2016-09-30
P.357 - பைஞ்ஞீலி
---------------------------------
(வஞ்சித்துறை - மா கூவிளம் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.90.1 - "அரனை உள்குவீர்")
1)
புயலார் கண்டனை
வயலார் ஞீலியில்
அயரா தேத்தினால்
துயர்போய் இன்பமே.
புயல் ஆர் கண்டனை - மேகம் போன்ற நீலகண்டம் உடையவனை;
வயல் ஆர் ஞீலியில் - வயல்கள் நிறைந்த திருப்பைஞ்ஞீலியில்; (ஞீலி - திருப்பைஞ்ஞீலி); (அப்பர் தேவாரம் - 5.41.10 - "எம்மான் இடம் இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே");
அயராது ஏத்தினால் - மறவாது தொழுதால்; (அயர்தல் - மறத்தல்; தளர்தல்);
துயர் போய் இன்பமே - துன்பங்கள் நீங்கி இன்பம் வந்தடையும்;
2)
மழையார் கண்டனே
அழகார் ஞீலியிற்
குழகா என்றடி
தொழலே இன்பமே.
மழை ஆர் கண்டனே - மேகம் போன்ற நீலகண்டம் உடையவனே;
அழகு ஆர் ஞீலியில் குழகா - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும் இளைஞனே; (குழகன் - இளைஞன்; அழகன்);
என்று அடி தொழலே இன்பமே - என்று திருவடியை வணங்குவதே இன்பம்; (சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே");
3)
மையார் கண்டனே
செய்யார் ஞீலியில்
ஐயா என்பவர்
எய்யார் என்றுமே.
மை ஆர் கண்டனே - நீலகண்டனே;
செய் ஆர் ஞீலியில் ஐயா என்பவர் - வயல் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் உறையும் தலைவனே என்று வாழ்த்துபவர்கள்; (செய் - வயல்);
எய்யார் என்றுமே - எந்நாளும் வருத்தம் அடையார்; (எய்த்தல் - இளைத்தல்; குறைவுறுதல்);
4)
செவியோர் தோடனே
கவினார் ஞீலியிற்
சிவனே என்பவர்
தவியார் மண்ணிலே.
செவி ஓர் தோடனே - ஒரு காதில் தோடு அணிந்தவனே - அர்த்தநாரீஸ்வரனே; (சம்பந்தர் தேவாரம் - 3.78.4 - "உடல் செய்யர் செவியில் தோடர்");
கவின் ஆர் ஞீலியில் சிவனே என்பவர் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும் சிவனே என்று வாழ்த்துபவர்கள்; (கவின் - அழகு);
தவியார் மண்ணிலே - இவ்வுலகில் துன்புறமாட்டார்கள்;
5)
நீரார் வேணியான்
ஏரார் ஞீலியான்
சீரே செப்பினால்
தீரா இன்பமே.
நீர் ஆர் வேணியான் - கங்கைச்சடையான்; (வேணி - சடை);
ஏர் ஆர் ஞீலியான் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறைபவன்; (ஏர் - அழகு);
சீரே செப்பினால் - புகழையே பாடினால்;
தீரா இன்பமே - வற்றாத இன்பமே;
6)
எழுதா ஓத்தினார்
உழவார் ஞீலியார்
மழுவார் தாளிணை
தொழுவார் தொண்டரே.
எழுதா ஓத்தினார் - எழுதா மறைகளை ஓதியவர்; எழுதா மறைகளின் பொருள் ஆனவர்; (ஓத்து - வேதம்);
உழவு ஆர் ஞீலியார் - வேளாண்மை நிறைந்த திருப்பைஞ்ஞீலியில் உறைபவர்;
மழுவார் - மழுவை ஏந்தியவர்;
தாளிணை தொழுவார் தொண்டரே - அப்பெருமானாரின் இரு-திருவடிகளைத் தொழுபவர்கள் தொண்டர்கள்;
7)
மானை ஏந்திய
கோனை ஞீலியெம்
மானை வாழ்த்தினார்
வானை ஆள்வரே.
மானை ஏந்திய கோனை - கையில் மானை ஏந்திய தலைவனை;
ஞீலி எம்மானை வாழ்த்தினார் - திருப்பைஞ்ஞீலியில் உறையும் எம்பெருமானை வாழ்த்தியவர்கள்;
வானை ஆள்வரே - மறுமையில் வானுலகை ஆள்வார்கள்;
8)
பத்துச் சென்னியான்
கத்த ஊன்றினார்
நித்தர் ஞீலியார்
பத்தர் வாழ்வரே.
பத்துச்-சென்னியான் கத்த ஊன்றினார் - பத்துத்-தலைகள் உடைய இராவணன் அலறும்படி விரலை மலைமேல் ஊன்றியவர்;
நித்தர் ஞீலியார் - அழிவற்றவர், திருப்பைஞ்ஞீலியில் உறைபவர்; (நித்தர் - என்றும் இருக்கும் சிவபெருமானார்);
பத்தர் வாழ்வரே - அப்பெருமானாரின் அடியவர்கள் இன்புற்று வாழ்வார்கள்;
9)
அரிவே தன்தொழும்
எரியே ஞீலியாய்
பெரியாய் என்பவர்
பிரியார் இன்பமே.
அரி வேதன் தொழும் எரியே - திருமாலும் பிரமனும் போற்றும் ஜோதியே;
ஞீலியாய் - திருப்பைஞ்ஞீலியில் உறைபவனே;
பெரியாய் என்பவர் பிரியார் இன்பமே - மகாதேவனே என்று வாழ்த்தும் அன்பர்கள் என்றும் இன்பத்தை நீங்கமாட்டார்கள்; (பெரியாய் - பெரியவனே);
10)
பொய்யர் சொல்விடும்
ஐயன் ஞீலியிற்
செய்யன் தாள்தொழல்
உய்யும் மார்க்கமே.
பொய்யர் சொல் விடும் - பொய்யர்களின் பேச்சை மதியாது நீங்குங்கள்;
ஐயன் ஞீலியிற் செய்யன் - தலைவன், திருப்பைஞ்ஞீலியில் உறையும் செம்மேனியன்; (செய் - சிவப்பு);
தாள் தொழல் உய்யும் மார்க்கமே - அப்பெருமானின் திருவடிகளை வணங்குவதே உய்தி பெறும் வழி ஆகும்;
11)
மணியார் கண்டனை
அணியார் ஞீலியில்
பணியார் மார்பனைப்
பணிவார் நல்லரே.
மணி ஆர் கண்டனை - நீலமணி போன்ற கண்டம் உடையவனை;
அணி ஆர் ஞீலியில் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும்;
பணி ஆர் மார்பனைப் - மார்பில் பாம்பை (மாலையாக) அணிந்தவனை; (பணி - நாகம்);
பணிவார் நல்லரே - எப்பெருமானைப் பணிந்து போற்றும் அன்பர்கள் நல்லவர்கள் (புண்ணியச் செல்வர்கள்) ஆவர்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.41.2 - "பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment