Thursday, April 3, 2025

P.383 - ஆரூர் (திருவாரூர்) - எதிர்வெங் கரியின்

2017-03-25

P.383 - ஆரூர் (திருவாரூர்)

---------------------------------

(12 பாடல்கள்)

(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

எதிர்வெங் கரியின் னுரிமூடி

முதிரா முலையாள் ஒருபாகன்

மதில்கள் புடைசூழ் மணியாரூர்ப்

பதியெம் மிறையைத் துதிநாவே.


எதிர்-வெங்-கரியின் உரி மூடி - எதிர்த்துப் போர்செய்த கொடிய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவன்; (உரி - தோல்); (கரியின்னுரி - சந்தம் கருதி னகர ஒற்று விரித்தல் விகாரம்);

முதிரா முலையாள் ஒரு பாகன் - என்றும் இளமுலையை உடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; (முதிர்தல் - இளமைத்தன்மை நீங்கி முற்றுதல்); (நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - 11.39 - அடி - 5-6 - "முதிராத செப்பொத்த கொங்கைத் திருநுதலி");

மதில்கள் புடைசூழ் மணி ஆரூர்ப்-பதி எம் இறையைத் துதி நாவே - மதில்களால் சூழப்பெற்ற அழகிய திருவாரூர்த் தலத்தில் எழுந்தருளிய எம் இறைவனை, நாக்கே, நீ துதிப்பாயாக; (மணி - அழகு); (பதி - 1. தலம்; 2. தலைவன்); (ஆரூர்ப்-பதி - 1. திருவாரூர்த் தலம்; 2. திருவாரூர்ப் பெருமான்);


2)

தூநான் மறையின் பொருளானான்

ஊனார் தலையிற் பலிகொள்வான்

வானார் மதில்சூழ் மணியாரூர்

மானார் கரனைத் துதிநாவே.


தூ-நான்மறையின் பொருள் ஆனான் - தூய நால்வேதங்களின் பொருளாக விளங்குபவன்;

ஊன் ஆர் தலையில் பலிகொள்வான் - மாமிசம் பொருந்திய பிரமன் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன்; (பலி - பிச்சை);

வான் ஆர் மதில்சூழ் மணி ஆரூர் மான் ஆர் கரனைத் துதி நாவே - வானளாவிய மதில்களால் சூழப்பெற்ற அழகிய திருவாரூரில் உறைகின்றவனும் கையில் மானை ஏந்தியவனுமான சிவபெருமானை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (கரன் - கரத்தை உடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "நலம் மலிதரு கரன்");


3)

குழையோர் செவியன் சடைதன்னிற்

சுழலார் நதியன் சுடுநீற்றன்

மழையார் மிடறன் மணியாரூர்

உழையார் கரனைத் துதிநாவே.


குழை ஓர் செவியன் - ஒரு காதில் குழையை அணிந்தவன்;

சடைதன்னில் சுழல் ஆர் நதியன் - சடையில் சுழல்கள் மிக்க கங்கையை உடையவன்;

சுடுநீற்றன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன்;

மழை ஆர் மிடறன் - மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");

மணி ஆரூர் உழை ஆர் கரனைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்றவனும் கையில் மானை ஏந்தியவனுமான சிவபெருமானை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (உழை - மான்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "உழையார் கரவா");


4)

அழலும் துடியும் வடியார்ந்த

மழுவும் உடையான் மணிகண்டன்

மழவெள் விடையன் மணியாரூர்

அழகன் கழலைத் துதிநாவே.


அழலும் துடியும் வடி ஆர்ந்த மழுவும் உடையான் - கையில் தீயையும் உடுக்கையையும் கூர்மையான மழுவாயுதத்தையும் ஏந்தியவன்; (துடி - உடுக்கை என்ற பறைவகை); (வடி - கூர்மை); (மழுவும்முடையான் - மகர ஒற்று விரித்தல் விகாரம்);

மணிகண்டன் - நீலகண்டன்;

மழ-வெள்-விடையன் - இளைய வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடையவன்;

மணி ஆரூர் அழகன் கழலைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்றவனும் சுந்தரனுமான சிவபெருமான் திருவடியை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


5)

பதிகம் பலவும் பகர்வார்க்கு

நிதியம் தருவான் நதியோடு

மதியார் சடையன் மணியாரூர்

அதிபன் கழலைத் துதிநாவே.


பதிகம் பலவும் பகர்வார்க்கு - பல பதிகங்களைப் பாடித் தொழும் அடியவர்களுக்கு; (பகர்தல் - இங்கே, பாடுதல் என்ற பொருளில்); (சம்பந்தர் தேவாரம் - 1.88.9 - "பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே");

நிதியம் தருவான் - பொன்னும் பொருளும் அளிப்பவன்; (நிதியம் - நிதி; பொன்); (சம்பந்தர், அப்பர், சுந்தரர் வரலாறுகளைக் காண்க);

நதியோடு மதிர் சடையன் - கங்கையையும் சந்திரனையும் சடையில் அணிந்தவன்; கங்கை ஓடுகின்ற, திங்கள் பொருந்துகின்ற சடையை உடையவன் என்றும் பொருள்காணல் ஆம்; (நதி - ஆறு - கங்கை); ("நிதியம் தரு வான் நதி" என்று வினைத்தொகையாக இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம் - "பொன் தருகின்ற, கங்கையோடு"; வான் நதி - கங்கை);

அதிபன் - தலைவன்; (அப்பர் தேவாரம் - 5.32.9 – "பூந்துருத்திந் நகர்க்கதிபன்");

கழலைத் துதி நாவே - அந்தச் சிவபெருமான் திருவடியை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


6)

தலைவா எனவான் தொழுதேவன்

அலையார் சடைமேல் அரவத்தான்

மலையான் மருகன் மணியாரூர்

நிலையா னவனைத் துதிநாவே.


தலைவா என வான் தொழு தேவன் - "தலைவனே" என்று தேவர்கள் வழிபடுகின்ற தேவன்; (வான் - வானுலகம்; தேவர்கள்);

அலை ஆர் சடைமேல் அரவத்தான் - கங்கையைத் தாங்கிய சடைமேல் பாம்பை அணிந்தவன்;

மலையான் மருகன் - இமவானுக்கு மருமகன்; (அப்பர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய் நீயே");

மணி ஆரூர் நிலை ஆனவனைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் நிலைத்து உறைகின்ற சிவபெருமானை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


7)

களபம் மெனவெண் பொடிபூசி

ஒளிரும் புரிநூல் திகழ்மார்பன்

வளரும் பிறையான் மணியாரூர்

வளையார் கரனைத் துதிநாவே.


களபம் என வெண் பொடிபூசி - சந்தனச்-சாந்து போல வெண்திருநீற்றைப் பூசியவன்; (களபம் - கலவைச்சாந்து); (களபம்மென – மகர ஒற்று விரித்தல் விகாரம்);

ஒளிரும் புரிநூல் திகழ்மார்பன் - பிரகாசிக்கின்ற முப்புரிநூலை மார்பில் அணிந்தவன்;

வளரும் பிறையான் - இளம்பிறையை அணிந்தவன்;

மணி ஆரூர் வளை ஆர் கரனைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்றவனும், கையில் வளையல் அணிந்தவனுமான (அர்த்தநாரீஸ்வரனான) சிவபெருமானை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


8)

மயலால் திருமா மலைபேர்த்தான்

துயரே படவோர் விரல்வைத்தார்

வயலார் வளமார் மணியாரூர்ப்

பயில்வார் கழலைத் துதிநாவே.


மயலால் திரு-மா-மலை பேர்த்தான் துயரே பட ஓர் விரல் வைத்தார் - தன் வலிமையை எண்ணிச் செருக்கிக் கயிலைமலையைப் பேர்க்க முயன்ற இராவணன் மிக வருந்தும்படி ஒரு விரலை ஊன்றியவர்; (மயல் - அறியாமை); (பேர்த்தல் - இடத்தல்);

வயல் ஆர் வளம் ஆர் மணி ஆரூர்ப் பயில்வார் கழலைத் துதி நாவே - வயல்கள் நிறைந்த வளம் மிக்க அழகிய திருவாரூரில் உறைகின்ற சிவபெருமானாரின் திருவடியை, என் நாக்கே, நீ துதிப்பாயாக; (பயில்தல் - தங்குதல்);


9)

கரியான் பிரமன் தொழநின்ற

எரியான் எழுதா மறையோதி

வரியார் உரியான் மணியாரூர்ப்

பெரியான் கழலைத் துதிநாவே.


கரியான் பிரமன் தொழ நின்ற எரியான் - திருமாலும் பிரமனும் தொழும்படி ஓங்கிய தீப்பிழம்பானவன்;

எழுதா-மறை ஓதி - எழுதாத மறையான வேதங்களைப் பாடியருளியவன்;

வரி ஆர் உரியான் - வரிகள் பொருந்திய தோலை (புலித்தோலை) அணிந்தவன்; (உரி - தோல்);

மணி ஆரூர்ப் பெரியான் கழலைத் துதி நாவே - அழகிய திருவாரூரில் உறைகின்ற பெரியவனான சிவபெருமான் திருவடியை, என் நாக்கே, நீ துதிப்பாயாக;


10)

உய்யும் வழியொன் றறியார்சொல்

பொய்யைப் பொருளா மதியேன்மின்

மையார் மிடறன் மணியாரூர்ச்

செய்யான் தொழுவார்க் கருள்வானே.


உய்யும் வழியொன்று அறியார் சொல் பொய்யைப் பொருளா மதியேன்மின் - உய்யும் நெறியை அறியாதவர்கள் சொல்லும் பொய்களை நீங்கள் பொருளாக மதிக்கவேண்டா; (பொருளா - பொருளாக; பொருள் - தத்துவம்; மெய்ப்பொருள்); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

மை ஆர் மிடறன் - கண்டத்தில் கருமையை உடையவன்; (மை - கறுப்பு);

மணி ஆரூர்ச் செய்யான் தொழுவார்க்கு அருள்வானே - அழகிய திருவாரூரில் உறைகின்ற செம்மேனியனான சிவபெருமான் தொழும் அடியவர்களுக்கு அருள்செய்பவன்; அருள்வான்; (செய்யான் - செய்யவன் - சிவந்த நிறம் உடையவன்);


11)

தக்கன் தலையன் றறுதேவா

முக்கட் பரமா ஒருபங்கில்

மைக்கண் ணியினாய் மணியாரூர்ச்

சொக்கா எனவெந் துயர்வீடே.


தக்கன் தலை அன்று அறு தேவா - இகழ்ந்த தக்கனது தலையை முன்பு (அவன் அவவேள்வி செய்த நாளில்) அறுத்த தேவனே; (அறுத்தல் - அரிதல் - வெட்டுதல்); (திருவாசகம் - திருச்சாழல் - 8.12.5 - "தக்கனையும் எச்சனையும் தலையறுத்து");

முக்கட் பரமா - நெற்றிக்கண்ணுடைய பரமனே;

ஒரு பங்கில் மைக்கண்ணியினாய் - திருமேனியில் ஒரு பாகமாகக், கரிய மை அணிந்த கண்ணையுடைய உமையை உடையவனே; (மை - கருமை; கண்ணுக்கிடும் அஞ்சனம்);

மணி ஆரூர்ச் சொக்கா என வெந்-துயர் வீடே - அழகிய திருவாரூரில் உறைகின்ற அழகனே என்று தொழும் அடியவர்களுடைய கொடிய துன்பங்கள் எல்லாம் நீங்கும்; (சொக்கன் - அழகன்); (எனவெந்துயர் - 1. என வெம் துயர்; 2. என எம் துயர்); (வெம்மை - கடுமை); (வீடு - விடுதல்; நீக்கம்; முடிவு); (அப்பர் தேவாரம் - 6.87.2 - "பூதகணம் ஆட ஆடும் சொக்கன்காண்");


12)

மலைவெஞ் சிலையால் மதிலெய்தாய்

மலரம் பினனைப் பொடிசெய்தாய்

வலமார் விடையாய் மணியாரூர்த்

தலைவா எனவல் வினைசாய்வே.


மலை வெஞ்-சிலையால் மதில் எய்தாய் - மேருமலையைக் கொடிய வில்லாக ஏந்தி முப்புரங்களை எய்தவனே; (சிலை வில்); (மதில் - கோட்டை);

மலர்-அம்பினனைப் பொடி செய்தாய் - மலர்க்கணையை ஏவும் மன்மதனைச் சாம்பலாக்கியவனே;

வலம் ஆர் விடையாய் - வெற்றி பொருந்திய விடையை ஊர்தியாக உடையவனே; (வலம் - வலிமை; வெற்றி); (பெரியபுராணம் - "வென்றி விடையார் மதிச்சடையார்");

மணி ஆரூர்த் தலைவா என வல்வினை சாய்வே - அழகிய திருவாரூரில் உறைகின்ற தலைவனே" என்று தொழும் அடியவர்களுடைய வலிய வினைகள் எல்லாம் அழியும்; (சாய்தல் - அழிதல்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "கரக்கோயிலைத் தங் கையால் தொழுவார் வினை சாயுமே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment