2016-11-18
P.362 - புகலூர்
---------------------------------
(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
முற்குறிப்பு: இப்பதிகத்தில் சந்தம் கருதிச் சில இடங்களில் ஒற்று விரித்தல் விகாரம் வரும். படிப்போர் வசதிக்காக அவை பாடல்களில் வெளிப்படையாகக் காட்டப்பெறவில்லை; உதாரணமாக - அழலின்னிறமார், குழகன்னிடப;
1)
அழலின் நிறமார் எழில்மேனிக்
குழகன் இடபக் கொடியீசன்
கழல்கள் புனைசே வடியானூர்
பொழில்கள் புடைசூழ் புகலூரே.
அழலின் நிறம் ஆர் எழில்மேனிக் குழகன் - தீப் போன்ற அழகிய செம்மேனியன்; (ஆர்தல் - ஒத்தல்); (குழகன் - இளைஞன்; அழகன்);
இடபக்கொடி ஈசன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;
கழல்கள் புனை சேவடியான் ஊர் - வீர்க்கழல் அணிந்த சிவந்த திருவடியினனான சிவபெருமான் உறையும் இடம்; (சம்பந்தர் தேவாரம் - 1.10.2 - "பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை இலரே");
பொழில்கள் புடைசூழ் புகலூரே - சோலைகள் சூழ்ந்த திருப்புகலூர்;
2)
வனமென் முலையாள் மணவாளன்
சினவெள் விடையன் திரிசூலன்
அனலேந் தியவெம் அரனூராம்
புனலின் வளமார் புகலூரே.
வன-மென்-முலையாள் மணவாளன் - அழகிய மென்மையான முலைகளை உடைய உமைக்குக் கணவன்; (வனம் - அழகு);
சின-வெள்-விடையன் - சினக்கின்ற வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடையவன்;
திரிசூலன் - சூலபாணி;
அனல் ஏந்திய எம் அரன் ஊர் ஆம் - கையில் தீயை ஏந்துகின்ற எங்கள் ஹரன் உறையும் ஊர் ஆகும்; (அனல் - தீ);
புனலின் வளம் ஆர் புகலூரே - நீர்வளம் மிக்க திருப்புகலூர்;
3)
கவியால் கருதிக் கழலேத்தில்
தவியா நிலையைத் தருமண்ணல்
செவியோர் குழையார் சிவனூராம்
புவியோர் புகழும் புகலூரே.
கவியால் கருதிக் கழல் ஏத்தில் - பக்தியோடு பாமாலைகளைப் பாடித் திருவடியைத் துதித்தால்; (கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்); (ஏத்துதல் - துதித்தல்);
தவியா நிலையைத் தரும் அண்ணல் - இன்பமே அருளும் ஐயன்; (தவித்தல் - வருந்துதல்; இளைத்தல்);
செவி ஓர் குழை ஆர் சிவன் ஊர் ஆம் - ஒரு காதில் குழையை அணிந்த சிவபெருமான் ஊர் ஆகும்;
புவியோர் புகழும் புகலூரே - உலகத்தோர் போற்றுகின்ற திருப்புகலூர்; (புவியோர் - உலக மக்கள்);
4)
நனிவா டியவா னவர்நாதா
தனியே றுடையாய் சரணென்ன
இனிதே அருள்செய் இருள்கண்டன்
புனிதன் நகராம் புகலூரே.
நனி வாடிய வானவர் - (ஆலகாலம் சுட்டெரித்ததால்) மிகவும் வாடிய தேவர்கள்;
"நாதா, தனி ஏறு உடையாய்! சரண்" என்ன - "நாதனே! ஒப்பற்ற இடத்தை வாகனமாக உடையவனே! அடைக்கலம்" என்று தொழவும்; (தனி - ஒப்பற்ற);
இனிதே அருள்செய் இருள்-கண்டன் - (அந்த நஞ்சை உண்டு) அவர்களுக்கு இன்னருள் செய்த நீலகண்டன்;
புனிதன் நகர் ஆம் புகலூரே - தூயவன் சிவபெருமான் உறையும் இடம் திருப்புகலூர்;
5)
கரியின் உரியன் பலியேற்றுத்
திரியும் பெரியன் திருவெல்லாம்
உரியன் மதியோ டுரகஞ்சேர்
புரிவே ணியனூர் புகலூரே.
கரியின் உரியன் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கரி - ஆண்யானை); (உரி - தோல்);
பலி ஏற்றுத் திரியும் பெரியன் - பிச்சை ஏற்று உழலும் பெரியவன்; (பலி - பிச்சை); (சம்பந்தர் தேவாரம் - 3.30.9 - "மாலோடயன் காண்பரி தாகிய பெரியர்");
திருவெல்லாம் உரியன் - எல்லாச் செல்வங்களும் உடையவன்; (உரியன் - உரியவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "சென்றடையாத திருவுடையானை");
மதியோடு உரகம் சேர் புரி-வேணியன் ஊர் புகலூரே - திங்களும் பாம்பும் சேர்கின்ற முறுக்குண்ட சடையினன் உறையும் இடம் திருப்புகலூர்; (உரகம் - பாம்பு); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); (வேணி - சடை);
6)
அணையார் எயில்மூன் றவைவேவக்
கணையே வியகண் ணுதலீசா
துணைநீ எனவே தொழுதார்க்குப்
புணையா னவனூர் புகலூரே.
"அணையார் எயில் மூன்று அவை வேவக் - "பகைவர்களது மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகும்படி; (அணையார் - பகைவர்); (எயில் - கோட்டை);
கணை ஏவிய கண்ணுதல் ஈசா - ஓர் அம்பை எய்த ஈசனே, நெற்றிக்கண்ணனே;
துணை நீ" எனவே தொழுதார்க்குப் புணை ஆனவன் ஊர் புகலூரே - நீயே துணை" என்று வழிபடும் பக்தர்களுக்கு (பிறவிக்கடலைக் கடப்பிக்கும்) தெப்பம் ஆன சிவபெருமான் உறையும் இடம் திருப்புகலூர்; (புணை - தெப்பம்; மரக்கலம்);
7)
முடியா முதல்நான் முனிவர்க்கால்
அடியே மறைசொல் அருளாளன்
வடியார் மழுவாள் வலனேந்தி
பொடியா டியினூர் புகலூரே.
முடியா முதல் - அந்தம் அற்ற ஆதி ஆனவன்;
நான்முனிவர்க்கு ஆல்-அடியே மறை சொல் அருளாளன் - சனகாதியர்களுக்குக் கல்லால-மரத்தின்கீழ் மறைப்பொருளை உபதேசித்தவன்; அருள் மிக்கவன்;
வடி ஆர் மழுவாள் வலன் ஏந்தி - கூர்மை மிக்க மழுவாயுதத்தை வலக்கையில் ஏந்தியவன்; (வடி - கூர்மை); (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "மழுவாள் வலன் ஏந்தீ");
பொடியாடியின் ஊர் புகலூரே - திருநீற்றை நிறையப் பூசியவனான சிவபெருமான் உறையும் இடம் திருப்புகலூர்; (சம்பந்தர் தேவாரம் - 2.43.11 - "பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரை");
8)
மயலுற் றருமா மலைபேர்க்கும்
செயலுற் றவனைச் சிறிதூன்றித்
தயைமிக் கொருவாள் தருநாதர்
புயமெட் டினரூர் புகலூரே.
மயல் உற்று அரு-மா-மலை பேர்க்கும் செயல்-உற்றவனைச் சிறிது ஊன்றித் - ஆணவத்தால் அரிய பெரிய கயிலாய மலையைப் பெயர்த்த இராவணனனைச் சிறிதளவு திருப்பாத விரலை ஊன்றி நசுக்கி; (மயல் - மயக்கம்);
தயை மிக்கு ஒரு வாள் தரு நாதர் - (பின் அவன் அழுது தொழுது ஏத்த) மிகவும் கருணையோடு அவனுக்கு ஒப்பற்ற வாளை அருள்புரிந்த தலைவர்;
புயம் எட்டினர் ஊர் புகலூரே - எண்தோள்கள் உடைய பெருமானார் உறையும் இடம் திருப்புகலூர்; (புயம் - புஜம் - தோள்); (அப்பர் தேவாரம் - 5.89.3 - "தீத்தொழில் மூன்றினன்");
9)
பிரமன் திருமால் தொழநின்ற
பரமன் பலிதேர்ந் துழல்வள்ளல்
வரையே வளைவெஞ் சிலையாக்கிப்
புரமெய் தவனூர் புகலூரே.
பிரமன் திருமால் தொழ நின்ற பரமன் - நான்முகனும் விஷ்ணுவும் தொழும்படி ஜோதியாகி நின்ற, மிக மேலான பொருளாயிருப்பவன்;
பலிதேர்ந்து உழல் வள்ளல் - பிச்சையேற்றுத் திரியும் வள்ளல்;
வரையே வளை-வெஞ்-சிலை ஆக்கிப் புரம் எய்தவன் ஊர் புகலூரே - மேருமலையையே வளைக்கும் கொடிய வில் ஆக்கி முப்புரங்களை (ஒரு கணையால்) எய்த பெருமான் உறையும் இடம் திருப்புகலூர்; (வரை - மலை); (சிலை - வில்);
10)
கறைமிக் கமனத் தினர்நாளும்
புறனைப் பறைவார் பொருளல்ல
மறைநற் றமிழோ திடுவார்க்குப்
பொறைமிக் கவனூர் புகலூரே.
கறை மிக்க மனத்தினர் நாளும் புறனைப் பறைவார்; பொருள் அல்ல - வஞ்சம் மிக்க மனத்தினர்கள் தினந்தோறும் பழிச்சொற்களைச் சொல்வர்கள்; அவை பொருளற்றவை; (அந்தப் பொய்களை நீங்கள் மதிக்கவேண்டா); (பறைதல் - சொல்லுதல்);
மறை நற்றமிழ் ஓதிடுவார்க்குப் - பக்தியோடு வேதமந்திரஙளையும் தமிழ்ப் பாமாலைகளையும் ஓதி வழிபடும் அன்பர்களுக்கு;
பொறை மிக்கவன் ஊர் புகலூரே - மிகுந்த கருணையோடு குற்றங்களைப் பொறுத்து அருளும் சிவபெருமான் உறையும் இடம் திருப்புகலூர்; (பொறை - பொறுமை; குற்றம் பொறுத்தல்; அருள்);
(அப்பர் தேவாரம் - 4.96.8 - "இமையோர் பொறையிரப்ப"); (அப்பர் தேவாரம் - 6.56.9 - "பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி");
11)
திகழ்தீ வடிவன் திருநீற்றன்
புகழ்மா லைகளால் பொலிபூவால்
இகழா திருதாள் தொழுதார்க்குப்
புகலா னவனூர் புகலூரே.
திகழ்-தீ வடிவன் - திகழும் தீப் போன்ற செம்மேனியன்;
திருநீற்றன் - திருநீற்றைப் பூசியவன்;
புகழ்மாலைகளால் பொலி-பூவால் இகழாது இரு-தாள் தொழுதார்க்குப் - பாமாலைகளாலும் பொலிகின்ற பூக்களாலும் மறத்தல் இன்றி இரண்டு பாதங்களைத் தொழும் அன்பர்களுக்கு; (இகழ்தல் - மறத்தல்);
புகல் ஆனவன் ஊர் புகலூரே - துணை (/ புகலிடம்) ஆன சிவபெருமான் உறையும் இடம் திருப்புகலூர்; (புகல் - துணை; பற்றுக்கோடு; அடைக்கலம்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment