2017-03-07
P.380 - எறும்பியூர் (திருவெறும்பூர்)
---------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
என்பராப் பூணுமிறை இருளாரும் கண்டத்தான்
அன்பராய் அனுதினமும் அருந்தமிழால் துதிப்பார்தம்
துன்பமார் பிறவியெனும் சுழல்நீக்கி அவர்தம்மை
இன்பவான் ஏற்றுமரன் இருக்குமிடம் எறும்பூரே.
என்பு அராப் பூணும் இறை - எலும்பையும் பாம்பையும் அணிந்த இறைவன்;
இருள் ஆரும் கண்டத்தான் - நீலகண்டன்;
அன்பர் ஆய் அனுதினமும் அரும்-தமிழால் துதிப்பார்தம் - பக்தர்கள் ஆகித் தினமும் அரிய தமிழான தேவாரம் திருவாசகம் பாடி வழிபடுபவர்களுடைய;
துன்பம் ஆர் பிறவி எனும் சுழல் நீக்கி - துன்பம் மிக்க பிறவித்தொடரைத் தீர்த்து;
அவர்தம்மை இன்ப-வான் ஏற்றும் அரன் இருக்கும் இடம் எறும்பூரே - அவர்களைச் சிவலோகத்திற்கு ஏற்றும் ஹரன் நீங்காமல் உறையும் தலம் திருவெறும்பூர்;
2)
இருதாளில் மலர்தூவி இமையோர்கள் தொழவிரங்கி
ஒருதேரின் மீதேறி ஒள்ளழலார் கணையொன்றால்
கருதார்தம் புரமெய்த கண்ணுதலான் இளவெள்ளை
எருதேறும் எம்பெருமான் இருக்குமிடம் எறும்பூரே.
ஒரு தேரின்மீது ஏறி ஒள்-அழல் ஆர் கணை ஒன்றால் கருதார்தம் புரம் எய்த கண்ணுதலான் - ஒப்பற்ற தேரில் ஏறிச், சுடர்விடும் தீக்கணை ஒன்றால் பகைவர்களது முப்புரங்களையும் எய்த நெற்றிக்கண்ணன்; (பெரியபுராணம் - 12.28.619 - "முத்தின் பெருநாமச் சிவிகையின்மீதேறிப்");
3)
பெண்ணைத்தன் இடப்பக்கம் பேணியவன் தவம்கெடுக்கும்
எண்ணத்து மன்மதன்றன் எழிலாகம் எரிக்கநுதற்
கண்ணிற்றீக் காட்டியவன் காதலிப்பார் மகிழ்ந்துரைக்க
எண்ணற்ற பேருடையான் இருக்குமிடம் எறும்பூரே.
தவம் கெடுக்கும் எண்ணத்து மன்மதன்-தன் எழில் ஆகம் எரிக்க நுதற்கண்ணில் தீக் காட்டியவன் - தவத்தைக் கெடுக்கும் எண்ணத்தை உடைய காமனது அழகிய உடலை எரிக்க நெற்றிக்கண்ணில் தீயைக் காட்டியவன்;
காதலிப்பார் மகிழ்ந்து உரைக்க எண்ணற்ற பேர் உடையான் - அன்பர்கள் மகிழ்ந்து சொல்ல அளவில்லாத திருநாமங்கள் உடையன்;
4)
அருஞ்சுடரே அற்புதனே அழிவற்ற ஆனந்தம்
தருஞ்சிவனே என்றென்று தாள்பணிவார் துணையாகி
வருஞ்சதுரன் வளைந்திலங்கும் வளர்மதியம் வாழ்கின்ற
இருஞ்சடையில் ஆறுடையான் இருக்குமிடம் எறும்பூரே.
"அருஞ்சுடரே; அற்புதனே; அழிவற்ற ஆனந்தம் தரும் சிவனே" என்றென்று - "அரிய ஜோதியே; அற்புதனே; பேரின்பம் தரும் சிவனே" என்று பலமுறை தொடர்ந்து துதித்து;
தாள் பணிவார் துணை ஆகி வரும் சதுரன் - திருவடியை வழிபடுவோர்க்குத் துணையென்று வரும் ஆற்றல் உடையவன்; (சதுரன் - சமர்த்தன்);
வளைந்து இலங்கும் வளர்-மதியம் வாழ்கின்ற இருஞ்-சடையில் ஆறு உடையான் - வளைந்து ஒளிவீசும் வளரும் பிறை இருக்கும் பெரிய சடையில் கங்கையை உடையவன்; (இருமை - பெருமை);
5)
களந்தன்னிற் கறையுடையான் கழலிணையை மறவாத
உளந்தன்னில் உறைவுடையான் ஒருவிடையான் திருவுடையான்
தளர்ந்தங்கு வார்கழலே சரணென்று வந்தடைந்த
இளந்திங்கள் சூடுமரன் இருக்குமிடம் எறும்பூரே.
களம்-தன்னில் கறை உடையான் - நீலகண்டன்; (களம் - கழுத்து);
கழலிணையை மறவாத உளம்-தன்னில் உறைவு உடையான் - என்றும் திருவடியைத் தியானிக்கும் அன்பர் நெஞ்சில் உறைபவன்;
ஒரு விடையான் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்;
திரு உடையான் - திருவின் உறைவிடமாக உள்ளவன்;
தளர்ந்து அங்கு வார்கழலே சரண் என்று வந்தடைந்த இளம்-திங்கள் சூடும் அரன் - (சாபத்தால் தேய்ந்து) வருந்தி நீண்ட திருவடியே புகலிடமாக வந்து சரண்புகுந்த இளம்பிறையை அணிந்த ஹரன்; (தளர்தல் - மனம் கலங்குதல்); (அங்கு - அசை); (வார்தல் - நீள்தல்); (கழல் - கழல் அணிந்த திருவடி); (சரண் - சரணம் - அடைக்கலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.97.5 - "சரணென்றிமையோர் திசைதோறும் காவாய் என்று வந்தடையக் கார்-விடம் உண்டு");
6)
எமையாளும் இறைவாகா என்றடைந்த மறைமுனிக்கா
நமனாரை உதைத்தபரன் நாகத்தார் பூண்மார்பன்
உமையோர்பால் உகந்தபிரான் உளம்வாடி வழிபட்ட
இமையோருக் கருள்புரிந்தான் இருக்குமிடம் எறும்பூரே.
"எமை ஆளும் இறைவா, கா" என்று அடைந்த மறைமுனிக்கா நமனாரை உதைத்த பரன் - "எம்மை ஆளும் இறைவனே, காத்தருள்" என்று சரண்புகுந்த மறைமுனிவரான மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டுக் காலனை உதைத்த பரமன்; (முனி - முனிவர்; முனிக்கா - முனிக்காக – கடைக்குறை விகாரம்);
நாகத்-தார் பூண்-மார்பன் - பாம்பை மாலைபோல் மார்பில் அணிந்தவன்;
உமை ஓர்பால் உகந்த பிரான் - உமையொரு பங்கன்; (உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்);
உளம் வாடி வழிபட்ட இமையோருக்கு அருள்புரிந்தான் இருக்கும் இடம் எறும்பூரே - மனம் வருந்தி வணங்கிய தேவர்களுக்கு அருளிய பெருமான் உறையும் தலம் திருவெறும்பூர்; (* திருவெறும்பூர்த் தலவரலாறு - அசுரர்களுக்கு அஞ்சித் தேவர்கள் எறும்பு வடிவில் ஈசனை வழிபட்ட தலம்);
7)
நரியுலவு சுடுகாட்டில் நள்ளிருளில் ஆடுமிறை
புரிசடைமேல் கூவிளமும் புற்றரவும் புனைந்தபிரான்
கரியதளைப் போர்வையெனக் கருதியவன் கனல்கின்ற
எரியனைய எழிலுருவன் இருக்குமிடம் எறும்பூரே.
நரி உலவு சுடுகாட்டில் நள்ளிருளில் ஆடும் இறை - நரிகள் திரியும் சுடுகாட்டில் இரவில் ஆடும் இறைவன்;
புரி-சடைமேல் கூவிளமும் புற்றரவும் புனைந்த பிரான் - சுருண்ட சடையின்மேல் வில்வத்தையும் புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும் அணிந்த தலைவன்;
கரி-அதளைப் போர்வை எனக் கருதியவன் - யானைத்தோலைப் போர்வையாக விரும்பிப் போர்த்தவன்; (கரி - யானை); (அதள் - தோல்); (கருதுதல் - விரும்புதல்);
கனல்கின்ற எரி அனைய எழில் உருவன் - கனன்று எரியும் நெருப்புப் போன்ற அழகிய செம்மேனி உடையவன்;
இருக்கும் இடம் எறும்பூரே - அப்பெருமான் நீங்காமல் உறையும் தலம் திருவெறும்பூர்;
8)
இருக்குமொழி நாவுடையான் ஏந்திழையோ டுறைகின்ற
திருக்கயிலை மலைதன்னைத் திண்தோள்கள் கொண்டெடுத்த
அரக்கனவன் வாய்பத்தும் அழநசுக்கி நாளீந்த
இரக்கமுடை எம்பெருமான் இருக்குமிடம் எறும்பூரே.
இருக்கு மொழி நா உடையான் ஏந்திழையோடு உறைகின்ற – வேதங்களைப் பாடியருளியவன் உமாதேவியோடு இருக்கின்ற; (இருக்கு - வேதம்); (ஏந்திழை - பெண்);
திருக்-கயிலைமலை-தன்னைத் திண்-தோள்கள் கொண்டு எடுத்த – கயிலைமலையை வலிய புஜங்களால் பெயர்த்துத் தூக்கிய;
அரக்கனவன் வாய் பத்தும் அழ நசுக்கி நாள் ஈந்த இரக்கமுடை எம்பெருமான் - அரக்கனான இராவணனது பத்து-வாய்களும் அழுமாறு (திருப்பாத விரலை ஊன்றி) அவனை நசுக்கிப் பின்னர் (அவன் அழுது தொழ) அவனுக்கு நீண்ட வாழ்நாளை அருளிய கருணை மிகுந்த எம்பெருமான்;
இருக்கும் இடம் எறும்பூரே - அப்பெருமான் நீங்காமல் உறையும் தலம் திருவெறும்பூர்;
9)
நாறுமலர் மேலானும் நாரணனும் வானத்தில்
ஏறுமன்னம் அகழ்ஏனம் என்றாகி அலந்துபுகழ்
கூறுமொரு தீவண்ணன் கொக்கிறகு குரவணிந்தான்
ஏறுமகிழ் எம்பெருமான் இருக்குமிடம் எறும்பூரே.
நாறு-மலர் மேலானும் நாரணனும் - மணம் கமழும் தாமரையில் உறையும் பிரமனும் திருமாலும்;
வானத்தில் ஏறும் அன்னம் அகழ்-ஏனம் என்று ஆகி அலந்து, புகழ் கூறும் ஒரு தீவண்ணன் - வானில் உயர்ந்து பறக்கும் அன்னப்பறவை என்றும் (நிலத்தை) அழகும் பன்றி என்றும் உருவம் எடுத்து, (அடிமுடி தேடி) வருந்தித், துதிகள் கூறி வணங்கிய ஒப்பற்ற ஜோதி ஆனவன்; (ஏனம் - பன்றி);
கொக்கிறகு குரவு அணிந்தான் - கொக்கிறகு என்ற மலரையும் குராமலரையும் அணிந்தவன்; (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. குரண்டாசுரனை அழித்த அடையாளமாகக் கொக்கின் இறகு);
ஏறு மகிழ் எம்பெருமான் இருக்கும் இடம் எறும்பூரே - இடபத்தை வாகனமாக விரும்பும் எம் பெருமான் நீங்காமல் உறையும் தலம் திருவெறும்பூர்;
10)
செந்நெறியை அறியாமல் சிறுமொழிகள் பேசுகின்ற
புன்னெறியோர் சொல்மதியேல் பொன்னாரும் கொன்றைமலர்
சென்னிமிசைத் திகழ்பெருமான் திருநாமம் மறவாதார்க்
கின்னருளைப் புரியுமரன் இருக்குமிடம் எறும்பூரே.
செந்நெறி - நல்ல வழி; சன்மார்க்கம்;
சிறுமொழி - அற்ப வார்த்தைகள்; புன்சொல்;
புன்னெறி - சிறுநெறி;
மதியேல் - மதிக்கவேண்டா;
பொன் ஆரும் கொன்றைமலர் சென்னிமிசைத் திகழ் பெருமான் - பொன் போன்ற நிறம் உடைய கொன்றைமலர் திருமுடிமேல் திகழும் பெருமான்;
திருநாமம் மறவாதார்க்கு இன்னருளைப் புரியும் அரன் - திருப்பெயரை என்றும் ஓதும் அன்பர்களுக்கு இனிய அருளை வழங்கும் ஹரன்;
11)
செவ்வழல்போல் மேனிமிசைத் திருநீறு திகழ்ஈசன்
கொவ்வையன வாயுடைய கொடியிடையாள் கூறுடையான்
மவ்வலொடு தமிழ்சாத்தி மகிழ்ந்தேத்தும் அடியார்கட்
கெவ்வரமும் நல்குமரன் இருக்குமிடம் எறும்பூரே.
செவ்வழல்போல் மேனிமிசைத் திருநீறு திகழ்-ஈசன் - செந்தீப் போன்ற செம்மேனியின்மேல் திருநீறு விளங்குகின்ற ஈசன்;
கொவ்வை அன வாய் உடைய கொடியிடையாள் கூறு உடையான் - கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயும் கொடி போன்ற இடையும் உடைய உமையை ஒரு பாகமாக உடையவன்;
மவ்வலொடு தமிழ் சாத்தி மகிழ்ந்து ஏத்தும் அடியார்கட்கு எவ்வரமும் நல்கும் அரன் - முல்லைப்-பூக்களையும் தமிழ்ப்-பாக்களையும் சூட்டி விரும்பித் துதிக்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய எந்த வரத்தையும் அளிக்கின்ற ஹரன்; (மவ்வல் - மௌவல் - முல்லை);
இருக்கும் இடம் எறும்பூரே - அப்பெருமான் உறையும் தலம் திருவெறும்பூர்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment