Tuesday, April 1, 2025

P.374 - பாதிரிப்புலியூர் - கூடு வஞ்சகர்

2016-12-22

P.374 - பாதிரிப்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய் - வாய்பாடு;

முதற்சீர் ஈற்றில் குறில்/குறில்+ஒற்று)

(சம்பந்தர் தேவாரம் - 2.106.1 - "என்ன புண்ணியம் செய்தனை");


1)

கூடு வஞ்சகர் எவ்வழி அன்பரைக் கொல்வழி என்றெண்ணி

ஆடு வண்திரை ஆழியில் விழுத்தினும் அகத்தினில் அரன்நாமம்

பாடு நாவினுக் கரசருக் கருளிய பாதிரிப் புலியூரன்

தோடு காட்டிய செவியனின் தொண்டரைத் தொல்வினை தொடராவே.


கூடு வஞ்சகர் எவ்வழி அன்பரைக் கொல்-வழி என்று எண்ணி - மிகுந்த வஞ்சனை உடைய சமணர்கள் திரண்டு எப்படித் திருநாவுக்கரசரைக் கொல்வது என்று சிந்தித்து; (கூடுதல் - மிகுதல்; திரளுதல்);

ஆடு வண்-திரை ஆழியில் விழுத்தினும் - அலைகள் ஆடுகின்ற ஆழ்கடலில் தள்ளியபொழுதும்; (விழுத்துதல் - விழுத்தல் - விழச்செய்தல்);

அகத்தினில் அரன் நாமம் பாடு நாவினுக்கு அரசருக்கு அருளிய பாதிரிப் புலியூரன் - தம் உள்ளத்தில் ஹரன் திருநாமமான நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தைப் பாடிய திருநாவுக்கரசருக்கு அருள்செய்த, திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்; (* அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்" பதிக வரலாற்றைக் காண்க);

தோடு காட்டிய செவியனின் தொண்டரைத் தொல்வினை தொடராவே - ஒரு காதில் தோட்டினை அணிந்த ஈசன் அடியவர்களைப் பழவினைகள் தொடர்ந்துவந்து பற்றமாட்டா; (தொல் வினை - பழைய வினை);


2)

கரவு மிக்கவெஞ் சமணர்கள் ஒருபெருங் கல்லினொ டுடல்பூட்டித்

திரையில் ஆழ்த்தினும் செஞ்சடை அண்ணலின் திருப்பெயர் எழுத்தஞ்சே

பரவு நாவினுக் கரசருக் கருளிய பாதிரிப் புலியூரன்

இரவில் ஆடிடும் ஏந்தலின் தொண்டரை இருவினை எய்தாவே.


கரவு மிக்க வெஞ்-சமணர்கள் ஒரு பெரும்-கல்லினொடு உடல் பூட்டித் திரையில் ஆழ்த்தினும் - வஞ்சம் மிக்க கொடிய சமணர்கள் ஒரு பெரிய கல்லோடு திருநாவுக்கரசரின் மேனியைக் கட்டிக் கடலில் தள்ளியபொழுதும்; (கரவு - வஞ்சனை); (திரை - கடல்); (பூட்டுதல் - பிணைத்தல்; இறுகக்கட்டுதல்); (அப்பர் தேவாரம் - 5.72.7 - "கல்லினோடெனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்க");

செஞ்சடை அண்ணலின் திருப்பெயர் எழுத்தஞ்சே பரவு - சிவந்த சடையை உடைய பெருமானின் திருநாமத்து எழுத்து ஐந்தையும் துதித்த;

நாவினுக்கு அரசருக்கு அருளிய பாதிரிப் புலியூரன் - திருநாவுக்கரசருக்கு அருள்செய்த, திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

இரவில் ஆடிடும் ஏந்தலின் தொண்டரை இருவினை எய்தாவே - நள்ளிருளில் கூத்தாடும் தலைவன் அடியவர்களை வல்வினை அடையமாட்டா;


3)

திணிந்த நெஞ்சுடை அமணர்கள் கொன்றிடத் திரையிடை எறிந்தாலும்

துணிந்த நெஞ்சொடு தூயவெண் ணீறணி சுந்தரன் துணைத்தாளே

பணிந்த நாவினுக் கரசருக் கருளிய பாதிரிப் புலியூரன்

மணந்த மாதொரு பாகனின் தொண்டரை வல்வினை வருத்தாவே.


திணிந்த நெஞ்சுடை அமணர்கள் கொன்றிடத் திரையிடை எறிந்தாலும் - கல்-நெஞ்சம் உடைய சமணர்கள் திருநாவுக்கரசரைக் கொல்வதற்காக அவரைக் கடலில் வீசியபொழுதும்; (திணிதல் - இறுகுதல்); (அமணர் - சமணர்); (திரை - கடல்);

துணிந்த நெஞ்சொடு தூய வெண்-நீறு அணி சுந்தரன் துணைத்-தாளே பணிந்த - கலக்கம் இல்லாத மனத்தால் தூய திருநீற்றைப் பூசும் அழகனான சிவபெருமானது காக்கின்ற இரு-திருவடிகளையே வணங்கிய; (துணை - இரண்டு; உதவி; காப்பு);

நாவினுக்கு அரசருக்கு அருளிய பாதிரிப் புலியூரன் - திருநாவுக்கரசருக்கு அருள்செய்த, திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

மணந்த மாதொரு பாகனின் தொண்டரை வல்வினை வருத்தாவே - உமாதேவியை ஒரு பாகமாக உடையவன் அடியவர்களை வல்வினைகள் துன்புறுத்தமாட்டா; (மணந்த மாது - மனைவி - உமாதேவி); (வருத்துதல் - வருந்தச்செய்தல்);


4)

குற்ற நெஞ்சினர் கடலிடை வீசினும் கொள்கையில் நிலைநின்றே

ஒற்றை வெள்விடை ஊர்தியன் பேர்தனை உறுதுணை எனநெஞ்சால்

பற்று நாவினுக் கரசருக் கருளிய பாதிரிப் புலியூரன்

வற்றல் ஓட்டினை ஏந்தியின் தொண்டரை வல்வினை வருத்தாவே.


குற்ற நெஞ்சினர் கடலிடை வீசினும் - குற்றம் மிக்க மனத்தை உடைய சமணர்கள் திருநாவுக்கரசரைக் கடலில் வீசியபொழுதும்;

கொள்கையில் நிலைநின்றே - தம் கொள்கையில் உறுதியாக இருந்து;

ஒற்றை வெள்விடை ஊர்தியன் பேர்தனை உறுதுணை என நெஞ்சால் பற்று - ஒப்பற்ற வெள்ளை ஏற்றை வாகனமாக உடைய பெருமானது திருநாமத்தை உற்ற துணை என்று மனத்தால் பற்றிய;

நாவினுக்கு அரசருக்கு அருளிய பாதிரிப் புலியூரன் - திருநாவுக்கரசருக்கு அருள்செய்த, திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

வற்றல் ஓட்டினை ஏந்தியின் தொண்டரை வல்வினை வருத்தாவே - கையில் வாடிய மண்டையோட்டை ஏந்திய சிவபெருமான் அடியவர்களை வல்வினைகள் துன்புறுத்தமாட்டா; (ஓடு - மண்டையோடு); (வருத்துதல் - வருந்தச்செய்தல்);


5)

உன்னி வஞ்சகர் கல்லினைப் பூட்டியோர் உததியில் எறிந்தக்கால்

கன்னல் தேனென இனிமையைப் பயந்திடும் கண்ணுதல் திருநாமம்

பன்னு நாவினுக் கரசருக் கருளிய பாதிரிப் புலியூரன்

சென்னி மேற்பிறை சூடியின் தொண்டரைத் தீவினை சேராவே.


உன்னி வஞ்சகர் கல்லினைப் பூட்டிர் உததியில் எறிந்தக்கால் - வஞ்சனையுடைய சமணர்கள் திருநாவுக்கரசரைக் கொல்லும் உபாயத்தை எண்ணி ஒரு கல்லோடு அவரைக் கட்டிக் கடலில் எறிந்தபொழுது; (உன்னுதல் - எண்ணுதல்); (ஓர் - அசை); (உததி - கடல்);

கன்னல் தேன் என இனிமையைப் பயந்திடும் கண்ணுதல் திருநாமம் - கரும்பும் தேனும் போல இனிமையைத் தரும் நெற்றிக்கண்ணன் திருநாமத்தை; (கன்னல் - கரும்பு); (பயத்தல் - அளித்தல்); (பன்னுதல் - பாடுதல்; புகழ்தல்; சொல்லுதல்);

பன்னு நாவினுக்கு அரசருக்கு அருளிய பாதிரிப் புலியூரன் - பாடிய திருநாவுக்கரசருக்கு அருள்செய்த, திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

சென்னிமேல் பிறைசூடியின் தொண்டரைத் தீவினை சேராவே - திருமுடிமேல் சந்திரனைத் தரித்த சிவபெருமான் அடியவர்களைப் பாவங்கள் வந்தடையமாட்டா;


6)

வாசம் ஆர்மலர் வாளிகள் ஐந்துடை மன்மதன் ஆகத்தை

நாசம் ஆக்கிய கண்ணமர் நெற்றியன் நற்றவ மாணிக்காப்

பாசம் ஏந்திய கூற்றினைக் காய்ந்தவன் பாதிரிப் புலியூரன்

ஈசன் ஆர்கழல் ஏத்திடு தொண்டரை இருவினை எய்தாவே.


வாசம் ஆர் மலர் வாளிகள் ஐந்துடை மன்மதன் ஆகத்தை நாசம் ஆக்கிய - மணம் மிக்க ஐந்து பூக்களை அம்புகளாகக் கொண்ட காமனது உடலை எரித்து அழித்த;

கண்மர் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

நற்றவ மாணிக்காப் பாசம் ஏந்திய கூற்றினைக் காய்ந்தவன் - நல்ல தவமுனிவரான மார்க்கண்டேயருக்காகப் பாசம் ஏந்திவந்த காலனை உதைத்தவன்; (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); (மாணிக்கா - மாணிக்காக – கடைக்குறை);

பாதிரிப் புலியூரன் - திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

ஈசன் ஆர்-கழல் ஏத்திடு தொண்டரை இருவினை எய்தாவே - இறைவனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபடும் அடியவர்களைப் பாவங்கள் வந்தடையமாட்டா; (ஆர்த்தல் - ஒலித்தல்);


7)

கொன்றை கூவிளம் சூடிய வேணியன் கொடியிடை உமைகாண

மன்றில் ஆடியொர் வேட்டுவ னாயடர் வனத்திடை வில்லேந்திப்

பன்றி எய்தொரு பாண்டவற் கருளிய பாதிரிப் புலியூரன்

வென்றி வெள்விடை ஊர்தியன் தொண்டரை வெவ்வினை மேவாவே.


கொன்றை கூவிளம் சூடிய வேணியன் - சடையில் கொன்றைமலரையும் வில்வத்தையும் சூடியவன்; (கூவிளம் - வில்வம்); (வேணி - சடை);

கொடியிடை உமை காண மன்றில் ஆடி - கொடி போல் இடையை உடைய உமாதேவி காணும்படி அம்பலத்தில் ஆடுகின்றவன்; (ஆடி - ஆடுபவன்); (சுந்தரர் தேவாரம் - 7.69.2 - "கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா");

ஒர் வேட்டுவனாய் அடர் வனத்திடை வில் ஏந்திப் - ஒரு வேடன் கோலத்தில் அடர்ந்த காட்டில் வில்லை ஏந்தி; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);

பன்றி எய்து ஒரு பாண்டவற்கு அருளிய பாதிரிப் புலியூரன் - ஒரு பன்றியை எய்து, பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்கு அருள்செய்தவன், திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்; (பாண்டவற்கு = பாண்டவன்+கு - பாண்டவனுக்கு);

வென்றி வெள்விடை ஊர்தியன் தொண்டரை வெவ்வினை மேவாவே - வெற்றியுடைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன் அடியவர்களைப் பாவங்கள் வந்தடையமாட்டா; (வென்றி - வெற்றி); (வெவ்வினை - கொடிய வினை); (மேவுதல் - அடைதல்; பொருந்துதல்);


8)

மயலி னால்மலை பேர்த்தவன் வலிகெட மலரடி விரலொன்றைக்

கயிலை மேற்சிறி தூன்றிய இறையவன் கங்குலில் திருநட்டம்

பயில வல்லவன் பாலன நீற்றினன் பாதிரிப் புலியூரன்

புயலின் நேர்மிட றுடையவன் தொண்டரைப் பொருவினை நண்ணாவே.


மயலினால் மலை பேர்த்தவன் வலி கெட - ஆணவத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது வலிமை அழியும்படி; (மயல் - அறியாமை; ஆணவம்); (வலி - வலிமை);

மலரடி விரல் ஒன்றைக் கயிலைமேல் சிறிது ஊன்றிய இறையவன் - தன் தாமரைப்பாதத்து விரல் ஒன்றைக் கயிலைமலைமேல் சற்றே ஊன்றிய இறைவன்;

கங்குலில் திருநட்டம் பயில வல்லவன் - இருளில் திருக்கூத்து இயற்றுபவன்; (கங்குல் - இரவு); (திருப்பல்லாண்டு - 9.29.9 - "நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே");

பாலன நீற்றினன் - பால் போன்ற வெண்திருநீற்றைப் பூசியவன்; (பாலன - 1. பால் அன்ன - போல் போன்ற வெண்மையான; 2. காக்கின்ற); (பாலனம் - பாதுகாப்பு); (பாலன நீறு - பூசியவரைக் காக்கும் திருநீறு); (திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - திருநீறு - 10.6.10.1 - "கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை");

பாதிரிப் புலியூரன் - திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

புயலின் நேர் மிடறு உடையவன் தொண்டரைப் பொருவினை நண்ணாவே - மேகம் போல் கருமை திகழும் கண்டம் உடையவன் அடியவர்களைப் பாவங்கள் வந்தடையமாட்டா; (புயல் - மேகம்); (நேர்தல் - ஒத்தல்); (பொருதல் - போர்செய்தல்; தாக்குதல்); (நண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்; பொருந்துதல்);


9)

நாதன் ஆரென நீடிய வாதுசெய் நளிர்மலர் உறைகின்ற

வேதன் நாரணன் என்றிவர் நேடிய வெவ்வழல் அன்போடு

பாதம் ஏத்திடும் பத்தருக் கெளியவன் பாதிரிப் புலியூரன்

போத கத்துரி போர்த்தவன் தொண்டரைப் பொருவினை நண்ணாவே.


"நாதன் ஆர்" என நீடிய வாதுசெய் - "யார் தலைவன்" என்று மிகவும் வாதிட்ட;

நளிர்-மலர் உறைகின்ற வேதன் நாரணன் என்றிவர் நேடிய வெவ்வழல் - குளிர்ந்த தாமரைமேல் உறைகின்ற பிரமன் திருமால் என்ற இவ்விருவரும் தேடிய பெருஞ்சோதி; (நளிர்தல் - குளிர்தல்); (என்றிவர் - என்ற இவர்; என்ற என்பதில் ஈற்று அகரம் தொகுத்தல் ஆயிற்று); (அழல் - நெருப்பு);

அன்போடு பாதம் ஏத்திடும் பத்தருக்கு எளியவன் - பக்தியோடு திருவடியை வழிபடுவார்களால் எளிதில் அடையப்படுபவன்;

பாதிரிப் புலியூரன் - திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

போதகத்து உரி போர்த்தவன் தொண்டரைப் பொருவினை நண்ணாவே - யானைத்தோலைப் போர்த்த ஈசன் அடியவர்களைப் பாவங்கள் வந்தடையமாட்டா; (போதகம் - யானை); (உரி - தோல்); (பொருதல் - போர்செய்தல்; தாக்குதல்); (நண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.5.8 - "போதகத்துரி போர்த்தவன் பூந்தராய் காதலித்தான்");


10)

கறையை நெஞ்சினில் வைத்தவர் கைதவர் கத்திடும் சொல்நீங்கும்

இறைவ காத்தருள் என்றிமை யோர்தொழ இரங்கியவ் வெயில்மூன்றும்

பறைய நக்கவன் பாம்பரை ஆர்த்தவன் பாதிரிப் புலியூரன்

மறையை ஓதிய நாவினன் தொண்டரை வல்வினை வருத்தாவே.


கறையை நெஞ்சினில் வைத்தவர் கைதவர் கத்திடும் சொல் நீங்கும் - குற்றம் நிறைந்த நெஞ்சம் உடையவர்களும் வஞ்சகர்களும் கத்துகின்ற சொற்களை நீங்கள் நீங்குங்கள் (மதிக்கவேண்டா); (கறை - மாசு; குற்றம்); (கைதவர் - வஞ்சகர்);

"இறைவ காத்து அருள்" என்று இமையோர் தொழ, இரங்கி - "இறைவனே! எம்மைக் காவாய்" என்று தேவர்கள் தொழவும், அவர்களுக்கு இரங்கி;

அவ்-யில் மூன்றும் பறைய நக்கவன் - அந்த முப்புரங்களும் அழியும்படி சிரித்தவன்; (எயில் - கோட்டை); (பறைதல் - அழிதல்); (நகுதல் - சிரித்தல்);

பாம்பு அரை ஆர்த்தவன் - நாகத்தை அரைநாணாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

பாதிரிப் புலியூரன் - திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

மறையை ஓதிய நாவினன் தொண்டரை வல்வினை வருத்தாவே - வேதங்களைப் பாடிய அருளிய சிவபெருமான் அடியவர்களை வல்வினைகள் துன்புறுத்தமாட்டா; (வருத்துதல் - வருந்தச்செய்தல்);


11)

நாகப் பள்ளிகொள் அரிக்கொரு சக்கரம் நல்கிய மாதேவன்

மேகம் போல்திகழ் மணிமிட றுடையவன் மெல்லிடை மலைமங்கை

பாகம் ஆயவன் பாய்புலித் தோலினன் பாதிரிப் புலியூரன்

வேக மால்விடை ஊர்தியன் தொண்டரை வெவ்வினை மேவாவே.


நாகப் பள்ளிகொள் அரிக்கு ஒரு சக்கரம் நல்கிய மாதேவன் - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த மகாதேவன்; (அப்பர் தேவாரம் - 4.4.10 - "நாகப் பள்ளிகொள்வான் உள்ளத்தானும்")

மேகம் போல் திகழ் மணிமிடறு உடையவன் - மேகம் போல் விளங்குகின்ற அழகிய கரிய கண்டத்தை உடையவன்; (மணி - அழகு; நீலமணி);

மெல்லிடை மலைமங்கை பாகம் ஆயவன் - சிற்றிடை உடையவளும் மலையரசன் மகளுமான உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்;

பாய்-புலித் தோலினன் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

பாதிரிப் புலியூரன் - திருப்பாதிரிப்புலியூரில் உறைகின்ற சிவபெருமான்;

வேக-மால்-விடை ஊர்தியன் தொண்டரை வெவ்வினை மேவாவே - விரைவும் சினமும் உடைய பெரிய எருதை வாகனமாக உடையவன் அடியவர்களைப் பாவங்கள் வந்தடையமாட்டா; (வேகம் - விரைவு; கோபம்); (வெவ்வினை - கொடிய வினை); (மேவுதல் - அடைதல்; பொருந்துதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment