2016-11-30
T.196 - மறைக்காடு (வேதாரண்யம்)
---------------------------------
(வண்ணவிருத்தம்;
தான தனதன தான தனதன
தான தனதன .. தனதான)
(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)
நீதி நெறிநினை யாமல் அனுதின(ம்)
.. .. நீச வழிகளில் .. மனமோடி
.. நீளும் இடரடை யாது திருவடி
.. .. நேய(ம்) நிலைபெற .. அருளாயே
ஆதி தனையறி யாத பிரமனும்
.. .. ஆழி மிசைஅர .. வணையானும்
.. ஆய அடிமுடி நேடி வழிபடு
.. .. மாறு தழலென .. எழுவோனே
காதில் அழகிய தோடு குழையிவை
.. .. காண விடைமிசை .. வருவோனே
.. காடு தனில்நட மாடும் உனைநினை
.. .. காத லடியவர் .. துணையானாய்
மேதி மிசைவரு கோப நமனுயிர்
.. .. வீட உதைகழல் .. உடையானே
.. வேலை அலைகரை மீது பொருதொலி
.. .. வேத வனமுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
நீதிநெறி நினையாமல், அனுதினம்
.. .. நீச வழிகளில் .. மனம் ஓடி,
.. நீளும் இடர் அடையாது, திருவடி
.. .. நேயம் நிலைபெற .. அருளாயே;
ஆதிதனை அறியாத பிரமனும்
.. .. ஆழிமிசை அரவணையானும்
.. ஆய, அடிமுடி நேடி வழிபடு-
.. .. மாறு தழல் என .. எழுவோனே;
காதில் அழகிய தோடு குழைஇவை
.. .. காண, விடைமிசை .. வருவோனே;
.. காடுதனில் நடம் ஆடும் உனை நினை
.. .. காதல்-அடியவர் .. துணை ஆனாய்;
மேதிமிசை வரு- கோப- நமன் உயிர்
.. .. வீட உதை-கழல் .. உடையானே;
.. வேலை-அலை கரைமீது பொருது ஒலி-
.. .. வேதவனம் உறை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
நீதிநெறி நினையாமல், அனுதினம் நீச வழிகளில் மனம் ஓடி - நல்ல வழியில் செல்ல எண்ணாமல், தினமும் இழிந்த வழிகளிலேயே என் மனம் சென்று; (நீசம் - இழிவு; தாழ்ச்சி);
நீளும் இடர் அடையாது - நான் பெரும்துன்பத்தை அடையாதபடி; (நீள்தல் - நீடுதல் - மிகுதல்);
திருவடி நேயம் நிலைபெற அருளாயே - உன் திருவடிக்கு என்றும் மாறாத அன்பு திகழ அருள்வாயாக; (நேயம் - பக்தி; அன்பு); (நிலைபெறுதல் - ஸ்திரமாக இருத்தல்);
ஆதிதனை அறியாத பிரமனும் ஆழிமிசை அரவணையானும் - முழுமுதற்கடவுளை அறியாத நான்முகனும் பாற்கடலில் பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும்; (ஆதி - கடவுள்); (ஆழி - கடல்); (அரவணையான் - பாம்பையே படுக்கையாகக் கொண்ட திருமால்);
ஆய, அடிமுடி நேடி, வழிபடுமாறு தழல் என எழுவோனே - ஆராயும்படி, அடியையும் முடியையும் தேடிக் காணாமல் உன்னை வணங்கும்படி ஜோதியாகி உயர்ந்தவனே; (ஆய்தல் - ஆராய்தல்); (நேடுதல் - தேடுதல்);
காதில் அழகிய தோடு குழை இவை காண விடைமிசை வருவோனே - காதில் தோடும் குழையும் அணிந்து (அர்த்தநாரீஸ்வரன் கோலத்தில்) இடபவாகனத்தில்மேல் வருகின்றவனே;
காடுதனில் நடம் ஆடும் உனை நினை காதல் அடியவர் துணை ஆனாய் - சுடுகாட்டில் கூத்து ஆடும் உன்னை நினைகின்ற அன்புடைய அடியவர்களுக்குத் துணை ஆனவனே;
மேதிமிசை வரு கோப நமன் உயிர் வீட உதை கழல் உடையானே - எருமையை வாகனமாக உடையவனும் சினம் மிக்கவனுமான காலனது உயிர் அழியும்படி அவனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்தவனே; (மேதி - எருமை); (வீடுதல் - அழிதல்; சாதல்);
வேலை-அலை கரைமீது பொருது ஒலி வேதவனம் உறை பெருமானே - கடல்அலைகள் கரையின்மேல் மோதி ஒலிக்கின்ற திருமறைக்காட்டில் உறைகின்ற பெருமானே; (வேலை - கடல்); (பொருதல் - மோதுதல்); (வேதவனம் - மறைக்காடு - வேதாரண்யம்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment