2016-11-03
P.360 - கோயில் (சிதம்பரம்)
---------------------------------
(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தான தான - அரையடி)
(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "புண்ணியர் பூதியர் பூதநாதர்");
1)
மானன நோக்கி மடந்தை அஞ்ச
.. மதகரி தன்னை உரித்த கோனை
வானவர் கைதொழ நஞ்சை உண்ட
.. மணிதிகழ் கண்டனை வானி லாவும்
தேனமர் கொன்றையும் நச்ச ராவும்
.. சேர்சடை எந்தையை ஆல நீழல்
ஞான முதல்வனை அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
மான் அன நோக்கி மடந்தை அஞ்ச மதகரி தன்னை உரித்த கோனை - மான் போன்ற பார்வையை உடைய உமாதேவி அஞ்சும்படி மதயானையின் தோலை உரித்த தலைவனை;
வானவர் கைதொழ நஞ்சை உண்ட மணி திகழ் கண்டனை - தேவர்கள் வணங்கவும் அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்ட நீலமணி திகழும் கண்டனை;
வான்-நிலாவும், தேன் அமர் கொன்றையும், நச்சு-அராவும் சேர் சடை எந்தையை - சடையில் வானில் விளங்கும் அழகிய திங்களையும், வண்டுகள் நாடும் தேன் திகழும் கொன்றை மலரையும், விஷப்பாம்பையும் அணிந்தவனை; (வானிலாவும் - வான் நிலாவும் - இச்சொற்றொடரை இருமுறை இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்); (வான் - வானம்; அழகு); (நிலா - சந்திரன்); (நிலாவுதல் - நிலவுதல் - இருத்தல்; தங்குதல்); (தேனமர் - தேன் அமர் - இச்சொற்றொடரை இருமுறை இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்); (தேன் - வண்டு; மது); (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்);
ஆல-நீழல் ஞான முதல்வனை - கல்லாலின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை;
அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக; (உன்னுதல் - எண்ணுதல்);
2)
பொங்கர வைப்புனை மார்பி னானைப்
.. புலியதள் தன்னை அரைக்க சைத்த
சங்கர னைச்சின ஏற்றி னானைத்
.. தமருகம் ஏந்திய கையி னானைக்
கங்கையின் நீரலை சென்னி மீது
.. கவினுறு வெண்பிறை சூடி னானை
நங்கையொர் பங்கனை அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
பொங்கு-அரவைப் புனை மார்பினானைப் - சீறும் பாம்பை மார்பில் அணிந்தவனை;
புலி-அதள் தன்னை அரைக்கு அசைத்த சங்கரனைச் -- புலித்தோலை அரையில் கட்டியவனை; (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்);
சின-ஏற்றினானைத் - கோபிக்கும் இடபத்தை வாகனமாக உடையவனை;
தமருகம் ஏந்திய கையினானைக் - கையில் உடுக்கையை ஏந்தியவனை; (தமருகம் - உடுக்கை);
கங்கையின் நீர் அலை சென்னி மீது கவின்-உறு வெண்பிறை சூடினானை - கங்கைநதி அலைமோதுகின்ற திருமுடிமேல் அழகிய வெண்திங்களைச் சூடியவனை;
நங்கை ஒர் பங்கனை - அர்த்தநாரீஸ்வரனை;
அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
3)
துதிசெயும் அன்பரின் அல்லல் நீக்கும்
.. தூயனை வேயன தோளு மைக்குப்
பதிதனை மூவிலை வேலி னானைப்
.. பன்னக நாணனை வந்த டைந்த
கதிர்மதி ஏறிய சென்னி மீது
.. கமழ்குர வத்தொடு கங்கை என்னும்
நதிபுனை நம்பனை அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
துதிசெயும் அன்பரின் அல்லல் நீக்கும் தூயனை - வழிபடும் பக்தர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் தூயவனை;
வேய் அன தோள் உமைக்குப் பதிதனை - மூங்கில் போன்ற புஜங்களை உடைய உமாதேவி மணாளனை; (வேய் - மூங்கில்); (பதி - தலைவன்; கணவன்);
மூவிலை வேலினானைப் - திரிசூலத்தை ஏந்தியவனை;
பன்னக நாணனை - பாம்பை அரைநாணாகக் கட்டியவனை; (பன்னகம் - பாம்பு);
வந்து அடைந்த கதிர்மதி ஏறிய சென்னி மீது கமழ் குரவத்தொடு கங்கை என்னும் நதி புனை நம்பனை - வந்து சரணடைந்த திங்கள் பிரகாசிக்கின்ற திருமுடிமேல் வாசம் கமழும் குராமலரையும், கங்கையாற்றையும் அணியும் சிவபெருமானை; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);
அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
4)
ஊனினை உண்கெனும் வேடர் அன்பின்
.. உருவினர் கண்ணது தோண்டி அப்ப
வானிடை வாழ்வொடு நாம(ம்) நல்கு
.. வார்சடை மேற்பிறை தாங்கி னானை
மானிகர் நோக்கியை வாமம் வைத்த
.. மைந்தனை மந்திர நாமம் ஓதும்
ஞானியர் நெஞ்சனை அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
ஊனினை உண்கெனும் வேடர், அன்பின் உருவினர் கண்ணது தோண்டி அப்ப, வானிடை வாழ்வொடு நாமம் நல்கு - "மாமிசத்தை உண்க" என்று வேண்டிய வேடரான திண்ணனார், அன்பே வடிவம் ஆனவர், (ஈசன் கண்ணில் காயத்தைக் கண்டு) தம் கண்ணைத் தோண்டி அப்பவும், அவருக்குக் கண்ணப்பர் என்ற பெயரையும் வானுலக வாழ்வையும் அருளிய; (உண்கெனும் - உண்க எனும் - தொகுத்தல் விகாரம்);
வார்-சடைமேல் பிறை தாங்கினானை - நீண்ட சடைமேல் சந்திரனைத் தரித்தவனை;
மான் நிகர் நோக்கியை வாமம் வைத்த மைந்தனை - மான் போன்ற பார்வை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பக்கம் வைத்த அழகனை; (மைந்தன் - கணவன்; வீரன்);
மந்திர நாமம் ஓதும் ஞானியர் நெஞ்சனை - காக்கும் மந்திரமான ஐந்தெழுத்தை ("நமச்சிவாய") ஓதும் ஞானியர் நெஞ்சில் உறைபவனை;
அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
5)
வெல்ல அரும்புரம் மூன்றும் வேவ
.. மேருவை வில்லென ஏந்தி எய்ய
வல்ல அரன்றனை அன்பு மிக்க
.. மனமுடை நற்றவ மாணி தன்னைக்
கொல்ல நெருங்கிய கூற்று தன்னைக்
.. குரைகழ லாலுதை செய்த கோனை
நல்லவர் சேர்தில்லை அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
வெல்ல அரும் புரம் மூன்றும் வேவ - தேவர்களால் வெல்ல இயலாத முப்புரங்களும் வெந்து அழியும்படி;
மேருவை வில்லென ஏந்தி எய்ய வல்ல அரன்-தனை - மேருமலையை வில்லாக ஏந்திக் கணை எய்த ஹரனை;
அன்பு மிக்க மனமுடை நற்றவ மாணி தன்னைக் கொல்ல நெருங்கிய கூற்றுதன்னைக் குரைகழலால் உதைசெய்த கோனை - மனத்தில் அளவில்லாத பக்தியுடையவரும் நல்ல தவம் உடையவருமான மார்க்கண்டேயரைக் கொல்ல அணுகிய காலனை ஒலிக்கும் கழலை அணிந்த திருவடியால் உதைத்த தலைவனை;
நல்லவர் சேர் அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - நல்லவர்கள் திரள்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
6)
தேன்மலர் தூவிய தேவர் வாழத்
.. திரைகடல் நஞ்சினை உண்ட தேவை
வான்மதி கூவிளம் வன்னி கொன்றை
.. மத்தம் இலங்கிய வேணி யானை
மான்மறி ஏந்திய கையி னானை
.. மார்பினில் முப்புரி நூலி னானை
நான்மறை ஆர்தில்லை அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
தேன்மலர் தூவிய தேவர் வாழத் திரைகடல் நஞ்சினை உண்ட தேவை - தேன் நிறைந்த பூக்களைத் தூவி வழிபட்ட தேவர்கள் இறவாது இருக்கப், பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்ட கடவுளை; (தே - கடவுள்);
வான்-மதி கூவிளம் வன்னி கொன்றை மத்தம் இலங்கிய வேணியானை - வெண்திங்கள், வில்வம், வன்னி, கொன்றைமலர், ஊமத்தமலர் இவற்றையெல்லாம் சடையில் அணிந்தவனை; (வான் - வானம்; அழகு); (வால் - வெண்மை); (வான்மதி = 1. வான்+மதி; 2. வால்+மதி);
மான்மறி ஏந்திய கையினானை - மான்கன்றைக் கையில் ஏந்தியவனை;
மார்பினில் முப்புரி நூலினானை - மார்பில் பூணூல் திகழ்பவனை;
நான்மறை ஆர் தில்லை அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - நால்வேதங்கள் ஒலிக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக; (ஆர்த்தல் - ஒலித்தல்); (நான்மறையார் தில்லை அம்பலத்தில் - "நால்வேதம் ஓதும் தில்லைவாழ் அந்தணர்கள் பூசிக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
7)
நெற்றியில் நாட்டனை நீறு பூசும்
.. நிமலனை உண்பலி தேர ஓடு
பற்றிய கையனை நாண தாகப்
.. பாம்பினை வீக்கிய தேவ தேவை
வெற்றி விடைக்கொடி காட்டு கின்ற
.. வேந்தனை ஐம்புலன் ஆசை வென்ற
நற்றவர் போற்றிடும் அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
நெற்றியில் நாட்டனை - நெற்றிக்கண்ணனை; (நாட்டம் - கண்); (குறிப்பு: தீவண்ணம் - தீவண்ணன் என்பதுபோல், நாட்டம் - நாட்டன்);
நீறு பூசும் நிமலனை - திருநீற்றைப் பூசிய தூயவனை;
உண்பலி தேர ஓடு பற்றிய கையனை - பிச்சைக்காகப் பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தியவனை;
நாண்அதாகப் பாம்பினை வீக்கிய தேவதேவை - அரைநாணாகப் பாம்பைக் கட்டிய தேவதேவனை; (வீக்குதல் - கட்டுதல்);
வெற்றி விடைக்கொடி காட்டுகின்ற வேந்தனை - வெற்றியுடைய இடபக்கொடி உடைய மன்னனை;
ஐம்புலன் ஆசை வென்ற நற்றவர் போற்றிடும் அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - ஐம்புலன்களையும் ஆசைகளையும் வென்ற நல்ல தவம் உடையவர்கள் போற்றுகின்ற, சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
8)
உம்பரும் அஞ்சும் இலங்கை மன்னன்
.. உயர்மலை தன்னை இடந்த போது
செம்பதம் ஊன்றி நசுக்கி னானைத்
.. திரிபுரம் மூன்றெரி செய்த தேவை
வம்பலர் ஐந்தினை வாளி யாக்கொள்
.. மன்மத னைச்சுடு கண்ணி னானை
நம்பியை அம்பொனின் அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
உம்பரும் அஞ்சும் இலங்கை மன்னன் உயர்-மலை தன்னை இடந்த போது - தேவர்களும் அஞ்சுகின்ற அளவு வலிமை உடைய இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க முயன்றபொழுது; (இடத்தல் - பெயர்த்தல்);
செம்-பதம் ஊன்றி நசுக்கினானைத் - சிவந்த திருவடியை ஊன்றி அவனை நசுக்கியவனை;
திரிபுரம் மூன்று எரி செய்த தேவை - எங்கும் திரிந்த முப்புரங்களை எரித்த கடவுளை; (திரிபுரம் - வினைத்தொகை - திரிந்த புரங்கள்);
வம்பு-அலர் ஐந்தினை வாளியாக் கொள் மன்மதனைச் சுடு கண்ணினானை - வாசமலர்கள் ஐந்தை அம்புகளாகக் கொண்ட மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணனை; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு; வாளியா - வாளியாக; கடைக்குறை விகாரம்);
நம்பியை - பெருமானை; (நம்பி - ஆடவரில் சிறந்தவன்);
அம்பொனின் அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - அழகிய பொன்னம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
9)
மாலும் விரிஞ்சனும் நேடி வாடி
.. வழிபட ஓங்கிய சோதி யானைச்
சூல(ம்) மழுப்படை தாங்கி னானைத்
.. தோற்றமும் ஈறும் இலாப்பி ரானை
நீல மிடற்றனை மாசி லாத
.. நீற்றனை ஆற்றனை ஆழி சூழ்ந்த
ஞாலம் இறைஞ்சிடும் அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
மாலும் விரிஞ்சனும் நேடி வாடி வழிபட ஓங்கிய சோதியானைச் - விஷ்ணுவும் பிரமனும் தேடி வாடி வணங்கும்படி உயர்ந்த ஜோதி ஆனவனை; (விரிஞ்சன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);
சூலம் மழுப்படை தாங்கினானைத் - சூலத்தையும் மழுவாயுதத்தையும் ஏந்தியவனை;
தோற்றமும் ஈறும் இலாப் பிரானை - பிறப்பும் இறப்பும் இல்லாத தலைவனை;
நீல-மிடற்றனை - நீலகண்டனை;
மாசு இலாத நீற்றனை ஆற்றனை - தூய திருநீறு பூசியவனைக், கங்காதரனை;
ஆழி சூழ்ந்த ஞாலம் இறைஞ்சிடும் அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - கடல் சூழ்ந்த இவ்வுலக மக்கள் வணங்கும், அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
10)
வஞ்சக நெஞ்சினர் ஆகி என்றும்
.. மயலறு வெண்திரு நீறு பூச
அஞ்சிடு வாருரை பொய்யை நீங்கி
.. அடிதொழு வார்வினை நீக்கு வானைச்
செஞ்சடை மேலிள நாகம் ஊரும்
.. தேவனை வெள்விடை ஊர்தி யானை
நஞ்சணி கண்டனை அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
வஞ்சக நெஞ்சினர் ஆகி என்றும் மயல் அறு வெண் திருநீறு பூச அஞ்சிடுவார் உரை பொய்யை நீங்கி அடிதொழுவார் வினை நீக்குவானைச் - மனத்தில் வஞ்சத்தை உடையவர்களும், என்றும் அறியாமையைப் போக்கும் வெண்ணீற்றைப் பூச அஞ்சுபவர்களுமான பேதையர் சொல்லும் பொய்களிலிருந்து விலகித் திருவடியைத் தொழும் அன்பர்களுடைய வினைகளைத் தீர்ப்பவனை; (மயல் - அறியாமை; மயக்கம்);
செஞ்சடைமேல் இள-நாகம் ஊரும் தேவனை - சிவந்த சடைமேல் இளம்பாம்பு ஊர்கின்ற தேவனை;
வெள்-விடை ஊர்தியானை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை;
நஞ்சு அணி கண்டனை - நீலகண்டனை;
அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
11)
வேதனை ஆயின தீர வேண்டில்
.. வேலவன் அத்தனை அம்பு யம்போல்
பாதனைக் கண்ணமர் நெற்றி யானைப்
.. பரமனை வெண்குழை தோடி லங்கும்
காதனை வேட்டுவ னாகி அன்று
.. காண்டிவ னுக்கருள் நல்கி னானை
நாதனை வேதனை அம்ப லத்தில்
.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.
வேதனை ஆயின தீர வேண்டில் - துன்பங்கள் எல்லாம் தீரவேண்டும் என்றால்;
வேலவன் அத்தனை - முருகனுக்குத் தந்தையை;
அம்புயம் போல் பாதனைக் - தாமரைமலர் போன்ற திருவடி உடையவனை; (அம்புயம் - அம்புஜம் - தாமரை);
கண் அமர் நெற்றியானைப் - நெற்றிக்கண்ணனை;
பரமனை - மேலானவனை;
வெண்குழை தோடு இலங்கும் காதனை - ஒரு காதில் வெண்ணிறக் குழையும் ஒரு காதில் தோடும் அணிந்த அர்த்தநாரீஸ்வரனை;
வேட்டுவன் ஆகி அன்று காண்டிவனுக்கு அருள் நல்கினானை - வேடன் கோலத்தில் சென்று அருச்சுனனுக்குப் பாசுபதம் தந்தவனை; (காண்டிவன் - காண்டீவன் - அர்ஜுனன்);
நாதனை வேதனை - தலைவனை, வேதப்பொருளை, வேதம் ஓதியவனை;
அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;
பிற்குறிப்பு - யாப்புக் குறிப்பு:
எண்சீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தான தான - அரையடி;
அரையடியின் முதற்சீர் "தனதன" என்றும் வரலாம்;
தானன என்ற விளச்சீர் வரும் இடத்தில் தான என்று மாச்சீர் வரல் ஆம். அப்படி வரின், அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். (வெண்டளை).
சம்பந்தர் தேவாரம் - 1.6.1 - "அங்கமும் வேதமும் ஓதும் நாவர்";
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment