2016-12-15
P.370 - சண்பைநகர் (சீகாழி) - (வண்ணவிருத்தம்)
---------------------------------
(வண்ணவிருத்தம்;
தந்ததன .. தனதான)
(செங்கலச முலையார்பால் - திருப்புகழ் - சிதம்பரம்)
முற்குறிப்பு: புணர்ச்சியில் "ம்" கெடும் இடங்களில் படிப்போர் வசதி கருதி "(ம்)" என்று குறிக்கப்பட்டுள்ளது.
1)
சந்ததமும் இகவாழ்வில் .. சஞ்சலம தடையாமல்
சந்த(ம்)மலி தமிழ்பாடும் .. தகவுதனை அருளாயே
கந்த(ம்)மலி மலரோடு .. கங்கைதிகழ் முடிமீது
சந்திரனை அணிவோனே .. சண்பையுறை பெருமானே.
சந்ததமும் இகவாழ்வில் சஞ்சலமது அடையாமல் - எப்பொழுதும் இவ்வுலக வாழ்வில் மனக்கலக்கம் அடையாமல்; (சந்ததம் - எப்பொழுதும்); (சஞ்சலமது - சஞ்சலம்; அது - பகுதிப்பொருள்விகுதி);
சந்தம் மலி தமிழ் பாடும் தகவுதனை அருளாயே - சந்த இசை மிக்க தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடும் குணத்தை எனக்கு அருள்வாயாக; (தகவு - தகுதி; குணம்);
கந்தம் மலி மலரோடு கங்கை திகழ் முடிமீது சந்திரனை அணிவோனே - திருமுடிமேல் வாசமலர்களையும் கங்கையையும் சந்திரனையும் அணிந்தவனே;
சண்பை உறை பெருமானே - சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே; (சம்பந்தர் தேவாரம் - 1.63.9 - "சண்பை அமர்ந்தவனே");
2)
சங்கைமிகு நிலைமாறிச் .. சந்ததமு(ம்) மகிழ்வாக
எங்கு(ம்)நிறை பெருமானே .. இங்குவரம் அருளாயே
அங்கையினில் மழுவாளா .. அன்பர்தொழும் ஒருநாதா
சங்கமணி இறையோனே .. சண்பையுறை பெருமானே.
சங்கை மிகு நிலை மாறிச், சந்ததமும் மகிழ்வு ஆக - அச்சம் மிகுந்த இந்த நிலை மாறி, எப்பொழுதும் இன்பமே நிலைக்க;
எங்கும் நிறை பெருமானே, இங்கு வரம் அருளாயே - எங்கும் நிறைந்த பெருமானே, இங்கு எனக்கு வரம் அருள்வாயாக; (இங்கு - இவ்விடம்);
அங்கையினில் மழுவாளா - கையில் மழுவை ஏந்தியவனே;
அன்பர் தொழும் ஒரு நாதா - பக்தர்கள் வழிபடும் ஒப்பற்ற தலைவனே;
சங்கம் அணி இறையோனே - முன் கையில் வளையல் அணிந்தவனே; (சங்கம் - வளையல்); (இறை - முன்-கை);
சண்பை உறை பெருமானே - சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே.
3)
பண்புநலம் இலனாகிப் .. பண்டைவினை அதனாலே
கண்குழிதல் அடையாமுன் .. கண்டுதொழ அருளாயே
வெண்பொடியை அணிமார்பா .. வெஞ்சினவெள் எருதேறீ
தண்பொழிலில் அறையோவாச் .. சண்பையுறை பெருமானே.
பண்பு நலம் இலன் ஆகிப் - நல்ல குணங்கள் இல்லாதவன் ஆகி;
பண்டைவினை அதனாலே கண்குழிதல் அடையாமுன் - பழைய வினைகளால் வருத்தம் அடைவதன்முன்;
கண்டு தொழ அருளாயே - உன்னைத் தரிசித்து வழிபட அருள்வாயாக;
வெண்பொடியை அணி மார்பா - மார்பில் திருநீற்றை அணிந்தவனே;
வெஞ்சின வெள்-எருது ஏறீ - சினம் மிக்க வெள்ளை எருதினை வாகனமாக உடையவனே;
தண்-பொழிலில் அறை ஓவாச் சண்பை உறை பெருமானே - குளிர்ந்த சோலைகளில் (வண்டுகள் செய்யும்) ஒலி எப்போதும் இருக்கின்ற, சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே.
4)
பண்டியுண வதுநாடிப் .. பைங்கழலை நினையாமல்
உண்டுழலு(ம்) நிலைமாறி .. உய்ந்துவிட அருளாயே
வண்டமரு(ம்) மலரோதி .. மங்கையிட(ம்) மகிழ்வோனே
தண்டலையில் அளியாரும் .. சண்பையுறை பெருமானே.
பண்டி உணவது நாடிப் - வயிற்றுக்கு உணவையே தேடி; (பண்டி - வயிறு);
பைங்கழலை நினையாமல் - உன் அழகிய கழல் அணிந்த திருவடியை எண்ணாமல்;
உண்டு உழலும் நிலை மாறி உய்ந்துவிட அருளாயே - உண்டு (உடல் வளர்த்துக், குறிக்கோள் இன்றி) உலகில் உழலும் இந்த நிலை மாறி, நான் உய்யும்படி அருள்வாயாக;
வண்டு அமரும் மலர்-ஓதி மங்கை இடம் மகிழ்வோனே - வண்டுகள் விரும்பும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனே; (ஓதி - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");
தண்டலையில் அளி ஆரும் சண்பை உறை பெருமானே - சோலையில் வண்டுகள் நிறையும் சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே. (தண்டலை - சோலை); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; உண்ணுதல்);
5)
வஞ்ச(ம்)மலி புலனாலே .. வந்தடையும் வினையாலே
அஞ்சிமெலி அடியேனை .. அஞ்சலென அருளாயே
நஞ்சையுணும் அருளாளா .. நம்பியடை மதிசூடித்
தஞ்சமருள் சடையானே .. சண்பையுறை பெருமானே.
வஞ்சம் மலி புலனாலே - வஞ்சிக்கின்ற ஐம்புலன்களாலும்;
வந்து அடையும் வினையாலே - வந்து அடைகின்ற பழவினைகளாலும்;
அஞ்சி மெலி அடியேனை - அச்சமுற்று வருந்துகின்ற என்னை;
அஞ்சல் என அருளாயே - அஞ்சாதே என்று அபயமளித்து அருள்வாயாக;
நஞ்சை உணும் அருளாளா - விடத்தை உண்ட கருணாமூர்த்தியே;
நம்பி அடை மதி சூடித் தஞ்சம் அருள் சடையானே - உன்னைச் சரணடைந்த சந்திரனை அணிந்து காத்த சடையுடையவனே;
சண்பை உறை பெருமானே - சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே;
6)
அங்கமணி உனையோதும் .. அன்புதனை அருளாயே
வெங்கரியின் உரிமூடீ .. மென்குழலி உமைகூறா
பொங்கரவ மணிமார்பா .. புங்கநதி நிலையாகத்
தங்குசடை உடையானே .. சண்பையுறை பெருமானே.
அங்கம் அணி உனை ஓதும் அன்புதனை அருளாயே - எலும்பைப் பூணும் உன்னைப் போற்றிப் பாடும் பக்தியை அருள்வாயாக; (அங்கம் - எலும்பு);
வெங்கரியின் உரி மூடீ - கொடிய யானையின் தோலைப் போர்த்தவனே; (வெம்மை - கடுமை); (உரி - தோல்);
மென்-குழலி உமைகூறா - மென்மையான கூந்தலை உடைய உமையை ஒரு கூறாக உடையவனே;
பொங்கு அரவமணி மார்பா - சீறும் பாம்பை அணிந்த அழகிய பவளம் போன்ற மார்பினனே; (அரவமணி - 1. அரவம்+அணி / 2. அரவ+மணி); (மணி - அழகு; பவளம்);
புங்க-நதி நிலையாகத் தங்கு சடை உடையானே - தூய கங்கை தங்குகின்ற சடையை உடையவனே; (புங்கம் - தூய்மை; சிறந்தது; உயர்ச்சி);
சண்பை உறை பெருமானே - சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே;
7)
பண்கெழுமு தமிழ்பாடிப் .. பந்தமற அருளாயே
கண்குலவு நுதலானே .. கங்குல்நடம் இடுவோனே
எண்குணமும் உடையானே .. என்பையணி விடையானே
தண்கழனி புடைசூழும் .. சண்பையுறை பெருமானே.
பண் கெழுமு தமிழ் பாடிப் பந்தம் அற அருளாயே - பண் பொருந்திய தேவாரம் முதலியன பாடி வழிபட்டுப் பந்தங்கள் எல்லாம் நீங்குவதற்கு அருள்வாயாக; (கெழுமுதல் - பொருந்துதல்); (காரைக்கால் அம்மையார் - மூத்த திருப்பதிகம் - 11.2.9 - "துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்");
கண் குலவு நுதலானே - நெற்றிக்கண்ணனே; (குலவுதல் - விளங்குதல்); (நுதல் - நெற்றி);
கங்குல் நடம் இடுவோனே - இரவில் திருநடம் செய்பவனே; (கங்குனடம் - கங்குல் + நடம்); (கங்குல் - இரவு);
எண்குணமும் உடையானே - எட்டுக்குணங்கள் உடையவனே; (அப்பர் தேவாரம் - 6.16.4 - "எண்குணத்தார் எண்ணாயிரவர் போலும்" - எண்குணம் - தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு. இயல்பாகவே பாசம் இன்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம், என்பன);
என்பை அணி விடையானே - எலும்பை அணிந்த இடபவாகனனே; (என்பு - எலும்பு);
தண்-கழனி புடைசூழும் சண்பை உறை பெருமானே - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே; (கழனி - வயல்);
8)
நெஞ்சுதனில் மிகுநேயம் .. நின்றுதொழ அருளாயே
விஞ்சுபுகழ் மலைவீசு .. மிண்டனழ அடரீசா
துஞ்சிருளில் நடமாடீ .. துன்பமுறு மதிசூடித்
தஞ்சமருள் சடையானே .. சண்பையுறை பெருமானே.
நெஞ்சுதனில் மிகு-நேயம் நின்று தொழ அருளாயே - என் நெஞ்சில் மிகுந்த அன்பு நிலைத்து உன்னை வழிபட அருள்வாயாக;
விஞ்சு புகழ் மலை வீசு மிண்டன் அழ அடர் ஈசா - மிகுந்த புகழையுடைய கயிலைமலையை வீச முற்பட்ட வலிமையும் அறியாமையும் உடைய கல்நெஞ்சனான இராவணன் அழும்படி அவனை நசுக்கிய ஈசனே; (மிண்டன் - 1. திண்ணியோன். 2. அறிவில்லாதவன்); (அடர்த்தல் - நசுக்குதல்);
துஞ்சு-இருளில் நடம் ஆடீ - நள்ளிருளில் கூத்தாடுபவனே; (துஞ்சுதல் - உறங்குதல்; இறத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.81.11 - "துஞ்சிருளில் நின்றுநட மாடி");
துன்பம்-உறு மதி சூடித் தஞ்சம் அருள் சடையானே - வருந்திய சந்திரனை அணிந்து அடைக்கலம் தந்த சடையை உடையவனே;
சண்பை உறை பெருமானே - சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே;
9)
பண்டிருவர் அறியாத .. பண்பவுனை அடியேனும்
தெண்டனிடும் அறிவீயாய் .. செங்கனக மலைபோல்வாய்
வெண்டலையில் இடுமூணாய் .. வென்றிவிடை உடையானே
தண்டமிழை மகிழ்காதா .. சண்பையுறை பெருமானே.
பண்டு இருவர் அறியாத பண்ப - முன்பு பிரமன் விஷ்ணு இருவரும் அறியாத தன்மையை உடையவனே; (பண்டு - முற்காலம்);
உனை அடியேனும் தெண்டனிடும் அறிவு ஈயாய் - உன்னை நானும் வணங்கும்படி எனக்கு அறிவைத் தந்து அருள்வாயாக; (தெண்டனிடுதல் - தண்டனிடுதல் - நிலத்தில் விழுந்து வணங்குதல்);
செங்கனக-மலை போல்வாய் - செம்பொன்-மலை போன்றவனே; (அப்பர் தேவாரம் - 6.32.2 - "செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி");
வெண்-தலையில் இடும் ஊணாய் - பிரமனது மண்டையோட்டில் இடும் உணவை ஏற்பவனே; (ஊண் - உணவு); (அப்பர் தேவாரம் - 6.5.3 - "சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி");
வென்றி-விடை உடையானே - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவனே; (வென்றி - வெற்றி);
தண்-தமிழை மகிழ் காதா - குளிர்ந்த தமிழாகிய தேவாரம் திருவாசகம் முதலிய பாடல்களை விரும்பிச் செவிமடுப்பவனே;
சண்பை உறை பெருமானே - சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே;
10)
வெந்தபொடி அணியாத .. மிண்டரவர் அறியானே
இந்துபுனை உனையோதும் .. என்றனிடர் களையாயே
அந்தகனை உதைகாலா .. அந்தரர்கள் தொழுதேவா
சந்தைதனை மொழிநாவா .. சண்பையுறை பெருமானே.
வெந்த-பொடி அணியாத மிண்டர்-அவர் அறியானே - திருநீற்றைப் பூசாத கல்நெஞ்சர்களால் அறியப்படாதவனே; (மிண்டர் - கல்நெஞ்சர்);
இந்து புனை உனை ஓதும் என்றன் இடர் களையாயே - சந்திரனை அணிந்த உன்னைப் பாடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
அந்தகனை உதை காலா - இயமனை உதைத்தவனே; காலகாலா; (அந்தகன் - யமன்);
அந்தரர்கள் தொழு தேவா - தேவர்கள் வணங்கும் தேவனே; (அந்தரர் - வானவர்; தேவர்);
சந்தைதனை மொழி நாவா - வேதத்தைப் பாடிய திருநாவினனே; (சந்தை - சந்தஸ் - வேதம்); (மொழிதல் - சொல்லுதல்);
சண்பை உறை பெருமானே - சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே;
11)
வந்துவினை நலியாமல் .. வம்புமலர் அடிபாடிச்
சந்ததமும் அடியார்கள் .. சங்கமுற அருளாயே
அந்தகனை அயில்வேலால் .. அன்றுசெறு பெருவீரா
சந்திநிறம் உடையானே .. சண்பையுறை பெருமானே.
வந்து வினை நலியாமல் - வினை வந்தடைந்து என்னை வருத்தாதபடி;
வம்பு-மலர் அடி பாடிச் - வாசனை மிக்க புதுமலர் போன்ற திருவடிகளைப் பாடி; (வம்பு - வாசனை; புதுமை); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.1 - "நாராயணன் அறியா நாண்மலர்த்தாள்");
சந்ததமும் அடியார்கள் சங்கம் உற அருளாயே - எப்பொழுதும் அடியார்கள் திருக்கூட்டத்தில் இருக்க அருள்வாயாக; (சங்கம் - கூட்டம்; சபை); (உறுதல் - இருத்தல்; சார்ந்திருத்தல்; பொருந்துதல்);
அந்தகனை அயில்-வேலால் அன்று செறு பெரு-வீரா - அந்தகாசுரனைக் கூரிய சூலத்தால் அன்று அழித்த பெரிய வீரனே; (அந்தகன் - அந்தகாசுரன்); (அயில் - கூர்மை); (செறுதல் - அழித்தல்);
சந்தி-நிறம் உடையானே - சந்தியாகால வானம் போல் செவ்வண்ணம் உடையவனே; (அப்பர் தேவாரம் - 5.28.1 - "சந்தி வண்ணத்தராய்");
சண்பை உறை பெருமானே - சண்பை என்ற பெயருடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment