2017-01-22
P.378 - வியலூர் (திருவிசநல்லூர்)
---------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர்")
1)
ஆகத்தில் நறுங்குழலி அஞ்சொல்லாள் அரிவைக்குப்
பாகத்தைப் பகிர்ந்தபரன் பாய்புலித்தோல் ஆடையினான்
நாகத்தை ஆரமென நயந்தபிரான் மகிழுமிடம்
மேகத்தின் வளமாரும் வயலாரும் வியலூரே.
ஆகத்தில் நறுங்குழலி அஞ்சொல்லாள் அரிவைக்குப் பாகத்தைப் பகிர்ந்த பரன் - வாசக்கூந்தலும் இன்மொழியும் உடைய உமாதேவிக்குத் தன் திருமேனியில் ஒரு பாகத்தைத் தந்த பரமன்;
பாய்புலித்தோல் ஆடையினான் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;
நாகத்தை ஆரம் என நயந்த பிரான் மகிழும் இடம் - பாம்பை மாலையாக விரும்பி அணியும் தலைவன் விரும்பி உறையும் தலம்;
மேகத்தின் வளம் ஆரும் வயல் ஆரும் வியலூரே - நீர்வளம் மிக்க வயல்கள் பொருந்திய திருவியலூர் ஆகும்;
2)
பெண்ணொட்டும் மேனியினான் பேரன்பால் ஒருவேடர்
கண்ணொட்டக் கண்டருள்செய் கண்ணுதலான் கசிந்துருகிப்
பண்ணொட்டும் தமிழ்பாடும் பத்தரிடர் தீர்ப்பானூர்
விண்ணெட்டும் பொழிலோடு வயலாரும் வியலூரே
பெண் ஒட்டும் மேனியினான் - உமைபங்கன்;
பேரன்பால் ஒரு வேடர் கண் ஒட்டக் கண்டு அருள்செய் கண்ணுதலான் - (திருக்காளத்தியில்) ஒப்பற்ற வேடரான கண்ணப்பர் தம் கண்ணை இடந்து அப்பக் கண்டு அவருக்கு அருள்செய்த நெற்றிக்கண்ணன்;
கசிந்து உருகிப், பண் ஒட்டும் தமிழ் பாடும் பத்தர் இடர் தீர்ப்பான் ஊர் - உளம் உருகிப் பண் பொருந்திய தேவாரம் பாடும் அடியவர்களுடைய துன்பத்தைத் தீர்ப்பவன் உறையும் தலம்;
விண் எட்டும் பொழிலோடு வயல் ஆரும் வியலூரே - வானைத் தீண்டும் சோலைகளும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்;
3)
முன்மதில்கள் மூன்றும்தீ மூழ்கநகை செய்ம்மைந்தன்
இன்மொழிமா துமையாளை இடப்பாகம் மகிழ்ந்தசிவன்
பன்மொழியால் பரவிடுவார் படுதுயர்தீர் பரமனிடம்
மென்சிறைவண் டறைசோலை வயலாரும் வியலூரே.
முன் மதில்கள் மூன்றும் தீ மூழ்க நகை-செய்ம் மைந்தன் - முன்னர், முப்புரங்களும் தீயில் மூழ்குமாறு சிரித்த வீரன்;
இன்மொழி மாது உமையாளை இடப்பாகம் மகிழ்ந்த சிவன் - இன்மொழி பேசும் உமையை இடப்பாகமாக விரும்பிய சிவன்;
பன்மொழியால் பரவிடுவார் படுதுயர் தீர் பரமன் இடம் - தமிழ், சமஸ்கிருதம், மற்ற மொழிகள் இவற்றால் துதிக்கும் பக்தர்களின் கஷ்டத்தைத் தீர்க்கும் பரமன் உறையும் தலம்; (சம்பந்தர் தேவாரம் - 1.85.1 - "எல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த"); (சம்பந்தர் தேவாரம் - 2.92.7 - "தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில்நரம் பெடுத்து");
மென்-சிறை வண்டு அறை சோலை வயல் ஆரும் வியலூரே - மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்;
4)
கூரியலும் சூலத்தன் கூவிளஞ்சேர் செஞ்சடையான்
நாரியொரு பங்குடையான் நரைவிடையான் நாள்தோறும்
பேரியம்பும் அடியார்தம் பேரிடர்தீர் பெருமானூர்
வேரிமலி மலர்ச்சோலை வயலாரும் வியலூரே.
கூர் இயலும் சூலத்தன் - கூர்மை மிக்க திரிசூலத்தை உடையவன்; (இயல்தல் - பொருந்துதல்);
கூவிளம் சேர் செஞ்சடையான் - சிவந்த சடையில் வில்வத்தை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);
நாரி ஒரு பங்கு உடையான் - உமையை ஒரு பங்காக உடையவன்;
நரை-விடையான் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;
நாள்தோறும் பேர் இயம்பும் அடியார்தம் பேரிடர் தீர் பெருமான் ஊர் - தினந்தோறும் தன் திருநாமத்தைச் சொல்லும் பக்தர்களின் பெரிய துன்பத்தைத் தீர்க்கும் பெருமான் உறையும் தலம்;
வேரி மலி மலர்ச்சோலை வயல் ஆரும் வியலூரே - தேன் மிக்க மலர்கள் திகழும் சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்; (வேரி - தேன்);
5)
புரையேதும் இல்லாத புண்ணியன்முக் கண்ணுடையான்
திரையாரும் செஞ்சடைமேல் திகழ்திங்கள் சூடியவன்
அரைநாணா அரவத்தை ஆர்த்தபிரான் அமருமிடம்
விரையாரும் மலர்ச்சோலை வயலாரும் வியலூரே.
புரை ஏதும் இல்லாத புண்ணியன் - எவ்வித ஒப்பும் இல்லாதவன், குற்றமற்றவன், புண்ணியமூர்த்தி; (புரை - ஒப்பு; குற்றம்); (ஏதும் - எதுவும்; சிறிதும்);
முக்கண் உடையான் - நெற்றிக்கண்ணன்;
திரை ஆரும் செஞ்சடைமேல் திகழ் திங்கள் சூடியவன் - கங்கை பொருந்திய செஞ்சடைமேல் ஒளிவீசும் சந்திரனை அணிந்தவன்; (திரை - அலை; நதி);
அரைநாணா அரவத்தை ஆர்த்த பிரான் அமரும் இடம் - அரைநாணாகப் பாம்பைக் கட்டிய தலைவன் விரும்பி உறையும் தலம்; (நாணா - நாணாக; கடைக்குறை விகாரம்); (ஆர்த்தல் - கட்டுதல்);
விரை ஆரும் மலர்ச்சோலை வயல் ஆரும் வியலூரே - மணம் மிக்க மலர்கள் நிறைந்த சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்; (விரை - வாசனை); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
6)
தஞ்சமென அடைமாணி தனக்கருளிக் கூற்றுவனின்
நெஞ்சிலுதை சேவடியான் நீலமணி கண்டத்தான்
குஞ்சிமிசைக் கொக்கிறகும் குளிர்மதியும் சூடியிடம்
மஞ்சுதவழ் பொழிலோடு வயலாரும் வியலூரே.
தஞ்சம் என அடை மாணி-தனக்கு அருளிக், கூற்றுவனின் நெஞ்சில் உதை சேவடியான் - தஞ்சம் என்று சரணடைந்த மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்து, இயமனின் மார்பில் உதைத்த சிவந்த திருவடியை உடையவன்;
நீலமணி கண்டத்தான் - கரிய மணி திகழும் கண்டத்தை உடையவன்;
குஞ்சிமிசைக் கொக்கிறகும் குளிர்-மதியும் சூடி இடம் - தலைமேல் கொக்கிறகையும் குளிச்சி பொருந்திய சந்திரனையும் சூடியவன் உறையும் தலம்; (குஞ்சி - தலை); (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற மலர்; 2. கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளமாக அதன் இறகு); (சூடி - சூடியவன்);
மஞ்சு தவழ் பொழிலோடு வயல் ஆரும் வியலூரே - மேகம் தவழும் சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்;
7)
கானகத்தில் வேட்டுவனாய்க் கையிலொரு வில்லேந்தி
ஏனமதன் பின்னோடி எழில்விசயற் கருள்புரிந்தான்
தேனறையும் கொன்றையினான் திருநீறு பூசியிடம்
வானணவும் பொழிலோடு வயலாரும் வியலூரே.
கானகத்தில் வேட்டுவனாய்க் கையில் ஒரு வில் ஏந்தி - காட்டில் ஒரு வேடன் வடிவத்தில் கையில் வில்லை ஏந்தி;
ஏனம்-அதன் பின் ஓடி, எழில்-விசயற்கு அருள்புரிந்தான் - பன்றியின் பின் துரத்திச் சென்று, அழகிய அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவன்; (ஏனம் - பன்றி); (விசயற்கு - விஜயனுக்கு); (சம்பந்தர் தேவாரம் - 1.12.6 - "ஏவார்சிலை எயினன்னுரு வாகி-எழில் விசயற் கோவாத இன்னருள்செய்த");
தேன் அறையும் கொன்றையினான் - வண்டுகள் ஒலிக்கும் கொன்றைமலரை அணிந்தவன்; (தேன் - வண்டு); (அறைதல் - ஒலித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.53.5 - "யாழ்முரல் தேனினத்தொடு");
திருநீறு பூசி இடம் - திருநீற்றைப் பூசிய இறைவன் உறையும் தலம்; (பூசி - பூசியவன்);
வான் அணவும் பொழிலோடு வயலாரும் வியலூரே - வானைத் தீண்டுமாறு ஓங்கிய சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்; (அணவுதல் - அணுகுதல்);
8)
பிழைபுரிந்த இராவணனைப் பெருமலைக்கீழ் அழவைத்தான்
குழையணிந்த திருச்செவியன் கூர்மழுவன் ஓடேந்தி
இழையணிந்த மடவார்பால் இரக்கின்ற ஈசனிடம்
மழைநுழையும் உயர்சோலை வயலாரும் வியலூரே.
பிழை புரிந்த இராவணனைப் பெருமலைக்கீழ் அழவைத்தான் - குற்றம் செய்த இராவணனைக் கயிலைமலையின் கீழே அழும்படி நசுக்கியவன்;
குழை அணிந்த திருச்செவியன் - காதில் குழையை அணிந்தவன்;
கூர்-மழுவன் - கூர்மையான மழுவை ஏந்தியவன்;
ஓடு ஏந்தி, இழை அணிந்த மடவார்பால் இரக்கின்ற ஈசன் இடம் - பிரமனது மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்திச் சென்று, ஆபரணங்கள் அணிந்த பெண்களிடம் யாசிக்கின்ற ஈசன் உறையும் தலம்; (ஓடு - மண்டையோடு; பிச்சைப்பாத்திரம்); (இழை - ஆபரணம்); (இரத்தல் - பிச்சையெடுத்தல்);
மழை நுழையும் உயர் சோலை வயல் ஆரும் வியலூரே - கரிய மேகம் நுழைகின்ற உயர்ந்த சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்; (மழை - கருமுகில்);
9)
மதிமயங்கி வாதிட்ட மாலயனார் மிகநேடி
அதிசயித்துத் துதிசெய்த அழலுருவன் அருளென்னும்
நிதியுடையான் நீள்சடையில் நீருடைய நிமலனிடம்
மதிதடவும் மலர்ச்சோலை வயலாரும் வியலூரே.
மதி மயங்கி வாதிட்ட மால் அயனார் மிக நேடி அதிசயித்துத் துதிசெய்த அழல் உருவன் - அறியாமையால், "தம்முள் யார் பரம்?" என்று வாது செய்த திருமாலும் பிரமனும் மிகவும் தேடி வாடி வியந்து அஞ்சி வழிபட்ட ஜோதி-வடிவினன்; (நேடுதல் - தேடுதல்);
அருள் என்னும் நிதி உடையான் - அருட்செல்வம் உடையவன் - அருளின் உறைவிடம்;
நீள்சடையில் நீர் உடைய நிமலன் இடம் - நீண்ட சடையில் கங்கையை உடைய தூயன் உறையும் தலம்;
மதி தடவும் மலர்ச்சோலை வயல் ஆரும் வியலூரே - சந்திரனைத் தொடுமாறு உயர்ந்த மலர்ச்சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்;
10)
பண்டைமறை நெறிதன்னைப் பழித்தும்மைப் பாவியெனும்
மிண்டருரை விடுமின்கள் வெள்விடையன் வெண்ணீற்றன்
தொண்டரவர் தொழுமுருவில் தோன்றியருள் தூயனிடம்
வண்டறையும் மலர்ச்சோலை வயலாரும் வியலூரே.
பண்டை மறைநெறி-தன்னைப் பழித்து, உம்மைப் "பாவி" எனும் மிண்டர் உரை விடுமின்கள் - பழைய வேதநெறியை இகழ்ந்து பேசி, உங்களைப் "பாவி" என்று சொல்லும் அறிவிலிகளின் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (மிண்டர் - கல்நெஞ்சர்; அறிவிலிகள்);
வெள்-விடையன் வெண்ணீற்றன் - வெண்ணிற எருதை வாகனமாக உடையவன், வெண்-திருநீற்றைப் பூசியவன்;
தொண்டர்-அவர் தொழும் உருவில் தோன்றி அருள் தூயன் இடம் - பக்தர்கள் இறைவனை எவ்வடிவத்தில் எண்ணி வழிபடுகின்றார்களோ அவ்வடிவத்தில் தோன்றி அவர்களுக்கு அருள்புரியும் தூயன் உறையும் தலம்;
வண்டு அறையும் மலர்ச்சோலை வயல் ஆரும் வியலூரே - வண்டுகள் ஒலிக்கின்ற மலர்ச்சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்;
11)
பிணமுடையார் சுடுகாட்டில் பேய்சூழ நடமாடும்
குணமுடையான் கயிலையெனும் குன்றுடையான் செந்தழல்போல்
வணமுடையான் பணிவார்க்கு வரமருளும் வள்ளலிடம்
மணமுடைய மலர்ச்சோலை வயலாரும் வியலூரே.
பிண-முடை ஆர் சுடுகாட்டில் பேய் சூழ நடம் ஆடும் குணம் உடையான் - பிணத்தின் நாற்றம் பொருந்திய சுடுகாட்டில் பேய்கள் சூழத் திருநடம் செய்கின்ற இயல்பு உடையவன்; (முடை - புலால் நாற்றம்; துர்க்கந்தம்);
கயிலை எனும் குன்று உடையான் - கயிலைமலைமேல் இருப்பவன்;
செந்தழல்போல் வணம் உடையான் - செந்தீப் போன்ற செம்மேனி உடையவன்; (வணம் - வண்ணம் - நிறம்; இடைக்குறை விகாரம்);
பணிவார்க்கு வரம் அருளும் வள்ளல் இடம் - தொழும் அன்பர்களுக்கு வரங்களை வாரி வழங்கும் வள்ளலான இறைவன் உறையும் தலம்;
மணம் உடைய மலர்ச்சோலை வயல் ஆரும் வியலூரே - வாசமலர்ச்-சோலையும் வயலும் பொருந்திய திருவியலூர் ஆகும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment