2016-09-24
P.356 - வான்மியூர்
---------------------------------
(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா - அரையடி)
(சம்பந்தர் தேவாரம் - 3.52.1 - "வீடலால வாயிலாய்")
1)
ஏக மாகி நின்றவன் ஏல(ம்) நாறும் ஓதியாள்
பாக மாய பண்பினான் பாலு(ம்) நெய்யும் ஆடினான்
வாக னங்கள் மல்கிய வான்மி யூரில் மேயவன்
நாக நாண னைத்தொழ நன்மை நம்மை நண்ணுமே.
ஏகம் ஆகி நின்றவன் - ஒருவனாகியவன்;
ஏலம் நாறும் ஓதியாள் பாகம் ஆய பண்பினான் - மயிர்ச்சாந்து மணம் கமழும் கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (ஓதி - பெண்களின் கூந்தல்);
பாலும் நெய்யும் ஆடினான் - பாலாலும் நெய்யாலும் அபிஷேகம் செய்யப்படுபவன்;
வாகனங்கள் மல்கிய வான்மியூரில் மேயவன் - வாகனங்கள் நிறைந்த திருவான்மியூரில் உறைகின்றவன்; (மல்குதல் - அதிகமாதல்; நிறைதல்);
நாக நாணனைத் தொழ நன்மை நம்மை நண்ணுமே - பாம்பை அரைநாணாக (& மேருவில்லில் நாணாக) உடைய சிவபெருமானைத் தொழுதால், நம்மை நன்மைகள் வந்தடையும்; (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "பாம்பரை நாணனை");
2)
மானை ஏந்து கையனை மார்பில் நீறு பூசியைத்
தேனெய் ஆடும் ஈசனைச் சேவ தேறு செல்வனை
வானை எட்டு கட்டடம் மல்கு வான்மி யூர்தனில்
கோனை நாளும் வாழ்த்தினால் குற்ற மற்ற இன்பமே.
நீறு பூசி - திருநீற்றைப் பூசியவன்;
தேனெய் ஆடும் - தேன் நெய் ஆடும் - தேனாலும் நெய்யாலும் அபிஷேகம் செய்யப்படுகின்ற;
சேவது ஏறு செல்வனை - இடபத்தை ஊர்தியாக உடைய செல்வனை; (சே - இடபம்);
வானை எட்டு கட்டடம் - வானளாவிய கட்டடங்கள்;
கோன் - தலைவன்;
3)
வேலை நஞ்சு கண்டுவான் வேண்டி நிற்க உண்டருள்
நீல கண்டன் எம்பிரான் நெற்றி மேலொர் கண்ணினான்
மாலை வான்நி றத்தினான் வான்மி யூரில் மேயவன்
சூல பாணி தாள்தொழும் தொண்டர் துன்பம் நீங்குமே.
வேலை-நஞ்சு - கடல்-விடம்;
வான் - தேவர்கள்;
மாலை-வான் நிறத்தினான் - அந்திப்பொழுதில் விளங்கும் செவ்வானம் போன்ற நிறமுடையவன்;
4)
வெங்க ளிற்றைப் போரினில் வென்று தோலு ரித்தவன்
பொங்க ராவை மாலையாப் பூணு கின்ற மார்பினான்
வங்கம் ஆர்க டற்கரை வான்மி யூரில் மேயவன்
அங்க ணன்ப தந்தொழும் அன்பர் அல்லல் தீருமே.
வெங்களிற்றை - கொடிய யானையை;
பொங்கு அராவை மாலையாப் பூணுகின்ற மார்பினான் - சீறும் பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவன்;
வங்கம் ஆர் கடற்கரை - அலை மிகுந்த (& படகுகள் நிறைந்த) கடலின் கரையில்; (வங்கம் - அலை; படகு; மரக்கலம்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவபெருமான்;
பதம் - பாதம்; திருவடி;
5)
மண்டு காத லாலொரு மங்கை பங்கன் ஆயினான்
அண்டர் போற்றும் ஓரிறை அண்டி னார்க்கு நற்றுணை
வண்டி மல்கு வீதிசூழ் வான்மி யூரில் மேயவன்
தொண்டர் தங்கள் வாழ்வினில் துன்பம் என்ப தில்லையே.
மண்டு காதலால் ஒரு மங்கைபங்கன் ஆயினான் - மிகுந்த அன்பினால் தன் மேனியில் ஒரு பாதியை உமைக்குத் தந்தவன்; (மண்டுதல் - அதிகமாதல்; மிகுதல்);
அண்டர் போற்றும் ஓர் இறை - தேவர்கள் வணங்கும் ஒப்பற்ற தலைவன்; (அண்டர் - தேவர்); (ஒரு - ஒப்பற்ற);
அண்டினார்க்கு நற்றுணை - தன்னைச் சரண்-அடைந்தவர்களுக்கு நல்ல துணை; (அண்டுதல் - சரண்புகுதல்; ஆசிரயித்தல்);
வண்டி மல்கு வீதி சூழ் வான்மியூரில் மேயவன் - வாகனங்கள் நிறைந்த வீதிகள் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்றவன்;
தொண்டர்-தங்கள் வாழ்வினில் துன்பம் என்பது இல்லையே - அப்பெருமானுக்குத் திருத்தொண்டு செய்பவர்களது வாழ்க்கையில் துன்பமே இல்லை;
6)
ஆட வல்ல நாயகன் அங்கொர் ஓட்டில் உண்பலி
நாட வல்ல நம்பிரான் நக்க ரண்கள் சுட்டவன்
மாடம் ஓங்கு வீதிசூழ் வான்மி யூரில் மேயவன்
ஆட கப்ப தந்தொழும் அன்பர் பீடை நீங்குமே.
ஆட வல்ல நாயகன் - கூத்தப்பெருமான்;
அங்கு ஒர் ஓட்டில் உண்பலி நாட வல்ல நம் பிரான் - ஒரு மண்டையோட்டில் பிச்சை ஏற்கின்ற நம் தலைவன்; (அங்கு - அசை); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);
நக்கு அரண்கள் சுட்டவன் - சிரித்து முப்புரங்களை எரித்தவன்;
மாடம் ஓங்கு வீதி சூழ் வான்மியூரில் மேயவன் - உயர்ந்த மாடங்கள் விளங்கும் திருவான்மியூரில் உறைகின்றவன்;
ஆடகப்-பதம் தொழும் அன்பர் பீடை நீங்குமே - அப்பெருமானின் பொற்பாதத்தை வணங்கும் பக்தர்களது கஷ்டங்கள் நீங்கும்; (ஆடகம் - பொன்);
7)
கோடி நாமம் உள்ளவன் கூற்று தைத்த தாளினான்
ஈடி லாத பெற்றியான் ஈரம் மிக்க வேணியான்
மாடி வீடு மல்கிய வான்மி யூரில் மேயவன்
தோடி லங்கு காதினான் தொண்டர் அண்டம் ஆள்வரே.
கோடி நாமம் உள்ளவன் - எண்ணற்ற திருப்பெயர்கள் உடையவன்;
கூற்று உதைத்த தாளினான் - காலனைக் காலால் உதைத்தவன்;
ஈடு இலாத பெற்றியான் - ஒப்பற்ற பெருமை உடையவன்; (பெற்றி - பெருமை; இயல்பு);
ஈரம் மிக்க வேணியான் - அருள் மிக்கவன், சடையில் கங்கையை உடையவன்; (ஈரம் - நீர்ப்பற்று; அருள்); (வேணி - சடை); (சம்பந்தர் தேவாரம் - 3.53.3 - "ஈரமாய புன்சடை");
மாடி வீடு மல்கிய வான்மியூரில் மேயவன் - மாடிவீடுகள் நிறைந்த திருவான்மியூரில் உறைகின்றவன்;
தோடு இலங்கு காதினான் தொண்டர் அண்டம் ஆள்வரே - ஒரு காதில் தோடு அணிந்தவனான அர்த்தநாரீஸ்வரனுடைய அடியவர்கள் வானம் ஆளும் நன்னிலை பெறுவார்கள்;
8)
ஈசர் வெற்பெ டுத்தவன் ஏழி ரண்டொ டாறுதோள்
நாசம் ஆக ஓர்விரல் நாகம் மீது வைத்தவர்
வாசக் கொன்றை சூடினார் வான்மி யூரில் மேயவர்
தேச னார்ப தந்தனைச் சிந்தை செய்ய நன்மையே.
ஈசர் வெற்பு எடுத்தவன் ஏழிரண்டொடு ஆறு தோள் - ஈசனார் உறையும் கயிலைமலையைப் பெயர்க்கமுயன்ற இராவணனுடைய இருபது புஜங்களும்; (ஏழிரண்டொடு ஆறு = 7x2 + 6 = 20);
நாசம் ஆக ஓர் விரல் நாகம் மீது வைத்தவர் - அழியும்படி அம்மலையின்மேல் ஒரு விரலை ஊன்றியவர்; (நாகம் - மலை);
வாசக்-கொன்றை சூடினார் - நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவர்;
வான்மியூரில் மேயவர் - திருவான்மியூரில் உறைகின்றவர்;
தேசனார் பதந்தனைச் சிந்தை செய்ய நன்மையே - ஒளியுருவினர் ஆன அப்பெருமானாரின் திருவடியைத் தியானித்தால் நன்மை உண்டாகும்; (தேசன் - ஒளி வடிவினன்);
9)
அம்பு யத்தன் அச்சுதன் அன்று நேடி வாடியே
எம்பி ரானெ மக்கருள் என்ன நின்ற சோதியான்
வம்பு நாறு கொன்றையான் வான்மி யூரில் மேயவன்
அம்பொ னார்ப தந்தொழும் அன்பர் இன்பர் ஆவரே.
அம்புயத்தன் அச்சுதன் அன்று நேடி வாடியே - தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் முன்பு அடிமுடியைத் தேடி வாடி; (அம்புயத்தன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);
"எம்பிரான் எமக்கு அருள்" என்ன நின்ற சோதியான் - "எம் தலைவனே! எமக்கு அருள்வாயாக" என்று துதிக்கும்படி ஜோதிவடிவில் நின்றவன்;
வம்பு நாறு கொன்றையான் - மணம் கமழும் கொன்றைமலரைச் சூடியவன்; (வம்பு - வாசனை); (நாறுதல் - மணம் வீசுதல்);
வான்மியூரில் மேயவன் அம்பொன் ஆர் பதம் தொழும் அன்பர் இன்பர் ஆவரே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுடைய அழகிய பொன் போன்ற திருவடியை வழிபடும் பக்தர்கள் இன்பம் அடைவார்கள்; (அம் - அழகு); (ஆர்தல் - ஒத்தல்);
10)
மிண்டர் பேசு பொய்வலை வீழ்ந்து துன்பு றேன்மினீர்
இண்டை யாக வெண்மதி ஏறு கின்ற சென்னிமேல்
வண்ட மர்ந்த கொன்றையான் வான்மி யூரில் மேயவன்
தொண்ட மர்ந்த நெஞ்சரைச் சூழும் இன்பம் என்றுமே.
மிண்டர் பேசு பொய்வலை வீழ்ந்து துன்புறேன்மின் நீர் - கல்நெஞ்சர்கள் பேசுகின்ற பொய்கள் என்ற வலையில் விழுந்து நீங்கள் துன்பம் அடையாதீர்கள்; (மிண்டர் - கல்நெஞ்சம் உடையவர்கள்; அறிவில்லாதவர்கள்);
இண்டையாக வெண்மதி ஏறுகின்ற சென்னிமேல் - இண்டைமாலை போல வெண்பிறை இருக்கும் திருமுடிமேல்; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);
வண்டு அமர்ந்த கொன்றையான் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலரைச் சூடியவன்; (அமர்தல் - விரும்புதல்);
வான்மியூரில் மேயவன் தொண்டு அமர்ந்த நெஞ்சரைச் சூழும் இன்பம் என்றுமே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுக்குத் தொண்டு செய்ய விரும்பிய மனம் உடையவர்களை என்றும் இன்பமே சூழும்;
11)
காண லற்ற தன்மையைக் காம னுக்க ளித்தவன்
பூண லாஅ ராக்களைப் பூண்க ளாக ஏற்றவன்
வாணி லாவ ணிந்தவன் வான்மி யூரில் மேயவன்
தாணி லாவு நெஞ்சரைச் சாரும் இன்பம் என்றுமே.
காணல் அற்ற தன்மையைக் காமனுக்கு அளித்தவன் - மன்மதனை யார் கண்ணுக்கும் புலப்படாதபடி செய்தவன் (= அவனை எரித்துப், பின் உருவமின்றி வாழுமாறு அவனை உயிர்ப்பித்தவன்);
பூண் அலா அராக்களைப் பூண்களாக ஏற்றவன் - யாராலும் ஆபரணமாக அணிய ஆகாத பாம்புகளை அணிந்தவன்; (பூண் - ஆபரணம்); (அலா - அல்லா); (அரா - பாம்பு); (அப்பர் தேவாரம் - 6.11.6 - "பூணலாப் பூணானை");
வாள்-நிலா அணிந்தவன் - ஒளி பொருந்திய சந்திரனை அணிந்தவன்; (வாள் - ஒளி); (வாணிலா = வாள் நிலா);
வான்மியூரில் மேயவன் தாள் நிலாவு நெஞ்சரைச் சாரும் இன்பம் என்றுமே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுடைய திருவடிகளைத் தியானிக்கும் மனம் உடையவர்களை என்றும் இன்பமே அடையும்; (தாணிலாவு - தாள் நிலாவு); (நிலாவுதல் - தியானித்தல்; நிலைத்திருத்தல்); (சார்தல் - சென்றடைதல்; பொருந்தியிருத்தல்);
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:
அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.
1, 4 சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.
2, 5 சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.
3, 6 சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.
(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")
(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment