Friday, March 28, 2025

P.364 - சாட்டியக்குடி - வெண்பிறை சூடியை

2016-11-29

P.364 - சாட்டியக்குடி

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

வெண்பிறை சூடியை விடைய தேறியை

விண்பணி நாதனை வேத கீதனைத்

தண்பொழில் சூழ்தரு சாட்டி யக்குடி

எண்குணத் தீசனை எண்ணு நெஞ்சமே.


வெண்பிறை சூடியை - வெண்திங்களைச் சூடையவனை;

விடையது ஏறியை - இடபவாகனனை;

விண் பணி நாதனை - தேவர்கள் தொழும் தலைவனை;

வேத-கீதனைத் - வேதங்களைப் பாடியருளியவனை;

தண்-பொழில் சூழ்தரு சாட்டியக்குடி - குளிர்ந்த சோலை சூழ்ந்த சாட்டியக்குடியில் உறைகின்ற; (தருதல் - ஒரு துணைவினை);

எண்குணத்து ஈசனை எண்ணு நெஞ்சமே - எண்குணங்கள் உடைய ஈசனை, நெஞ்சே நீ எண்ணு;


2)

விண்ணவர் போற்றிட வேலை நஞ்சையுண்

அண்ணலை அரையினில் அரவ நாணனைத்

தண்ணிள மதியனைச் சாட்டி யக்குடிப்

பெண்ணொரு பாகனைப் பேணு நெஞ்சமே.


வேலை நஞ்சை உண் அண்ணலை - கடல்-விஷத்தை உண்ட பெருமானை;

தண்-இள-மதியனை - குளிர்ந்த இளம்பிறையை அணிந்தவனை; (அப்பர் தேவாரம் - 4.88.6 - "திருவுடைத் தேச மதியனை");


3)

பொருமத கரியுரி போர்த்த வீரனை

ஒருமழ விடையனை உரகத் தாரனைத்

தருமலர்ப் பொழிலணி சாட்டி யக்குடிக்

கருமுகிற் கண்டனைக் கருது நெஞ்சமே.


பொரு-மத-கரி உரி போர்த்த வீரனை - போர் செய்த மதயானையின் தோலைப் போர்த்த வீரனை;

ஒரு மழ-விடையனை - ஒப்பற்ற இள-எருதினை வாகனமாக உடையவனை;

உரகத் தாரனைத் - பாம்பை மாலையாக அணிந்தவனை;

தரு-மலர்ப்-பொழில் அணி சாட்டியக்குடிக் - மரங்களில் மலர் நிறைந்த சோலை சூழ்ந்த சாட்டியக்குடியில் உறைகின்ற;

கருமுகில்-கண்டனைக் கருது நெஞ்சமே - கரிய மேகம் போன்ற கண்டத்தை உடைய பெருமானை, மனமே, எண்ணுவாயாக / விரும்புவாயாக;


4)

செய்யனை மெய்யனைத் தீயை ஏந்திய

கையனைக் காமனைக் காய்ந்த கண்ணனைத்

தையலொர் கூறனைச் சாட்டி யக்குடி

மையணி கண்டனை மறவல் நெஞ்சமே.


செய்யனை மெய்யனைத் - செம்மேனியனை, மெய்ப்பொருளை;

தீயை ஏந்திய கையனைக் - கையில் நெருப்பை ஏந்தியவனை;

காமனைக் காய்ந்த கண்ணனைத் - மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணனை;

தையல் ஒர் கூறனைச் - மாது ஒரு பாகனை;

சாட்டியக்குடி மை அணி கண்டனை மறவல் நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற நீலகண்டனை, மனமே, மறவாதே; (மறவல் - மறவாதே என்ற ஏவல் - மறவாது நினை); (அப்பர் தேவாரம் - 5.57.1 - "கோளிலி மன்னனே அடியேனை மறவலே");


5)

கலனென அயன்சிரம் கையில் ஏந்திய

தலைவனைத் தந்தையும் தாயும் இல்லியைச்

சலமலை சடையனைச் சாட்டி யக்குடி

மலைமகள் கணவனை மறவல் நெஞ்சமே.


கலன் என அயன் சிரம் கையில் ஏந்திய தலைவனைத் - பிச்சைப்பாத்திரமாகப் பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திய தலைவனை;

தந்தையும் தாயும் இல்லியைச் - தாய்தந்தை இல்லாதவனை;

சலம் அலை சடையனைச் - கங்கைநதி அலைகின்ற (/ அலைக்கின்ற) சடையை உடையவனை;

சாட்டியக்குடி மலைமகள் கணவனை மறவல் நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்றவனும் பார்வதி நாயகனும் ஆன சிவபெருமானை, மனமே, மறவாதே; (மறவல் - மறவாதே என்ற ஏவல் - மறவாது நினை);


6)

ஆழ்கடல் நஞ்சினை ஆர்ந்த கண்டனைச்

சூழ்பவர்க் கின்னருள் சொரியும் வள்ளலைத்

தாழ்பொழில் சூழ்தரு சாட்டி யக்குடிப்

போழ்மதிச் சடையனைப் போற்று நெஞ்சமே.


ஆழ்கடல் நஞ்சினை ஆர்ந்த கண்டனைச் - ஆழம் மிக்க கடலில் தோன்றிய விஷத்தை உண்ட கண்டம் உடையவனை;

சூழ்பவர்க்கு இன்னருள் சொரியும் வள்ளலைத் - வலம்செய்யும் பக்தர்களுக்கு இனிய அருளைப் பொழியும் வள்ளலை;

தாழ்-பொழில் சூழ்தரு சாட்டியக்குடிப் - தாழும் சோலைகள் சூழும் திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற;

போழ்-மதிச் சடையனைப் போற்று நெஞ்சமே - திங்கள்-துண்டத்தை அணிந்த சடையனை, மனமே, போற்றுவாயாக; (போழ் - பிளவு; துண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 3.4.2 - "போழிள மதிவைத்த புண்ணியனே");


7)

தொடைபல சாத்திய தொண்ட ரைக்கொல

அடைநமன் தனையுதைத் தருள்செய் அண்ணலைச்

சடைமிசை அரவனைச் சாட்டி யக்குடி

விடையமர் வேந்தனை விரவு நெஞ்சமே.


தொடை பல சாத்திய தொண்டரைக் கொல அடை - பல மாலைகளைச் சாத்தி வழிபட்ட மார்க்கண்டேயரைக் கொல்ல அவரை அணுகிய;

நமன்தனை உதைத்து அருள்செய் அண்ணலைச் - காலனை உதைத்து அருளிய தலைவனை;

சடைமிசை அரவனைச் - சடைமேல் பாம்பை அணிந்தவனை;

சாட்டியக்குடி விடை அமர் வேந்தனை விரவு நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற இடபவாகனனை, மனமே, பொருந்துவாயாக; (விரவுதல் - பொருந்துதல்; அடைதல்; கலத்தல்);


8)

சிந்தைசெய் யாதுயர் சிலம்பு பேர்த்தவன்

வெந்துயர் கொண்டழ விரலை ஊன்றிவாள்

தந்தபி ரான்தனைச் சாட்டி யக்குடி

எந்தையை நித்தலும் எண்ணு நெஞ்சமே.


சிந்தை-செய்யாது உயர் சிலம்பு பேர்த்தவன் - கொஞ்சமும் யோசியாமல் உயர்ந்த கயிலைமலையைப் பெயர்த்த இராவணன்; (சிலம்பு - மலை); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.360 - "செப்பருங் கயிலைச்சிலம்படி")

வெந்துயர் கொண்டு அழ விரலை ஊன்றி - மிக வருந்தி அழும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி;

வாள் தந்த பிரான்தனைச் - (பின் அவன் போற்றிப் பாட இரங்கி அவனுக்கு) ஒரு வாளையும் அருள்செய்த தலைவனை;

சாட்டியக்குடி எந்தையை நித்தலும் எண்ணு நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற இடபவாகனனை, மனமே, எந்நாளும் எண்ணுவாயாக;


9)

பனிமல ரோனரி பரவு சோதியைப்

புனிதனை வெண்பொடி பூசு மூர்த்தியைத்

தனிவிடைப் பாகனைச் சாட்டி யக்குடி

இனிதுறை ஏந்தலை எண்ணு நெஞ்சமே.


பனிமலரோன் அரி பரவு சோதியைப் - குளிர்ந்த தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும் திருமாலும் துதிக்கின்ற ஜோதி வடிவனை; (சம்பந்தர் தேவாரம் - 3.92.9 - "அரவணை யவனொடு பனிமலரோனுங் காணா");

புனிதனை, வெண்பொடி பூசு மூர்த்தியைத் - தூயனைத், திருநீற்றைப் பூசிய கடவுளை;

தனி விடைப்பாகனைச் - ஒப்பற்ற இடபவாகனனை;

சாட்டியக்குடி இனிது உறை ஏந்தலை எண்ணு நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் இனிதே உறைகின்ற பெருமானை, மனமே, எண்ணுவாயாக;


10)

புதுநெறி என்றுரை பொய்யர் சொல்லிடும்

அதுநெறி அன்றென அறிமின் ஆறணி

சதுரனை மணங்கமழ் சாட்டி யக்குடி

மதிபுனை மைந்தனை வாழ்த்தி வாழ்மினே.


புது நெறி என்று உரை பொய்யர் சொல்லிடும் அது நெறி அன்று என அறிமின் - புதிய மார்க்கம் என்று உரைக்கின்ற பொய்யர்கள் சொல்லும் அது உய்தி தரும் மார்க்கம் அன்று என்று அறியுங்கள்; (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

ஆறு அணி சதுரனை - கங்கையை அணிந்த சமர்த்தனை;

மணம் கமழ் சாட்டியக்குடி மதி புனை மைந்தனை வாழ்த்தி வாழ்மினே - (மலர்ச்சோலைகளிலிருந்து வீசுகின்ற) வாசனை கமழ்கின்ற திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற சந்திரசேகரனை வாழ்த்தி இன்புற்று வாழுங்கள்; (மைந்தன் - இளைஞன்; வீரன்);


11)

இமையவர் தலைவனை ஏல வார்குழல்

உமையவள் கொழுநனை ஒண்ம ழுப்படை

தமருகம் ஏந்தியைச் சாட்டி யக்குடிக்

கமழ்சடைக் கடவுளைக் கருத உய்தியே.


இமையவர் தலைவனை - தேவர் கோனை;

ஏல வார்-குழல் உமையவள் கொழுநனை - மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலை உடைய உமாதேவிக்குக் கணவனை;

ஒண்-மழுப்படை தமருகம் ஏந்தியைச் - ஒளிவீசும் மழுவாயுதத்தையும் உடுக்கையையும் கையில் ஏந்தியவனை;

சாட்டியக்குடிக் கமழ்-சடைக் கடவுளைக் கருத உய்தியே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, வாசம் கமழும் சடையை உடைய பெருமானை, விரும்பி எண்ணினால் உய்வு கிட்டும்; (கருதுதல் - விரும்புதல்; எண்ணுதல்); (உய்தி - ஈடேற்றம்)


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment