Thursday, March 27, 2025

P.363 - கச்சி மேற்றளி - மெய்யனார் மேனிமேல்

2016-11-24

P.363 - கச்சி மேற்றளி

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(வடமொழி யாப்பில் - ஸ்ரக்விணீ (sragviNI - स्रग्विणी ) என்ற பெயருடைய சந்தம்)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமார் அகிலொடு")


1)

மெய்யனார் மேனிமேல் வெண்பொடி பூசினார்

தையலோர் பங்கினார் தண்ணதிச் சடையனார்

கையிலோர் மானினார் கச்சிமேற் றளியனார்

செய்யதாள் ஏத்தநம் தீவினை சிந்துமே.


மெய்யனார் - மெய்ப்பொருளாக உள்ளவர்;

மேனிமேல் வெண்பொடி பூசினார் - திருநீற்றைப் பூசிய திருமேனி உடையவர்;

தையல் ஓர் பங்கினார் - உமைபங்கர்;

தண்-நதிச் சடையனார் - சடையில் குளிர்ந்த கங்கையை உடையவர்;

கையில் ஓர் மானினார் - ஒரு மானைக் கையில் ஏந்தியவர்;

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

செய்ய-தாள் ஏத்த நம் தீவினை சிந்துமே - அப்பெருமானாரின் சிவந்த திருவடிகளை வழிபட்டால் நமது பாவங்கள் அழியும்; (செய்ய - சிவந்த); (சிந்துதல் - அழிதல்);


2)

கொடிமிசை ஏற்றனார் கொல்புலித் தோலினார்

முடிமிசைக் கோளரா முளைமதி கூவிளம்

கடிகமழ் கொன்றையார் கச்சிமேற் றளியனார்

அடியிணை போற்றநம் அருவினை அழியுமே.


கொடிமிசை ஏற்றனார் - இடபச்-சின்னம் பொறித்த கொடியை உடையவர்; (அப்பர் தேவாரம்- 5.57.6 - "கோளிலி ஏற்றனார் அடியே தொழுதேத்துமே");

கொல்புலித் தோலினார் - கொல்லும் இயல்புடைய புலியின் தோலை அணிந்தவர்;

முடிமிசைக் கோள்-அரா, முளை-மதி, கூவிளம், கடி கமழ் கொன்றையார் - திருமுடிமேல் கொடிய பாம்பு, இளம்பிறை, வில்வம், வாசனை கமழும் கொன்றைமலர் இவற்றையெல்லாம் சூடியவர்;

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

அடியிணை போற்ற நம் அருவினை அழியுமே - அப்பெருமானாரின் இரு-திருவடிகளை வழிபட்டால் நமது பாவங்கள் அழியும்;


3)

தாரணி மார்பில்நூல் தாங்கிய தலைவனார்

வாரணி மென்முலை மங்கையோர் பங்கனார்

காரணி கண்டனார் கச்சிமேற் றளியனார்

சீரது செப்பநம் தீவினை தீருமே.


தார் அணி மார்பில் நூல் தாங்கிய தலைவனார் - மாலையை அணிந்த மார்பில் பூணூலைத் தரித்த தலைவர்;

வார் அணி மென்முலை மங்கை ஓர் பங்கனார் - கச்சு அணிந்த தனங்களையுடைய உமாதேவியை ஒரு கூறாக உடையவர்;

கார் அணி கண்டனார் - நீலகண்டர்; (கார் - கருமை);

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

சீர்அது செப்ப நம் தீவினை தீருமே - அப்பெருமானாரின் புகழைச் சொல்லி வழிபட்டால் நமது பாவங்கள் தீரும்;


4)

நண்ணலர் முப்புரம் நாசமா கும்படி

திண்ணிய மேருவைச் சிலையென ஏந்தினார்

கண்ணமர் நெற்றியார் கச்சிமேற் றளியனார்

ஒண்கழல் உள்கநம் உறுவினை ஓயுமே.


நண்ணலர் முப்புரம் நாசம் ஆகும்படி - பகைவர்களது முப்புரங்களும் அழியும்படி; (நண்ணலர் - பகைவர்);

திண்ணிய மேருவைச் சிலையென ஏந்தினார் - பெரிய வலிய மேருமலையை வில்லாக ஏந்தியவர்; (திண்மை - வலிமை; உறுதி);

கண் அமர் நெற்றியார் - நெற்றிக்கண் உடையவர்;

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

ஒண்-கழல் உள்க நம் உறுவினை ஓயுமே - அப்பெருமானாரின் ஒளிபொருந்திய திருவடியை எண்ணினால், நமது பாவங்கள் தீரும்; (ஒண்மை - ஒளி); (உள்குதல் - நினைதல்; எண்ணுதல்); (உறு - மிகுந்த; மிக்க);


5)

தூமதிக் கண்ணியார் சுரிகுழல் மாதராள்

வாமமோர் பங்கினார் வாளிகள் ஐந்துடைக்

காமனைக் காய்ந்தவர் கச்சிமேற் றளியனார்

நாமம்நா வாற்சொல நம்வினை நாசமே.


தூ-மதிக் கண்ணியார் - தூய சந்திரனைச் சடையில் கண்ணிமாலை போல அணிந்தவர்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

சுர-குழல் மாதராள் வாமம் ஓர் பங்கினார் - சுருண்ட கூந்தலை உடைய உமாதேவியாரை இடப்பக்கம் ஒரு கூறாகக் கொண்டவர்; (சுரிதல் - சுருள்தல்); (மாதராள் - பெண்); (வாமம் - இடப்பக்கம்);

வாளிகள் ஐந்துடைக் காமனைக் காய்ந்தவர் - ஐந்து அம்புகளை உடைய மன்மதனைச் சுட்டெரித்தவர்; (வாளி - அம்பு);

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

நாமம் நாவால் சொல நம் வினை நாசமே - அப்பெருமானாரின் திருப்பெயரை நாக்கினால் சொன்னால், நமது பாவங்கள் அழியும்;


6)

தன்னிகர் அற்றவர் தருக்கிய தக்கன்றன்

சென்னியை வெட்டினார் செஞ்சுடர் வண்ணனார்

கன்னியோர் பங்கினார் கச்சிமேற் றளியனார்

பொன்னடி போற்றநம் புன்மைகள் தீருமே.


தன் நிகர் அற்றவர் - எவ்வித ஒப்பும் இல்லாதவர்;

தருக்கிய தக்கன்தன் சென்னியை வெட்டினார் - ஆணவத்தால் ஈசரை அவமதித்து வேள்வி செய்த தக்கனுடைய தலையை வெட்டியவர்;

செஞ்சுடர் வண்ணனார் - செந்தீப் போன்ற நிறம் உடைய மேனியர்;

கன்னிர் பங்கினார் - உமையொருபங்கர்; (அப்பர் தேவாரம் - 4.42.3 - "கன்னியை ஒருபால் வைத்து");

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

பொன்னடி போற்ற நம் புன்மைகள் தீருமே - அப்பெருமானாரின் பொற்பாதத்தை வழிபட்டால் நம் துன்பமும் குற்றமும் தீரும்; (புன்மை - குற்றம்; துன்பம்);


7)

சினவிடை ஊர்தியார் திருமுடி மேலரா

புனல்மதி கொன்றையம் போதணி புண்ணியர்

கனல்மழு வாளினார் கச்சிமேற் றளியனார்

கனைகழல் போற்றநம் கவலைகள் தீருமே.


சினவிடை ஊர்தியார் - சினக்கும் இடபத்தை வாகனமாக உடையவர்;

திருமுடிமேல் அரா புனல் மதி கொன்றையம் போது அணி புண்ணியர் - திருமுடிமேல் பாம்பு, கங்கை, திங்கள், கொன்றைமலர் இவற்றையெல்லாம் அணிந்த புண்ணியமூர்த்தி; (போது - பூ);

கனல்-மழுவாளினார் - ஒளிவீசும் மழுவாளை ஏந்தியவர்;

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

கனை-கழல் போற்ற நம் கவலைகள் தீருமே - அப்பெருமானாரின் ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டால், நமது கவலைகள் எல்லாம் தீரும்; (கனைதல்/கனைத்தல் - ஒலித்தல்);


8)

கோலமால் வெற்பெறி குணமிலாத் தசமுகன்

ஓலமிட் டழுதிட ஒருவிரல் ஊன்றினார்

காலனைச் செற்றவர் கச்சிமேற் றளியனார்

சீலமே சொல்லநம் தீவினை தீருமே.


கோல மால் வெற்பு எறி - அழகிய பெரிய கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற;

குணம் இலாத் தசமுகன் ஓலமிட்டு அழுதிட ஒரு விரல் ஊன்றினார் - நற்குணம் இல்லாத இராவணன் மிகவும் கத்தி அழும்படி திருப்பாத விரல் ஒன்றைக் கயிலைமலைமேல் ஊன்றியவர்; (தசமுகன் - இராவணன்);

காலனைச் செற்றவர் - இயமனை உதைத்தவர்; (செறுதல் - அழித்தல்);

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

சீலமே சொல்ல நம் தீவினை தீருமே - அப்பெருமானாரின் குணங்களைச் சொல்லி வழிபட்டால், நமது பாவங்கள் எல்லாம் தீரும்; (சீலம் - குணங்கள்; புகழ்); (சம்பந்தர் தேவாரம் - 1.94.2 - "ஆலவாயிலார் சீலமே சொலீர்");


9)

அரவணை மாயனும் அலர்மிசை வேதனும்

சிரமடி காண்கிலாத் தீப்பிழம் பானவர்

கரவிலாக் கையினார் கச்சிமேற் றளியனார்

சரணமே போற்றநம் சங்கைகள் நீங்குமே.


அரவணை மாயனும் அலர்மிசை வேதனும் - பாம்பைப் படுக்கையாக உடைய திருமாலும் தாமரைப்பூவின்மேல் இருக்கும் பிரமனும்; (அரவணை - சேஷசயனம்); (மாயன் - திருமால்);

சிரம் அடி காண்கிலாத் தீப்பிழம்பு ஆனவர் - திருமுடியையும் திருவடியையும் காண ஒண்ணாத எல்லையற்ற ஜோதியாகி நின்றவர்; (சிரம் - உச்சி); (மாயனும் வேதனும் சிரம் அடி காண்கிலா - எதிர்நிரனிறையாக வந்தது)

கரவு இலாக் கையினார் - வஞ்சமின்றி வாரி வழங்குபவர்; (கரவு - ஒளித்தல்; வஞ்சம்);

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

சரணமே போற்ற நம் சங்கைகள் நீங்குமே - அப்பெருமானாரின் திருவடிகளைத் துதித்தால், நமது அச்சங்கள், துன்பங்கள் எல்லாம் தீரும்; (சரணம் - பாதம்); (சங்கை - ஐயம்; அச்சம்);


10)

குணமிலாக் குருடர்கள் கூறுபொய் நீங்குமின்

பணமணி மாலையாம் பரமனார் ஐங்கரக்

கணபதிக் கத்தனார் கச்சிமேற் றளியனார்

இணையடி ஏத்தநம் இருவினை தீருமே.


குணம் இலாக் குருடர்கள் கூறு பொய் நீங்குமின் - நற்குணங்கள் இல்லாதவர்களும் செல்லத்தக்க நல்ல நெறியை அறியாத குருடர்களும் ஆன அவர்கள் சொல்லும் பொய்களை நீங்குங்கள்;

பணம் அணி மாலை ஆம் பரமனார் - பாம்பையே அழகிய மாலை போல அணிகின்ற பரமர்; (பணம் - நாகப்பாம்பு); (அணி - அழகு); (அணிதல் - சூடுதல்);

ஐங்கரக் கணபதிக்கு அத்தனார் - ஐந்து கைகளை உடைய கணபதிக்குத் தந்தையார்; (அத்தன் - தந்தை); (இலக்கணக் குறிப்பு - கரம், கணபதி இரண்டும் வடமொழிச்சொற்கள் ஆயினும், "ஐங்கரம்" என்று தமிழ்ச்சொல் ஆகியதால் க் மிக்குப் புணர்ந்தது);

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

இணையடி ஏத்த நம் இருவினை தீருமே - அப்பெருமானாரின் இரு-திருவடிகளை வழிபட்டால், நமது பாவங்கள் எல்லாம் தீரும்;


11)

ஒருமத கரியதன் உரிவையைப் போர்த்தவர்

அருமறைப் பொருள்விரி ஆலமர் செல்வனார்

கருமணி கண்டனார் கச்சிமேற் றளியனார்

திருவடி போற்றநம் தீவினை தீருமே.


ஒரு மத கரி அதன் உரிவையைப் போர்த்தவர் - ஒரு பெரிய ஆண்யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; (மத கரி - மதம் உடைய யானை - ஆண்யானை); (உரிவை - தோல்);

அருமறைப்-பொருள் விரி ஆல் அமர் செல்வனார் - கல்லால-மரத்தின்கீழ் அரிய வேதங்களின் பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (விரித்தல் - விளக்கி உரைத்தல்); (ஆல் - ஆலமரம்):

கரு-மணி கண்டனார் - கரிய மணி திகழும் கண்டத்தை உடையவர்;

கச்சி மேற்றளியனார் - திருக்கச்சி மேற்றளி ஆலயத்தில் உறைபவர்;

திருவடி போற்ற நம் தீவினை தீருமே - அப்பெருமானாரின் திருவடியை வழிபட்டால், நமது பாவங்கள் எல்லாம் தீரும்;


பிற்குறிப்பு: இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் - ஸ்ரக்விணீ - sragviNI - स्रग्विणी - என்ற பெயருடைய சந்தம்.

அடிதோறும் 4 முறை "குரு-லகு-குரு" அமைப்புப் பெற்று வந்து, 4 அடிகளால் ஆவது.

பலரும் அறிந்த அச்யுதாஷ்டகம் இவ்வமைப்பில் அமைந்த பாடல். - "அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்";
சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்";


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment