Monday, August 17, 2015

01.49 – பொது - (கதிபெற வேண்டில்)


01.49 –
பொது - (கதிபெற வேண்டில்)



2009-07-11
கதிபெற வேண்டில் பதியினைப் போற்று
-------------------------------------------------------
(எண்சீர்ச் சந்த விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் மா விளம் மா " என்ற வாய்பாட்டை ஒட்டி அமைந்தது. அரையடிக்குள் சீர் எதுகை அமைந்த பாடல்கள்)



1) --- ("கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் புளிமா" ) ---



துதிசெய எண்ணும் மதியில தாலே
.. துயர்மிக ஆகி அயர்வுறும் மனமே;
எதிரிலன், என்றும் புதியவன், எந்தை,
.. எருதினில் ஏறி வருகிற பெருமான்,
மதிபுனை அண்ணல், குதிநதி தன்னை
.. வளர்சடை வைத்த அளப்பருங் கருணைப்
பதியினைப் போற்று, விதியினை வென்று
.. பயமில தான உயர்கதி பெறவே.



எதிர் இலன் - ஒப்பில்லாதவன்;
அளப்பு அரும் கருணைப் பதி - அளவற்ற கருணை உடைய தலைவன்;



2) --- ("கருவிளம் தேமா கருவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு) ---



கதவினைத் தட்டி உதவுக என்று
.. கரங்களைக் கூப்பி இரந்துநின் றாலும்
கதைபல சொல்லி உதவுதல் இன்றிக்
.. கரந்திருப் போர்கள் புரந்திட மாட்டார்;
பதமலர் தன்னை நிதம்தொழும் அன்பன்
.. பயம்கொள வந்த இயமனைக் காலால்
உதைசெயும் எந்தை முதல்வனின் தாளை
.. ஒருசிறி தேனும் கருதிடு நெஞ்சே.



இரத்தல் - யாசித்தல்;
கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்; கொடாது இருத்தல்;
புரத்தல் - காத்தல்; கொடுத்தல்;
அன்பன் - பக்தன்; இங்கே மார்க்கண்டேயர்;
ஒரு சிறிதேனும் - சற்றேனும்; சிறிது அளவாவது;



3)
நரைமயி ரோடு திரைமிகு தோலும்
.. நடுக்கமும் வந்து கொடுநம னாரின்
வரவினை எண்ணி அரள்வதன் முன்னம்
.. வருவினை தீர ஒருவழி கேள்நீ;
அரவொடு திங்கள் சிரமிசைச் சூடி,
.. அழகுமை கூறன், மழவிடை ஏறி,
புரமெரி அண்ணல், வரம்அருள் வள்ளல்
.. புகழ்மிகும் நாமம் புகல்மட நெஞ்சே.



திரை - சுருக்கம்;
கொடு நமன் - கொடிய எமன்;
அரளுதல் - அஞ்சுதல்;
வருவினை - ஆகாமிய வினை;
மழ விடை - இளம் காளை;
சூடி - சூடுபவன்; ஏறி - ஏறுபவன்;


வினை: பழவினை (சஞ்சிதம்), வரு வினை (மேல் எதிர்காலத்து வருவினை - ஆகாமியம்), இப்பிறப்பில் நாம் அநுபவிக்க இருக்கும் வினை (பிராரத்தவினை).



4)
பணத்தினை நாடி இணக்கமி லாத
.. பலசெயல் செய்து நிலைகுலை யாமல்,
மணமிக வாழும் வணமொரு நல்ல
.. வழிதனைச் சொல்வேன் விழிப்பொடு கேள்நீ;
கணம்பல சூழப் பிணம்இடு காட்டில்
.. கனலிடை ஆடி; முனம்எரி நஞ்சை
உணவென உண்டான்; அணங்கொரு கூறன்;
.. உயர்கயி லாயன் பெயர்உரை நெஞ்சே.



இணக்கம் - பொருத்தம்;
மணம் - மதிப்பு; நன்னிலை;
வணம் - வண்ணம் - வகை (Way, manner, method);
ஆடி - ஆடுபவன்;



5) --- ("கூவிளம் புளிமா கூவிளம் புளிமா" என்ற அரையடி வாய்பாடு) ---



குன்றினை அனைய முன்வினை அதனால்
.. குற்றமே புரியும் பற்றுடை மனமே;
ஒன்றுனக் குரைப்பேன்; வென்றிகொள் விடையான்,
.. உம்பரின் தலைவன், அம்பிகை துணைவன்,
அன்றொரு வனத்தில் பன்றியைத் துரத்தி
.. அத்திரம் அதனைப் பத்தனுக் களிக்கச்
சென்றவன், முடிமேல் கொன்றையை அணியும்
.. தேவனைத் தொழஎப் பாவமும் அறுமே.



* 3-ம் அடி அருச்சுனனுக்குப் பாசுபதம் அளித்த வரலாற்றைச் சுட்டியது.
குன்றினை அனைய - மலை போன்ற;
வென்றி - வெற்றி;
உம்பர் - தேவர்கள்;
அத்திரம் - அஸ்திரம் - பாசுபதாஸ்திரம்;



6)
கட்டமும் துயரும் மட்டிலா தடையக்
.. கப்பிடும் இருளில் எய்ப்புறும் மனமே
ஒட்டிய வினைகள் விட்டறும் வழியை
.. உன்னிடம் உரைப்பேன்; உன்னுதல் புரிவாய்,
மட்டவிழ் மலர்க்கண் இட்டரி தொழஓர்
.. வட்டஆ ழிதனை இட்டமாய் அளித்தான்,
எட்டுரு உடையான், சுட்டவெண் பொடியான்,
.. ஏந்திழை ஒருபால் சேர்ந்தவன் பெயரே.



* 3-ம் அடி திருவீழிமிழலையில் ஆயிரமாவது பூவாகத் தன் மலர்க்கண்ணைத் திருமால் இட்டு அர்ச்சித்துச் சக்கராயுதம் பெற்ற வரலாற்றைச் சுட்டியது.
கப்புதல் - மூடிக்கொள்ளுதல்;
உன்னுதல் - எண்ணுதல்;
மட்டு அவிழ் - தேன் சொட்டும்;
கண் இட்டு அரி - கண்ணைப் பூவாக இட்டு ஹரி;
வட்ட ஆழி - வட்டமான சக்கராயுதம்;
எட்டுரு உடையான் - அட்டமூர்த்தி - நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், ஞாயிறு, திங்கள், இயமானன் (உயிர்); (அப்பர் தேவாரம் - 6.94.1 - 'இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி.....');
ஏந்திழை - பார்வதி;



7) --- ("கூவிளம் தேமா கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு) ---



தந்திரம் செய்து முந்திட எண்ணித்
.. தாழ்கிற நெஞ்சே வாழ்வழி சொல்வேன்;
அந்தமி லாது வந்தடை கின்ற
.. அல்லலும் நோயும் தொல்வினை யாலே;
கந்தனை ஈன்ற எந்தையை, நாகக்
.. கச்சணி கின்ற பிச்சனை நாளும்
செந்தமிழ் பாடி வந்தனை செய்வாய்;
.. செய்வினை தீரும்; உய்ந்திட லாமே.



அந்தம் இலாது - முடிவின்றி;
நாகக் கச்சு அணிகின்ற பிச்சன் - பாம்பை அரையில் கச்சாகக் கட்டியிருக்கும் பித்தன்;
செந்தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன;
செய்வினை - வினைத்தொகை - செய்த வினை;



8) --- ("கருவிளம் தேமா கருவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு) ---



கனைகடல் போலச் சினஅலை வீசக்
.. கனவினை மெய்யாய் நினைவத னாலே
வினைபல செய்து தினம்இழி கின்ற
.. விதியினை மாற்றிக் கதிபெற நெஞ்சே,
அனையொடு தந்தை எனவரு கின்ற
.. அரும்பொருள் தன்னை, இருபது கையான்
தனைவிர லாலே முனம்நெரி செய்த
.. தலைவனை நாளும் மலரொடு போற்றே.



கனை கடல் - ஒலிக்கின்ற கடல்;
சின அலை - கோப அலைகள்;
அனை - அன்னை என்பதன் இடைக்குறை விகாரம்;
இருபது கையான் தனை - இராவணனை;
முனம் நெரி செய்த – முன்னர் நசுக்கிய;



9)
சரிவினை நல்கும் புரிவினை தீர்ந்து
.. தகவொடு வாழும் வகையிது கேளாய்;
திரிபுரம் மூன்றும் எரிகொளு மாறு
.. சிறுநகை செய்த அறுமுகன் தாதை,
கரியுரி போர்த்த விரிசடை அண்ணல்,
.. கழலிணை தேடி உழல்அரி காணா
எரியென நீண்ட அரியவன் தன்னை
.. எழில்மலர் கொண்டு வழிபடு நெஞ்சே.



சரிவு - வீழ்ச்சி;
புரிவினை - வினைத்தொகை - புரிந்த வினைகள்;
தகவு - பெருமை; தகுதி;
வகை - உபாயம்;
திரி புரம் - வினைத்தொகை - திரிந்த புரங்கள்;
கரி உரி - யானைத்தோல்;



10) --- ("கூவிளம் புளிமா கூவிளம் புளிமா" என்ற அரையடி வாய்பாடு) ---



தெய்வமும் தெளியார், வைவதும் தவிரார்,
.. செய்தவம் எனவே பொய்யுரை புரிவார்,
உய்வழி உணராக் கைதவர் அவரை
.. உற்றவர் எனவே கற்றவர் கருதார்;
மெய்வழி அறிவோர் கைதொழும் பெருமான்,
.. வெண்மதி அணியும் பெண்ணிணை வடிவன்,
செய்யவன், சடையன் பெய்கழல் புகழைச்
.. செப்பிடு மனமே; தப்புதல் எளிதே.



தெளிதல் - அறிதல்;
வைவது - திட்டுவது; இகழ்ந்து பேசுவது;
செய்தவம் - செய்யும் தவம்;
புரிதல் - செய்தல்; விரும்புதல்;
உய்வழி - உய்யும் உபாயம்;
கைதவர் - வஞ்சகர்;
பெண் இணை வடிவன் - பார்வதியோடு சேர்ந்து இருக்கும் அர்த்தநாரீஸ்வரன்;
செய்யவன் - சிவந்த திருமேனி உடையவன்;
பெய்கழல் - கட்டப்பட்ட கழலை அணிந்த திருவடி; (பெய்தல் - கட்டுதல்);
தப்புதல் - உய்தல்;



11)
இன்னலும் இடரும் மன்னியிவ் வுலகில்
.. எய்ப்பினைத் தினமும் துய்க்கிற மனமே;
உன்னிலை இதுபோய் நன்னிலை பெறவே
.. உள்ளது வழியொன் றுள்ளுதல் புரிவாய்;
கன்னலும் அமுதும் அன்னவன், அரிய
.. கற்பகக் கனிபோல் அற்புதன், உலகின்
முன்னவன், முடிவின் பின்னவன், உமைகோன்,
.. முக்கணன் பெயராம் அக்கரம் அஞ்சே.



மன்னுதல் - மிகுதல்;
எய்ப்பு - இளைப்பு (Weariness);
துய்த்தல் - அனுபவித்தல்;
உன்னிலை - உன் நிலை;
நன்னிலை - நல் நிலை;
உள்ளுதல் - எண்ணுதல்;
கன்னல் - கரும்பு;
அன்னவன் - போன்றவன்;
அக்கரம் அஞ்சு - பஞ்சாட்சரம்;
முடிவின் பின்னவன் - எல்லாம் முடிந்தபின்னும் அழிவின்றி உள்ளவன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகம் தாஅவண்ணம் அமைந்துள்ள பதிகம்.



சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் (Tamil Lexicon – by Madras University) காணும் விளக்கம்:
தாஅவண்ணம்: (Pros.) Rhythm effected by making the third or the fourth foot rhyme with the first; இடையிட்டுவரும் எதுகையுடைய சந்தம் (தொல். பொ. 527.)



இலக்கணக் குறிப்பு:
தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை:
"தாஅ வண்ணம் இடையிட்டு வந்த எதுகைத் தாகும்"

(என்-னின்) தாவண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
தாஅ வண்ணமாவது இடையிட்டெதுகையான் வரும் என்றவாறு.
அடியிடையிட்டு வருவது தொடை வேற்றுமையாவதல்லது வண்ண வேற்றுமையாகாதென்பது . ஒரு செய்யுளுட் பலஅடி வந்தால் அவையெல்லாம் இடையிட்டுத் தொடுத்தல் வேண்டுமோ எனின் வேண்டா. அவை வந்தவழித் தாஅ வண்ணம் எனப்படும் என்பது. (தொல்,பொருள்.527.பேரா.)



No comments:

Post a Comment