற்றையெல்லாம்) கொடுத்த பெருவள்ளல்;

வரை வளைத்துக் கணை தொடுத்துப் புரம் எரித்த ஒருவர் ஊர் ஆம் - மேருமலையை வில்லாக வளைத்து அம்பு தொடுத்து முப்புரங்களை எரித்த ஒப்பற்ற பெருமானார் உறையும் பதி ஆவது; (வரை - மலை); (ஒருவர் - ஒப்பற்றவர்);

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


9)

அலையின் மீது துயிலு(ம்) மாலும் .. அயனு(ம்) நேட நின்ற சோதி

இலையை இட்டு வாழ்த்தி னாலும் .. இன்ப வானம் ஏற்றும் ஈசர்

அலியும் ஆணும் பெண்ணும் ஆனார் .. அரவும் அக்கும் ஆர மாகப்

பொலியு(ம்) மார்பர் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


அலையின் மீது துயிலும் மாலும் அயனும் நேட நின்ற சோதி - பாற்கடல்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் தேடுமாறு உயர்ந்த சோதி; (நேடுதல் - தேடுதல்);

இலையை இட்டு வாழ்த்தினாலும் இன்ப வானம் ஏற்றும் ஈசர் - அடியவர்கள் இலையையே தூவி வழிபட்டாலும் அவர்களை இன்பம் மிக்க சிவலோகத்திற்கு உயர்த்தும் இறைவர்;

அலியும் ஆணும் பெண்ணும் ஆனார் - ஆண், பெண், அலி ஆனவர்; (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.5 - "ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள்");

அரவும் அக்கும் ஆரமாகப் பொலியு(ம்) மார்பர் - பாம்பையும் எலும்பையும் மாலையாக மார்பில் அணிந்தவர்; (அக்கு - எலும்பு); (ஆரம் - மாலை);

உறையும் ஊர் ஆம் - அந்தப் பெருமானார் உறையும் பதி ஆவது;

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


10)

கறுப்பை நெஞ்சிற் கரந்த வம்பர் .. கக்கு பொய்கள் கருத வேண்டா

வெறுப்பு கோபம் விட்ட நல்லார் .. விரும்பி ஏத்தப் பிறவி நோயை

அறுக்கும் ஈசர் பாவ நாசர் .. அன்பர் செய்த பிழைகள் எல்லாம்

பொறுக்கும் ஏந்தல் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


கறுப்பை நெஞ்சில் கரந்த வம்பர் கக்கு பொய்கள் கருத வேண்டா - வஞ்சத்தை நெஞ்சில் மறைத்து வைத்திருக்கும் வீணர்கள் கக்குகின்ற பொய்களை நீங்கள் மதிக்கவேண்டா; (கறுப்பு - குற்றம்; கறை); (கரத்தல் - ஒளித்தல்); (வம்பர் - வீணர்கள்; துஷ்டர்கள்);

வெறுப்பு கோபம் விட்ட நல்லார் விரும்பி ஏத்தப் பிறவிநோயை அறுக்கும் ஈசர் - விருப்பு வெறுப்பு சினம் இவற்றையெல்லாம் நீங்கிய நல்லவர்கள் விரும்பி வணங்க, அவர்களது பிறவிப்பிணியைத் தீர்க்கும் இறைவர்;

பாவநாசர் - பாவங்களை அழிப்பவர்;

அன்பர் செய்த பிழைகள் எல்லாம் பொறுக்கும் ஏந்தல் உறையும் ஊர் ஆம் - அடியவர்கள் செய்த பிழைகளைப் பொறுத்து அருளும் பெருமானார் உறையும் பதி ஆவது; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவர்);

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


11)

பன்னி நாளும் பரவு கின்ற .. பத்தர் தங்கள் பாவ(ம்) மாய்ப்பார்

வன்னி கொன்றை குரவ(ம்) மத்தம் .. மலர ணிந்த சடையி லங்கு

சென்னி மீது சீறு நாகம் .. திங்கள் ஒன்று சேர வைத்தார்

பொன்னின் வண்ணர் உறையும் ஊராம் .. பொழிலி லங்கு பூவ னூரே.


பன்னி நாளும் பரவுகின்ற பத்தர்-தங்கள் பாவம் மாய்ப்பார் - தினமும் போற்றிப் பாடுகின்ற பக்தர்களுடைய பாவங்களை அழிப்பவர்; (பன்னுதல் - பாடுதல்); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);

வன்னி கொன்றை குரவம் மத்தம் மலர் அணிந்த சடை இலங்கு சென்னி மீது - வன்னி இலை, கொன்றைமலர், குரவமலர், ஊமத்தமலர் இவற்றை அணிந்த சடை விளங்கும் திருமுடிமேல்;

சீறு நாகம் திங்கள் ஒன்று சேர வைத்தார் - சீறுகின்ற நாகப்பாம்பையும் சந்திரனையும் ஒன்றாகச் சேர்ந்து வாழவைத்தவர்;

பொன்னின் வண்ணர் உறையும் ஊர் ஆம் - பொன் போன்ற நிறம் உடைய திருமேனியரான பெருமானார் உறையும் பதி ஆவது; (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே");

பொழில் இலங்கு பூவனூரே - சோலை சூழ்ந்த பூவனூர்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா தான தானா தான தானா - என்ற சந்தம்.

  • ஒற்றைப்படைச் சீர்களில் - (அதாவது 1-3-5-7-ஆம் சீர்களில்) - தான என்பது தனன என்றும் வரலாம்.

  • தான – குறில் / குறில்+ஒற்று என்ற அமைப்பில் முடியும் மாச்சீர்;

  • தானா - தேமாச்சீர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment