Tuesday, March 15, 2022

S.112 - சிவன் - திருமால் - சிலேடை

2010-01-28

S.112 - சிவன் - திருமால் - சிலேடை

------------------

வானரர் வாழ்த்தும் அரவணைநீர் மையரவர்

கானலர் சூடுவர்அஞ் சக்கரர் - மானடிப்பார்

காத்தருள்வார் வெற்புவில் கையேந்தி நாகமதி

சேர்த்தவர்நா ராயணர் செப்பு.


சொற்பொருள்:

வானரர் - 1. வான் நரர்; / 2. வானரர்;

வான் - தேவர் (இடவாகுபெயர்);

அணைதல் - 1. பொருந்துதல்; / 2. படுத்தல் (To lie down);

அணை - மெத்தை; படுக்கை;

அரவணை நீர்மையரவர் - 1. அரவு அணை (வினைத்தொகை) நீர் மையர்; அவர் / 2. அரவு அணை (படுக்கை) நீர்மையர்; அவர்;

நீர் - கடல்;

மை - 1. கருநிறம்; 2. விஷம்;

நீர்மை - தன்மை; சிறந்த குணம்;

நீர்மையர் - 1. கடல் விடத்தர்; (நீர் - கடல்; மை - விஷம்); / 2. தன்மையர்; கடல் நடுவில் இருப்பவர்; (மையம் - நடு); (நாராயணன் - நீரை இடமாக உடையவன் - திருமால்);

கான் - வாசனை;

அலர் - பூ;

நலர் - நல்லர் (நல்லவர்கள்) - இடைக்குறை;

கானலர் - 1. கான் அலர் சூடுவர் (கான் + அலர்) / 2. கால், [ல்]லர் சூடுவர் (கால் + நலர்);

அம் - அழகு;

அக்கரம் - எழுத்து;

அஞ்சக்கரர் - 1. அஞ்சு அக்கரர் / 2. அம் சக்கரர்;

மான் - 1. பெருமான்; பெரியோன் (Great person or being); / 2. மான் என்ற விலங்கு;

மால் - திருமால்; கருமை; பெருமை;

நடித்தல் - 1. கூத்தாடுதல்; / 2. பாசாங்கு செய்தல்;

மானடிப்பார் - 1. மான் நடிப்பார் (பெருமான்; நாட்டியம் ஆடுவார்); /2. மான் அடிப்பார் (இராமனாய் மான்-வேடத்தில் வந்த மாரீசனைத் தாக்குவார்); 3. மால் நடிப்பார் (கிருஷ்ணனாய் மிகப் பாசாங்கு செய்வார்);

வெற்பு - மலை;

வெற்புவில் - 1. மேருமலை ஆகிய வில்; 2. வெற்பும் வில்லும் - உம்மைத்தொகை.


திருமால்:

வானரர் வாழ்த்தும், அரவணை நீர்மையர் - (இராமனாக வந்தபோது) வானரர்கள் போற்றுகின்ற, (கடல் நடுவே) நாகப்-படுக்கை உடையவர்;

அவர் கால் நலர் சூடுவர் - அவர் திருவடியை நல்லவர்கள் (தங்கள் உச்சியில்) சூடுவார்கள்;

அம் சக்கரர் - அழகிய சக்கராயுதம் உடையவர்;

மான் அடிப்பார் (--அல்லது-- மால் நடிப்பார்) - இராமாவதாரத்தில் மானாக வந்த மாரீசனை அம்பால் எய்தவர்; (--அல்லது-- கிருஷ்ணாவதாரத்தில் மிகப் பாசாங்கு செய்தவர்);

காத்தருள்வார் வெற்பு, வில் கை ஏந்தி - கிருஷ்ணனாய் மலையைக் குடையாக உயர்த்திப் பிடித்தும், இராமனாய் வில்லைக் கையில் ஏந்தியும் காத்தவர்;

நாராயணர் செப்பு - திருமால் என்று சொல்;


சிவன்:

வான் நரர் வாழ்த்தும், அரவு அணை, நீர்மையர் (& நீர்-மையர்) - வானவர்களும் மனிதர்களும் வணங்குகின்ற, பாம்புகள் பொருந்தும் திருமேனியர்; கடல்விஷத்தை உண்டு அணிந்தவர்; (நீர்மையர் - இச்சொல் இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளுமாறு வந்தது);

அவர் கான்-அலர் சூடுவர் - அவர் வாசமலர்களை அணிவார்;

அஞ்சு-அக்கரர் - திருவைந்தெழுத்தானவர்; நமச்சிவாய என்ற திருநாமம் உடையவர்;

மான், நடிப்பார் - பெருமான், திருநடம் செய்வார்;

காத்தருள்வார் வெற்புவில் கை ஏந்தி - (முப்புரம் எரித்தபொழுது) மேருமலையாகிய வில்லைக் கையில் ஏந்திக் காத்தருளியவர்;

நாகம் மதி சேர்த்தவர் செப்பு - பாம்பையும் சந்திரனையும் (திருமுடிமேல்) ஒன்றாகச் சேர்த்தவரான சிவபெருமான் என்று சொல்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment