Saturday, March 1, 2025

P.358 - கோயில் (சிதம்பரம்) - அங்கை கூப்பி

2016-10-15

P.358 - கோயில் (சிதம்பரம்)

---------------------------------

(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா - அரையடிச் சந்தம்);

(சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்")


1)

அங்கை கூப்பி அடியை வாழ்த்தும்

.. அடிய னேனை அஞ்சல் என்னாய்

பொங்க ராவைப் பூணும் மார்பா

.. பொருத ஆனை தனையு ரித்தாய்

செங்க ணேறு தனையு கந்த

.. தேவ தேவா பாவ நாசா

மங்கை காண வையம் பேண

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


அங்கை கூப்பி அடியை வாழ்த்தும் அடியனேனை "அஞ்சல்" என்னாய் - கைகூப்பி வணங்கும் என்னை "அஞ்சாதே" என்று அருள்புரிவாயாக;

பொங்கு-அராவைப் பூணும் மார்பா - சீறும் பாம்பை மார்பில் அணிந்தவனே;

பொருத ஆனைதனை உரித்தாய் - போர் செய்த யானையை உரித்தவனே; (பொருதல் - போர்செய்தல்)

செங்கண் ஏறுதனை உகந்த தேவதேவா - சினக்கும் இடபத்தை ஊர்தியாக விரும்பிய தேவதேவனே;

பாவநாசா - பாவத்தை அழிப்பவனே;

மங்கை காண, வையம் பேண, மன்றில் நட்டம் ஆடும் மன்னே - உமாதேவி காண, உலகத்தோர்கள் வழிபடத், தில்லையம்பலத்தில் நடம் செய்யும் அரசனே; (நட்டம் - நடனம்); (மன் - அரசன்; தலைவன்);


2)

போது தூவிப் பொற்ப தத்தைப்

.. போற்றி னேனை அஞ்சல் என்னாய்

ஓது கின்ற ஓத்தில் உள்ளாய்

.. உனைய டைந்த மாணி ஆவி

பாது காத்துக் கூற்று தைத்தாய்

.. பாய்பு லித்தோல் ஆடை யானே

மாது காண வையம் பேண

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


போது - பூ;

ஓத்து - வேதம்;

மாணி - மார்க்கண்டேயர்;


3)

எண்ணி நாளும் அடிவ ணங்கும்

.. எளிய னேனை அஞ்சல் என்னாய்

வெண்ணி லாவும் சீற ராவும்

.. வேணி மீது வாழ வைத்தாய்

கண்ணி லாவும் நெற்றி காட்டிக்

.. காம வேளை நீறு செய்தாய்

மண்ணும் விண்ணும் வாழ்த்தி ஏத்த

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


சீறு-அரா - சீறும் பாம்பு;

வேணி - சடை;

கண் நிலாவும் நெற்றி - நெற்றிக்கண்;

காமவேள் - மன்மதன்;


4)

துதிகள் பாடி அடிவ ணங்கும்

.. தொண்ட னேனை அஞ்சல் என்னாய்

மதியம் மத்தம் கொன்றை சூடீ

.. வார ணத்தின் உரிவை போர்த்தாய்

எதிரி லாதாய் தலைகை ஏந்தி

.. இற்ப லிக்குத் திரியும் ஈசா

மதிலி லங்கும் அணிகொள் தில்லை

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


துதிகள் பாடி அடிவணங்கும் தொண்டனேனை "அஞ்சல்" என்னாய் - தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி உன் திருவடியை வணங்கும் தொண்டனான என்னை "அஞ்சாதே" என்று அருள்புரிவாயாக;

மதியம் மத்தம் கொன்றை சூடீ - சந்திரன், ஊமத்தமலர், கொன்றைமலர் இவற்றையெல்லாம் சூடியவனே;

வாரணத்தின் உரிவை போர்த்தாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (வாரணம் - யானை); (உரிவை - தோல்);

எதிர் இலாதாய் - ஒப்பற்றவனே;

தலை கை ஏந்தி இல்-பலிக்குத் திரியும் ஈசா - பிரமன் மண்டையோட்டைக் கையில் தாங்கி வீடுகளில் இடும் பிச்சைக்கு உழலும் ஈசனே; (இல் - வீடு);

மதில் இலங்கும் அணிகொள் தில்லை மன்றில் நட்டம் ஆடும் மன்னே - மதில் சூழ்ந்த அழகிய தில்லையில் அம்பலத்தில் நடம் செய்யும் அரசனே;


5)

கானி லங்கு பூக்கள் தூவிக்

.. கழல்ப ணிந்தேன் அஞ்சல் என்னாய்

தேனி லங்கு கொன்றை சூடீ

.. செக்கர் வானம் போல்நி றத்தாய்

மானும் வையார் மழுவும் ஏந்தீ

.. மாசு ணத்தை அரையில் ஆர்த்தாய்

வானும் மண்ணும் வாழ்த்தி ஏத்த

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


கான் இலங்கு பூக்கள் தூவிக் கழல் பணிந்தேன் "அஞ்சல்" என்னாய் - வாசமலர்களைத் தூவித் திருவடியை வணங்கினேன்; என்னை "அஞ்சாதே" என்று அருள்புரிவாயாக; (கான் - வாசனை);

தேன் இலங்கு கொன்றை சூடீ - தேன் மிக்க கொன்றைமலர்களை அணிந்தவனே;

செக்கர்-வானம் போல் நிறத்தாய் - செக்கர்-வானம் போலச் செம்மேனி உடையவனே;

மானும் வை ஆர் மழுவும் ஏந்தீ - மானையும் கூரிய மழுவையும் ஏந்தியவனே; (வை - கூர்மை); (அப்பர் தேவாரம் - 6.21.3 - "வையார் மழுவாட் படையார் போலும்");

மாசுணத்தை அரையில் ஆர்த்தாய் - அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டியவனே; (மாசுணம் - பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்);

வானும் மண்ணும் வாழ்த்தி ஏத்த மன்றில் நட்டம் ஆடும் மன்னே - மண்ணுலகத்தோரும் வானோரும் வாழ்த்தி வணங்க அம்பலத்தில் நடம் செய்யும் அரசனே;


6)

இறைவ என்று நித்தல் வாழ்த்தும்

.. எளிய னேனை அஞ்சல் என்னாய்

குறையி ரந்த இமைய வர்க்காக்

.. கொடுவி டத்தை அமுது செய்து

கறைய ணிந்த திருமி டற்றாய்

.. காத லாளர் தமிழ்கள் பாட

மறைப யின்றோர் போற்றி செய்ய

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


நித்தல் - தினமும்;

இமையவர்க்கா - தேவர்களுக்காக;

காதலாளர் - பக்தர்கள்;

தமிழ்கள் - தமிழ்ப்பாமாலைகள்; (சம்பந்தர் தேவாரம் - 2.59.11 - "சம்பந்தன் தாழு மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை");

போற்றிசெய்தல் - துதித்தல்; வழிபடுதல்;


7)

ஐய உன்றன் அடியை வாழ்த்தும்

.. அடிய னேனை அஞ்சல் என்னாய்

நெய்யும் பாலும் ஆடும் நம்பா

.. நீறி லங்கு மார்பில் நூலா

மைய ணிந்த கண்ணி பங்கா

.. மறைசொல் நாவா தேவ தேவா

வைய கத்தோர் சுரர்கள் ஏத்த

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


ஆடுதல் - அபிஷேகம் செய்யப்பெறுதல்;

நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்;

சுரர்கள் - தேவர்கள்;


8)

தினமும் உன்றன் சீரை ஓதும்

.. சிந்தை யேனை அஞ்சல் என்னாய்

முன(ம்)ம லைக்கீழ் வல்ல ரக்கன்

.. முடிகள் பத்தை அடர்வு செய்தாய்

வனம டைந்து பார்த்த னுக்கு

.. வரம ளித்த கயிலை நாதா

மனம கிழ்ந்து பத்தர் ஏத்த

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


முனம் மலைக்கீழ் வல்லரக்கன் முடிகள் பத்தை அடர்வு செய்தாய் - முன்பு கயிலைமலையின்-கீழே வலிய அரக்கனான இராவணனின் பத்துத்-தலைகளையும் நசுக்கியவனே; (அடர்வு - நசுக்குதல்; நெருக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.125.8 - "கரம் இருபது முடி ஒருபதும் உடையவன் உரம் நெரிதர வரை அடர்வுசெய்தவன்");

வனம் அடைந்து பார்த்தனுக்கு வரம் அளித்த கயிலைநாதா - காட்டில் சென்று அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை வரமாக அளித்த கயிலைநாதனே;


9)

உன்னி நாளும் உன்றன் நாமம்

.. ஓதி னேனை அஞ்சல் என்னாய்

அன்னம் ஏனம் ஆகி முன்னம்

.. அயனும் மாலும் நேட நின்றாய்

சென்னி மீது திங்கள் சூடி

.. மின்னி லங்கு சடைகள் தாழ

வன்னி தன்னைக் கையில் ஏந்தி

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


உன்னி - நினைந்து; (உன்னுதல் - நினைதல்);

நாமம் - பெயர்; புகழ்;

ஏனம் - பன்றி;

மின் இலங்கு சடைகள் தாழ - மின்னல் போல் ஒளி வீசும் சடைகள் தாழும்படி; (சம்பந்தர் தேவாரம் - 1.86.3 - "சுடர்பொற் சடைதாழ");

வன்னி - நெருப்பு;


10)

நலத்தை நண்ணா வீணர் பேசும்

.. ஞானம் அற்ற வார்த்தை பேணேல்

நிலத்தை உற்றுத் தனைவ ணங்கும்

.. நேயர் தம்மை அஞ்சல் என்பான்

கலக்கம் உற்ற திங்கள் தன்னைக்

.. காத்த அண்ணல் கரிய கண்டன்

வலக்கை தன்னில் துடியை ஏந்தி

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


நலத்தை நண்ணா வீணர் - நன்மையை நாடாத வீணர்கள்;

பேணேல் - மதிக்க வேண்டா;

நிலத்தை உற்றுத் தனை வணங்கும் நேயர் தம்மை அஞ்சல் என்பான் - தன்னைத் தரையில் விழுந்து வணங்கும் அன்பர்களுக்கு அபயம் அளிப்பவன்;

வலக்-கை தன்னில் துடியை ஏந்தி மன்றில் நட்டம் ஆடும் மன்னே - வலப்பக்கக் கையில் உடுக்கையை ஏந்தி அம்பலத்தில் நடம் செய்யும் அரசன்; (- ஈற்றசை);


11)

பணியும் அன்பர் பாவ மெல்லாம்

.. பறையு மாறு நல்கும் ஈசன்

பிணியும் நோயும் சாவும் இல்லான்

.. பெற்றம் ஏறும் பெரிய தேவன்

அணியும் ஆரம் நாகம் ஆக

.. அயன்சி ரத்தில் ஊணி ரப்பான்

மணியி லங்கு மிடறன் அம்பொன்

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


பணியும் அன்பர் பாவமெல்லாம் பறையுமாறு நல்கும் ஈசன் - வழிபடும் பக்தர்களது பாவங்கள் எல்லாம் அழியும்படி அருளும் ஈசன்; (பறைதல் - அழிதல்);

பிணியும் நோயும் சாவும் இல்லான் - பந்தங்களும் நோய்களும் இறப்பும் இல்லாதவன்;

பெற்றம் ஏறும் பெரிய தேவன் - இடபத்தை வாகனமாக உடைய மகாதேவன்;

அணியும் ஆரம் நாகம் ஆக, அயன் சிரத்தில் ஊண் இரப்பான் - பாம்பே அணிகின்ற மாலை ஆகப், பிரமன் மண்டையோட்டில் உணவை யாசிப்பவன்; (ஆரம் - ஹாரம் - மாலை); (ஊண் - உணவு);

மணி இலங்கு மிடறன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

அம்பொன் மன்றில் நட்டம் ஆடும் மன்னே - பொன்னம்பலத்தில் நடம் செய்யும் அரசன்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா தான தானா தான தானா - என்ற சந்தம்.

  • ஒற்றைப்படைச் சீர்களில் - (அதாவது 1-3-5-7-ஆம் சீர்களில்) - தான என்பது தனன என்றும் வரலாம்.

  • தான – குறில் / குறில்+ஒற்று என்ற அமைப்பில் முடியும் மாச்சீர்;

  • தானா - தேமாச்சீர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment