2017-01-20
P.377 - வியலூர் (திருவிசநல்லூர்)
---------------------------------
(சந்தக் கலித்துறை - தான தான தனதானன தானன தானன)
(சம்பந்தர் தேவாரம் - 2.7.1 - "வன்னி கொன்றை மதமத்தம்")
முற்குறிப்பு - படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் சீர்பிரித்தல் வேறுபடும். வகையுளியோடு பார்த்தால் சந்தம் கெடாமை புலப்படும்.
1)
மாத ராளை ஒருகூறென வாம(ம்) மகிழ்ந்தவர்
சீத ஆறு திரிசெஞ்சடை மேற்பிறை சூடினார்
வேத நாவர் வியலூருறை நீல மிடற்றினார்
பாதம் ஏத்திப் பணிவார்கள்தம் வல்வினை பாறுமே.
மாதராளை ஒரு கூறு என வாமம் மகிழ்ந்தவர் - உமாதேவியாரை ஒரு பாகமாக இடப்பக்கம் விரும்பியவர்;
சீத-ஆறு திரி செஞ்சடைமேல் பிறை சூடினார் - குளிர்ந்த கங்கைநதி திரிகின்ற செஞ்சடையின்மேல் பிறையை அணிந்தவர்; (சீதம் - குளிர்ச்சி);
வேத-நாவர் - வேதங்களைப் பாடியருளியவர்;
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
பாதம் ஏத்திப் பணிவார்கள்தம் வல்வினை பாறுமே - அப்பெருமானாரின் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுடைய வலிய வினைகள் அழியும்; (பாறுதல் - அழிதல்);
2)
துள்ளு(ம்) மானும் சுடர்சூலமும் ஏந்திய தூயவர்
கள்ளி லங்கு கடிமாமலர் சூடு கருத்தனார்
வெள்ளை ஏற்றர் வியலூருறை நீல மிடற்றினார்
வள்ளல் நாமம் மறவாஅடி யார்வினை மாயுமே.
துள்ளும் மானும் சுடர் சூலமும் ஏந்திய தூயவர் - துள்ளுகின்ற மானையும், ஒளிவீசும் சூலத்தையும் ஏந்திய புனிதர்; (சுடர்தல் - பிரகாசித்தல்);
கள் இலங்கு கடி-மா-மலர் சூடு கருத்தனார் - தேன் திகழும் அழகிய மணம் மிக்க பூக்களைச் சூடிய தலைவர்; (கருத்தன் - தலைவன்);
வெள்ளை-ஏற்றர் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர்;
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
வள்ளல் நாமம் மறவா அடியார் வினை மாயுமே - வள்ளலாகிய சிவபெருமான் திருநாமத்தை மறவாத (= எப்பொழுதும் எண்ணும் / ஓதும்) அடியவர்களது வினைகள் அழியும்;
3)
நீரும் இண்டை நிலவுஞ்சடை வைத்த நிருத்தனார்
ஊரும் நாகம் அரைநாணென ஆர்த்த ஒருத்தனார்
மேரு வில்லி வியலூருறை நீல மிடற்றினார்
சீரு ரைக்கும் அடியார்வினை தீர்வது திண்ணமே.
நீரும் இண்டை-நிலவும் சடை வைத்த நிருத்தனார் - கங்கையையும் இண்டைமாலை போலச் சந்திரனையும் சடையில் அணிந்த கூத்தர்; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (நிருத்தன் - கூத்தன்);
ஊரும் நாகம் அரைநாண் என ஆர்த்த ஒருத்தனார் - ஊர்கின்ற பாம்பை அரைநாணாகக் கட்டிய ஒப்பற்றவர்; (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்); (ஒருத்தன் - ஒப்பற்றவன்);
மேரு-வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவர்;
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
சீர் உரைக்கும் அடியார் வினை தீர்வது திண்ணமே - அப்பெருமானாரின் புகழை ஓதும் அடியவர்களது வினைகள் அழிவது நிச்சயம்;
4)
மற்பு யங்கள் இருநான்கினர் வாடிய வானவர்
நற்ப தத்தை நனிவாழ்த்திட இன்னருள் நல்கிய
வெற்பு வில்லி வியலூருறை நீல மிடற்றினார்
பொற்ப தங்கள் புகழ்வார்உல கிற்பொலி வார்களே.
மற்புயங்கள் இருநான்கினர் - வலிமை மிக்க எட்டுப் புஜங்கள் உடையவர்; (மல் - வலிமை);
வாடிய வானவர் நற்பதத்தை நனி வாழ்த்திட இன்னருள் நல்கிய வெற்பு-வில்லி - வருந்திய தேவர்கள் நன்மை மிக்க திருவடியை மிகவும் போற்றி வழிபடவும் அவர்களுக்கு இரங்கி இனிய அருள்புரிந்தவர், மேருமலையை வில்லாக ஏந்தியவர்; (நனி - மிக); (வெற்பு - மலை);
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
பொற்பதங்கள் புகழ்வார் உலகில் பொலிவார்களே - அப்பெருமானாரின் பொன்னடியைப் புகழும் அன்பர்கள் உலகில் சிறந்து விளங்குவார்கள்;
5)
சீல பாலன் உயிர்காத்தவர் தீயன குஞ்சிவெங்
காலன் நெஞ்சில் உதைகாலினர் பன்னிரு கையுடை
வேலன் அத்தர் வியலூருறை நீல மிடற்றினார்
சூல பாணி பெயர்சொல்பவர் தொல்வினை தீருமே.
சீல-பாலன் உயிர் காத்தவர் - சீலம் மிக்க சிறுவரான மார்க்கண்டேயரது உயிரைக் காத்தருளியவர்;
தீ அன குஞ்சி வெங்-காலன் நெஞ்சில் உதை காலினர் - தீப் போன்ற சிவந்த தலைமயிரை உடைய, கொடிய காலனை மார்பில் காலால் உதைத்தவர்; (அன – அன்ன – போன்ற); (குஞ்சி - ஆண்களின் தலைமயிர்); (வெம்மை - கொடுமை; வலிமை); (4.107.1 - "எரி போலும் குஞ்சிச் சுருட்டிய நாவில் வெங்கூற்றம் பதைப்ப உதைத்து");
பன்னிரு கையுடை வேலன் அத்தர் - பன்னிரு கைகள் உடைய முருகனுக்குத் தந்தையார்; (அத்தன் - தந்தை); (சம்பந்தர் தேவாரம் - 2.28.10 - "கருவூருள் ஆனிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே");
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
சூலபாணி பெயர் சொல்பவர் தொல்வினை தீருமே - சூலம் ஏந்திய பெருமானாரின் திருநாமத்தைச் சொல்லும் அன்பர்களது பழவினைகள் அழியும்;
6)
அந்தம் ஆதி அதளாடையர் ஆயிழை பங்கனார்
பந்தம் அற்ற பரனார்பவ ளம்புரை மேனியார்
வெந்த நீற்றர் வியலூருறை நீல மிடற்றினார்
கந்தன் அத்தர் கழல்ஏத்திடு வார்வினை சிந்துமே
அந்தம் ஆதி - முடிவும் முதலும் ஆனவர்;
அதள்-ஆடையர் - தோலை ஆடையாகத் தரித்தவர்; (அதள் - தோல்);
ஆயிழை பங்கனார் - உமையொரு பாகர்; (ஆயிழை - பெண்);
பந்தம் அற்ற பரனார் - மும்மலங்கள் அற்றவர், மேலானவர்;
பவளம் புரை மேனியார் - செம்பவளம் போல் செம்மேனியை உடையவர்; (புரைதல் - ஒத்தல்);
வெந்த நீற்றர் - சுட்ட திருநீற்றைப் பூசியவர்;
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
கந்தன் அத்தர் கழல் ஏத்திடுவார் வினை சிந்துமே - முருகனுக்குத் தந்தையார் திருவடிகளைத் தொழும் அன்பர்களது வினைகள் அழியும்; (சிந்துதல் - அழிதல்);
7)
கானில் ஆடு கழலார்கரி தன்னை உரித்தவர்
வானி லாவை முடிவைத்தவர் மாண்டவர் நீறணி
மேனி நாதர் வியலூருறை நீல மிடற்றினார்
தேனி லாவும் அடிவாழ்த்திடு வார்வினை தீருமே
கானில் ஆடு கழலார், கரி தன்னை உரித்தவர் - சுடுகாட்டில் ஆடும் திருவடியினார்; யானைத்தோலை உரித்தவர்; ("கானில் ஆடு கழலார்; கானில் ஆடு கரி தன்னை உரித்தவர்" என்றும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்); (ஆடுதல் - கூத்தாடுதல்; சஞ்சரித்தல்); (அப்பர் தேவாரம் - 6.10.7 - "கற்றார் பரவும் கழலார்");
வான்-நிலாவை முடி வைத்தவர் - அழகிய வெண்திங்களைத் திருமுடிமேல் அணிந்தவர்; (வானிலா - 1. வான் + நிலா / 2. வால் + நிலா); (வான் - அழகு; வானம்); (வால் - வெண்மை);
மாண்டவர் நீறு அணி மேனி நாதர் - இறந்தவர்களுடைய சாம்பலைத் திருமேனிமேல் பூசிய தலைவர்;
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
தேன் நிலாவும் அடி வாழ்த்திடுவார் வினை தீருமே - அப்பெருமானாரின் இனிய திருவடியை வாழ்த்தும் அன்பர்களது வினைகள் அழியும்; (நிலாவுதல் - நிலவுதல்);
8)
தேவி அஞ்ச மலைபேர்த்த அரக்கனை ஊன்றினார்
தேவ தேவர் சிலையொன்றை வளைத்தெயில் மூன்றுடன்
வேவ எய்து வியலூருறை நீல மிடற்றினார்
சேவ தேறி புகழ்செப்பிடு வார்வினை தீருமே.
தேவி அஞ்ச மலை பேர்த்த அரக்கனை ஊன்றினார் - உமாதேவி அஞ்சுமாறு கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கியவர்;
தேவதேவர் - தேவாதிதேவர்;
சிலை ஒன்றை வளைத்து எயில் மூன்று உடன் வேவ எய்து - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களும் ஒருங்கே வெந்து சாம்பலாகும்படி எய்தவர்;
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
சேவது ஏறி புகழ் செப்பிடுவார் வினை தீருமே - இடபவாகனரது புகழைச் சொல்லும் அன்பர்களது வினைகள் அழியும்; (சே - இடபம்; அது - பகுதிப்பொருள்விகுதி); (ஏறி - ஏறுபவன்);
9)
மாலும் வாச மலர்மேலய னும்மறி யாதவர்
ஆல நீழல் அமர்கின்றவர் அன்பர் அகத்தினர்
மேலர் நூலர் வியலூருறை நீல மிடற்றினார்
சூல பாணி துதிசெய்திடு வார்துணை ஆவரே.
மாலும் வாச-மலர்மேல் அயனும் அறியாதவர் - திருமாலாலும் தாமரைமலர்மேல் உறையும் பிரமனாலும் அறியப்படாதவர்; (அயனும்மறியாதவர் - மகர ஒற்று விரித்தல் விகாரம்);
ஆலநீழல் அமர்கின்றவர் - கல்லால-மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருப்பவர்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல் (உட்கார்தல்));
அன்பர் அகத்தினர் - பக்தர்கள் நெஞ்சில் உறைபவர்;
மேலர் - எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் எத்தேவர்க்கும் மேலாயுள்ள முழுமுதல்வர்; (சம்பந்தர் தேவாரம் - 2.7.2 - "கானிடை மாநடம் ஆடுவர் மேலர்");
நூலர் - முப்புரிநூல் அணிந்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.78.7 – "கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்");
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
சூலபாணி துதிசெய்திடுவார் துணை ஆவரே - சூலம் ஏந்திய பெருமானார் துதிப்பவர்களுக்குத் துணை ஆவார்;
10)
ஆத ராகி அவமேமொழி அற்பர்சொல் நீங்குமின்
போதை எய்த மதவேளுட லைப்பொடி செய்தவர்
வேத கீதர் வியலூருறை நீல மிடற்றினார்
ஆத ரிக்கும் அடியார்வினை அல்லல றுப்பரே.
ஆதர் ஆகி அவமே மொழி அற்பர் சொல் நீங்குமின் - அறிவிலிகளும் செல்லும் நெறியை அறியாத குருடர்களும் ஆகிப் புன்சொல்லே பேசும் ஈனர்களின் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (ஆதன் - அறிவிலி; குருடன்); (மின் - முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று);
போதை எய்த மதவேள் உடலைப் பொடி செய்தவர் - மலர்க்கணையை எய்த மன்மதனின் உடலைச் சாம்பல் ஆக்கியவர்; (போது - பூ - இங்கே மலரம்பு); (மதவேள் - காமன்); (அப்பர் தேவாரம் - 6.2.6 - "அன்று வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தார்");
வேத-கீதர் - வேதங்களைப் பாடியவர்;
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
ஆதரிக்கும் அடியார் வினை அல்லல் அறுப்பரே - அன்புசெய்யும் பக்தர்களது வினைகளையும் அல்லல்களையும் தீர்ப்பார்; (ஆதரித்தல் - விரும்புதல்; போற்றுதல்); (அறுத்தல் - தீர்த்தல்); (திருவாசகம் - அருட்பத்து - 8.29.1 - "ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே");
11)
நீள்வி சும்பு நிலன்நீர்எரி காற்றவர் நாலிரு
தோள்வி ளங்கு சுடுநீற்றினர் தூற்றிய தக்கனின்
வேள்வி செற்று வியலூருறை நீல மிடற்றினார்
தாள்வி ரும்பும் அடியார்வினை சாய்வது திண்ணமே.
நீள் விசும்பு, நிலன், நீர், எரி, காற்று அவர் - நீண்ட ஆகாயம், நிலம், நீர், நெருப்பு, காற்று என்று ஐம்பூதங்கள் ஆனவர்; (விசும்பு - ஆகாயம்);
நாலிரு-தோள் விளங்கு சுடு-நீற்றினர் - எட்டுப் புஜங்களில் சுட்ட திருநீற்றைப் பூசியவர்;
தூற்றிய தக்கனின் வேள்வி செற்று - இகழ்ந்த தக்கன் செய்த யாகத்தை அழித்தவர்; (செறுதல் - அழித்தல்);
வியலூர் உறை நீல-மிடற்றினார் - திருவியலூரில் உறைகின்ற நீலகண்டர்;
தாள் விரும்பும் அடியார் வினை சாய்வது திண்ணமே - அப்பெருமானாரின் திருவடியை விரும்பும் பக்தர்களது வினைகள் அழிவது நிச்சயம்; (சாய்தல் - அழிதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment