Tuesday, April 1, 2025

P.368 - அண்ணாமலை (திருவண்ணாமலை) - போரேற்றினன் அதளாடையன்

2016-12-12

P.368 - அண்ணாமலை (திருவண்ணாமலை)

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

போரேற்றினன் அதளாடையன் புரிபுன்சடை தன்னில்

நீரேற்றவன் செஞ்ஞாயிறு நிகர்மேனியன் அரவத்

தாரேற்றவன் அயன்மாலிடைத் தழலாயெழு தலைவன்

பாரேத்திடும் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


போர்-ஏற்றினன் - போர் செய்யவல்ல இடபத்தை ஊர்தியாக உடையவன்;

அதள்-ஆடையன் - தோலை ஆடையாகப் பூண்டவன்;

புரி-புன்சடை தன்னில் நீர் ஏற்றவன் - முறுக்கிய செஞ்சடையில் கங்கையைத் தரித்தவன்;

செஞ்ஞாயிறு நிகர் மேனியன் - இளஞ்சூரியன் போல் செம்மேனி உடையவன்;

அரவத்-தார் ஏற்றவன் - பாம்பை மாலையாக அணிந்தவன்;

அயன் மாலிடைத் தழலாய் எழு தலைவன் - பிரமன் திருமால் இவர்கள் இடையே ஒளித்தூணாகி உயர்ந்த தலைவன்;

பார் ஏத்திடும் அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - உலகத்தினர் போற்றும் திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


2)

நிதமேத்திய மாணிக்கிடர் நீக்கிக்கொடுங் கூற்றை

உதைகீர்த்தியன் உண்ணாமுலை உமையாள்மண வாளன்

மதமாக்கரி உரிபோர்த்தவன் வையத்தினர் வந்து

பதமேத்திடும் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


நிதம் ஏத்திய மாணிக்கு இடர் நீக்கிக் கொடுங்கூற்றை உதை கீர்த்தியன் - தினமும் போற்றிய மார்க்கண்டேயருக்குத் துன்பத்தை நீக்கி அருளிக், கொடிய காலனை உதைத்த புகழ் உடையவன்;

உண்ணாமுலை உமையாள் மணவாளன் - உண்ணாமுலையாள் என்ற திருநாமம் உடைய உமைக்குக் கணவன்;

மத-மாக்-கரி உரி போர்த்தவன் - மதம் உடைய பெரிய யானையின் தோலைப் போர்த்தவன்; ("மாகரி" என்பது எதுகைநோக்கி "மாக்கரி" என்று க் மிக்கு வந்தது; விரித்தல் விகாரம்);

வையத்தினர் வந்து பதம் ஏத்திடும் அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - உலகத்தினர் வந்து திருவடியைப் போற்றும் திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


3)

துணிமாமதி சூடுஞ்சடைத் துணைவாவெனச் சுரர்கள்

அணியாயடி பரவித்தொழ அவர்கட்கருள் செய்த

மணியார்மிட றுடையான்மழ விடையான்திரு மார்பில்

பணிமாலையன் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


"துணி-மா-மதி சூடும் சடைத் துணைவா" எனச் - "அழகிய நிலாத்துண்டத்தைச் சூடும் சடையை உடைய துணைவனே" என்று;

சுரர்கள் அணியாய் அடிபரவித் தொழ அவர்கட்கு அருள் செய்த மணி ஆர் மிடறு உடையான் - தேவர்கள் திரள் ஆகித் திருவடியை வழிபடவும் அவர்களுக்கு இரங்கி அருளிய நீலகண்டன்;

மழ-விடையான் - இள-எருதை வாகனமாக உடையவன்;

திருமார்பில் பணி-மாலையன் - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவன்; (பணி - நாகம்);

அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


4)

குரவம்பட அரவம்பிறை குளிர்வானதி கொன்றை

விரவுஞ்சடை விகிர்தன்தனி விடையன்கடல் நடுவே

அரவின்மிசைத் துயில்நாரணன் அயனென்றிவர் நேடிப்

பரவுஞ்சுடர் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


குரவம், பட-அரவம், பிறை, குளிர் வானதி, கொன்றை விரவும் சடை விகிர்தன் - குராமலர், படமுடைய நாகம், சந்திரன், குளிர்ந்த கங்கை, கொன்றைமலர் இவையெல்லாம் பொருந்தும் சடையை உடையவன், விகிர்தன் என்ற திருநாமம் உடையவன்;

தனி விடையன் - ஒப்பற்ற இடப வாகனன்;

கடல் நடுவே அரவின்மிசைத் துயில் நாரணன் அயன் என்றிவர் நேடிப் பரவும் சுடர் - பாற்கடலில் பாம்பின்மேல் துயிலும் திருமால், பிரமன் என்ற இவர்கள் தேடித் துதித்த ஜோதி; (என்றிவர் - "என்ற இவர்" - என்ற என்பதில் ஈற்று அகரம் தொகுத்தல் ஆயிற்று);

அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


5)

நடமாடிட இடுகாட்டினை நாடும்கண நாதன்

மடமாதொரு பங்கானவன் மார்பிற்புரி நூலன்

இடர்தீரென இமையோர்தொழ எயில்மூன்றையும் எய்த

படர்வேணியன் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


நடம் ஆடிட இடுகாட்டினை நாடும் கணநாதன் - திருநடம் செய்வதற்குச் சுடுகாட்டினை விரும்பியவன், பூதகணங்கள் தலைவன்; (இடுகாடு - சுடுகாடு);

மடமாது ஒரு பங்கு ஆனவன் - அழகிய உமையை ஒரு பங்காக உடையவன்; (மடம் - அழகு);

மார்பில் புரி-நூலன் - மார்பில் முப்புரிநூலை அணிந்தவன்;

"இடர் தீர்" என இமையோர் தொழ, எயில் மூன்றையும் எய்த - "துன்பத்தை தீர்த்து அருளாய்" என்று தேவர்கள் இறைஞ்ச, இரங்கி முப்புரங்களையும் ஒரு கணையால் எய்த;

படர்-வேணியன் அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - படரும் சடையை உடைய திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


6)

இறைவிக்கொரு பாகந்தரும் எம்மான்சடைக் கங்கை

சிறைவைத்தவன் மழுமான்மறி தீயேந்திய கையன்

நறைமிக்கநன் மலர்கொண்டடி நாளுந்தொழப் பாவம்

பறைமுக்கணன் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


இறைவிக்கு ஒரு பாகம் தரும் எம்மான் - உமைக்குத் தன் திருமேனியில் ஒரு பாகத்தைத் தந்த எம்பெருமான்;

சடைக்-கங்கை சிறை வைத்தவன் - சடையில் கங்கையை அடைத்தவன்;

மழு, மான்மறி, தீ ஏந்திய கையன் - கையில் மழுவையும், மான்கன்றையும், நெருப்பையும் ஏந்தியவன்;

நறை மிக்க நன்மலர்கொண்டு அடி நாளும் தொழப் பாவம் பறை முக்கணன் - வாசம் மிகுந்த சிறந்த பூக்களால் திருவடியைத் தினமும் தொழுதால், பாவங்களை அழிக்கும் நெற்றிக்கண்ணன்; (பறைத்தல் - அழித்தல்);

அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


7)

நாகத்தினை அரையார்த்தவன் நஞ்சத்தினை உண்டு

மேகத்தினை மிடறேற்றவன் விரையார்கணை வேள்தன்

ஆகத்தினை நீறாக்கிய ஐயன்மட மாதோர்

பாகத்தினன் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


நாகத்தினை அரை ஆர்த்தவன் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

நஞ்சத்தினை உண்டு மேகத்தினை மிடறு ஏற்றவன் - விடத்தை உண்டு மேகம்போல் கரிய நிறத்தைக் கண்டத்தில் ஏற்றவன்;

விரை ஆர் கணை வேள்தன் ஆகத்தினை நீறு ஆக்கிய ஐயன் - வாசமலர்களை அம்பாக உடைய மன்மதனின் உடலைச் சாம்பல் ஆக்கியவன்; (விரை - வாசனை); (வேள் -மன்மதன்); (ஆகம் - உடம்பு);

மட-மாது ஓர் பாகத்தினன் - அழகிய உமையை ஒரு பாகமாக உடையவன்;

அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


8)

மடவாளவள் அஞ்சும்படி மலைபேர்த்தவன் வாதைப்

படவேநெரி செய்தின்னிசை பாடப்பெயர் தந்தான்

விடையேறிய வேந்தன்சுடு வெண்ணீற்றினன் மழுவாட்

படையேந்திய அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


மடவாள்-அவள் அஞ்சும்படி மலை பேர்த்தவன் வாதைப்படவே நெரிசெய்து - உமை அஞ்சுமாறு கயிலைமலையைப் பேர்த்த தசமுகன் துன்பப்படும்படி (ஒரு விரலை ஊன்றி) அவனை நசுக்கி;

இன்னிசை பாடப் பெயர் தந்தான் - பின் அவன் இசைபாடி வணங்கவும் இரங்கி அவனுக்கு அருள்செய்து இராவணன் (அழுதவன்) என்ற பெயரைத் தந்தவன்;

(சுந்தரர் தேவாரம் - 7.68.9 - "இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை எடுப்ப, ஆங்கு இமவான்மகள் அஞ்சத், துலங்கு நீள்முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து, இன்னிசை கேட்டு, வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை");

விடை ஏறிய வேந்தன் - இடபத்தை ஊர்தியாக உடைய அரசன்;

சுடு-வெண்ணீற்றினன் - வெந்த வெண்திருநீற்றினைப் பூசியவன்;

மழுவாட்படை ஏந்திய அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - மழுவாயுதத்தை ஏந்திய திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்; (படை - ஆயுதம்);


9)

எரியுந்தழல் புரைமேனியன் எங்கும்பலி ஏற்கத்

திரியுங்குணம் உடையான்மலை சிலையாவெயில் எய்தான்

அரிபங்கயன் அறியாச்சுடர் அன்பாற்றொழு வார்க்குப்

பரியுஞ்சிவன் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


எரியும் தழல் புரை மேனியன் - எரிகின்ற நெருப்புப் போன்ற திருமேனி உடையவன்; (புரைதல் - ஒத்தல்);

எங்கும் பலி ஏற்கத் திரியும் குணம் உடையான் - எவ்விடமும் பிச்சை ஏற்கத் திரிகின்றவன்;

மலை சிலையா எயில் எய்தான் - மேருமலையே வில் ஆக, முப்புரங்களை எய்தவன்; (சிலை - வில்; சிலையா - சிலையாக; கடைக்குறை விகாரம்);

அரி பங்கயன் அறியாச் சுடர் - திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் அறியாத ஜோதி;

அன்பால் தொழுவார்க்குப் பரியும் சிவன் - பக்தியோடு வழிபடுவார்களுக்கு இரங்கும் சிவபெருமான்;

அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


10)

நீலத்தினை உள்வைத்துழல் நிட்டூரருக் கருளான்

சூலத்தினன் ஒளியார்மதித் துண்டத்தினைச் சூடும்

கோலத்தினன் நாமத்தினைக் கூறித்தொழு வாரைப்

பாலித்திடும் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


நீலத்தினை உள் வைத்து உழல் நிட்டூரருக்கு அருளான் - கறுப்பினை மனத்தில் தாங்கி உழல்கின்ற கொடியவர்களுக்கு அருளாதவன்; (நீலம் - கறுப்பு; விஷம்); (நிட்டூரர் - நிஷ்டூரர் - கொடியவர்);

சூலத்தினன் - சூலபாணி;

ஒளி ஆர் மதித்-துண்டத்தினைச் சூடும் கோலத்தினன் - ஒளி பொருந்திய பிறையை அணியும் கோலம் உடையவன்;

நாமத்தினைக் கூறித் தொழுவாரைப் பாலித்திடும் - திருநாமத்தைச் சொல்லி இறைஞ்சும் அன்பர்களைக் காத்து அருள்கின்ற;

அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


11)

கத்திப்பொரும் அந்தன்தனைக் கதிர்மூவிலை வேலால்

குத்திச்செறு வீரன்குழை ஒருகாதணி குழகன்

மத்தத்தினை முடிமேற்புனை மன்னன்கழல் மறவாப்

பத்தர்க்கருள் அண்ணாமலைப் பரனைப்பணி வோமே.


கத்திப் பொரும் அந்தன்தனைக் கதிர்மூவிலை வேலால் குத்திச் செறு வீரன் - ஆரவாரத்தோடு போர்செய்யும் அந்தகாசுரனை ஒளியுடைய சூலத்தால் குத்தி அழித்த வீரன்; (பொருதல் - போர்செய்தல்); (அந்தன் - அந்தகாசுரன்); (செறுதல் - அழித்தல்; அடக்குதல்);

குழை ஒரு காது அணி குழகன் - குழையை ஒரு காதில் அணிகின்ற இளைஞன்/அழகன்; (ஒரு காதில் குழையும், இன்னொரு காதில் தோடும் அணிந்தவன்);

மத்தத்தினை முடிமேற்புனை மன்னன் - ஊமத்த-மலரைத் தலைமேல் அணியும் அரசன்; (மத்தம் - ஊமத்தை);

கழல் மறவாப் பத்தர்க்கு அருள் அண்ணாமலைப் பரனைப் பணிவோமே - மறவாமல் தினமும் திருவடியைப் போற்றும் அன்பர்களுக்கு அருள்கின்ற திருவண்ணாமலைப் பரமனை நாம் வணங்குவோம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment