Monday, March 31, 2025

P.367 - அம்பர் மாகாளம் (கோயில் திருமாளம்) - இறைவா காத்தருளாய்

2016-12-10

P.367 - அம்பர் மாகாளம் (கோயில் திருமாளம்)

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.40.1 - "எம்பிரான் எனக்கமுதம் ஆவானும்")


1)

இறைவாகாத் தருளாயென் றிமையோர்கள் அடிபரவக்

கறையேற்ற மிடற்றானைக் கண்ணிலங்கு நுதலானை

மறையானை அணிஅம்பர் மாகாளம் மேயானை

நறையார்பூக் கொண்டேத்த நமையிடர்கள் நண்ணாவே.


"இறைவா! காத்து அருளாய்" என்று இமையோர்கள் அடி பரவக் கறை ஏற்ற மிடற்றானைக் - "இறைவனே! காவாய்" என்று தேவர்கள் திருவடியைப் போற்றி வழிபடவும், (இரங்கி விடம் உண்டு) கண்டத்தில் கறையை ஏற்றவனை; (மிடறு - கண்டம்);

கண் இலங்கு நுதலானை - நெற்றிக்கண்ணனை; (நுதல் - நெற்றி);

மறையானை - வேதசொரூபனை; வேதங்களை அருளியவனை;

அணி அம்பர் மாகாளம் மேயானை - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

நறை ஆர் பூக்கொண்டு ஏத்த நமை இடர்கள் நண்ணாவே - வாசம் மிக்க பூக்களால் வழிபட்டால் நம்மை இடர்கள் அடையமாட்டா;


2)

பணியூரும் முடியானைப் பவளம்போல் மேனியனைப்

பிணியேதும் இல்லாத பெருமானைக் கண்டத்தில்

மணியானை அணிஅம்பர் மாகாளம் மேயானைப்

பணிவாரைப் பழவினைகள் பற்றாமல் அற்றிடுமே.


பணி ஊரும் முடியானைப் - நாகம் ஊர்கின்ற திருமுடி உடையவனை; (பணி - நாகப்பாம்பு);

பவளம் போல் மேனியனைப் - பவளம் போலச் செம்மேனி உடையவனை;

பிணி ஏதும் இல்லாத பெருமானைக் - பந்தங்கள் இல்லாத பெருமானை;

கண்டத்தில் மணியானை - நீலகண்டனை;

அணி அம்பர் மாகாளம் மேயானைப் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

பணிவாரைப் பழவினைகள் பற்றாமல் அற்றிடுமே - வணங்கும் அடியவர்களை அவர்களது பழைய வினைகள் பற்றமாட்டா; அவை அழியும்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்); (திருவாசகம் - அச்சோப்பதிகம் - 8.51.1 - "பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்");


3)

சிலையாக வரையேந்தித் திரிபுரங்கள் எய்தானைத்

தலைமீது தலைமாலை தரித்தானைக் கயிலாய

மலையானை அணிஅம்பர் மாகாளம் மேயானைத்

தலையாரக் கும்பிடுவார் தமைவினைகள் சாராவே.


சிலையாக வரை ஏந்தித் திரிபுரங்கள் எய்தானைத் - வில்லாக மலையை ஏந்தி முப்புரங்களை எய்தவனை; (சிலை - வில்); (வரை - மலை);

தலைமீது தலைமாலை தரித்தானைக் - தலைக்குத் தலைமாலை அணிந்தவனை;

கயிலாய மலையானை - கயிலைமலைமேல் வீற்றிருப்பவனை;

அணி அம்பர் மாகாளம் மேயானைத் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

தலையாரக் கும்பிடுவார்தமை வினைகள் சாராவே - தலையால் வணங்கும் அடியவர்களை வினைகள் அணுகமாட்டா;


4)

இளைத்திமையோர் இணையடியை இறைஞ்சவிடம் உண்டகருங்

களத்தினனைப் புரமெரிக்கக் கனவரையை வில்லாக

வளைத்தவனை அணிஅம்பர் மாகாளம் மேயானை

உளத்தினில்வைத் தடிதொழுதால் ஒல்லைவினை மாய்ந்தறுமே;


இளைத்து இமையோர் இணையடியை இறைஞ்ச, விடம் உண்ட கருங் களத்தினனைப் - வருந்தித் தேவர்கள் இரு-திருவடிகளை வழிபடவும், இரங்கி நஞ்சை உண்ட நீலகண்டனை; (இளைத்தல் - வாடுதல்; வருந்துதல்); (இமையோர் - தேவர்); (களம் - கண்டம்; கழுத்து);

புரம் எரிக்கக் கன-வரையை வில்லாக வளைத்தவனை - முப்புரங்களை எரிப்பதற்காகப் பெரிய மலையை வில்லாக வளைத்தவனை; (கனம் - பெருமை; பாரம்); (வரை - மலை);

அணி அம்பர் மாகாளம் மேயானை - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

உளத்தினில் வைத்து அடிதொழுதால் ஒல்லை வினை மாய்ந்து அறுமே - உள்ளத்தில் இருத்தித் திருவடியை வழிபட்டால் வினைகள் சீக்கிரம் அழிந்தொழியும்; (ஒல்லை - சீக்கிரம்; விரைவு);


5)

மாயானைப் பிறவானை வார்சடைமேற் பிறையானைத்

தூயானை ஆறங்கம் தொன்மறைகள் நாலோதும்

வாயானை அணிஅம்பர் மாகாளம் மேயானை

மாயானை உரியானை வாழ்த்தவினை மாய்ந்தறுமே.


மாயானைப் பிறவானை - இறப்பும் பிறப்பும் இல்லாதவனை; (மாய்தல் - அழிதல்; சாதல்);

வார்-சடைமேல் பிறையானைத் - நீண்ட சடையின்மேல் சந்திரனை அணிந்தவனை;

தூயானை - தூயவனை;

ஆறு-அங்கம் தொல்மறைகள் நாலு ஓதும் வாயானை - நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் திருவாயால் ஓதியவனை;

அணி அம்பர் மாகாளம் மேயானை - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

மா-யானை உரியானை வாழ்த்த, வினை மாய்ந்து அறுமே - பெரிய யானையின் தோலைப் போர்த்தவனை வாழ்த்தினால், நம் வினை அழிந்தொழியும்; (உரி - தோல்);


6)

மதியாத தக்கன்செய் மாவேள்வி தகர்த்தானை

உதியானை மரியானை உரகஞ்சேர் சடைமீது

மதியானை அணிஅம்பர் மாகாளம் மேயானைத்

துதிபாடித் தொழுவார்தம் தொல்லைவினை மாய்ந்தறுமே.


மதியாத தக்கன் செய் மா வேள்வி தகர்த்தானை - அவமதித்த தக்கன் செய்த பெரிய யாகத்தை அழித்தவனை;

உதியானை மரியானை - பிறப்பும் இறப்பும் இல்லாதவனை; (உதித்தல் - பிறத்தல்); (கந்தர் அநுபூதி - 18 - "உதியா, மரியா, உணரா, மறவா");

உரகம் சேர் சடைமீது மதியானை - பாம்பு இருக்கும் சடையின்மேல் திங்களை அணிந்தவனை; (உரகம் - பாம்பு);

அணி அம்பர் மாகாளம் மேயானைத் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

துதி பாடித் தொழுவார்தம் தொல்லை-வினை மாய்ந்து அறுமே - தோத்திரம் செய்து வழிபடும் அன்பர்களுடைய பழைய வினைகள் அழிந்தொழியும்; (தொல்லை - பழைய); (திருவாசகம் திருவுந்தியார் - 8.14.13 - "தொல்லை வினைகெட உந்தீபற");


7)

கூன்பிறையைச் சூடிதனைக் கூரிலங்கு மூவிலைவேல்

மான்மழுவாள் தரித்தானை மார்பில்வெண் ணூலானை

வான்பொழில்சூழ் அணிஅம்பர் மாகாளம் மேயானைத்

தேன்மலரால் தொழுவார்தம் தீவினைகள் தேய்ந்தறுமே.


கூன்-பிறையைச் சூடிதனைக் - வளைந்த பிறையைச் சூடியவனை; (கூன் - வளைவு); (சூடி - சூடியவன்);

கூர் இலங்கு மூவிலைவேல் மான் மழுவாள் தரித்தானை - கூர்மை பொருந்திய திரிசூலம், மான், மழுப்படை இவற்றைக் கையில் ஏந்தியவனை;

மார்பில் வெண்ணூலானை - மார்பில் வெண்மையான பூணூல் அணிந்தவனை;

வான்-பொழில் சூழ் அணி அம்பர் மாகாளம் மேயானைத் - அழகிய சோலை சூழ்ந்த அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

தேன்மலரால் தொழுவார்தம் தீவினைகள் தேய்ந்து அறுமே - வாசமலர்களால் வழிபடும் அன்பர்களது பாவங்கள் எல்லாம் தீர்ந்தொழியும்;


8)

குணங்குறியில் தசமுகனைக் குன்றின்கீழ் நெரித்தானைக்

கணங்களிசை ஆர்க்கஇடு கானில்நடம் புரிந்தானை

மணங்கமழும் அணிஅம்பர் மாகாளம் மேயானை

வணங்கியெழும் அடியார்தம் வல்வினைகள் மாய்ந்தறுமே.


குணம் குறில் தசமுகனைக் குன்றின்கீழ் நெரித்தானைக் - நற்குணமோ நல்ல குறிக்கோளோ இல்லாத இராவணனைக் கயிலைமலையின் கீழே நசுக்கியவனை; (நெரித்தல் - நசுக்குதல்);

கணங்கள் இசை ஆர்க்க இடுகானில் நடம் புரிந்தானை - பூதகணங்கள் இசைபாடச் சுடுகாட்டில் திருநடம் செய்பவனை; (ஆர்த்தல் - ஒலித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.3 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி");

மணம் கமழும் அணி அம்பர் மாகாளம் மேயானை - (மலர்ச்சோலைகள் சூழ) வாசனை கமழும் அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

வணங்கி எழும் அடியார்தம் வல்வினைகள் மாய்ந்து அறுமே - வணங்கித் துயிலெழும் பக்தர்களது வலிய வினைகள் அழிந்தொழியும்; (சம்பந்தர் தேவாரம் - 2.18.7 - "வழுவாள் பெருமான் கழல்வாழ்க எனா எழுவாள்");


9)

முன்னயனும் மாலுமடி முடிகாணாச் சோதியனைச்

சென்னிமிசைக் கொன்றையனைச் சேவேறிப் பலிக்குழலும்

மன்னவனை அணிஅம்பர் மாகாளம் மேயானைப்

பன்னியெழும் பத்தரவர் பண்டைவினை பற்றறுமே.


முன் அயனும் மாலும் அடிமுடி காணாச் சோதியனைச் - முன்னொரு காலத்தில் பிரமனும் திருமாலும் தன் அடியையும் முடியையும் தேடிக் காணா இயலாதபடி எல்லையின்றி நின்ற ஜோதி-வடிவனை;

சென்னிமிசைக் கொன்றையனைச் - திருமுடிமேல் கொன்றைமலரை அணிந்தவனை;

சே ஏறிப் பலிக்கு உழலும் மன்னவனை - இடபத்தின்மேல் ஏறிப் பிச்சைக்குத் திரியும் தலைவனை; (சே - எருது); (பலி - பிச்சை);

அணி அம்பர் மாகாளம் மேயானைப் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

பன்னி எழும் பத்தர் அவர் பண்டைவினை பற்று அறுமே - போற்றியவண்ணம் துயிலெழும் பக்தர்களது பழைய வினைகள் அழியும்; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);


10)

பொய்யான நெறிபுகழும் புரட்டருரை மதியேன்மின்

மெய்யானை விண்ணவர்கள் வேண்டவிடம் உண்மிடற்றில்

மையானை அணிஅம்பர் மாகாளம் மேயானைச்

செய்யானைத் தொழுவார்க்குத் தீதில்லை திருவாமே.


பொய்யான நெறி புகழும் புரட்டர் உரை மதியேன்மின் - பொய்ம்மார்க்கங்களைப் புகழ்கின்ற வஞ்சகர்களின் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;

மெய்யானை - மெய்ப்பொருளாக உள்ளவனை;

விண்ணவர்கள் வேண்ட விடம் உண் மிடற்றில் மையானை - தேவர்கள் வேண்டவும் அவர்களுக்கு இரங்கி விடம் உண்ட கண்டத்தில் கருநிறம் உடையவனை; (மை - கறை; இருள்; கருநிறம்);

அணி அம்பர் மாகாளம் மேயானைச் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

செய்யானைத் தொழுவார்க்குத் தீது இல்லை, திரு ஆமே - செம்மேனியானை வணங்கும் பக்தர்களுக்குத் தீமை இல்லை, செல்வங்கள் எல்லாம் கிட்டும்; (செய்யான் - சிவந்த நிறம் உடையவன்);


11)

களபமென நீறணிந்த கண்ணுதலைச் செஞ்சடைமேல்

வளர்மதியம் தரித்தானை மன்மதனை எரித்தானை

வளவயல்சூழ் அணிஅம்பர் மாகாளம் மேயானை

உளமகிழ்ந்து தொழுவாரை உயர்வானில் வைப்பானே.


களபம் என நீறு அணிந்த கண்ணுதலைச் - சந்தனம் போலத் திருநீற்றைப் பூசிய நெற்றிக்கண்ணனை; (களபம் - கலவைச்சாந்து);

செஞ்சடைமேல் வளர்-மதியம் தரித்தானை - சிவந்த சடையின்மேல் வளர்கின்ற பிறையைத் அணிந்தவனை; (தரித்தல் - அணிதல்; தாங்குதல்);

மன்மதனை எரித்தானை - காமனை எரித்தவனை;

வள-வயல் சூழ் அணி அம்பர் மாகாளம் மேயானை - வளம் மிக்க வயல் சூழ்ந்த அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

உளம் மகிழ்ந்து தொழுவாரை உயர்வானில் வைப்பானே - உள்ளம் குளிர்ந்து வழிபடும் அன்பர்களை அப்பெருமான் சிவலோகத்தில் சேர்த்தருள்வான்; ("அப்பெருமான்" என்ற சொல்லை வருவித்துப் பொருள்கொள்க);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment