2016-12-09
P.366 - அம்பர் (அம்பல்)
---------------------------------
(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)
(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")
(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")
1)
மத்தனே கூவிள மாலையாய் வானவர் வாழ்த்த நஞ்சுண்
பித்தனே பெண்ணொரு பங்கனே காட்டினிற் பேயொ டாடும்
அத்தனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
முத்தனே நித்தலும் நின்திருப் புகழலால் மொழிகி லேனே.
மத்தனே கூவிள-மாலையாய் - ஊமத்தமலரையும் வில்வ-மாலையையும் அணிந்தவனே;
வானவர் வாழ்த்த நஞ்சு உண் பித்தனே - தேவர்கள் இறைஞ்ச, இரங்கி விடத்தை உண்ட பேரருளாளனே;
பெண் ஒரு பங்கனே - உமையொரு பாகனே;
காட்டினில் பேயொடு ஆடும் அத்தனே - சுடுகாட்டில் பேய்களோடு ஆடுகின்றவனே;
அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
முத்தனே - இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனே;
நித்தலும் நின் திருப்புகழ் அலால் மொழிகிலேனே - நாள்தோறும் உன் திருப்புகழை அன்றி வேறு மொழியமாட்டேன்;
2)
எண்ணிலாப் பேரினாய் மணமலி வாளியை எய்த வேளைக்
கண்ணினாற் கண்டுநீ றாக்கினாய் சடையிடைக் கங்கை தாங்கும்
அண்ணலே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
வெண்ணிலாச் சூடியே நின்னடித் துணையலால் வேறி லேனே.
எண் இலாப் பேரினாய் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவனே;
மணம் மலி வாளியை எய்த வேளைக் கண்ணினால் கண்டு நீறு ஆக்கினாய் - வாசமலர்க் கணையை எய்த மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்துச் சாம்பல் ஆக்கியவனே; (வாளி - அம்பு); (வேள் - மன்மதன்);
சடையிடைக் கங்கை தாங்கும் அண்ணலே - சடையில் கங்கையைத் தாங்கும் பெருமானே;
அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
வெண்ணிலாச் சூடியே - சந்திரசேகரனே;
நின் அடித்-துணை அலால் வேறு இலேனே - உன் இரு-திருவடிகளைத் தவிர வேறு ஒரு துணை எனக்கு இல்லை; (துணை - இரண்டு; உதவி; காப்பு);
3)
செய்யனே செல்வனே உண்பலிக் கலனெனச் சிரம தேந்து
கையனே காலனைக் காய்ந்துமார்க் கண்டரைக் காவல் செய்த
ஐயனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
மெய்யனே நின்மலர்த் திருவடித் துணையலால் வேறி லேனே.
செய்யனே செல்வனே - செம்மேனியனே; திருவெல்லாம் உடையவனே;
உண்பலிக்-கலன் எனச் சிரம்அது ஏந்து கையனே - பிச்சைப்பாத்திரமாகப் பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தியவனே;
காலனைக் காய்ந்து மார்க்கண்டரைக் காவல் செய்த ஐயனே - கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயரைக் காத்த தலைவனே; (காய்தல் - கோபித்தல்; அழித்தல்);
அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
மெய்யனே - மெய்ப்பொருள் ஆனவனே;
நின் மலர்த்-திருவடித்-துணை அலால் வேறு இலேனே - உன் மலர் போன்ற இரு-திருவடிகளைத் தவிர வேறு ஒரு துணை எனக்கு இல்லை; (துணை - இரண்டு; உதவி; காப்பு);
4)
கரியினீர் உரியினாய் கானிடை வேடனாய்க் காண்டி வற்குப்
பரிவினோ டொருபடை நல்கினாய் பரமனே பண்பு ரைக்க
அரியனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
பெரியனே நின்புகழ்ப் பேச்சலால் மற்றொரு பேச்சி லேனே.
கரியின் ஈர்-உரியினாய் - ஆனையின் உரித்த தோலைப் போர்த்தவனே; (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);
கானிடை வேடனாய்க் காண்டிவற்குப் பரிவினோடு ஒரு படை நல்கினாய் - காட்டில் ஒரு வேடன் உருவில் சென்று அருச்சுனனுக்கு இரங்கிப் பாசுபதாஸ்திரம் அளித்தவனே; (காண்டிவன் - காண்டீவன் என்பதன் குறுக்கல் - அர்ஜுனன்); (படை - ஆயுதம்);
பரமனே பண்பு உரைக்க அரியனே - மேலானவனே; உன் குணாதிசயங்களையெல்லாம் சொல்வதற்கு அரியவனே;
அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
பெரியனே - மகாதேவனே;
நின் புகழ்ப்-பேச்சு அலால் மற்றொரு பேச்சு இலேனே - உன் புகழைப் பேசுவது அன்றி வேறு பேச்சு எனக்கு இல்லை;
5)
தழலனே இகழ்ந்துரை தக்கன்செய் வேள்வியைத் தகர்த்த தேவா
மழவிடை ஊர்தியாய் வண்டமர் பூங்குழல் மங்கை பங்கா
அழகனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
குழகனே நின்கழற் புகழலால் மற்றொரு கூற்றி லேனே.
தழலனே - தீவண்ணனே; (தழல் - தீ);
இகழ்ந்து உரை தக்கன் செய் வேள்வியைத் தகர்த்த தேவா - அவமதித்த தக்கன் செய்த வேள்வியை அழித்த தேவனே;
மழ-விடை ஊர்தியாய் - இள-ஏற்றை வாகனமாக உடையவனே;
வண்டு அமர் பூங்குழல் மங்கை பங்கா - வண்டுகள் விரும்பும் மலர்க்குழல் உமையை ஒரு பங்காக உடையவனே; (* பூங்குழல் நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);
அழகனே - சுந்தரனே;
அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
குழகனே - இளைஞனே; (குழகு - இளமை; அழகு);
நின் கழற்புகழ் அலால் மற்றொரு கூற்று இலேனே - உன் திருவடிப் புகழை அன்றி வேறு பேச்சு எனக்கு இல்லை; (கூற்று - கூறுகை; மொழி);
6)
தரையினிற் கீறிய ஆழியாற் சலந்தரன் தனைய ழித்தாய்
இரவினில் ஆடிடும் ஏந்தலே இளமதிச் சென்னி யின்மேல்
அரவனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
குரவனே நின்னடி பரவிடும் கூற்றலாற் கூற்றி லேனே.
தரையினில் கீறிய ஆழியால் சலந்தரன்தனை அழித்தாய் - நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி, அதனால் ஜலந்தராசுரனை அழித்தவனே;
இரவினில் ஆடிடும் ஏந்தலே - நள்ளிருளில் கூத்தாடும் பெருமானே; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);
இளமதிச் சென்னியின்மேல் அரவனே - இளம்பிறை திகழும் திருமுடிமேல் பாம்பையும் அணிந்தவனே; (அரவு - பாம்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.43.3 - "வான்மதிச் சென்னியர்");
அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
குரவனே - குருவே; (குரவன் - குரு);
நின் அடி பரவிடும் கூற்று அலால் கூற்று இலேனே - உன் திருவடியைப் புகழும் பேச்சு அன்றி வேறு பேச்சு எனக்கு இல்லை; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);
7)
வேதியா அந்தகன் தனைச்செறு மூவிலை வேல னேபெண்
பாதியாம் மேனியாய் பாய்புலித் தோலினாய் பலிம கிழ்ந்த
ஆதியே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
சோதியே நின்னடித் துணையலால் மற்றொரு துணையி லேனே.
வேதியா - வேதியனே; (வேதியன் - வேதம் ஓதியவன்; வேதப்பொருள் ஆனவன்; வேதிப்பவன் என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
அந்தகன்தனைச் செறு மூவிலை வேலனே - அந்தகாசுரனைத் திரிசூலத்தால் குத்தி அழித்தவனே; (செறுதல் - அழித்தல்);
பெண் பாதி ஆம் மேனியாய் - திருமேனியில் ஒரு பாதி பெண் வடிவம் உடையவனே;
பாய்-புலித் தோலினாய் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவனே;
பலி மகிழ்ந்த ஆதியே - பிச்சையை விரும்பிய முதல்வனே; (பலி - பிச்சை); (மகிழ்தல் - விரும்புதல்);
அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
சோதியே - ஜோதி வடிவானவனே;
நின் அடித்-துணை அலால் மற்றொரு துணை இலேனே - உன் இரு-திருவடிகளைத் தவிர வேறு ஒரு துணை எனக்கு இல்லை; (துணை - இரண்டு; உதவி; காப்பு);
8)
தூற்றிமா மலையெடு தூர்த்தன இருபது தோள்நெ ரித்தாய்
ஆற்றமாட் டாதவன் அழுதிசை பாடவும் அருள்பு ரிந்தாய்
ஆற்றனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
ஏற்றனே நின்னடி இணையலால் ஒருதுணை இங்கிலேனே.
தூற்றி மா மலை எடு தூர்த்தன இருபது தோள் நெரித்தாய் - இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கொடியவனான இராவணனின் இருபது புஜங்களையும் நசுக்கியவனே; (தூர்த்தன் - கொடியவன்); (அ - ஆறாம் வேற்றுமை உருபு); (அப்பர் தேவாரம் - 5.52.10 - "தூர்த்தன் தோள்முடி தாளும் தொலையவே சேர்த்தினார் திருப்பாதத் தொருவிரல்");
ஆற்றமாட்டாது அவன் அழுது இசை பாடவும் அருள்புரிந்தாய் - வலியைத் தாங்கமுடியாமல் அவன் அழுது இசைபாடித் தொழவும் அவனுக்கு அருளியவனே;
ஆற்றனே - கங்காதரனே;
அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
ஏற்றனே - இடபவாகனே;
நின் அடி-இணை அலால் ஒரு துணை இங்கு இலேனே - உன் இரு-திருவடிகளைத் தவிர வேறு ஒரு துணை எனக்கு இங்கு இல்லை;
9)
பங்கயத் தயனொடு பாம்பணை மேலினான் பாதம் ஏத்தப்
பொங்கழல் ஆயினாய் பொற்சடை மேல்மதி பூண்டு கந்த
அங்கணா அரிசிலின் புனலடை வயலணி அம்ப ரிற்கோச்
செங்கணான் கட்டிய கோயிலாய் சீரையே செப்பும் நாவே.
பங்கயத்து அயனொடு பாம்பணை மேலினான் பாதம் ஏத்தப் பொங்கு அழல் ஆயினாய் - தாமரைப்பூமேல் இருக்கும் பிரமனும் நாகப்படுக்கையின்மேல் இருக்கும் திருமாலும் திருவடியைத் துதிக்கும்படி ஓங்கி உயர்ந்த ஜோதி ஆனவனே; (பாம்பு அணை - ஆதிசேஷனாகிய படுக்கை);
பொற்சடைமேல் மதி பூண்டு உகந்த அங்கணா - பொன் போன்ற செஞ்சடைமேல் சந்திரனை விரும்பி அணிந்த அருட்கண்ணனே; (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவபெருமான்);
அரிசிலின் புனலடை வயலணி அம்பரில் - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில்;
கோச்செங்கணான் கட்டிய கோயிலாய் - கோச்செங்கட்சோழன் கட்டிய கோயிலில் உறைகின்றவனே;
சீரையே செப்பும் நாவே - உன் திருப்புகழையே என் நாச் சொல்லும்;
10)
மிண்டராய் வெற்றுரை பேசுவார்க் கருளிலாய் வேத நாவா
பண்டைநாள் பிரமனுக் கருளினாய் வானவர் பரவ நின்ற
அண்டனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் நீல
கண்டனே நின்னறை கழலலால் ஒருதுணை காண்கி லேனே.
மிண்டராய் வெற்றுரை பேசுவார்க்கு அருள் இலாய் - கல்-நெஞ்சர்களாகிப் பொருளற்ற சொற்களைப் பேசுவார்க்கு அருள் இல்லாதவனே;
வேத-நாவா - வேதங்களைப் பாடியவனே;
பண்டைநாள் பிரமனுக்கு அருளினாய் - முற்காலத்தில் பிரமனுக்கு அருள்புரிந்தவனே; (* பிரமனுக்கு அருளியதைத் தலவரலாற்றில் காண்க. திருக்கோயிலின் உள்ளே "அன்னமாம் பொய்கை" என்று வழங்கப்படும் கிணறு உள்ளது; பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடிச் சிவனை வழிபட்டு அன்ன-வடிவம் பெற்ற சாபம் நீங்கப் பெற்றான் என்பது தலவரலாறு);
வானவர் பரவ நின்ற அண்டனே - தேவர்களால் வணங்கப்படுகின்ற கடவுளே; (அண்டன் - கடவுள்);
அரிசிலின் புனலடை வயலணி அம்பர் நீலகண்டனே - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற நீலகண்டனே;
நின் அறை-கழல் அலால் ஒரு துணை காண்கிலேனே - உன் ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியைத் தவிர வேறு துணை எனக்கு இல்லை;
11)
இமையவர் போற்றிட எயிலொரு மூன்றினை எய்த எந்தாய்
கமலமார் பாதனே கனல்மழு வாளனே கால காலா
அமலனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய
விமலனே என்பழ வினைதனைத் தீர்த்திட வேண்டி னேனே.
இமையவர் போற்றிட எயில் ஒரு மூன்றினை எய்த எந்தாய் - தேவர்கள் இறைஞ்சவும் இரங்கி முப்புரங்களை ஒரு கணையால் எய்த எம் தந்தையே; (எயில் - கோட்டை);
கமலம் ஆர் பாதனே - தாமரைமலர் போன்ற திருவடியை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);
கனல்-மழுவாளனே - ஒளிவீசும் மழுவை ஏந்தியவனே;
காலகாலா - காலனுக்குக் காலனே;
அமலனே - மாசற்றவனே;
அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;
விமலனே - தூயவனே;
என் பழவினைதனைத் தீர்த்திட வேண்டினேனே - என் பழவினைகளைத் தீர்த்து அருள வேண்டினேன்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment