Friday, March 28, 2025

V.039 - மாடகம் என்னும் - தனிப்பாடல்

2016-11-25

V.039 - மாடகம் என்னும் - தனிப்பாடல்

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


மாடகம் என்னும் மயக்கத்தால் உன்னடியை

நாடகம் இல்லாது நானிலத்தில் உழல்வேற்குப்

பாடகம் தந்தருள்செய் பரம்பரனே பிணமெரியும்

காடகம் என்றமர்ந்து களித்தாடும் கண்ணுதலே.


மாடு அகம் என்னும் மயக்கத்தால் - பொருள், குடும்பம், என்ற மயக்கங்களால்,

உன் அடியை நாடு அகம் இல்லாது நானிலத்தில் உழல்வேற்குப் - உன் திருவடியை நாடுகின்ற மனம் இல்லாமல் இவ்வுலகில் உழல்கின்ற எனக்கு;

பாடு அகம் தந்து அருள்செய் பரம்பரனே - (உன்னைப்) பாடுகின்ற மனம் தந்து அருள்புரிவாயாக, பரம்பரனே; (பரம்பரன் - மேலோர்க்கும் மேலானவன்);

பிணம் எரியும் காடு அகம் என்று அமர்ந்து களித்து ஆடும் கண்ணுதலே - சுடுகாடே இடமாக விரும்பி, அங்கே மகிழ்ந்து திருநடம் செய்யும் நெற்றிக்கண்ணனே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment