Saturday, March 1, 2025

P.359 - பொது - ஓயாது உன்பெயரே

2016-10-22

P.359 - பொது

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானா தானதனா தன தானன தானதனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய்")

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே")


1)

ஓயா துன்பெயரே உரை அன்புடை மாணியவர்

மாயா வாழ்வுபெற வரம் ஈந்த பரம்பரனே

தூயா செஞ்சடைமேல் துணி வெண்மதி வைத்தருளும்

நேயா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


ஓயாது உன் பெயரே உரை அன்புடை மாணி அவர் - எப்போதும் உன் திருநாமத்தையே சொல்லும் மார்க்கண்டேயர்;

மாயா வாழ்வுபெற வரம் ஈந்த பரம்பரனே - சிரஞ்சீவியாக வாழ வரம் தந்த பெருமானே; (மாயா - இறவாத);

தூயா - தூயவனே;

செஞ்சடைமேல் துணி வெண்மதி வைத்தருளும் நேயா - சிவந்த சடைமேல் வெண்திங்கள்-துண்டத்தை அணிந்த அன்பனே; (துணி - துண்டம்); (நே - நேயம் - அன்பு);

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


2)

இமையோர் தாம்பணிய எரி நஞ்சினை உண்டவனே

உமையோர் கூறுடையாய் ஒரு வெள்விடை ஊர்தியினாய்

அமரா அந்தகனை அயில் வேல்கொடு செற்றவனே

நிமலா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


இமையோர் - தேவர்கள்;

எரி நஞ்சினை - சுட்டெரித்த விடத்தை;

ஒரு வெள்விடை ஊர்தியினாய் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவனே;

அமரா - இறவாதவனே; (சுந்தரர் தேவாரம் - 7.3.6 - "ஆலந்நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே");

அந்தகனை அயில் வேல்கொடு செற்றவனே - அந்தகாசுரனைச் கூரிய சூலத்தால் குத்தி அழித்தவனே; (அயில் - கூர்மை);

நிமலா - நிமலனே; தூயவனே;


3)

முத்தா முக்கணனே முதல் வாவென வாழ்த்தடியார்

சித்தா செம்பெருமான் திரு நீறணி மேனியினாய்

அத்தா பாம்புதனை அரை நாணென ஆர்த்தவனே

நித்தா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் - சிவன்;

முதல்வன் - தலைவன்; ஆதி;

அடியார் சித்தன் - அடியவர்களது சித்தத்தில் இருப்பவன்;

செம்பெருமான் - சிவந்த நிறத்தையுடைய பெருமான். (திருவாசகம் - திருத்தசாங்கம் - "ஆரூரன் செம்பெருமான்");

அத்தன் - தந்தை;

ஆர்த்தல் - கட்டுதல்;

நித்தன் - என்றும் அழியாது இருப்பவன்;


4)

சூலா போற்றிசெய்வார் துயர் ஆயின தீர்த்தருளும்

சீலா ஈரமிலாச் செறு காலனை அன்றுதைத்த

காலா கண்ணுதலே கடு நஞ்சினை உண்மிடற்றில்

நீலா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


சூலா - சூலனே;

போற்றிசெய்வார் துயர் ஆயின தீர்த்தருளும் சீலா - வழிபடுபவர்களது துயர்களைத் தீர்க்கும் சீலனே;

ஈரம் இலாச் செறு காலனை அன்று உதைத்த காலா - இரக்கமற்ற, கொலைத்தொழில் செய்யும், நமனைக் காலால் உதைத்தவனே; காலகாலனே;

கண்ணுதலே - நெற்றிக்கண்ணா;

கடு நஞ்சினை உண் மிடற்றில் நீலா - கொடிய விடத்தை உண்ட கண்டத்தில் நீலநிறம் உடையவனே; (கடுமை - கொடுமை); (அப்பர் தேவாரம் - 5.72.4 - "ஆலநஞ்சு உண்ட கண்டத்தமர் நீலன்");


5)

காற்றோ டொள்ளெரிமால் கணை ஆக வரைச்சிலையால்

மாற்றார் மாமதில்கள் வளர் தீப்புக எய்தவனே

ஏற்றாய் வெண்மழுவாள் இலை மூன்றுடை வேலுடையாய்

நீற்றாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


காற்றோடு ஒள்-எரி மால் கணை ஆக, வரைச்-சிலையால் மாற்றார் மா-மதில்கள் வளர் தீப் புக எய்தவனே - வாயு, ஒளியுடைய அக்னி, விஷ்ணு என்ற மூவரும் சேர்ந்து ஓர் அஸ்திரம் ஆக, மேருமலையை வில்லாக ஏந்திப், பகைவர்களது முப்புரங்களும் தீயில் புக்கு அழியும்படி எய்தவனே; (ஒள் - ஒளியுடைய); (வரை - மலை); (சிலை - வில்); (மாற்றார் - பகைவர்);

ஏற்றாய் - இடபவாகனனே;

வெண்மழுவாள் இலை மூன்றுடை வேல் உடையாய் - வெண்மையான மழுவாளையும் திரிசூலத்தையும் ஏந்தியவனே;

நீற்றாய் - திருநீறு பூசியவனே;

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


6)

பதியே பாய்விடையாய் படர் புன்சடை மேலரவே

மதியே வானதியே மல ரேபுனை பிஞ்ஞகனே

புதியாய் தொன்மையனே புகல் என்றடை வார்க்குலவா

நிதியே நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


பதியே - தலைவனே;

பாய்விடையாய் - பாயும் இடபத்தை வாகனமாக உடையவனே;

படர் புன்சடைமேல் அரவே மதியே வானதியே மலரே புனை பிஞ்ஞகனே - படர்ந்த செஞ்சடைமேல் பாம்பையும் திங்களையும் கங்கையையும் மலரையும் அணிகின்ற தலைக்கோலம் உடையவனே; (வானதி - வான் நதி - கங்கை); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (ஏகாரம் - எண்ணேகாரம்); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.6 - "வானே நிலனே பிறவே அறிவரியான்");

புதியாய் தொன்மையனே - எல்லாவற்றினும் புதியவனே, எல்லாவற்றினும் பழையவனே; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.9 - "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"); (திருவிளையாடற்புராணம் - "பழையாய் புதியாய் சரணம்");

புகல் என்று அடைவார்க்கு உலவா நிதியே - உன்னைச் சரணடைந்தவர்களுக்கு என்றும் அழியாத நிதி ஆனவனே;

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


7)

ஊரூர் உண்பலிதேர் ஒரு வாஉமை யாள்கணவா

காரார் வெற்புநிகர் கரி தன்னை உரித்தவனே

ஏரார் கொன்றையினாய் இள மாமதி சேர்சடையுள்

நீரா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


ஊர்-ஊர் உண்பலி தேர் ஒருவா - பல ஊர்களில் பிச்சை ஏற்கும் ஒப்பற்றவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.41.1 - "கருவார் கச்சித் திருவேகம்பத்து ஒருவா");

உமையாள் கணவா - பார்வதி மணவாளனே;

கார் ஆர் வெற்பு நிகர் கரி-தன்னை உரித்தவனே - கருமை பொருந்திய மலை போன்ற யானையின் தோலை உரித்தவனே;

ஏர் ஆர் கொன்றையினாய் - அழகிய கொன்றைமலரை அணிந்தவனே; (ஏர் - அழகு);

இள மாமதி சேர் சடையுள் நீரா - அழகிய இளந்திங்களை அணிந்த சடையுள் கங்கையை உடையவனே; (அப்பர் தேவாரம் - 4.64.5 - "சடையுள் நீரர்");

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


8)

ஓரா வாளரக்கன் உயர் வெற்பை எடுக்கலுறச்

சீரார் தாள்விரலைச் சிறி தூன்றி நெரித்தவனே

தீரா நோய்மருந்தே சிவ னேவிரி செஞ்சடையுள்

நீரா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


ஓரா வாள்-அரக்கன் உயர் வெற்பை எடுக்கலுறச் - சிறிதும் எண்ணாமல், கொடிய அரக்கனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கியபொழுது; (ஓர்தல் - சிந்தித்தல்; ஆராய்தல்); (வாள் - கொடுமை);

சீர் ஆர் தாள்விரலைச் சிறிது ஊன்றி நெரித்தவனே - பெருமை மிக்க பாதத்து விரலைச் சற்றே ஊன்றி அவனை நசுக்கியவனே;

தீரா-நோய் மருந்தே சிவனே - தீராத நோயான பிறவிப்பிணிக்கு மருந்தே, சிவபெருமானே;

விரி செஞ்சடையுள் நீரா - விரிந்த சிவந்த சடையுள் கங்கையை உடையவனே;

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


9)

பூண்டாய் பாம்புகளே பொலி சாந்தென மேனிமிசை

மாண்டார் வெண்பொடியே மகிழ் மாண்புடை மன்னவனே

ஆண்டான் யானெனுமால் அய னாரிடை அன்றழலாய்

நீண்டாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


பூண்டாய் பாம்புகளே - பாம்புகளை அணிந்தவனே;

பொலி சாந்து என மேனிமிசை மாண்டார் வெண்பொடியே மகிழ் மாண்புடை மன்னவனே - பொலிகின்ற சந்தனம் எனத் திருமேனிமேல் இறந்தவர் சாம்பலையே விரும்பிப் பூசும் பெருமை உடைய தலைவனே; (பொலிதல் - சிறத்தல்; விளங்குதல்); (சாந்து - சந்தனம்); (மாண்டார் - இறந்தவர்); (பொடி - சாம்பல்);

"ஆண்டான் யான்" எனும் மால்-அயனாரிடை அன்று அழலாய் நீண்டாய் - "நானே பரம்பொருள்" என்று வாதிட்ட பிரமன் விஷ்ணு இவர்களிடையே அன்று பெருஞ்சோதியாகி உயர்ந்தவனே; (ஆண்டான் - ஆண்டவன்);

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


10)

நன்றே நாடகிலா நய வஞ்சகர் கட்கிலனே

மன்றாக் கானகமே மகிழ் கூத்த சலந்தரனைக்

கொன்றாய் கும்பிடுவார் குறை நீக்கி அருந்துணையாய்

நின்றாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


நன்றே நாடகிலா நயவஞ்சகர்கட்கு இலனே - தாம் நல்லவற்றை விரும்பாதவர்கள் ஆகிப் பிறரையும் ஏமாற்றுகின்றவர்களுக்கு இல்லாதவனே (/ அருள் இல்லாதவனே); (நயவஞ்சகம் - இனிமைகாட்டி ஏமாற்றுகை); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

மன்றாக் கானகமே மகிழ் கூத்த - சுடுகாட்டை ஆடுகின்ற அரங்காக விரும்பும் கூத்தனே;

சலந்தரனைக் கொன்றாய் - ஜலந்தராசுரனை அழித்தவனே;

கும்பிடுவார் குறை நீக்கி அருந்துணையாய் நின்றாய் - வழிபடும் பக்தர்களது குறைகளைத் தீர்த்து அவர்களுக்கு அரிய துணை ஆகி நிற்பவனே;

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


11)

இறைவா ஐங்கணையான் எழில் ஆகம் எரித்தவனே

மறையார் நாவினனே மழு ஏந்திய கையினனே

பிறையார் சென்னியனே பெரி யாய்உல கங்களெலாம்

நிறைவாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


இறைவா - இறைவனே;

ஐங்கணையான் எழில் ஆகம் எரித்தவனே - ஐந்து மலர்க்கணைகளை உடைய மன்மதனுடைய அழகிய உடலை எரித்துச் சாம்பல் ஆக்கியவனே; (ஆகம் - உடல்);

மறை ஆர் நாவினனே - திருநாவால் வேதத்தை ஓதுபவனே;

மழு ஏந்திய கையினனே - கையில் மழுவை ஏந்தியவனே;

பிறை ஆர் சென்னியனே - திருமுடிமேல் சந்திரனைச் சூடியவனே;

பெரியாய் - பெரியவனே;

உலகங்கள் எலாம் நிறைவாய் - எல்லா உலகங்களிலும் வியாபித்து இருப்பவனே; (நிறைதல் - வியாபித்தல்);

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

சந்த விருத்தம் - "தானா தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.

இச்சந்தத்தைத் "தானா தானதனா தனதானன தானதனா" என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.

  • அடிகளின் முதற்சீர் - தானா - இது "தனனா" என்றும் வரலாம்;

  • அடிகளின் முதற்சீர் - நெடிலில் முடியும்;

  • "தானன" என்ற 4-ஆம் சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், 5-ஆம் சீர் "தனாதனனா" என்று அமைந்து அடியின் சந்தம் கெடாது வரும்.

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து")

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே")


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment