Saturday, March 29, 2025

P.365 - இடைமருதூர் (திருவிடைமருதூர்) - கன்னலார் மொழியினாள்

2016-12-03

P.365 - இடைமருதூர் (திருவிடைமருதூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")


1)

கன்னலார் மொழியினாள் பாகமாக் கருதினார் கங்கை யாளை

மின்னலார் சடையினில் தாங்கிய வித்தகர் வேத நாவர்

சென்னியால் சேவடி வணங்கினார் தீவினை தீர்க்கும் நல்லர்

செந்நெலார் வயலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


கன்னல் ஆர் மொழியினாள் பாகமாக் கருதினார் - கரும்பு போல் இனிய மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாக விரும்பியவர்; (கன்னல் - கரும்பு); (ஆர்தல் - ஒத்தல்); (கருதுதல் - விரும்புதல்);

கங்கையாளை மின்னல் ஆர் சடையினில் தாங்கிய வித்தகர் - மின்னல் போன்ற சடையில் கங்கையைத் தாங்கிய சமர்த்தர்; (வித்தகம் - சாமர்த்தியம்; வித்தகர் - வல்லவர்);

வேத-நாவர் - வேதங்களை ஓதியருளியவர்;

சென்னியால் சேவடி வணங்கினார் தீவினை தீர்க்கும் நல்லர் - சிவந்த திருவடியைத் தலையால் வணங்கும் பக்தர்களது பாவங்களைத் தீர்க்கும் நல்லவர்;

செந்நெல் ஆர் வயல் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - உயர்ந்த வகை நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


2)

கொன்றையும் மத்தமும் கூனிள மதியமும் கோள ராவும்

துன்றிடும் சென்னியார் தூமறை பாடினார் சுண்ண நீற்றர்

ஒன்றிய நெஞ்சராய் ஏத்தினார் தம்மிடர் ஒல்லை தீர்ப்பார்

தென்றலில் வாசமார் திருவிடை மருதுறை செல்வர் தாமே.


கொன்றையும் மத்தமும் கூன்-இள-மதியமும் கோள்-அராவும் துன்றிடும் சென்னியார் - திருமுடிமேல் கொன்றைமலர், ஊமத்தமலர், வளைந்த இளம்பிறை, கொடிய பாம்பு இவற்றை அணிந்தவர்; (கூன் - வளைவு);

தூ-மறை பாடினார் - தூய வேதங்களைப் பாடியவர்;

சுண்ண-நீற்றர் - திருநீற்றைப் பூசியவர்; (சுண்ணநீறு - கலவைச்-சந்தனம் போலக் கொள்ளப்படும் திருநீறு);

ஒன்றிய நெஞ்சராய் ஏத்தினார்தம் இடர் ஒல்லை தீர்ப்பார் - மனம் ஒன்றி வழிபடும் பக்தர்களது துன்பங்களைச் சீக்கிரம் தீர்ப்பவர்;

தென்றலில் வாசம் ஆர் திருவிடைமருது உறை செல்வர்தாமே - தென்றலில் மணம் கமழும் திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


3)

நாலுமா மறைகளை ஓதிய நாவினார் நமனை அன்று

காலினால் உதைத்தவர் கரியுரி போர்த்தவர் காள கண்டர்

ஏலுமா றேத்தினார் இடரெலாம் தீர்த்துவான் இன்பம் ஈவார்

சேலுலாம் வயலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


நாலு மா-மறைகளை ஓதிய நாவினார் - நால்வேதத்தை நாவால் ஓதியவர்;

நமனை அன்று காலினால் உதைத்தவர் - காலால் காலனை உதைத்தவர்;

கரி-உரி போர்த்தவர் - யானைத்தோலைப் போர்த்தவர்;

காள-கண்டர் - நீலகண்டர்;

ஏலுமாறு ஏத்தினார் இடர் எலாம் தீர்த்து வான்-இன்பம் ஈவார் - இயன்றபடி வழிபடும் பக்தர்களது துன்பங்களை எல்லாம் தீர்த்து அவர்களுக்கு வானுலக இன்பத்தை அளிப்பவர்;

சேல் உலாம் வயல் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - சேல்மீன்கள் உலவும் வயல்கள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (அப்பர் தேவாரம் - 4.67.9 - "சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே");


4)

தொழுதெழு சுரர்கள்தம் துயர்கெட முப்புரம் சுட்ட நாதர்

கழுதுகள் வாழ்தரு காட்டினில் நடமிடும் கமல பாதர்

கழுமலப் பிள்ளையார் தமிழுரை அடியவர் கவலை தீர்ப்பார்

செழுமலர்ப் பொழிலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


தொழுது-ழு சுரர்கள்தம் துயர் கெட முப்புரம் சுட்ட நாதர் - இறைஞ்சிய தேவர்களின் துயரம் நீங்குமாறு முப்புரங்களை எரித்த தலைவர்;

கழுதுகள் வாழ்தரு காட்டினில் நடமிடும் கமல-பாதர் - பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்தாடும் தாமரைமலர்ப் பாதம் உடையவர்; (கழுது - பேய்); (தருதல் - ஒரு துணைவினை);

கழுமலப் பிள்ளையார் தமிழ் உரை அடியவர் கவலை தீர்ப்பார் - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரின் பதிகங்களைப் பாடி வழிபடும் பக்தர்களின் கவலையைத் தீர்ப்பவர்;

செழுமலர்ப் பொழில் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - செழுத்த மலர்கள் விளங்கும் சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


5)

வானவர்க் கமுதினை வழங்கிய வள்ளலார் வல்வி டத்தைப்

போனகம் செய்தவர் ஏற்றினர் நீற்றினைப் பூசு மார்பர்

கானலர் கொண்டடி பரவிடும் அடியவர் கவலை தீர்ப்பார்

தேனமர் பொழிலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


வானவர்க்கு அமுதினை வழங்கிய வள்ளலார் - தேவர்களுக்கு அமுதத்தை அளித்த வள்ளல்;

வல்-விடத்தைப் போனகம் செய்தவர் - கொடிய நஞ்சை உண்டவர்; (போனகம் - உணவு);

ஏற்றினர் - இடபவாகனம் உடையவர்; (ஏறு - இடபம்);

நீற்றினைப் பூசு மார்பர் - திருநீற்றை மார்பில் பூசியவர்;

கான்-அலர் கொண்டு அடி பரவிடும் அடியவர் கவலை தீர்ப்பார் - வாசமலர்களால் திருவடியை வழிபடும் பக்தர்களது கவலையைத் தீர்ப்பவர்; (கான் - வாசனை); (சம்பந்தர் தேவாரம் - 3.42.2 - "கானி டங்கொளும் தண்வயற் காழியார்");

தேன் அமர் பொழில் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - வண்டுகள் விரும்பும் சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (தேன் - வண்டு); (அமர்தல் - விரும்புதல்);


6)

தார்மலி மார்பினர் சலந்தரன் தனையழி சக்க ரத்தை

நீர்மிசைத் துயிலரி வேண்டிட ஈந்தவர் நீல கண்டர்

சீர்சொலும் செந்தமிழ் செப்பினார் தீவினை சிதறு விப்பார்

தேர்செலும் வீதிசூழ் திருவிடை மருதுறை செல்வர் தாமே.


தார் மலி மார்பினர் - மார்பில் மாலை அணிந்தவர்;

சலந்தரன்தனை அழி சக்கரத்தை நீர்மிசைத் துயில் அரி வேண்டிட ஈந்தவர் - ஜலந்தராசுரனை அழித்த சக்கராயுதத்தைப் பாற்கடலில் துயிலும் திருமால் இறைஞ்சி வேண்ட அவருக்குக் கொடுத்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3..33.1 - "நீரிடைத் துயின்றவன்");

நீலகண்டர் - கரிய மிடற்றர்;

சீர் சொலும் செந்தமிழ் செப்பினார் தீவினை சிதறுவிப்பார் - புகழைச் சொல்லும் செந்தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடும் பக்தர்களது பாவங்களை அழிப்பார்; (சிதறுதல் - அழிதல்; சிதறுவித்தல் - அழித்தல்);

தேர் செலும் வீதி சூழ் திருவிடைமருது உறை செல்வர்தாமே - தேர் செல்லும் வீதிகள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


7)

ஆணுரு வோடொரு பெண்ணுருக் காட்டினார் அரையில் நாக

நாணுடை நாதனார் நாரியர் இடுபலி நாடும் நம்பர்

பேணுதல் செய்துசீர் பேசுவார்க் கின்பமே பெருகு விப்பார்

சேணுயர் மதிலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


ஆண் உருவோடு ஒரு பெண் உருக் காட்டினார் - அர்த்தநாரீஸ்வரர்;

அரையில் நாக-நாணுடை நாதனார் - அரையில் பாம்பை நாணாகக் கட்டிய தலைவர்;

நாரியர் இடுபலி நாடும் நம்பர் - பெண்கள் இடும் பிச்சையை விரும்பும் சிவபெருமானார்; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவபெருமான் திருநாமம்);

பேணுதல் செய்து சீர் பேசுவார்க்கு இன்பமே பெருகுவிப்பார் - போற்றிப் புகழும் பக்தர்களுக்கு (இம்மை மறுமை) இன்பமே பெருகச்செய்பவர்; (பெருகுவித்தல் - பெருகச்செய்தல்; வி - பிறவினைவிகுதி; "உருகுதல் உருகுவித்தல்" என்பதனை ஒத்த பிரயோகம்); (அப்பர் தேவாரம் - 4.5.3 - "பெருகுவித்தென் பாவத்தை");

சேண் உயர் மதில் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - மிக உயர்ந்த மதில்கள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (சேண் - உயரம்; ஆகாயம்);


8)

மாமலை பேர்த்தவன் வலிகெட ஊன்றினார் வாய்க ளெல்லாம்

நாமமே ஓதிடக் கேட்டொரு வாளொடு நாளும் ஈந்தார்

மாமலர் இட்டடி வாழ்த்தினார் வல்வினை மாய்த்த ருள்வார்

தேமலர்ப் பொழிலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


மாமலை பேர்த்தவன் வலி கெட ஊன்றினார் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றியவர்;

வாய்கள் எல்லாம் நாமமே ஓதிடக் கேட்டொரு வாளொடு நாளும் ஈந்தார் - பின் அவனது எல்லா வாய்களும் திருநாமத்தைப் போற்றக் கேட்டு அவனுக்கு ஒரு வாளையும் நீண்ட ஆயுளையும் தந்தவர்;

மாமலர் இட்டு அடி வாழ்த்தினார் வல்வினை மாய்த்து அருள்வார் - சிறந்த பூக்களைத் தூவித் திருவடியை வாழ்த்தும் பக்தர்களது வலிய வினைகளை அழித்து அருள்பவர்;

தேமலர்ப் பொழில் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (தேமலர் - தேம் + மலர்; தேம் - வாசனை; தேன்);


9)

கையினிற் சங்கினன் கடிமலர் மேலயன் காணொ ணாமல்

ஐயனே அருளென அடிதொழ நின்றவர் அம்மை யப்பர்

மெய்யினில் நீற்றராய் வேண்டுவார் வெவ்வினை வீட்டும் ஈசர்

செய்யினிற் சேலுலாம் திருவிடை மருதுறை செல்வர் தாமே.


கையினில் சங்கினன் கடிமலர்மேல் அயன் காணொணாமல் - சங்கை ஏந்திய திருமாலும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும் (ஜோதியின் அடிமுடியைக்) காண இயலாமல்; (காணொணாமல் - காண ஒண்ணாமல்; தொகுத்தல், இடைக்குறை விகாரம்);

"ஐயனே அருள்" என அடிதொழ நின்றவர் - "தலைவனே! அருள்வாயாக" என்று வணங்கும்படி எல்லையின்றி ஓங்கி நின்றவர்;

அம்மையப்பர் - தாயும் தந்தையும் ஆவார்;

மெய்யினில் நீற்றராய் வேண்டுவார் வெவ்வினை வீட்டும் ஈசர் - தம் உடம்பின்மேல் திருநீற்றைப் பூசி வழிபடும் அடியவர்களது கொடிய வினையை அழிக்கும் ஈசனார்; (வீட்டுதல் - அழித்தல்);

செய்யினில் சேல் உலாம் திருவிடைமருதுறை செல்வர்தாமே - வயலில் சேல்மீன்கள் உலாவுகின்ற திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (செய் - வயல்); (உலாம் - உலாவும்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.67.9 - "சேலுலாம் பழனவேலி");


10)

உண்மையை மறைப்பவர் உய்ந்நெறி தேர்கிலார் உரைகொ ளேன்மின்

பெண்மயிற் சாயலாள் பேதையோர் பங்கினர் பெற்றம் ஊர்ந்தார்

பண்மலி பாச்சரம் சூட்டினார் பழவினை பாற்றும் ஈசர்

திண்மதில் புடையணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


உண்மையை மறைப்பவர் உய்ந்நெறி தேர்கிலார் உரை கொளேன்மின் - உண்மையை மறைப்பவர்களும் உய்யும் நெறியை அறியாதவர்களுமான அவர்கள் பேசும் பேச்சை நீங்கள் மதியாதீர்கள்; (கொளேன்மின் - நீங்கள் கொள்ள வேண்டா);

பெண்மயில் சாயலாள் பேதை ஓர் பங்கினர் - பெண்மயில் போன்ற சாயல் உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

பெற்றம் ஊர்ந்தார் - இடபவாகனர்; (பெற்றம் - எருது);

பண் மலி பாச்சரம் சூட்டினார் பழவினை பாற்றும் ஈசர் - பண்கள் பொருந்திய பாமாலைகளைச் சூட்டி வழிபடும் பக்தர்களது பழைய வினைகளை அழிக்கும் ஈசனார்; (பாற்றுதல் - அழித்தல்);

திண்-மதில் புடை அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - திண்ணிய மதில்கள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


11)

மறைநவில் நாவினர் மார்பினில் நூலினர் வான்வ ணங்கு

கறையணி கண்டனார் காரிகை பங்கனார் கங்கை சூடி

நறைமலர் கொண்டடி போற்றினார்க் கின்னலம் நல்கும் நாதர்

சிறையளி அறைபொழில் திருவிடை மருதுறை செல்வர் தாமே.


மறை நவில் நாவினர் - வேதங்களை நாவால் ஓதியவர்;

மார்பினில் நூலினர் - மார்பில் பூணூல் அணிந்தவர்;

வான் வணங்கு கறை அணி கண்டனார் - தேவர்கள் வழிபடும் நீலகண்டர்;

காரிகை பங்கனார் - உமையொரு பங்கர்;

கங்கை சூடி - கங்காதரர்;

நறைமலர் கொண்டு அடி போற்றினார்க்கு இன்-நலம் நல்கும் நாதர் - தேன்மலர்களால் திருவடியை வழிபட்டவர்களுக்கு இனிய நலத்தை அளிக்கும் தலைவர்;

சிறை-அளி அறை பொழில் திருவிடைமருது உறை செல்வர்தாமே - இறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற (பொழில் சூழ்ந்த) திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment