Tuesday, August 18, 2015

01.58 – பூலாவனம் (சின்னமனூர்)


01.58 –
பூலாவனம் (சின்னமனூர்)



2010-01-02
பூலாவனம் (சின்னமனூர் - தேனி மாவட்டம்)
------------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' என்ற அரையடி வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.77.1 -
"பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்")



1)
காக்க என்று கைதொழுது
.. காலை மாலை பணிவோரைத்
தாக்க வந்த வினையெல்லாம்
.. தழலிற் சேர்ந்த பஞ்சென்றே
ஆக்கும் ஐயன், தேன்நாடி
.. அறைவண் டினங்கள் அடைகின்ற
பூக்கள் நிறைந்த பொழில்சூழும்
.. பூலா வனத்துப் பெருமானே.


தேன் நாடி அறை வண்டினங்கள் - மதுவை நாடி ரீங்காரம் செய்யும் வண்டுகள்;



2)
"நேற்றும் இன்றும் நாளையுமாய்
.. நிலவும் ஈசா நிலவணிவாய்
காற்றும் நீரும் மண்விண்ணும்
.. கனலும் ஆன கண்ணுதலே
கூற்றை உதைத்த குரைகழலா
.. கோவே உன்னைச் சரணடைந்தேன்
போற்றி" என்பார் வினைதீர்ப்பான்
.. பூலா வனத்துப் பெருமானே.



கூற்றை உதைத்த குரைகழலா - எமனை உதைத்த திருவடியில் ஒலிக்கும் கழலை அணிந்தவனே;
(சுந்தரர் தேவாரம் - 7.62.6 - “கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே”);
கண்ணுதலே - நெற்றிக்கண்ணனே;



3)
காவாய் என்று கைகூப்பிக்
.. கழலைப் போற்றும் அடியார்கள்
ஆவா என்று வினைக்கடலுள்
.. ஆழா வண்ணம் அவர்களுக்கு
நாவாய் ஆவான் தேவர்க்கா
.. நஞ்சை உண்ட மணிகண்டன்
பூவார் பொழில்கள் புடைசூழும்
.. பூலா வனத்துப் பெருமானே.



காவாய் - காப்பாயாக;
ஆவா என்று - ஆ ஆ என்ற இரக்கக் குறிப்போடு அலறுதல்;
நாவாய் - படகு; கப்பல்;
தேவர்க்கா - தேவர்களுக்காக;
பூ ர் பொழில்கள் புடைசூழும் - பூக்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமும் சூழ்ந்த;



4)
காலை இடறிப் பாலாடிக்
.. களிக்கும் பரமன் துதிபாடிக்
காலை மாலை இருபோதும்
.. கழலைப் போற்றும் அடியாரின்
மேலை வினைகள் அவைதீர்த்து
.. மேனி நீங்கா நிழல்தன்னைப்
போலத் துணையாய்க் காத்தருள்வான்
.. பூலா வனத்துப் பெருமானே.



* ஆயனின் காலைப் பூலா மரத்தின் வேரால் இடறி அவன் சுமந்துசெல்லும் பாலைக் கொட்டவைத்து அதில் அபிஷேகம் பெற்றவர் - தலபுராணச் செய்தி.


இடறுதல் - கால் தடுக்குதல்; தடுத்தல் (To obstruct, hinder);
பால் ஆடுதல் - பால் அபிஷேகம்;
மேலை வினை - பழவினைகள்;



5)
கள்ள மில்லா உள்ளத்தால்
.. கரங்கள் கூப்பிக் கழல்போற்றின்
உள்ள வினையின் தொகுதியினை
.. ஒன்றில் லாமல் ஒழித்தருள்வான்
துள்ளி அலைகள் கரைமோதும்
.. சுரபி நதியின் அருகிசைக்கும்
புள்ளி னஞ்சேர் பொழில்சூழ்ந்த
.. பூலா வனத்துப் பெருமானே.



* சுரபி - பூலாவனத்தில் (சின்னமனூர்) தீர்த்தமாக உள்ள நதியின் பெயர்;
கழல் போற்றின் - திருவடிகளைப் போற்றினால்;
இசைக்கும் புள்ளினம் - இசைபாடும் பறவை இனங்கள்;

6)
கீதம் பாடிப் பணிவோர்கள்
.. கேடொன் றின்றி இன்புறவே
ஏதம் போக்கி அருள்புரிவான்
.. எந்தை ஈசன் இமையவர்கோன்
"நாத அருளாய்" என்றென்றே
.. நாடி வந்து நாள்தோறும்
பூத லத்தோர் தொழுகின்ற
.. பூலா வனத்துப் பெருமானே.



ஏதம் - குற்றம்; வினை; துன்பம்; (அப்பர் தேவாரம் - 4.35.5 - "வேதங்கள் நான்கும் ..... பத்தர்கள் தங்கள் மேலை ஏதங்கள் தீர நின்றார் இடைமரு திடங்கொண் டாரே.");
நாத அருளாய் - நாதனே அருள்வாயாக;
பூதலத்தோர் - உலக மக்கள்;



7)
"வில்லால் புரங்கள் மூன்றெரித்தாய்;
.. விடத்தைக் கண்டம் அதில்தரித்தாய்;
கல்லால் அதன்கீழ் அறம்உரைத்தாய்;
.. கழலால் எமனை அன்றுதைத்தாய்;
சொல்லால் சொல்ல முடியாதாய்;
.. துணைநீ" என்று தொழுவோரின்
பொல்லா வினையைத் தீர்த்தருள்வான்
.. பூலா வனத்துப் பெருமானே.



கல்லால் - கல்லால மரம்;
எரித்தாய், தரித்தாய்,,, - என்பன விளிகள் - 'எரித்தவனே, தரித்தவனே,,,'



8)
விசுக்கென் றோடிக் கயிலாய
.. வெற்பை அசைத்த தசமுகனை
நசுக்கிப் பின்னர் இசைக்கிரங்கி
.. நாளும் வாளும் நல்கியவன்;
பசுக்கட் கெல்லாம் பதிஆவான்;
.. பணியும் பத்தர் தம்வினையைப்
பொசுக்கி இன்பம் தந்தருள்வான்
.. பூலா வனத்துப் பெருமானே.



விசுக்கென்று - விரைவுக்குறிப்பு;
வெற்பு - மலை;
தசமுகன் - இராவணன்;
நல்குதல் - கொடுத்தல்;
பசுக்கட்கு எல்லாம் பதி ஆவான் - பசுபதி;
பொசுக்குதல் - சாம்பலாக எரித்தல்;



9)
கடிகொள் மலர்மேல் உறைபிரமன்
.. கரிய மாலென் றிவர்இடையே
முடிவில் எரியாய் உயர்கின்ற
.. முதல்வன் முற்றா மதிசூடி
அடியை மறவா மனத்தாரை
.. அல்லல் அடையா அருவினையைப்
பொடிசெய் தின்பம் தந்தருள்வான்
.. பூலா வனத்துப் பெருமானே.



கடி கொள் மலர் - வாசனை மிகுந்த தாமரைப்பூ;
மால் - திருமால்;
என்றிவர் - என்ற இவர் - என்ற என்பதில் ஈற்று அகரம் தொகுத்தல் ஆயிற்று;
முடிவு இல் எரி - எல்லையில்லாத சோதி;
முற்றா மதிசூடி - இளம்பிறைச்சந்திரனைச் சூடுபவன்;
அல்லல் அடையா - அல்லல்கள் அடையமாட்டா;
பொடிசெய்தல் - அழித்தல்;



10)
பகலும் இரவும் பழிசொல்வார்,
.. பாதை அறியார், சிறுநெறியாம்
அகலை ஏந்திப் பகலவன்முன்
.. அலைவார்; அவர்சொல் மதியாமல்,
புகலிக் கோனின் தமிழ்பாடிப்
.. "போற்றி போற்றி முக்கண்ணா
புகல்நீ" என்பார்க் கருள்புரிவான்
.. பூலா வனத்துப் பெருமானே.



அகலை ஏந்திப் பகலவன்முன் - சூரியனுக்கு முன்னால் அகல்விளக்கை ஏந்திக்கொண்டு;
மதித்தல் - பொருட்படுத்துதல்; (அவர்சொல் மதியாமல் - அத்தகையோரின் பேச்சைப் பொருட்படுத்தாமல்);
புகலிக் கோன் - புகலி என்ற சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர்;
புகல் - அடைக்கலம்;

11)
"பழியில் புகழாய் கறைமிடற்றாய்
.. பரமா பால்போல் வெண்ணீற்றாய்
அழிவில் லாதாய் ஆனேற்றாய்
.. ஆறும் மதியும் சடையேற்றாய்
விழிமூன் றுடையாய் அருள்"என்பார்
.. வினைதீர்ப் பான்அஞ் சிறைச்சுரும்பார்
பொழில்கள் சூழ்ந்து பொலிகின்ற
.. பூலா வனத்துப் பெருமானே.



மிடற்றாய், நீற்றாய், ஆனேற்றாய், ஏற்றாய் - என்பன விளிகள் - மிடற்றை உடையவனே; நீற்றைப் பூசியவனே; ஆனேறு உடையவனே; ஏற்றவனே.
பழி இல் புகழாய் - குற்றம் அற்ற புகழாளனே; (சம்பந்தர் தேவாரம் - 2.18.4 - "ஒலிநீர்....பலிநீ திரிவாய் பழியில் புகழாய்...")
கறை மிடறு - நீலகண்டம்;
ஆனேறு - இடபம்; எருது;
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
அஞ்சிறைச் சுரும்பார் பொழில் - அம் சிறைச் சுரும்பு ஆர் பொழில் - அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் நிறைகிற/ரீங்காரம் செய்கிற சோலை;
(முதல் 3 அடிகளில் அரையடிகளின் ஈற்றில் இயைபு அமைந்த பாடல் இது)
------
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:கள்
1) சின்னமனூர் - அரிகேசரிநல்லூர் - என்ற பூலாவனம். இத்தலம் தேனி மாவட்டத்தில் உள்ளது.
நான் நேரில் தரிசித்திராத இத்தலத்தை மனத்தால் உன்னிப் பாடியது இப்பதிகம்.
2) பூலாநந்தீஸ்வரர் கோயில் - தலபுராணமும் தகவல்களும்: https://ta.wikipedia.org/s/yiz
சின்னமனூர்க் கோயில் தகவல்களும் படங்களும் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=782




------------------- 

No comments:

Post a Comment