2010-01-26
M.049 - தினமும் - பிழைகளை - மடக்கு
--------------
தினமும் பணிவீர் சிவனையவன் முன்னோர்
தினமும் மதில்செற்றான் தீச்சேர் - தினமும்
பிழைகளை எண்ணுநமன் பேணிப்போ மாறு
பிழைகளை காப்பெம் பிரான்.
பதம் பிரித்து:
தினமும் பணிவீர் சிவனை; அவன் முன் ஓர்
தினம் மும்மதில் செற்றான்; தீச் சேர் தினம், உம்
பிழைகளை எண்ணும் நமன் பேணிப் போமாறு,
பிழை களை காப்பு எம் பிரான்.
சொற்பொருள்:
தினமும் - 1. தினந்தோறும்; 2. தினம் மும்; 3. தினம் உம்;
பிழைகளை - 1. குற்றங்களை; 2. பிழையைத் தீர்க்கும்;
செறுதல் - அழித்தல்;
களைதல் - நீக்குதல்;
காப்பு - பாதுகாவல்; இரட்சை;
தினமும் பணிவீர் சிவனை - தினந்தோறும் சிவபெருமானை வணங்குங்கள்;
அவன் முன் ஓர் தினம் மும்மதில் செற்றான் - அவன் முன்னொரு நாள் முப்புரங்களை அழித்தவன்;
தீச் சேர் தினம் உம் பிழைகளை எண்ணும் நமன் பேணிப் போமாறு - (உயிர்போய் உடல்) தீயில் சேர்கின்ற நாளில் உங்கள் பாவங்களை எண்ணுகின்ற இயமன் உங்களை வணங்கிச் செல்லும்படி;
* (அப்பர் தேவாரம் - 5.92 - காலபாசத் திருக்குறுந்தொகைப் பதிகப் பாடல்களைக் காண்க); (சுந்தரர் தேவாரம் - 7.55.1 - "எனை நமன்தமர் நலியில் இவன்மற்று என் அடியான் என விலக்கும் சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்");
பிழை களை காப்பு எம் பிரான் - (உங்கள்) குற்றங்களையெல்லாம் நீக்கிவிடும் காப்பாக எம்பெருமான் இருப்பான்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment