Wednesday, March 5, 2025

P.361 - சிரபுரம் (காழி) - பெரியவன் அரியவன்

2016-11-13

P.361 - சிரபுரம் (காழி)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனதன தனதன தனதன தனதன - திருவிராகம் ஒத்த அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை")


1)

பெரியவன் அரியவன் ஒருமத கரியதன்

உரிபுனை வடிவினன் உமையிடம் உடையவன்

அரிவையர் இடுபலி அதுபெற உழலிறை

திரிபுரம் எரியரன் நகர்சிர புரமே.


பெரியவன் அரியவன் - மிகவும் பெரியவன் (/மகாதேவன்), மிகவும் அரியவன்;

ஒரு மதகரி அதன் உரி புனை வடிவினன் - பெரிய ஆண்யானையின் தோலை மார்பு சூழப் போர்த்த கோலத்தினன்;

உமை இடம் உடையவன் - உமையை இடப்பாகமாக உடையவன்;

அரிவையர் இடுபலிஅது பெற உழல் இறை - பெண்கள் இடும் பிச்சைக்காகத் திரியும் இறைவன்;

திரிபுரம் எரி அரன் - முப்புரங்களை எரித்த ஹரன்;

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் தலம் சிரபுரம் (சீகாழி); (சிரபுரம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);


2)

அஞ்சிய இமையவர் அடியிணை பரவிட

நஞ்சணி மிடறினன் நடமிடு கழலினன்

வெஞ்சின விடையினன் விரிபுனல் அலைதரு

செஞ்சடை யினனுறை நகர்சிர புரமே.


அஞ்சிய இமையவர் அடியிணை பரவிட நஞ்சு அணி மிடறினன் - ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் இரு-திருவடிகளைப் போற்றவும், இரங்கி அவ்விடத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (மிடறு - கண்டம்; மிடற்றினன் என்றும், சந்தம் நோக்கி "மிடறினன்" என்றும் பாடல்களில் வரும்);

நடமிடு கழலினன் - கூத்தன்; (கழல் - திருவடி);

வெஞ்சின விடையினன் - சினக்கும் இடபத்தை ஊர்தியாக உடையவன்;

விரிபுனல் அலைதரு செஞ்சடையினன் - பரந்த கங்கையாறு அலைமோதுகின்ற (/அலைகின்ற) சடையை உடையவன்; (அலைத்தல் - அலைமோதுதல்; அலைதல் - திரிதல்); (தருதல் - ஒரு துணைவினை);

உறை நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் பதி சிரபுரம் (சீகாழி);


3)

புகலியர் பதிமொழி தமிழுரை தகவினர்

அகமகிழ் வுறவினை அறவருள் புரிசிவன்

இகலிய எயிலெரி இறையவன் இளமதி

திகழ்சடை முடியினன் நகர்சிர புரமே.


புகலியர்பதி மொழி-தமிழ் உரை-தகவினர் அகம் மகிழ்வுற வினை அறருள்புரி சிவன் - காழியர்கோனான திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத்தைச் சொல்லும் அடியார்கள் மனம் மகிழ அவர்களது வினையெல்லாம் தீர அருள்கின்ற சிவன்; (புகலி - சீகழியின் 12 பெயர்களில் ஒன்று); (பதி - தலைவன்); (தகவு - தகுதி; குணம்);

இகலிய எயில் எரி இறையவன் - பகைத்த முப்புரங்களை எரித்த இறைவன்; (இகல்தல் - பகைத்தல்); (எயில் - கோட்டை);

இளமதி திகழ் சடைமுடியினன் நகர் சிபுரமே - இளம்பிறை விளங்குகின்ற சடையை உடைய பெருமான் நகர் சிரபுரம் (சீகாழி); (சடைமுடி - ஜடாமகுடம்);


4)

சேவடி யிணையவை தின(ம்)நினை அடியவர்

காவலன் அளிகொடு கவுணியர் பரவிய

பாவமர் செவியினன் அமரர்கள் பணிபதி

சேவமர் சிவனுறை நகர்சிர புரமே.


சேவடி-ணை-வை தினம் நினை அடியவர் காவலன் - சிவந்த இரு-திருவடிகளைத் தினமும் நினைகின்ற பக்தர்களைக் காப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.87.1 - "வனமுலை யிணையவை");

அளி-கொடு கவுணியர் பரவிய பா அமர் செவியினன் - அன்பால் திருஞான சம்பந்தர் பாடியருளிய பாடல்களை விரும்பிக் கேட்கும் காதினன்; (அளி - அன்பு); (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (அமர்தல் - விரும்புதல்);

அமரர்கள் பணி பதி - தேவர்கள் வழிபடும் தலைவன்;

சே அமர் சிவன் உறை நகர் சிரபுரமே - இடபத்தை ஊர்தியாக விரும்பிய சிவபெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


5)

தவமுனி வர்கள்தொழு தருநிழல் அமர்குரு

அவனியில் வழிபடும் அடியவர் உறுதுணை

பவனறு மலர்மதி படர்சடை மிசையணி

சிவனவன் உறைதரு நகர்சிர புரமே.


தவ-முனிவர்கள் தொழு தருநிழல் அமர் குரு - தவமுனிவர்கள் நால்வர் போற்றக் கல்லாலமரத்தின்கீழ் இருந்த தட்சிணாமூர்த்தி; (தரு - மரம்);

அவனியில் வழிபடும் அடியவர் உறுதுணை - உலகில் வழிபடுகின்ற பக்தர்களுக்கு உற்ற துணை;

பவன் - என்றும் உள்ளவன்; (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்);

நறுமலர் மதி படர்-சடைமிசை அணி சிவன்அவன் உறைதரு நகர் சிரபுரமே - வாசமலர்களையும் திங்களையும் படர்ந்த சடையின்மேல் அணியும் சிவபெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


6)

தினமரு மறையுரை சிறுவர துயிர்கொல

முனமடை மறலியை உயிரற முனிபவன்

அனநடை உமையொரு புடையினன் அடல்மிகு

சினவிடை அமரரன் நகர்சிர புரமே.


தினம் அருமறை உரை சிறுவரது உயிர் கொல - தினமும் அரிய வேதங்களைச் சொல்லி வழிபட்ட மறைச்சிறுவரான மார்க்கண்டேயரின் உயிரைக் கொல்வதற்கு;

முனம் அடை மறலியை உயிர் அற முனிபவன் - முன்பு அடைந்த காலனின் உயிர் அழியுமாறு அவனைக் கோபித்தவன் (சினந்து உதைத்தவன்); (மறலி - கூற்றுவன்); (முனிதல் - கோபித்தல்);

அன நடை உமை ஒரு புடையினன் - அன்னம் போன்ற நடையை உடைய உமையை ஒரு பக்கம் உடையவன்; (அனநடை - அன்னநடை);

அடல் மிகு சின-விடை அமர் அரன் நகர் சிரபுரமே - வலிய, சினம் மிகுந்த இடபத்தை ஊர்தியாக விரும்பிய ஹரன் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


7)

மங்கல வடிவினன் மலரடி தொழுதவர்

தங்களின் அருவினை தனையழி பரிவினன்

அங்கமும் அரவமு(ம்) மலர்களும் அழகிய

திங்களும் அணிசிவன் நகர்சிர புரமே.


மங்கல வடிவினன் - மங்கலத்தின் திருவுரு;

மலரடி தொழுதவர் தங்களின் அருவினைதனை அழி பரிவினன் - மலர் போன்ற திருவடிகளை வழிபட்டவரின் பழவினைகளை அழிக்கும் கருணாமூர்த்தி;

அங்கமும் அரவமும் மலர்களும் அழகிய திங்களும் அணி சிவன் - எலும்பையும் பாம்பையும் பூக்களையும் அழகிய சந்திரனையும் அணிந்த சிவபெருமான்; (அங்கம் - எலும்பு);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


8)

வரைபெயர் மதியிலி மணிமுடி ஒருபது

கரமிரு பதுநெரி விரலினன் அரவினன்

இரவினில் அருநடம் இடுபவன் ஒலிமலி

திரையடை சடையினன் நகர்சிர புரமே.


வரை பெயர் மதியிலி மணிமுடி ஒருபது கரம் இருபது நெரி விரலினன் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவில்லாதவனான இராவணனின் கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையும் இருபது கைகளையும் திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி நசுக்கியவன்; (வரை - மலை);

அரவினன் - பாம்பை அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.72.3 - "நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்");

இரவினில் அருநடம் இடுபவன் - நள்ளிருளில் அரிய கூத்து இயற்றுபவன்;

ஒலி மலி திரை அடை சடையினன் - மிகவும் ஒலிக்கின்ற அலைகளை உடைய கங்கையை அடைத்த சடையை உடையவன்; (திரை - அலை; நதி);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


9)

முன்னரி முளரியன் அடிமுடி முயலெரி

உன்னிய அடியவர் உளமுறை விடமென

மன்னிய பெருமையன் வளர்மதி அலைநதி

சென்னியின் மிசையினன் நகர்சிர புரமே.


முன் அரி முளரியன் அடிமுடி முயல் எரி - முன்னர்த் திருமாலும் தாமரைமேல் இருக்கும் பிரமனும் அடியும் முடியும் தேடி முயலுமாறு உயர்ந்த ஜோதி; (முளரி - தாமரை); (சம்பந்தர் தேவாரம் - 1.92.9 - "அயனு மாலுமாய் முயலு முடியினீர்");

உன்னிய அடியவர் உளம் உறைவிடம் என மன்னிய பெருமையன் - தியானிக்கும் பக்தர்களின் உள்ளமே தான் தங்கும் இடமாக நிலைத்த பெருமையை உடையவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (மன்னுதல் - நிலைபெறுதல்; மிகுதல்);

வளர்மதி அலைநதி சென்னியின் மிசையினன் - வளர்கின்ற திங்களையும் அலைக்கின்ற (/அலையுடைய / அலைகின்ற) நதியையும் திருமுடிமேல் உடையவன்; (மிசை - மேல்);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


10)

ஐயனை அடைகிலர் அனுதினம் அவ(ம்)மொழி

பொய்யரின் நெறிதனை விலகுமின் அடிதொழு

கையினர் இடரவை களையிறை பொடியணி

செய்யவன் உறைதரு நகர்சிர புரமே.


ஐயனை அடைகிலர் - ஈசனை அடையாதவர்கள்;

அனுதினம் அவம் மொழி பொய்யரின் நெறிதனை விலகுமின் - தினந்தோறும் இழிந்த சொற்களைப் பேசும் அப்-பொய்யர்கள் சொல்லும் மார்க்கத்தை நீங்கள் நீங்குங்கள்;

அடிதொழு கையினர் இடர்அவை களை இறை - திருவடியைக் கையால் தொழும் பக்தர்களின் இடர்களை நீக்கும் இறைவன்; ( சம்பந்தர் தேவாரம் - 1,52.3 - "நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.");

பொடி அணி செய்யவன் - திருநீற்றைப் பூசிய செம்மேனியன்;

உறைதரு நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


11)

மூவரின் முதலினன் முடிவிலன் அருமறை

நாவினன் நகுதலை தரிகரன் நறைமலி

பூவணி திருமுடி யினனொளிர் பொடியணி

தீவணன் உறைதரு நகர்சிர புரமே.


மூவரின் முதலினன் - மும்மூர்த்திகளின் முதலானவன்; மும்மூர்த்திகளுக்கும் தலைவன்;

முடிவு இலன் - அழிவற்றவன்;

அருமறை நாவினன் - அரிய வேதங்களை நாவினால் ஓதியவன்;

நகு தலை தரி கரன் - ஒளிவீசும் மண்டையோட்டைக் கையில் தாங்கியவன்; (நகுதல் - சிரித்தல்; பிரகாசித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.133.8 - "நகுதலையிற் பலிதேர்ந்து");

நறை மலி பூ அணி திருமுடியினன் - தேன் மிக்க பூக்களைத் திருமுடிமேல் அணிந்தவன்;

ஒளிர் பொடி அணி தீவணன் - ஒளிவீசும் திருநீற்றை அணிந்த தீப்போன்ற செம்மேனியன்; (பொடி - திருநீறு); (தீவணன் - தீவண்ணன்);

உறைதரு நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு :

  • சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.

  • முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.

  • பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".

  • முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.

சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment