Saturday, February 22, 2025

P.355 - ஆனைக்கா - நீரார் சடையுடையானை

2016-09-21

P.355 - ஆனைக்கா

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் கூவிளம் தேமா" - அரையடி அமைப்பு; * யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க)

(சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "மந்திர மாவது நீறு")


1)

நீரார் சடையுடை யானை நெற்றியிற் கண்ணுடை யானைக்

காரார் மிடறுடை யானைக் காரிகை பங்குடை யானைக்

கூரார் மழுவுடை யானைக் கோணல் மதியணிந் தானைச்

சீரார் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


நீர் ஆர் சடைடையானை - சடையில் கங்கையை அணிந்தவனை; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

நெற்றியில் கண் உடையானைக் - நெற்றிக்கண்ணனை;

கார் ஆர் மிடறு உடையானைக் - நீலகண்டனை;

காரிகை பங்கு உடையானைக் - பெண்ணொரு பங்கனை;

கூர் ஆர் மழு உடையானைக் - கூரிய மழுவை ஏந்தியவனை;

கோணல் மதி அணிந்தானைச் - வளைந்த திங்களைச் சூடியவனை;

சீர் ஆர் திருவானைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - அழகிய, திரு மிகுந்த திருவானைக்காவில் உறையும் செல்வனை, மனமே நீ சிந்திப்பாயாக; (மனன் - மனம்);


2)

சொல்ல அரும்புக ழானைச் சொல்லி வழிபடு வார்க்கு

நல்ல கதியருள் வானை நக்கு மதிலெரித் தானை

அல்லிற் கணம்புடை சூழ ஆடி மகிழ்பெரு மானைச்

செல்வத் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


நக்கு - சிரித்து;

அல் - இரவு;

கணம் - பூதகணங்கள்;


3)

வெங்கா னிடைநடம் ஆடும் விகிர்தனைத் தேவர்கள் எல்லாம்

எங்கோன் எனஅடி போற்றும் இறைவனை ஏந்திழை யாளைப்

பங்கா உடைய பரனைப் பால்மதி தன்னை அணாவும்

தெங்கார் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வெங்கான் - சுடுகாடு;

விகிர்தன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;

ஏந்திழையாள் - உமாதேவி;

பங்கா - பங்காக;

அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்;

பால்மதி தன்னை அணாவும் தெங்கு ஆர் திருவானைக்காவில் - பால் போன்ற வெண்ணிறம் உள்ள சந்திரனை நெருங்கும்படி உயர்ந்த தென்னைமரங்கள் நிறைந்த திருவானைக்காவில்;


4)

வெண்பொடி மேனியி னானை வெள்விடை ஊர்தியி னானைப்

பண்பொலி பாடல்கள் பாடிப் பாத இணைதொழு வார்க்கு

விண்பொலி வாழ்வருள் வானை வெண்ணாவற் கீழிருந் தானைத்

தெண்புனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வெண்பொடி - திருநீறு;

பண் பொலி பாடல்கள் - இசை பொருந்திய பாடல்கள்;

விண் பொலி வாழ்வு - விண்ணில் விளங்குகின்ற வாழ்வு;

வெண்ணாவற்கீழ் இருந்தானை - திருவானைக்காவில் வெண்ணாவல்-மரத்தின்கீழ் இருந்தவனை; (வெண்ணாவல்-மரம் - திருவானைக்காவில் தலவிருட்சம்);

தெண்-புனல் சூழ் - தெளிந்த நீரால் சூழப்பட்ட;


5)

தரையினிற் சக்கரம் இட்டுச் சலந்தர னைத்தடிந் தானை

அரையினிற் கச்சென நாகம் ஆர்த்த பெருமையி னானை

விரைகமழ் பூக்களைத் தூவி வேழம் வணங்கிய கோனைத்

திரைபுனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


தரையினில் சக்கரம் இட்டுச் சலந்தரனைத் தடிந்தானை - தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து அதுகொண்டு சலந்தராசுரனை அழித்தவனை;

அரையினில் கச்சு என நாகம் ஆர்த்த பெருமையினானை - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய பெருமை உடையவனை; (ஆர்த்தல் - கட்டுதல்);

விரை கமழ் பூக்களைத் தூவி வேழம் வணங்கிய கோனை - மணம் கமழும் பூக்களைத் தூவி யானை வழிபாடு செய்த தலைவனை; (* திருவானைக்காவின் தலவரலாறு);

திரை-புனல் சூழ் ஆனைக்காவில் - அலைமோதும் காவிரி சூழ்ந்த திருவானைக்காவில்; (திரைதல் / திரைத்தல் - அலையெழுதல்);


6)

எழும்பொழு தீசன் பெயரை இயம்பிடும் அன்பரை வானும்

தொழும்படி உம்பர் இருத்தும் தூயனை மைம்மிடற் றானை

விழும்புனற் கங்கையைச் செம்பொன் வேணிக் கரந்தருள் வானைச்

செழும்புனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


எழும்பொழுது ஈசன் பெயரை இயம்பிடும் அன்பரை வானும் தொழும்படி உம்பர் இருத்தும் தூயனை - இறைவன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே துயிலெழும் பக்தர்களைத் தேவரும் வணங்கும்படி சிவலோகத்தில் வைக்கின்ற தூயவனை; (வான் - தேவர்கள்); (உம்பர் - மேலிடம்); (சம்பந்தர் தேவாரம் - 2.18.7 - "பெருமான் கழல் வாழ்க எனா எழுவாள்");

மைம் மிடற்றானை - நீலகண்டனை;

விழும் புனல்-கங்கையைச் செம்பொன் வேணிக் கரந்தருள்வானைச் - வானிலிருந்து விரைந்து இழிந்த கங்கைநதியைச் செம்பொன் போன்ற சடையினுள்ளே ஒளித்தவனை; (வேணி - சடை);

செழும் புனல் சூழ் ஆனைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - வளம் மிக்க காவிரியால் சூழப்பட்ட திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக.


7)

கோணா மனத்தினர் ஆகிக் கும்பிடு வார்க்கருள் வானைப்

பூணா அரவணிந் தானைப் பொருப்பைச் சிலையா வளைத்து

நாணா அரவினைக் கட்டி நள்ளார் புரமெரித் தானைச்

சேணார் மதிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


கோணா மனத்தினர் ஆகிக் கும்பிடுவார்க்கு அருள்வானை - மனத்தில் வஞ்சம் இன்றி வழிபடும் அன்பருக்கு அருள்செய்பவனை; (கோணா - கோணாத; கோணுதல் - வளைதல்; நெறிபிறழ்தல்);

பூணா அரவு அணிந்தானை - பாம்பை ஆபரணமாக அணிந்தவனை; (பூணா - பூணாக; பூண் - அணி; ஆபரணம்);

பொருப்பைச் சிலையா வளைத்து - மலையை வில்லாக வளைத்து; (பொருப்பு - மலை); (சிலையா - சிலையாக; சிலை - வில்);

நாணா அரவினைக் கட்டி - (அந்த வில்லில்) பாம்பை நாணாகக் கட்டி;

நள்ளார் புரம் எரித்தானை - பகைவர்களுடைய முப்புரங்களை எரித்தவனை; (நள்ளார் - பகைவர்);

சேண் ஆர் மதில் ஆனைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - உயர்ந்த மதிலால் சூழப்பட்ட திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக. (சேண் - உயரம்);


8)

இகழும் மொழிகளைச் சொல்லி இருங்கயி லாயம் எடுத்த

தகவில் தசமுகன் கத்தத் தாள்விரல் ஊன்று பிரானைப்

புகழும் அடியவர் தங்கள் பொல்லா வினையறுப் பானைத்

திகழும் பொழிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


இரும்-கயிலாயம் எடுத்த - பெரிய கயிலைமலையைத் தூக்கிய;

தகவு இல் தசமுகன் கத்த - நற்குணம் இல்லாத இராவணன் கத்தும்படி;


9)

கோனார் எனவாது செய்த குளிர்மல ரானரி காணா

வானார் கனலுரு வானை மணிதிகழ் மாமிடற் றானை

மானார் கரமுடை யானை மார்பில்வெண் ணூலணிந் தானைத்

தேனார் பொழிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


"கோன் ஆர்?" என வாது செய்த குளிர்மலரான் அரி காணா - "தலைவன் யார்" என்று வாதிட்ட பிரமன் திருமால் இவர்களால் அடிமுடி காண இயலாத;

வான் ஆர் கனல் உருவானை - வானோங்கிய ஜோதிவடிவினனை;

மணி திகழ் மா மிடற்றானை - கரிய மணி திகழும் அழகிய கண்டனை;

மான் ஆர் கரம் உடையானை - கையில் மானை ஏந்தியவனை;

மார்பில் வெண்ணூல் அணிந்தானை - மார்பில் பூணூல் அணிந்தவனை;

தேன் ஆர் பொழில் ஆனைக்காவிற் செல்வனைச் சிந்தி மனனே - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக. (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


10)

ஒருவழி தன்னை உணரார் உளறிடும் பொய்களை எல்லாம்

பொருளென எண்ணி மயங்கேல் பூதப் படையுடை எம்மான்

அருளெனப் போற்றி வணங்கில் அல்லற் கடல்கடப் பிப்பான்

திருமலி தென்னானைக் காவிற் செழுநீர்த் திரளாம் சிவனே.


மயங்கேல் - மயங்காதே;

"பூதப்-படையுடை எம்மான்! அருள்!" எனப் போற்றி வணங்கில் அல்லற்-கடல் கடப்பிப்பான் - "பூதப்படை உடைய எம்மானே! அருள்க!" என்று போற்றி வணங்கினால் துன்பக்கடலைக் கடக்கச்செய்வான்;

திரு மலி தென் ஆனைக்காவிற் செழுநீர்த் திரள் ஆம் சிவனே - திரு மிக்க அழகிய ஆனைக்காவில் உறைகின்ற, செழுநீர்த் திரள் ஆன சிவபெருமான்; (அப்பர் தேவாரம் - 6.63.1 - "தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே");


11)

நீர்மலி செஞ்சடை மீது நீள்மதி பாம்பணிந் தானே

கார்மலி கண்டத்தி னானே கல்லால் நிழலினாய் என்று

பேர்பல சொல்லி வணங்கிற் பெருந்துணை ஆகிப் புரப்பான்

சீர்மலி தென்னானைக் காவிற் செழுநீர்த் திரளாம் சிவனே.


நீர் மலி செஞ்சடைமீது நீள்-மதி பாம்பு அணிந்தானே - "கங்கையை அணிந்த சடையின்மேல் பிறையையும் பாம்பையும் சூடியவனே;

கார் மலி கண்டத்தினானே - நீலகண்டனே;

கல்லால் நிழலினாய் என்று பேர்பல சொல்லி வணங்கில் - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருப்பவனே" என்று பல திருநாமங்களைச் சொல்லி வணங்கினால்;

பெருந்-துணை ஆகிப் புரப்பான் - பெரிய துணை ஆகிக் காப்பவன்;

சீர் மலி தென்-ஆனைக்காவில் செழுநீர்த்-திரள் ஆம் சிவனே - சீர் மிகுந்த அழகிய ஆனைக்காவில் செழுநீர்த்திரள் ஆன சிவபெருமான்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • அறுசீர் விருத்தம் - விளம் கூவிளம் தேமா - அரையடி அமைப்பு;

  • அரையடியினுள் வெண்டளை அமையும். 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளை தேவை இல்லை.

  • அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீர். ((i.e. எல்லா அடிகளிலும் 3-ஆம், 6-ஆம் சீர்கள் மாச்சீர்);

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.

(சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "மந்திர மாவது நீறு")

(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்")


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment