2017-05-14
P.397 - தண்டீச்சரம்
---------------------------------
(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")
* (தண்டீஸ்வரர் கோயில் - சென்னையில் வேளச்சேரியில் உள்ளது)
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
1)
கருமா மலைபோன்ற கரியை உரிசெய்தான்
கருணாம் பிகைபாகன் கழலைத் தொழுவார்க்குத்
தருவான் தனிவள்ளல் தண்டீச் சர(ம்)மேய
பெருமான் திருநாமம் பேணாய் மடநெஞ்சே.
கரு-மா-மலை போன்ற கரியை உரிசெய்தான் - கரிய பெரிய மலை போன்ற யானையின் தோலை உரித்தவன்;
கருணாம்பிகை பாகன் - கருணாம்பிகை என்ற திருநாமம் உடைய உமையை ஒரு பாகமாக உடையவன்; (* கருணாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);
கழலைத் தொழுவார்க்குத் தருவான் தனி வள்ளல் - திருவடியை வணங்கும் அடியார்களுக்கு வரம் அருள்பவன், ஒப்பற்ற வள்ளல்; (தனி - ஒப்பற்ற);
தண்டீச்சரம் மேய பெருமான் திருநாமம் பேணாய் மடநெஞ்சே - தண்டீச்சரத்தில் (வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் கோயிலில்) உறைகின்ற அப்பெருமான் திருப்பெயரைப், பேதைமனமே, நீ போற்றுவாயாக;
2)
சடையன் முடைநாறு தலையிற் பலியேற்கும்
விடையன் வியன்மாடம் விண்ணிற் பொலிதிங்கள்
தடவப் புடைசூழ்ந்த தண்டீச் சர(ம்)மேய
கடவுள் கழல்போற்றக் கருதாய் மடநெஞ்சே.
சடையன் - ஜடாதாரி;
முடை நாறு தலையில் பலி ஏற்கும் விடையன் - புலால்-நாற்றம் வீசுகின்ற மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன், இடபவாகனன்; (முடை - புலால்; கெட்டநாற்றம்); (நாறுதல் - மணம் வீசுதல்);
வியன் மாடம் விண்ணிற் பொலி திங்கள் தடவப் புடை சூழ்ந்த - வானில் விளங்கும் சந்திரனைத் தொடும்படி உயர்ந்த பெரிய மாடமாளிகைகளால் சூழப்பெற்ற; (வியன் - வியல் - பெருமை); (மாடம் - உபரிகையுள்ள வீடு); (புடை - பக்கம்);
தண்டீச்சரம் மேய கடவுள் கழல் போற்றக் கருதாய் மடநெஞ்சே - தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்ற கடவுளின் திருவடியை வழிபடப், பேதைமனமே, நீ எண்ணுவாயாக;
3)
வெந்த பொடிபூசி மிழலை நகர்தன்னில்
கந்தத் தமிழ்கேட்டுக் காசை இருவர்க்குத்
தந்த திருவாளன் தண்டீச் சர(ம்)மேய
எந்தை திருநாமம் எண்ணாய் மடநெஞ்சே.
வெந்த பொடிபூசி - சுட்ட திருநீற்றைப் பூசியவன்;
மிழலை-நகர்-தன்னில் கந்தத்-தமிழ் கேட்டுக் காசை இருவர்க்குத் தந்த திருவாளன் - திருவீழிமிழலையில் பக்திமணம் கமழும் தமிழ்ப்பாமாலைகளைக் கேட்டு மகிழ்ந்து திருஞான சம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசு தந்த செல்வன்; (கந்தம் - வாசனை);
தண்டீச்சரம் மேய எந்தை திருநாமம் எண்ணாய் மடநெஞ்சே - தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்ற எம் தந்தையான சிவபெருமான் திருப்பெயரைப், பேதைமனமே, நீ எண்ணுவாயாக;
4)
ஏங்கு சிறுவற்கா இன்பாற் கடலீந்த
ஓங்கு புகழானை உரகம் நதிதிங்கள்
தாங்கும் சடையானைத் தண்டீச் சர(ம்)மேய
வேங்கை அதளானை விரும்பாய் மடநெஞ்சே.
ஏங்கு சிறுவற்கா இன்-பாற்கடல் ஈந்த ஓங்கு புகழானை - பாலுக்கு ஏங்கிய உபமன்னியு முனிவருக்காக இனிய பாற்கடலையே தந்த பெரும்புகழ் உடையவனை; (சேந்தனார் - திருப்பல்லாண்டு - 9.29.9 - "பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்");
உரகம் நதி திங்கள் தாங்கும் சடையானைத் - சடையில் பாம்பையும் கங்கையையும் சந்திரனையும் தாங்கியவனை; (உரகம் - பாம்பு);
தண்டீச்சரம் மேய வேங்கை-அதளானை விரும்பாய் மடநெஞ்சே - தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்றவனும் புலித்தோலை அணிந்தவனுமான சிவபெருமானைப், பேதைமனமே, நீ விரும்புவாயாக (= பக்தி செய்வாயாக); (அதள் - தோல்);
5)
இமையோர் பலர்கூடி ஈசா அருளென்ன
அமுதம் அவருண்ண ஆலம் தனையுண்டான்
தமிழின் தொடைபாடித் தண்டீச் சர(ம்)மேய
விமலன் கழல்போற்ற மேவா வினைதானே.
இமையோர் பலர் கூடி, "ஈசா அருள்" என்ன - பல தேவர்கள் திரண்டு, "ஈசனே அருளாய்" என்று இறைஞ்சியபொழுது;
அமுதம் அவர் உண்ண ஆலம்தனை உண்டான் - அவர்கள் அமுதத்தை உண்ணும் பொருட்டுத் தான் ஆலகால விஷத்தை உண்டவன்;
தமிழ் இன்-தொடை பாடித் தண்டீச்சரம் மேய விமலன் கழல் போற்ற - தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்ற அந்தத் தூயனது திருவடியை இனிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபட்டால்;
மேவா வினைதானே - நம்மை வினைகள் அடையமாட்டா; (மேவுதல் - அடைதல்); (தொடை - மாலை);
6)
வங்கக் கடல்நஞ்சம் மணிபோல் திகழ்கண்டன்
கங்கைத் திரைமோதும் கற்றைச் சடையீசன்
சங்கக் குழைபூண்டு தண்டீச் சர(ம்)மேய
எங்கள் பெருமானை ஏத்தி மகிழ்வோமே.
வங்கக்-கடல்-நஞ்சம் மணி போல் திகழ் கண்டன் - அலை மிக்க (/படகுகள் இயங்கும்) கடலில் எழுந்த விஷம் நீலமணி போல விளங்கும் கண்டத்தை உடையவன்; (வங்கம் - அலை; மரக்கலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.53.10 - "வங்க முந்நீர்ப் பொங்கு விடத்தை உண்ட");
கங்கைத்-திரை மோதும் கற்றைச்-சடை ஈசன் - கங்கையின் அலைகள் மோதுகின்ற கற்றைச்சடையை உடைய ஈசன்;
சங்கக்-குழை பூண்டு தண்டீச்சரம் மேய எங்கள் பெருமானை ஏத்தி மகிழ்வோமே - சங்கினால் ஆகிய குழையைக் காதில் அணிந்தவனும் தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்றவனுமான எம் சிவபெருமானைத் துதித்து மகிழ்வோம்; (அப்பர் தேவாரம் - 6.29.4 - "சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை");
7)
காமன் உடல்வேவக் காய்கண் ணுதலீசன்
வாம(ம்) மடவாளை மகிழும் பரமேட்டி
சாமந் தனையோதும் தண்டீச் சர(ம்)மேயான்
நாம(ம்) மறவார்க்கு நல்ல துணைதானே.
காமன் உடல் வேவக் காய் கண்ணுதல் ஈசன் - மன்மதனது அழகிய உடலை எரித்த நெற்றிக்கண்ணன்; (காய்தல் - எரித்தல்; கோபித்தல்)
வாமம் மடவாளை மகிழும் பரமேட்டி - இடப்பக்கம் உமையை பாகமாக விரும்பிய பரமன்; (வாமம் - இடப்பக்கம்); (பரமேட்டி - பரமேஷ்டின் - பரம்பொருள்);
சாமம்தனை ஓதும் தண்டீச்சரம் மேயான் - சாமவேதம் ஓதுபவன், தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்றவன்;
நாமம் மறவார்க்கு நல்ல துணைதானே - அப்பெருமானுடைய திருப்பெயரை என்றும் நினையும் தொண்டர்களுக்கு அவன் நல்ல துணை;
8)
பத்துத் தலையோனைப் பாத விரலூன்றிக்
கத்தும் படிசெய்தான் ககனம் தொடுமாடச்
சத்த(ம்) மலிவீதித் தண்டீச் சர(ம்)மேய
அத்தன் அடிபோற்ற அழியும் வினைதானே.
பத்துத் தலையோனைப் பாதவிரல் ஊன்றிக் கத்தும்படி செய்தான் - பத்துமுடிகளையுடைய இராவணனைத் திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி நெரித்து அவனை ஓலமிட வைத்தவன்;
ககனம் தொடு மாடச், சத்தம் மலி வீதித் தண்டீச்சரம் மேய - ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்த கட்டடங்களும், ஒலி மிகுந்த வீதிகளும் சூழ்ந்த தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்ற; (ககனம் - ஆகாயம்)
அத்தன் அடி போற்ற அழியும் வினைதானே - அப்பன் திருவடியை வணங்கினால் வினைகள் அழியும்; (அத்தன் - தந்தை);
9)
பண்டு மலரான்மால் பரவ உயர்சோதி
தண்டு கொடுதாதை தாளைத் துணிசெய்த
சண்டிக் கருளத்தன் தண்டீச் சர(ம்)மேய
அண்டன் அடிபோற்ற அண்டா வினைதானே.
பண்டு மலரான் மால் பரவ உயர் சோதி - முன்பு பிரமனும் திருமாலும் போற்றும்படி ஒளித்தூணாகி உயர்ந்தவன்; (பண்டு - பண்டை - முற்காலம்);
தண்டுகொடு தாதை தாளைத் துணிசெய்த சண்டிக்கு அருள் அத்தன் - ஒரு கோலால் (அந்தக் கோலே மழுவாகிட அதுகொண்டு) தந்தையின் காலை வெட்டிய சண்டீசருக்கு அருள்புரிந்த அப்பன்; (தண்டு - கோல்; குச்சி); (தாதை - தந்தை); (துணி - துண்டம்); (அத்தன் - தந்தை);
தண்டீச்சரம் மேய அண்டன் அடி போற்ற அண்டா வினைதானே - தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்ற இறைவனது திருவடியை வழிபட்டால் வினைகள் நெருங்கமாட்டா; (அண்டன் - கடவுள்); (அண்டுதல் - நெருங்குதல்; கிட்டுதல்);
10)
ஆயாச் சமயத்தார் அறியா ஒருதேவன்
சாயான் சிராப்பள்ளி தன்னில் அடியார்க்காத்
தாயாய் வருமண்ணல் தண்டீச் சர(ம்)மேய
தூயான் கழலேத்தத் தொலையும் துயர்தானே.
ஆயாச் சமயத்தார் அறியா ஒரு தேவன் - ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன், ஒப்பற்ற தேவன்; (சம்பந்தர் தேவரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");
சாயான் - அழிவற்றவன்; நடுநிலை மாறாதவன்; (சாய்தல் - அழிதல்; நடுநிலை பிறழ்தல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்");
சிராப்பள்ளி-தன்னில் அடியார்க்காத் தாயாய் வரும் அண்ணல் - திருச்சிராப்பள்ளியில் இரத்தினாவதி என்ற அடியவருக்காகத் தாய் உருவில் சென்று (பிரசவத்திற்கு உதவிய) தலைவன்; தாயுமானவன்;
தண்டீச்சரம் மேய தூயான் கழல் ஏத்தத் தொலையும் துயர்தானே - தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்றவனும் தூயவனுமான சிவபெருமான் திருவடியை வழிபட்டால் துயரங்கள் அழியும்;
11)
எண்ணார் புரமூன்றை எய்த சிலையானைத்
தண்ணார் மதிசூடித் தண்டீச் சர(ம்)மேய
கண்ணார் நுதலானைக் கருதித் தொழுதேத்திப்
பண்ணார் தமிழ்பாடப் பண்டை வினைவீடே.
எண்ணார் புரம் மூன்றை எய்த சிலையானைத் - பகைத்த அசுரர்களது முப்புரங்களை எய்த மேருவில்லை ஏந்தியவனை; (எண்ணார் - பகைவர்); (சிலை - வில்);
தண் ஆர் மதி சூடித் தண்டீச்சரம் மேய கண் ஆர் நுதலானைக் - குளிர்ந்த சந்திரனை அணிந்தவனும், தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணனுமான சிவபெருமானை; (தண் - குளிர்ச்சி);
கருதித் தொழுது ஏத்திப் பண் ஆர் தமிழ் பாடப் பண்டைவினை வீடே - விரும்பி வழிபட்டு, இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களது பழவினைகள் எல்லாம் அழியும்; (பண்டை - பழைய); (வீடு - நீங்குதல்; விடுதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment