Tuesday, April 1, 2025

P.369 - தெங்கூர் (திருத்தங்கூர்) - திரையார் கடலில்

2016-12-14

P.369 - தெங்கூர் (திருத்தங்கூர்)

(திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ள தலம்)

---------------------------------

(கட்டளைக் கலித்துறை) (திருவிருத்தம் அமைப்பு)

(அப்பர் தேவாரம் - திருவிருத்தம் - 4.96.1 - "கோவாய் முடுகி");


1)

திரையார் கடலில் திரள்நஞ்சைக் கண்டஞ்சித் தேவரெலாம்

குரையார் கழல்போற்ற உண்டு மிடற்றிருள் கொண்டவனே

விரையார் மலர்ச்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை

அரையா அடிபணிந் தேன்வல் வினையை அழித்தருளே.


திரை ஆர் கடலில் திரள்-நஞ்சைக் கண்டு அஞ்சித் - அலை மிகுந்த பாற்கடலில் திரண்ட ஆலகாலத்தைக் கண்டு பயந்து;

தேவரெலாம் குரை ஆர் கழல் போற்ற உண்டு மிடற்று-இருள் கொண்டவனே - தேவர்களெல்லாம் ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைப் போற்றி வணங்க, (அவர்களுக்கு இரங்கி) அந்த விடத்தை உண்டருளிக் கண்டத்தில் கருமையை ஏற்றவனே;

விரை ஆர் மலர்ச்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை அரையா - வாச மலர்ப்பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் ரஜதகிரியில் வீற்றிருக்கும் அரசே; (சம்பந்தர் தேவாரம் - 2.93.1 - "விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே");

அடிபணிந்தேன் வல்வினையை அழித்து அருளே - உன் திருவடியை வழிபடும் அடியேனது வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


2)

மோகம் விளைக்கவம் பெய்த மதனை முனிந்தனங்கன்

ஆகும் படிநெற்றிக் கண்ணைத் திறந்த அதிசயனே

மேகம் தவழ்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை

நாகம் புனைமார்ப என்வல் வினையை நசித்தருளே.


மோகம் விளைக்க அம்பு எய்த மதனை முனிந்து - மோஹம் உண்டாக்குவதற்காகக் கணை தொடுத்த மன்மதனைக் கோபித்து;

அனங்கன் ஆகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்த அதிசயனே - அவனை உடல் அற்றவனாகச் செய்ய நெற்றிக்கண்ணைத் திறந்தவனே, அற்புதமானவனே; மிகுந்த வெற்றி உடையவனே; ( அதிசயம் - சிறப்பு; ஆச்சரியம்; அதி+ஜயம் - மிகுந்த வெற்றி);

மேகம் தவழ் சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை - வானளாவும் சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற;

நாகம் புனை மார்ப - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே;

என் வல்வினையை நசித்து அருளே - என் வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;


3)

அடையார் புரங்கள் அழல்புக் கழிந்திட அம்புதொட்டாய்

சடைமேல் தவள மதியும் அரவும் தரித்தவனே

விடையார் கொடியுடை நாத திருத்தெங்கூர் வெள்ளிமலை

உடையாய் அடிதொழு தேன்வல் வினையை ஒழித்தருளே.


அடையார் புரங்கள் அழல் புக்கு அழிந்திட அம்பு தொட்டாய் - பகைவர்களது முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி ஒரு கணையை எய்தவனே; (அடையார் - பகைவர்); (அழல் - தீ);

சடைமேல் தவள-மதியும் அரவும் தரித்தவனே - சடையின்மேல் வெண்திங்களையும் பாம்பையும் அணிந்தவனே; (தவளம் - வெண்மை);

விடை ஆர் கொடியுடை நாத - இடபக்கொடியை உடைய தலைவனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலை உடையாய் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற சுவாமியே; (உடையான் - சுவாமி);

அடிதொழுதேன் வல்வினையை ஒழித்து அருளே - உன் திருவடியை வழிபடும் என் வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;


4)

பன்றியை எய்து விசயற்குப் பாசு பதமளித்தாய்

கொன்றை குரவம் விரவும் சடைமேற் குளிர்மதியாய்

வென்றி விடைக்கொடி நாத திருத்தெங்கூர் வெள்ளிமலை

நின்ற நிமலவென் வாழ்வினில் இன்பம் நிறைத்தருளே.


பன்றியை எய்து விசயற்குப் பாசுபதம் அளித்தாய் - ஒரு பன்றியை அம்பால் எய்து அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்தவனே;

கொன்றை குரவம் விரவும் சடைமேல் குளிர்-மதியாய் - கொன்றைமலரும் குரவமலரும் பொருந்திய சடைமேல் குளிர்ந்த சந்திரனை அணிந்தவனே;

வென்றி-விடைக்கொடி நாத - வெற்றியுடைய இடபக்கொடியை உடைய நாதனே; (வென்றி - வெற்றி);

திருத்தெங்கூர் வெள்ளிமலை நின்ற நிமல - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற தூயவனே;

என் வாழ்வினில் இன்பம் நிறைத்து அருளே - என் வாழ்க்கையில் இன்பத்தை நிரப்பி அருள்வாயாக;


5)

ஆல நிழலில் முனிவர்கள் நால்வர்க் கறமுரைத்தாய்

ஏலக் குழலி மலைமகள் தன்னை இடமகிழ்ந்தாய்

வேலை விடமணி கண்ட திருத்தெங்கூர் வெள்ளிமலை

சூலப் படையுடை யாய்என் வினையைத் துடைத்தருளே.


ஆலநிழலில் முனிவர்கள் நால்வர்க்கு அறம் உரைத்தாய் - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதியர்களுக்கு வேதப்பொருளை உபதேசித்தவனே;

ஏலக்-குழலி மலைமகள் தன்னை இடம் மகிழ்ந்தாய் - வாசக்குழலாள் உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பியவனே;

வேலை-விடமணி கண்ட - கடல்விஷத்தை அணிந்த மணிகண்டனே; (வேலை - கடல்); (விடமணி - 1. விடம் + அணி; 2. விடம் மணி)

திருத்தெங்கூர் வெள்ளிமலை சூலப்படை உடையாய் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற சூலாயுதபாணியே; (படை - ஆயுதம்);

என் வினையைத் துடைத்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக; (துடைத்தல் - அழித்தல்; நீக்குதல்);


6)

உன்பதம் ஏத்திய உம்பர் துயரம் ஒழிந்திடவே

முன்பெயில் மூன்றும் எரிய நகைசெய்த முக்கணனே

மென்சிறை வண்டுகள் ஆர்க்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலைப்

புன்சடைப் புண்ணிய னேஅடி யேனைப் புரந்தருளே.


உன் பதம் ஏத்திய உம்பர் துயரம் ஒழிந்திடவே - உன் பாதத்தைப் போற்றிய தேவர்களது துன்பம் அழியும்படி;

முன்பு எயில் மூன்றும் எரிய நகைசெய்த முக்கணனே - முன்பு முப்புரங்களும் எரியும்படி சிரித்த நெற்றிக்கண்ணனே; (எயில் - மதில்);

மென்-சிறை வண்டுகள் ஆர்க்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலைப் - மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற; (சிறை - இறகு); (சம்பந்தர் தேவாரம் - 2.78.11 - "மென்சிறைவண்டு யாழ்முரல் விளநகர்");

புன்சடைப் புண்ணியனே - செஞ்சடையை உடைய புண்ணிய வடிவினனே;

அடியேனைப் புரந்து அருளே - என்னைக் காத்து அருள்வாயாக; (புரத்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);


7)

மண்புனல் தீவளி விண்ணிவை ஆகி வருபரனே

பண்பயில் இன்மொழிப் பாவை தனையொரு பால்மகிழ்ந்தாய்

வெண்பிறை சூடு விகிர்த திருத்தெங்கூர் வெள்ளிமலைத்

தெண்புனல் வேணிய னேஎன் வினைகளைத் தீர்த்தருளே.


மண் புனல் தீ வளி விண் இவை ஆகி வரு பரனே - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆகி வருகின்ற மேலானவனே;

பண் பயில் இன்மொழிப் பாவைதனை ஒருபால் மகிழ்ந்தாய் - பண் பொருந்திய இனிய மொழி பேசும் உமையை ஒரு பக்கம் பாகமாக விரும்பியவனே;

வெண்பிறை சூடு விகிர்த - வெண்மையான சந்திரனைச் சூடிய விகிர்தனே; (விகிர்தன் - ஈசன் திருநாமங்களுள் ஒன்று);

திருத்தெங்கூர் வெள்ளிமலைத் தெண்-புனல் வேணியனே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற, தெளிந்த-நீரான கங்கையைச் சடையில் உடையவனே; (வேணி - சடை);

என் வினைகளைத் தீர்த்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக;


8)

பாரொடு நீரெரி காற்றுவிண் ஆய பரம்பொருளே

வேரொடு வெற்பிடந் தானை விரலால் விறலழித்தாய்

மேருவில் ஏந்திய வீர திருத்தெங்கூர் வெள்ளிமலைக்

காருறு கண்டத்தி னாயென் வினையைக் கடிந்தருளே.


பாரொடு நீர் எரி காற்று விண் ஆய பரம்பொருளே - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆகி வருகின்ற மேலான பொருளே;

வேரொடு வெற்பு இடந்தானை விரலால் விறல் அழித்தாய் - கயிலைமலையை அடியோடு பெயர்த்த இராவணனை ஒரு விரலை ஊன்றி நசுக்கி அவன் வலிமையை அழித்தவனே; (இடத்தல் - பெயர்த்தல்); (விறல் - வெற்றி; வலிமை); (அப்பர் தேவாரம் - 6.89.10 - "விலங்கல் எடுத்துகந்த வெற்றியானை விறலழித்து");

மேருவில் ஏந்திய வீர - மேருமலையை வில்லாக ஏந்திய வீரனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலைக் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற,

கார் உறு கண்டத்தினாய் - நீலகண்டனே; (கார் - கருமை);

என் வினையைக் கடிந்தருளே - என் வினையை அழித்து அருள்வாயாக; (கடிதல் - அழித்தல்);


9)

நற்பது மத்துறை நான்முகன் மாலிவர் நாணநின்றாய்

பற்பல பேர்கள் உடையவ னேபரி பாலகனே

விற்புரு வத்துமை பங்க திருத்தெங்கூர் வெள்ளிமலைக்

கற்பக மேஅடி யேன்வல் வினையைக் கடிந்தருளே.


நல்-பதுமத்து உறை நான்முகன் மால் இவர் நாண நின்றாய் - நல்ல தாமரைமலரில் உறைகின்ற பிரமனும் திருமாலும் அடிமுடி காணாமல் வெட்கி வணங்கும்படி ஜோதியாகி உயர்ந்தவனே;

பற்பல பேர்கள் உடையவனே - எண்ணற்ற திருநாமங்கள் உடையவனே;

பரிபாலகனே - காப்பவனே; (பரிபாலகன் - இரட்சகன்);

வில்-புருவத்து உமை பங்க - வில் போன்ற புருவத்தை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலைக் கற்பகமே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற கற்பகமே; (கற்பகம் - கற்பகமரம் போல அடியவர் வேண்டியன வழங்குபவன்);

அடியேன் வல் வினையைக் கடிந்து அருளே - என் வலிய வினையை அழித்து அருள்வாயாக; (கடிதல் - அழித்தல்);


10)

நல்லவர் போல நடிப்பவர்க் கென்றும் நலமருளாய்

அல்லினிற் பூதங்கள் பாடிட ஆடும் அதிர்கழலாய்

மெல்லிடை யாளொரு பங்க திருத்தெங்கூர் வெள்ளிமலை

வல்லவ னேஅடி யேன்வல் வினைகளை மாய்த்தருளே.


நல்லவர் போல நடிப்பவர்க்கு என்றும் நலம் அருளாய் - நல்லவர் போல நடிக்கின்ற நயவஞ்சகர்களுக்கு என்றும் அருளாதவனே;

அல்லினில் பூதங்கள் பாடிட ஆடும் அதிர்கழலாய் - இருளில் பூதகணங்கள் பாட ஆடுகின்றவனே, ஒலிக்கின்ற கழலை அணிந்தவனே; (அதிர்தல் - முழங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.10.4 - "அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை");

மெல்லிடையாள் ஒரு பங்க - சிற்றிடை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலை வல்லவனே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற வல்லவனே;

அடியேன் வல்வினைகளை மாய்த்து அருளே - என் வலிய வினையை அழித்து அருள்வாயாக; (மாய்த்தல் - அழித்தல்);


11)

அஞ்சிய மார்க்கண்டர்க் காகவெங் காலனை அன்றுதைத்தாய்

மஞ்சு தவழ்கயி லாய மலையுறை மன்னவனே

செஞ்சுடர் வண்ணத்துச் செல்வ திருத்தெங்கூர் வெள்ளிமலை

நஞ்சணி மாமிடற் றாயென் வினையை நசித்தருளே.


அஞ்சிய மார்க்கண்டர்க்காக வெங்-காலனை அன்று உதைத்தாய் - (காலனைக் கண்டு) அச்சமுற்ற மார்க்கண்டேயரைக் காப்பதற்காக அன்று கொடிய காலனை உதைத்தவனே;

மஞ்சு தவழ் கயிலாயமலை உறை மன்னவனே - மேகம் தவழும் கயிலைமலையில் உறைகின்ற தலைவனே;

செஞ்சுடர் வண்ணத்துச் செல்வ - செந்தீப் போன்ற செம்மேனி உடைய செல்வனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலை - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற;

நஞ்சு அணி மா-மிடற்றாய் - விஷத்தை அணிந்த அழகிய கண்டம் உடையவனே;

என் வினையை நசித்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment